மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாண்புமிகு மருத்துவர்கள் - லூக் கேம்பிள்

மாண்புமிகு மருத்துவர்கள் - லூக் கேம்பிள்
பிரீமியம் ஸ்டோரி
News
மாண்புமிகு மருத்துவர்கள் - லூக் கேம்பிள்

சேவை 22ஓவியம்: பாலகிருஷ்ணன்

யிர்க்கொல்லி நோய்களில் ஒன்று, ரேபிஸ். பெரும்பாலும் நாய்கள் மூலம் பரவக்கூடியது. நோயால் பாதித்த மனிதனுக்கும் நாய்க்கும் மரணம் நிச்சயம். நாய் கடிப்பதால் மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட நாயின் உமிழ்நீர் நம் உடலிலுள்ள காயங்களில் படுவதாலோ, நாய்கள் பிராண்டுவதாலோகூட ரேபிஸ் பரவலாம். பூனை, குரங்கு, குதிரை, வௌவால் போன்ற பாலூட்டி விலங்குகள் மூலமாகவும் ரேபிஸ் பரவும். ரேபிஸ்நோயால் உண்டாகும் இறப்புகளில் சுமார்   85 சதவிகிதம் தெற்காசியாவில்தான் நிகழ்கிறது. அதில் இந்தியாவுக்கு முதலிடம். ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்காவின் சில நாடுகளிலும் ரேபிஸ்நோயின் தாக்கம் இருக்கிறது. `அடுத்த பத்தாண்டுகளில் ரேபிஸ் இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டும்’ என்ற லட்சியத்துடன் இயங்கிவருகிறார் மருத்துவர் ஒருவர். அவர் பெயர் லூக் கேம்பிள்(Luke Gamble).

மாண்புமிகு மருத்துவர்கள் - லூக் கேம்பிள்

முகில்
எழுத்தாளர்

இங்கிலாந்தின் டோர்செட்டைச் சேர்ந்த இவருக்கு சிறுவயது முதல் விலங்குகள்மீது பிரியம். அதனால், கால்நடை மருத்துவராக வேண்டும் என்று முடிவுசெய்தார். இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் 1999-ம் ஆண்டு கால்நடை மருத்துவராகப் பட்டம் பெற்றார். பிறகு ஒரு வருடம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வன விலங்குகளுக்கான மருத்துவத்தில் சிறப்புப் பயிற்சி பெற்றார். தெற்கு இங்கிலாந்தின் நியூ ஃபாரஸ்ட் பகுதியில் தனது பில்கிரிம்ஸ் கால்நடை மருத்துவமனையைத் தொடங்கினார். அங்கே விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு மருத்துவம் பார்த்தார். ஒருமுறை முயல் ஒன்று காயங்களுடன் டாக்டர் லூக்கிடம் கொண்டு வரப்பட்டது. இரண்டு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்தும், அந்த முயலை அவரால் காப்பாற்ற முடியவில்லை. அதேநாளில் ஆப்பிரிக்காவின் மொசாம்பிக்கில் வன விலங்குகள் மருத்துவச் சிகிச்சையில்லாமல் உயிரிழப்பதாகக் கேள்விப்பட்டார். ‘வெட் கிளினிக் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு, இங்கே நான் இயங்குவது போதாது. நான் செய்ய வேண்டியவை நிறைய இருக்கின்றன’ என்று அப்போது முடிவுசெய்தார்.

மாண்புமிகு மருத்துவர்கள் - லூக் கேம்பிள்

தனது சொந்தச் செலவில் கிரீக் தீவுகள் சிலவற்றுக்குச் சென்று, அங்கிருக்கும் வன விலங்குகளுக்குச் சிகிச்சையளித்தார். இதையடுத்து இங்கிலாந்தின் டேவான் நகரத்திலுள்ள கழுதைகள் சரணாலயத்துக்குச் சென்று கழுதைகளுக்குச் சிகிச்சையளித்தார். உலகமெங்குமுள்ள விலங்குகள், பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் வன விலங்குகளுக்காக தான் செய்ய வேண்டிய மருத்துவச் சேவை குறித்தும், அதன் தேவை குறித்தும் டாக்டர் லூக்குக்குத் தெளிவான பார்வை கிடைத்தது. 2003-ம் ஆண்டு `Worldwide Veterinary Service - WVS’ என்ற அமைப்பை ஆரம்பித்தார்.

