மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பவர்ஃபுல் ஹெட்லைட் மாட்டினால் கார் தீப்பிடிக்குமா?

தொடர் -7
பிரீமியம் ஸ்டோரி
News
தொடர் -7

தொடர் -7 சர்வீஸ் அனுபவம்விமல்நாத்

செய்தித்தாள்களில் அடிக்கடி ஒரு விஷயம் உங்களை திகிலடையச்செய்திருக்கும். `நின்றுகொண்டிருக்கும் கார், திடீரெனத் தீப்பிடித்தது. ஓடிக்கொண்டிருக்கும்போது கார் தீப்பிடித்து டிரைவர் காயம்!’ - இப்படிப்பட்ட செய்திகள் கார் ஓட்டுநர்களுக்குக் கொஞ்சம் பீதி கிளப்பும் விஷயம்தான். முதலில் ஒரு விஷயம் புரிந்து கொள்ள வேண்டும்.

பவர்ஃபுல் ஹெட்லைட் மாட்டினால் கார் தீப்பிடிக்குமா?

எந்த காரையுமே தீப்பிடிக்க ஏதுவாக தயாரிக்க மாட்டார்கள். கார் வாங்கி எந்த மாடிஃபிகேஷனும் செய்யாமல், அப்படியே ஓட்டினால் நிச்சயம் எந்த ஆபத்தும் நிகழாது. ஒரு விஷயத்தை நீங்கள் கவனித்தால் தெரிந்திருக்கும். தீப்பிடித்து விபத்தாகும் அந்த கார்கள் அனைத்துமே ஃபேக்டரி செட்டிங்கைத் தாண்டி சில ஆக்சஸரீஸ்களை ஃபிட் செய்த கார்களாகத்தான் இருக்கும். இந்த முறை எனக்கு அப்படிப்பட்ட ஒரு பிரச்னைதான் வந்தது.

நான் சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது நடந்த சம்பவம் இது. வீட்டுக்குக் கிளம்பிக்கொண்டிருந்த நேரம், MPV கார் ஒன்று முன்பக்கம் பானெட் பாதி எரிந்த நிலையில் எங்கள் சர்வீஸ் சென்டருக்குள் நுழைந்தது. காரில் இருந்து இறங்கியவர், ``யார்யா உங்க மேனேஜர்... கூப்பிடுய்யா’’ என்று வழக்கம்போல `காச் மூச்’ எனக் கத்த ஆரம்பித்திருந்தார்.

நானே வாலன்டீயராக அவர் முன் ஆஜராகி என்ன ஏது என விசாரிக்க ஆரம்பித்தேன். ``ஏங்க, கார் வாங்கி மூணு மாசம்கூட ஆகலை. வெறும் 6,000 கி.மீதான் ஓட்டியிருக்கேன். அதுக்குள்ள இப்படி ஒரு அசம்பாவிதம்! நாளைக்கு வக்கீலைக் கூட்டிட்டு வர்றேன். எல்லாரும் ஜெயிலுக்குப் போக ரெடியா இருங்க!’’ என்று எரிந்துபோன காரைக் காட்டிக் கோபப்பட்டார்.

``வண்டியை டோ பண்ணிக்கொண்டு வர்றீங்களா... ஓட்டிட்டு வர்றீங்களா? எங்கே இருந்து வர்றீங்க?’’ என்று சில கேள்விகளைப் பணிவாகக் கேட்டு விஷயத்தைப் போட்டு வாங்க ஆரம்பித்தேன். அலுவலகத்தில் இருந்து வெளியே போய்விட்டு, வீட்டில் காரைப் பார்க் செய்திருக்கிறார். கொஞ்ச நேரத்தில் காரிலிருந்து புகைமூட்டமாக வர ஆரம்பித்திருக்கிறது. சுற்றி உள்ளவர்கள் சுதாரிப்பதற்குள் தடாலென சத்தம். அடுத்த விநாடி, காரின் பேட்டரி வெடித்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்திருக்கிறது. முதற்கட்டமாக மண்ணைத் தூவிவிட்டு, பின்னர் தீயணைப்புத் துறையை வரவழைத்து ஒருவழியாக காரை பாதி உயிரில் காப்பாற்றியிருக்கிறார்கள். பிறகு காரை டோ செய்து, சர்வீஸ் சென்டருக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

ஒவ்வொரு முறையும் எனக்குச் சிக்கல் வரும்போதும் அதற்கான பிரச்னைகளைக் கண்டறிவது, பெரிய த்ரில்லர் படக் கதைபோல்தான் இருக்கும். மூளையைக் குழப்பி, டிஸ்கஷன் போட்டு, துப்பறிந்து... சில நாள்களுக்குப் பிறகுதான் அந்தப் பிரச்னைக்கான காரணம் தெரியவரும். ஆனால், இந்த முறை எனக்கு அதன் ஆணிவேரைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிதாக இருந்தது. அவர் சொன்ன பதில்... ``ஆபீஸ் முடிஞ்சு ஜி.பி ரோட்ல இருந்து வீட்டுக்குப் போனேன். போய் நிறுத்தினதும் இப்படி ஆயிடுச்சு!’’

