மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 25

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

கிளப்புகளின் குப்பைத் தொட்டிகளில் கிளறி, பிளாஸ்டிக் ஸ்பூன்களைப் பொறுக்கி மூர்மார்க்கெட்டில் விற்றால் ஸ்பூனுக்கு நாலணா.

ண்பனைப் பார்க்க ஆழ்வார்பேட்டை போயிருந்தேன்!

 ''டேய்... பக்கத்துல போய் வீருவை அழைச்சுட்டு வீட்டுக்குப் போயிரலாம்...'' என்றான். ஏதோ யோசனையில் இருந்த நான், அந்த வீரு யார் என்று கேட்கவில்லை. ஏதோ ஒரு கட்டடத்தின் முன் காரை நிறுத்தியவன், உள்ளே போய் கையில் ஒரு ஹட்ச் நாய்க்குட்டியோடு வந்தான்.

''என்னடா வீருக்குட்டி... ஒரு வாரம் பசங்களைப் பார்க்காம தவிச்சுட்டியாடா குட்டி...'' எனக் கொஞ்சி கிஸ்ஸடித்து விட்டு, நாய்க்குட்டியை என் பக்கத்தில் விட்டவன், அடுத்து சொன்ன தகவல் ஆச்சர்யமாக இருந்தது. ''பொங்கலுக்காக ஒரு வாரம் குடும்பத்தோட மதுரைக்குப் போயிட்டம்ல... அதான் வீருவை கேர் சென்டர்ல விட்டுட்டுப் போனோம்!''

''கேர் சென்டரா?''

''ஆமாடா... பெட் அனிமல்ஸைப் பாத்துக்கிருவாய்ங்க. ஒரு நாளைக்குமுந்நூறு ரூவா. ஃபுட்டெல்லாம் நீட்டா பண்ணிருவாய்ங்க.''

வட்டியும் முதலும்
வட்டியும் முதலும்

அந்தக் கணமே வீருவுக்கு ஒரு சலாம்வைத்தேன். மியூஸிக் அகாடமி சாலையில், காருக்கு வெளியே பார்த்தேன். நேற்று பார்த்தபோதுகூட இந்தச் சாலையில் மரங்கள் இருந்ததைப் போலவும், இப்போது வெறுமையாக இருப்பதைப் போலவும் தோன்றியது. சட்டென்று அவருடைய நகரத்தைப் பற்றிய பாப் மார்லியின் பாடல் வரிகள் ஏனோ மனதில் கீ-இன் ஆனது.

'என் மூதாதையர்களின் உதிரம்... இந்த நகரம் நகரும் சாலைகளில் நகராத மரங்களில் வாழ்கிறார்கள் அவர்கள் என் மூதாதையர்களின் உதிரம்... இந்த நகரம்!’

அந்த வரிகள் இந்த சென்னைக்கும் அப்படியே பொருந்தும். நினைக்கும்போதே இந்த நகரத்தின் மீது சொல்ல முடியாத பேரன்பும் பெருவியப்பும் பொங்குகின்றன. நானும் மதுரைக்கார நண்பனும் கல்லூரி நண்பர்கள். கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் சென்னைக்கு வந்தவர்கள். அவனுக்குச் சொந்த வீடு, கார் என ஒரு வாழ்க்கையும், எனக்கு நண்பர்கள் சூழ் ஓர் உலகையும் தந்தது இந்த சென்னைதான். சென்ட்ரல் ஸ்டேஷனில் படுப்பதற்கு இடம் பிடித்துக்கொடுத்தால், ஒரு இடத்துக்கு ஐந்து ரூபாய். ஹோட்டல்கள்,

கிளப்புகளின் குப்பைத் தொட்டிகளில் கிளறி, பிளாஸ்டிக் ஸ்பூன்களைப் பொறுக்கி மூர்மார்க்கெட்டில் விற்றால் ஸ்பூனுக்கு நாலணா.

ரிச்சி ஸ்ட்ரீட்டில் கடை போட்டு அசெம்பிள்டு கம்ப்யூட்டர் விற்றால், சிஸ்டத்துக்கு ஆறாயிரம். பனகல் பார்க் பக்கம் ஒரு வேனைப் போட்டு, ஃபாஸ்ட் ஃபுட் போட்டால், தினப்படி ஐயாயிரம். கிராண்ட் ஓரியன்ட்டில் டி.ஜே. ஆகி, ஷகிரா பாட்டு போட்டால், இரவுக்கு ஆயிரம் (இரவுக்குள் ஆயிரம் என்றும் படிக்கலாம்!).