உலகமெங்கும் ஆங்காங்கே இயங்கிவரும் பிராணிகள்நலம் சார்ந்த அமைப்புகளை ஒரே குடையின்கீழ் கொண்டு வருவதே இதன் நோக்கம். அந்த அமைப்புகளின் மூலம் விலங்குகளுக்கு எங்கெங்கே, எப்படிப்பட்ட மருத்துவ உதவிகள் தேவைப்படுகின்றன என்று கண்டறிந்து நிதியைத் திரட்டினார். `WVS’ அமைப்பின் மூலம் உலகெங்குமுள்ள கால்நடை மருத்துவர்களுக்கும் உதவியாளர்களுக்கும் பயிற்சிகள் கொடுத்தார். விலங்குகள்மீது அன்புகொண்ட தன்னார்வலர்களைக்கொண்டு உதவிக்குழுக்கள் அமைத்தார். உலகில் எங்கெல்லாம் விலங்குகளுக்கு மருத்துவ உதவிகள் தேவையோ, அங்கெல்லாம் சென்று சிகிச்சைகள் செய்தார்.  டாக்டர் லூக்கின் `WVS’ அமைப்பு, உலகின் எந்தப் பகுதியில் புயல், மழை, வெள்ளம், நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரிடர் நிகழ்ந்தாலும் அங்கே விரைந்து செல்லும். அங்கிருக்கும் விலங்குகள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்களை மீட்பது, அவற்றுக்குத் தேவையான சிகிச்சைகள் அளிப்பதில் பெரும் பங்காற்றும். அத்துடன் விலங்குகளுக்கான மருந்துகளை உலகின் பல பகுதிகளுக்கு அனுப்பிவருகிறது. விலங்குகளுக்காக அந்தந்த நாடுகளில் செயல்பட்டுவரும் அமைப்புகளுக்காக, நிதி திரட்டியும் கொடுக்கிறது.

மாண்புமிகு மருத்துவர்கள் - லூக் கேம்பிள்

2010-ம் ஆண்டு டாக்டர் லூக், நம் நாட்டிலும் விலங்குகளின் நலனுக்காக `WVS India’ என்ற அமைப்பைத் தொடங்கினார். ஆரம்பத்தில் தென்னிந்தியாவில் பொதி சுமக்கும் கழுதைகள்மீது கவனம் செலுத்தியது இந்த அமைப்பு. பல நகரங்களில் விலங்குகளுக்கான இலவச சிகிச்சை முகாம்களை நடத்தியதுடன் பல்வேறு இளம் கால்நடை மருத்துவர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகளையும் அளித்தது. இவை தவிர, விலங்குகளுக்கான தடுப்பூசிகள் போடுவதில் கவனம் செலுத்தியது. இந்தியாவில் ரேபிஸ்நோயால் நாய்கள் அதிகம் பாதிக்கப்படுவதையும், அதன் மூலம் மனிதர்களின் மரணங்கள் அதிகரிப்பதையும் டாக்டர் லூக் அனுபவத்தில் உணர்ந்தார். `உலகெங்கும் தினமும் சுமார் 100 குழந்தைகள் ரேபிஸால் பாதிக்கப்பட்டு இறக்கிறார்கள்’ என்ற புள்ளிவிவரம் அவரை என்னவோ செய்தது. அதன் விளைவாக, டாக்டர் லூக், 2013-ம் ஆண்டு `Mission Rabies’ என்ற அமைப்பைத் தொடங்கினார்.

ரேபிஸ்நோயால் மனிதர்கள் பெருமளவில் இறப்பதும், நாய்கள் இறப்பதும் உண்மை. ஆனால், `இது ரேபிஸ்நோய் தாக்கிய நாயாக இருக்குமோ?’ என்று கருதி சந்தேகத்தின்பேரிலேயே ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ஆரோக்கியமான நாய்களைக் கொன்றனர். இந்தியாவில் அப்படிச் சந்தேகத்தின்பேரில் கொல்லப்பட்ட நாய்களின் எண்ணிக்கை அதிகம். எனவே, இந்தியா முழுவதும் அலையும் தெரு நாய்களுக்கும், வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கும் ரேபிஸ்நோய் தாக்காமலிருக்க மிஷன் ரேபிஸ் அமைப்பு தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கியது. இதனால் இந்தியாவில் ரேபிஸ் நோயின் தாக்கமும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. ரேபிஸுக்கு எதிரான டாக்டர் லூக்கின் பயணம் இந்தியா மட்டுமன்றி, தாய்லாந்து, இலங்கை, உகாண்டா, தான்சானியா உள்ளிட்ட பல நாடுகளில் தொடர்கிறது. 100 சதவிகிதம் ரேபிஸ் இல்லாத உலகத்தை அமைப்பதே டாக்டர் லூக்கின் தற்போதைய இலக்கு. உலகின் எந்த மூலையில், ஐந்தறிவுள்ள உயிரினங்களுக்கு உதவி தேவைப்பட்டாலும் அங்கே மருத்துவச் சேவை கிடைக்கச் செய்வது லூக்கின் நிரந்தர இலக்கு.

விலங்குகளின் நலன், அவற்றை ஆபத்திலிருந்து காப்பாற்றுவது போன்றவற்றை மையமாகக் கொண்ட டி.வி நிகழ்ச்சிகளை டாக்டர் லூக் நடத்திவருகிறார். பிராணிகளுக்காக `PetAirUK’ என்ற விமான சேவையை இயக்கிவருகிறார். பல நாடுகளில் ஜீவகாருண்ய உரைகள் நிகழ்த்திவருகிறார். `The Vet – The Big Wild World’, ‘The Vet: My Wild and Wonderful Friends’ என்று இரண்டு புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
இவை அனைத்தின் மூலமாகவும் டாக்டர் லூக் கேம்பிள் எளிமையாகச் சொல்லும் செய்தி ஒன்று மட்டுமே... `ஐந்தறிவு ஜீவன்களிடம் அன்பு காட்ட வேண்டும்.’

சேவை தொடரும்...