ஜி.பி ரோடு என்பது, சென்னையின் மிகப்பெரிய ஆட்டோ ஸ்பேர்ஸ் கடைகள் குடிகொண்டிருக்கும் ஒரு பிரதான சாலை. கம்பெனி ஸ்பேர்களில் ஆரம்பித்து, லோக்கல் மார்க்கெட் உதிரி பாகங்கள் வரை எல்லாமே இங்கே கிடைக்கும். கார்களை அழகுபடுத்த, மாடிஃபை செய்ய, எக்ஸ்ட்ரா ஆக்சஸரீஸ் ஃபிட் செய்ய என்று புதிய கார் உரிமையாளர்கள் இங்குதான் படையெடுப்பார்கள். எனக்கு விஷயம் புரிந்துவிட்டது.

``ஜி.பி ரோடுக்கு என்ன விஷயமாப் போனீங்க?’’

``இந்த காரோட ஹெட்லைட் பவர் எனக்குப் போதலை. அதான் ஹை வோல்ட்டேஜ் பல்பு ஃபிக்ஸ் பண்ணினேன். நல்ல பவர் இருந்துச்சு. வீட்டுக்குப் போய் கொஞ்ச நேரம்கூட ஆகலை. அதுக்குள்ள கார் எரிஞ்சிடுச்சு. நீங்க கூலா விசாரணை பண்றீங்களா?’’ என்று கடுப்பாகிவிட்டார்.

பவர்ஃபுல் ஹெட்லைட் மாட்டினால் கார் தீப்பிடிக்குமா?

கார் எரிந்ததற்கான காரணம் எங்களுக்குப் புரிந்துவிட்டது. இப்போது இந்த விஷயத்தைச் சொன்னால், அவர் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார். உடனே தலைமை அலுவலகத்துக்கு மெயில் தட்டிவிட்டேன். அவரிடம் இரண்டு நாள் அவகாசம் கேட்டு ஒருவழியாக அனுப்பி வைத்தேன்.

நானும் டெரிட்டரி சர்வீஸ் மேனேஜரும் அலசி ஆராய்ந்தோம். நினைத்தபடியே ஹெட்லைட்டில் பல்பு வெடித்திருந்தது. சுற்றிப் பார்த்ததில், ஏகப்பட்ட எக்ஸ்ட்ரா வொயர்கள் தெரிந்தன. ஹோல்டர், வொயரிங் போன்றவை தரமில்லாமல் இருந்தன. பல்ப் மட்டும் பவர் என்பதால் ஹோல்டர் மெல்ட் ஆகி, வொயரிங் தீப்பிடித்து, ரிலே யூனிட் தகதகவென சூடாகி, பேட்டரியில் உள்ள ஆசிட் சூடாகி... மொத்தமாக வெடித்திருந்தது.

இங்கேதான் நீங்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக, கம்பெனி ஃபிட்டிங் தாண்டி சில விஷயங்களைப் பண்ணவே கூடாது. ஹெட்லைட்டையே எடுத்துக்கொள்வோம். கூடுதல் பவர் பல்புகள், அந்த காரின் ஹோல்டரில் நிச்சயமாகப் பொருந்தாது. வெளிமார்க்கெட்டில் என்ன செய்வார்கள் என்றால், ஒரிஜினல் வொயரிங்கில் கை வைப்பார்கள். இல்லையென்றால் பேட்டரியில் இருந்து எக்ஸ்ட்ரா வொயரிங் எடுத்து கூடுதல் பவர்ஃபுல் பல்புகளை ஃபிட் செய்வார்கள். உதாரணத்துக்கு, எக்ஸ்ட்ரா பவர் வேண்டும் என்பவர்கள் 100/90 ஹாலோஜன் பல்புகளைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். ஃபேக்டரி ஃபிட்டட் ஆக வருவது 60/55தான். அப்படியென்றால், இதற்கு கம்பெனியில் ஆப்ஷனே இல்லையா என்றால்... இருக்கிறது. இதை எக்ஸ்ட்ரீம் விஷன் பல்பு என்போம். கண்ணைக் கூசவைக்காது. ஆனால் தூரமாக வெளிச்சம் அடிப்பதுதான் இதன் ஸ்பெஷல். காரில் உள்ள பல்புக்கு மாற்றாக, வொயரிங் எதிலும் கை வைக்காமல் இதை நேரடியாகவே பொருத்திக்கொள்ளலாம். இவர் ஃபிட் செய்திருப்பதும் இதே 100/90 பல்புதான். வெளிச்சம் பீய்ச்சியடிக்கும். ஆனால், பவர் தாங்காமல் சூடாகி, உருகித் தீப்பிடிக்கும்.