தீவுத் திடலில் பாப்கார்ன் மெஷின் போட்டால், ரோகிணி லாட்ஜில் ரூம் போட்டு ஜோசியம் சொன்னால், காமராஜர் அரங்கை புக் பண்ணி விழிப்பு உணர்வு வகுப்பு நடத்தினால், ரியல் எஸ்டேட் தாதாவாகி சினிமா எடுத்தால், அரசியல் வாதி வீட்டுக்கு டிரைவராகப் போய் பினாமியானால்.... ஆயிரமாயிரம் வாய்ப்புகளையும் வசதிகளையும் அள்ளி இறைத்தபடி மின்னிக்கொண்டு இருக்கிறது சென்னை. ஆனால், ஒரு நாய்க்குட்டிக்குக் கூட கேர் சென்டர்வைத்து, தினசரி முந்நூறு ரூபாய்க்கான வாழ்க்கையை அருளும் இந்த நகரத்தில்... அதன் பூர்வ குடிகள் எங்கே இருக்கிறார்கள்?

வட்டியும் முதலும் - 25

உண்மையில், சென்னை கபாலிகளின் நகரம். ஆனால், இன்றுவரை திருடன், பிக்பாக்கெட், சாராய வியாபாரி என்பவைதான் கபாலிகளைப் பற்றி ஜோக்குகளிலும் சினிமாக்களிலும் நாம் அறிந்த சித்திரங்கள். முனிம்மாக்களை இன்னும் ஆப்பக்காரியாகவும் மீன்காரியாகவுமே வைத்திருக்கிறோம். கபாலீஸ்வரரின் பெருங்கொண்ட படையலுக்கு முன், பாடிகாட் முனீஸ்வர னின் கோழி ரத்தம் தடவிய ஒற்றை எலுமிச்சம் பழத்துக்கு மதிப்பே இல்லை. தங்களுக்கான வாழ்நிலத்தில் எல்லா வாழ்வுரிமைகளும் மறுக்கப்பட்டு, வறுமைக்குள்கிடக்கும் கபாலிகளையும் முனிம்மாக்களையும்பற்றி நாம் அறிந்துணரவே இல்லை. எங்கெங்கு இருந்தோ வந்தவர்கள்தான் பக்கிங்காமைக் கூவமாக்கிவிட்டோம். அந்தக் கூவத்தின் கரையில் நெருக்கியடிக்கும் குடிசைகள் போட்டு கொசுக்களோடு வாழ்கிறார்கள் இந்த மண்ணின் பிள்ளைகள்!

ராஜேந்திரன் என் சென்னைக்கார நண்பன். அவன் அருணா-இன் பாரில் சப்ளையராக வேலை பார்த்தபோது எனக்குப் பழக்கம். ராஜேந்திரனின் அப்பா திருவல்லிக் கேணி ஃபர்னிச்சர் கடை ஒன்றில் மீன்பாடி வண்டி ஓட்டிக்கொண்டு இருந்தார். ஒரு முறை பீச்சுக்கும் ராதாகிருஷ்ணன் சாலைக் கும் நடுவில் இருந்த அவனது குடிசைப் பகுதிக்குப் போயிருந்தேன். அப்போது ராஜேந்திரனின் அப்பா அவனது அண்ணனோடு ஆவேசமாக மீன்பாடி வண்டியில் வந்து இறங்கினார். ராஜேந்திரனின் அண்ணனை போலீஸ் பிடித்துப்போய்விட்டது. அவர்தான் போய் மீட்டு வந்திருக் கிறார். அவர்

வண்டியில் இருந்து குதித்து, ஒரு கட்டையை உருவி அண்ணனை அடித்தபடி கத்தினார், ''த்தா... இந்த நாயி பீச்சாண்ட 'தூள்’ வித்திருக்கு. அதான் போலீஸ் இட்டுனு பூட்டான். பின்ன குந்தவெச்சு மெடலாக் குத்துவான்...''

கொஞ்ச நேரத்தில் ஆசுவாசமாகி வாசலில் உட்கார்ந்தவர் என்னைப் பார்த்து, ''ராஜேந்திரன் சினேகிதக்காரனா நீயி... சாரிபா... எங்க தாத்தன் பக்கிங்காம்ல போட்டு வுட்டவன். பிரிட்டிஷ்காரன் காலத்துல எங்க நைனாதான் ஆர்பர்ல இன்சார்ஜே. இந்த ஏரியால 'ஆர்பர்’ மூர்த்தின்னா எம்மாம் பேமஸுங்கற... த்தா... நாந்தான் நாய்ப் பொழப்புக்கு வந்துட்டேன். ஆனா, பிரெஸ்டீஜு வுட முடியுமா? இந்த கரிபால்டி நாயி, நம்ம பேரையே ரிப்பேர் பண்ணிக்கினு அலையுதுபா...'' எனக் கந்தல் வேட்டியால் மூக்கு சிந்தினார்.