எல்லா எக்ஸ்ட்ரா வொயரிங்கையும் நீக்கிவிட்டு, காரில் எரிந்த பாகங்களை மாற்றிவிட்டு காரை ஃபிக்ஸ் செய்தாகிவிட்டது. அவரின் வக்கீலிடம் எல்லா விவரங்களையும் பொறுமையாக எடுத்துச் சொன்னோம். ஒருவழியாகக் கேட்டுக்கொண்டார். 60% மட்டும் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் செய்தார்கள். சுமுகமாக முடித்துவிட்டோம். இப்போது வரை அந்த கார் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதாக அடிக்கடி எனக்கு போனில் தகவல் சொல்வார் அவர்.

ஹெட்லைட் மட்டுமல்ல, ஹோம் தியேட்டர் எஃபெக்ட் வேண்டும் என்று எக்ஸ்ட்ரா ஸ்பீக்கர்கள் மாட்டி தீப்பிடித்த கார்கள், ரூஃப் லைனிங், ஃப்ளோர் லைனிங்கில் கைவைத்ததால் கருகிய கார்கள் என்று எக்கச்சக்க அனுபவங்கள் என் சர்வீஸ் ஹிஸ்டரியில் வந்தன. எனவே, வெளி மார்க்கெட்டில் ஃபிட்டிங் செய்யும்போது மிகக் கவனமாக இருங்களேன்!

- தொகுப்பு: தமிழ்; ஓவியம்  ராஜன்

எதனால் தீ விபத்து  ஏற்படுகிறது?

• பவர்ஃபுல் ஹெட்லைட் மாட்டுவது, காருக்குள் எக்ஸ்ட்ரா ஸ்பீக்கர்கள் போட்டு ஹோம் தியேட்டர் எஃபெக்ட் கொண்டு வருவது போன்ற வேலைகளுக்கு, வெளிமார்க்கெட்டை அணுகும் போதுதான் இந்த மாதிரி பிரச்னைகள் ஏற்படுகின்றன.

 

• விலை குறைவு என்று மலிவான, தரமில்லாத பொருள்களை கார்களில் பொருத்தாதீர்கள்.

• உங்கள் தேவைகளுக்கு அந்தந்தக் கம்பெனியிலேயே விடை உண்டு. எக்ஸ்ட்ரீம் விஷன் பல்பு, ஸ்பீக்கர் செட்-அப் என்று வொயரிங்கில் கை வைக்கும் எந்த வேலையாக இருந்தாலும், அங்கீகாரம் பெற்ற கம்பெனியின் சர்வீஸ் சென்டரிலேயே ஃபிட் செய்யுங்கள்.

• தேவையில்லாத ஆக்சஸரீஸை நினைத்துக்கூடப் பார்க்காதீர்கள். உதாரணத்துக்கு ஸ்விஃப்ட், எர்டிகா, வெர்னா போன்ற கார்களுக்கு எஸ்யூவி ஸ்டைலில் பம்பரெல்லாம் போட்டு காரைப் பாதுகாப்பதாய் நினைப்பார்கள். இது மிகவும் தவறு. இந்த எடை எல்லாமே சேஸியில்தான் அமரும் என்பதால், விபத்து நடக்கும்போது சேஸிக்கு ஆபத்து ஏற்படும் என்பதுதான் உண்மை.

• மழை நேரங்களில் வொயரிங்கில் கையே வைக்காதீர்கள். ஏ.சி-யில் கவனம் தேவை. மழையின்போது காரை ஐடிலிங்கில் விட்டு, ஏ.சி-யை ஆன் செய்தபடி உள்ளுக்குள் தூங்குவதால் விபத்து ஏற்படக்கூட வாய்ப்புண்டு.

• ஒரிஜினல் ஃபிட்டிங்கோடு ஓடும் எந்த காருமே தீப்பிடிக்க வாய்ப்பே இல்லை. பயப்படாதீர்கள்.