வீட்டுக்குள் இருந்து வந்த ராஜேந்திரன் கையில் ரெண்டு சட்டையும் ஒரு சுவர்க் கடிகாரத்தையும் எடுத்துவந்தான். ''போலாமா சார்...'' என்றவன், வரும்போது அந்தக் குடிசைப் பகுதியின் ஆரம்பத்தில் இருந்த சேட்டுக் கடையில் அந்த சட்டையையும் கடிகாரத்தையும் கொடுத்துப் பணம் வாங்கி வந்தான். ''என்னடா இது?'' என்றால், ''இது அப்பப்போ ரெகுலர்தான் சார்... இருக்குற திங்ஸ வெச்சுட்டு, சேட்டுகிட்ட அம்பது நூற வாங்கிக்கறதுதான்...'' என்றான். எனக்கு அவனது கொள்ளுத் தாத்தா அந்த ஏரியாவில் படகுவிட்ட காட்சியும், அந்த சேட்டின் தாத்தா ராஜஸ்தானிலோ குஜராத்திலோ ஜிலேபி விற்ற காட்சியும் மனக் கண்ணில் எழுந்தன!

அதன் பிறகு, ராஜேந்திரன் என் தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விட்டான். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் அவனது குடியிருப்பு இருந்த இடத்துக்குப் போனபோது, அதிர்ச்சியாக இருந்தது. அப்படி ஒரு குடிசைப் பகுதி இருந்ததற்கான அடையாளமே இல்லாமல், அங்கே மிகப் பெரிய வணிக நிறுவனம் வந்திருக்கிறது. 'அந்த அடகுக் கடை சேட்டுதான் இந்த வணிக நிறுவனத்தின் ஓனரோ?’ என சந்தேகம் தட்டியது. இல்லையெனினும், அந்த காம்ப்ளெக்ஸில் அவன் அலைபேசிக் கடையோ பீட்ஸா கடையோ போட்டிருக்கக் கூடும்.

அடையாறு சாஸ்திரி நகரில் பரமு வீட்டுக்குப் பக்கத்தில் கருமாரியம்மன் கோயில் இருக்கிறது. ஏரியாக்காரர்கள் சேர்ந்து வருஷத்துக்கு ஒருமுறை கோயிலுக் குத் திருவிழா எடுப்பார்கள். இந்த முறை திருவிழாவுக்குப் போயிருந்தபோது பரமு சொன்னான், ''இருவது முப்பது வருஷத் துக்கு முன்னாடிவரைக்கும் நாலு தெரு வுலயும் நம்ம ஜனம்தான் இருந்துச்சு மச்சான்... முக்காவாசி ஜனம் பூடுச்சு. இப்போ பாதி ஜனம் மார்வாடி, ஐ.டி. பசங்க, வேற ஊரு ஆளுங்க, அடுத்த தெருவுக்கு கோயில் கலெக்ஷனுக்குப் போனா நீங்க யாருனு கேக்கறான்? ஏழெட்டுக் குடும்பம்தான் நம்மளோடது. திருவிழாவே இன்னா படமா இருக்கும்... இப்போ எதுவும் இல்ல!''

வட்டியும் முதலும் - 25

இந்த நகரத்தை உருவாக்கியவர்களை இங்கிருந்து அகற்றி, நகரத்துக்கு வெளியே கண்ணகி நகருக்குத் தள்ளிவிடுகின்றன அரசும் அதிகாரமும். குடிசைப் பகுதிகள் எல்லாம் அழிந்து, ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் களும் அபார்ட்மென்ட்டுகளும் முளைத் துக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு விடியலிலும் அரசியல் வாரிசுகளும் பண முதலைகளும் தொழில் அதிபர்களும் பொக்லைனோடு வந்து நிற்பார்களோ என்ற நிராதரவான பயத்துடனேயே கழிகின்றன சென்னை மைந்தர்களின் பொழுதுகள்.

அந்த பயத்தில்தான் எப்போதும் குடிசைப் பகுதிகளில் ஒரே கம்பத்தில் மாறி மாறி ஆளும் கட்சிக் கொடிகள் பறந்துகொண்டே இருக் கின்றன. திடுதிப்பென்று எழுந்து நிற்கும் கட்டடங்களில் விளையாடிக்கொண்டு இருக்கும் பிள்ளைகளுக்குத் தெரியப் போவது இல்லை... அதற்கு முன்பு அங்கே விளையாடிக்கொண்டு இருந்த பிள்ளைகளின் நிரந்தரமற்ற எதிர் காலம்.

ஓ.எம்.ஆரில் இந்த ஐ.டி. நிறுவனம் எழுந்திருக்கும் இடத்தில் இதற்கு முன்பு கூடிக்கிடந்த உயிர்கள் இப்போது எங்கே? மெட்ரோ ரயில் வருவதற்கான வழித்தடத்தில் இதற்கு முன்பு படுத்து உறங்கிய ஜீவன்கள் இப்போது எங்கே? பேசின் பிரிட்ஜ் ரயிலடி ஓரமாக 'ஒதுங்கும்’ பெண்களுக்கு மேலே விளம்பரத்தில் ஷாரூக் கான் சிரிக்கிறாரா... நகைக்கிறாரா? வண்ணாரப்பேட்டையில் பிறந்து புழங்கி, ரிக்ஷா ஓட்டிக்கொண்டு இருந்த கவுசா நைனா, வீட்டை இழந்து சென்னையைத் தாண்டிய புதிய குடியிருப்பில் எவ்வளவு நினைவுகளோடு துயரப்படுவார்? காசிமேடு, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் என மீனவர்களின் ஏரியாக்களிலும் வணிகமயமாக்கலின் கைகள் நீண்டுவிட்டன. அவர்களையும் நகரத்தில் இருந்து துண்டித்துப் பார்க்கும் மனநிலையே பலருக்கும் இருப்பது ஏன்?

ஆங்கிலேயர்களின் ஆளுகைக்கு  சென்னை வந்த கணக்கை வைத்துக்கொண்டு இப்போது சென்னைக்கு 372 வயது என்கிறார்கள். சென்னையின் பழைய புகைப்படங்களைப் பார்க்கும்போது ஆச்சர்யமும் பரவசமுமாக இருக்கிறது. அசோகமித்திரனின் கதைகளில் கூட மவுன்ட் ரோடு முழுக்க மரங்கள் இருந்திருக்கின்றன. புதுமைப்பித்தனின் சென்னையில் எக்மோர் ரயிலடியில் புங்கை மரங்கள் பூத்திருக்கின்றன. என் அண்ணன் வந்தபோது தி.நகர் ஜி.என் செட்டி ரோட்டில் இருந்த மரங்களும், நான் பார்த்தபோது வேளச்சேரியில் இருந்த மரங்களும் இப்போது இல்லை. ஆளும் பேருமாகச் சேர்ந்து

ஜீவிதம் அளித்த நகரத்தை நிர்வாணமாக்கிக்கொண்டே இருக்கிறோம். இந்த நகரத்தை அதன் ஆதி மனிதர்களிடம் இருந்து பிடுங்கி, அதன் அத்தனை அடையா ளங்களையும் அழித்துக்கொண்டு இருக்கிறோம். பூமி துளைக்கும் பெருங்கட்டடங் களும், செயற்கை உணவுகளும், எந்திர நாற்றமும் மலிந்துவிட்ட நகரத்தில், ஒரு மரம் விடும் மூச்சு கபாலியுடையது. அதன் வேரில், கிளையில், பூவில் அவர்களின் ஆக்சிஜன் இருக்கிறது. அந்த இயற்கையை மீட்டு எடுப்பதில்தான் இருக்கிறது சிங்காரச் சென்னை!

10 வருடங்களுக்குப் பிறகு ராஜேந்திரனைப் பார்த்தேன். என்னைத் தேடிக் கண்டுபிடித்து, தன் சகோதரியோடு அலுவலகத் துக்கு வந்திருந்தான். இப்போது சென்னை யைத் தாண்டிய செம்மஞ்சேரியில் குடும்பத்தோடு இருப்பதாகச் சொன்னான். அவனுடைய சகோதரியிடம், ''என்னம்மா பண்ற..?'' என்றேன். அவர் சொன்னார், ''முன்னாடி நம்ம வூடு இருந்துச்சுல்லண்ணே... அங்க கட்டிக்கீறாங்களே... அந்த காம்ப்ளெக்ஸுல கார் பார்க்கிங்கு டோக்கன் போடுறேண்ணே!''

(போட்டு வாங்குவோம்...)      

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan