மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

வைரம்டா!

ஹாய் மதன் கேள்வி - பதில்

எஸ்.உக்கிரபாண்டியன், மதுரை.

 நம்பியார்-அசோகன் இருவரையும் நடிப்பில் ஒப்பிடுங்களேன்?

நம்பியார் - சீரியஸ். அசோகன் - நையாண்டி!

என் சின்ன வயசில், சினிமாவில் நம்பியார் க்ளோஸ் - அப் கோபப் பார்வை பார்க்கும்போதும், பி.எஸ்.வீரப்பா அட்டகாசமாகச் சிரிக்கும்போதும், எனக்குக் குலை நடுங்கும். பல வருடங்களுக்குப் பிறகு நம்பியார், வீரப்பாவை நேரில் பார்த்தபோது அவர்கள் அவ்வளவு சாதுவாக இருந்தது ஆச்சர்யமாக இருந்தது. அசோகனைப் பார்த்தால் பயம் வராது. கிண்டலாக நீட்டி முழக்கி அவர் மிரட்டுகிற ஸ்டைலைப் பிறகு யாரும் திரையில் செய்துகாட்டவில்லை!

சு.வீரபத்திரன், திருநெல்வேலி

நான் 'ஜோக்’காகப் பேசுவேன். ஆனால், என் மனைவி முகத்தில் மட்டும் புன்னகைகூட வர  மாட்டேங்குது. பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைச்சல் என்பது உண்மைதானா?

நோ! லேடீஸ் - குறிப்பாக - மனைவியிடம் ஜோக் அடிக்க தனித் திறமை தேவை என்பதை ஒப்புக்கொள்கிறேன் (நான் கஷ்டப்பட்டு கற்றுக்கொண்டு இருக்கிறேன்). தப்பான 'ஜோக்’குக்கு ஓர் உதாரணம்:

என் நண்பருக்குத் திருமணம் ஆகிப் பல வருடங்கள் ஆகிவிட்டன. வீட்டில், தமாஷ் மூடில் இருக்கும்போது அவருடைய திருமண வீடியோ ஆல்பத்தை ஓடவிடுவார். அதில், மாப்பிள்ளை அழைப்பு... காரில் இருந்து அவர் இறங்கி... மாலை அணிந்து மேடையில் அமர்கிற காட்சியை 'ரீ-வைண்ட்’ செய்து ஓடவிட்டு, விழுந்து விழுந்து சிரிப்பது அவர் வழக்கம். அதாவது 'ரீ-வைண்ட்’ பண்ணும்போது மேடையில் இருந்து எழுந்து, மாலையைக் கழற்றி, காரில் ஏறி, 'ரிவர்’ஸிலேயே அவர் தப்பித்து ஓடிவிடுவதாகத் தெரியும். மனைவி அந்த 'ஜோக்’கைத் துளிக்கூட ரசிக்கவில்லை!

கி.ரவிக்குமார், நெய்வேலி.

மதன் சார், 2016-ல் நான் முதல்வராக வாய்ப்பு இருக்குமா?

பதில் கேள்வி - உங்கள் அப்பா என்னவாக இருக்கிறார்?

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

உண்மையைச் சொல்லுங்க மதன் சார்... நீங்க இப்போ எந்த நடிகையின் ரசிகர்?

அவர் சினிமாவில் நடிப்பவராக இருக்க வேண்டுமா?

ச.புவனேந்திரன், தேனி.

அது என்னங்க, பண்ற அயோக்கியத்தனத்தையும் பண்ணிட்டுத் தெனாவட்டா 'சட்டப்படி சந்திப்போம்’கிறது?

அதாவது, சட்டத்தின் ஓட்டைகள் வழியாக வெளியே வந்து உங்களைச் சந்திப்பார்கள்?!

மா.மாரிமுத்து, ஈரோடு.

இட்லியைக் கண்டுபிடித்தவர் யார்? அவர் பெயர் என்ன? எந்த வருடம் கண்டுபிடித்தார்?

மகாபலிபுரத்தில் 'அர்ஜுனன் தவம்’ சிலையைச் செதுக்கியவர் யார்? அஜந்தா ஓவியங்களை வரைந்தவர் யார்? இட்லியும் அப்படிப்பட்ட ஒரு படைப்பே!

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அதை முதலில் உருவாக்கிய தமிழர் (அநேகமாகப் பெண்!) வெளியே வராமல் சமையல் அறையிலேயே வாழ்நாளைக் கழித்திருக்கக் கூடும். இன்று வரை இட்லி என்பது இல்லாமல் இருந்து, அதை இப்போது ஒருவர் முதன்முதலில் கண்டுபிடித்து இருந்தால், அதற்குக் காப்புரிமை வாங்கி கோடீஸ்வரராக ஆகியிருப்பார்!

மு.தமிழ்ப்பாண்டியன், சென்னை-49.

குழந்தைகள் தண்ணீர் என்றால், குதூகலத்தோடு விளையாட ஆரம்பிக்கிறார்கள். கருப்பைக்குள் தண்ணீருக்குள் வளர்ந்து வெளிவரும் உணர்வினால்தான் அப்படித் தண்ணீரிலும் விளையாடுகிறார்களா?

ஹாய் மதன் கேள்வி - பதில்

உண்மைதான் என்கிறார்கள் மனோதத்துவ அறிஞர்கள். ஆகவேதான் ரஷ்யாவில் சில மருத்துவமனைகளில் பிரசவ வலி ஏற்பட்டஉடனே அம்மாவை நீர்த் தொட்டிக்குள் அமர்த்தி... குழந்தை வெளியே வந்தவுடன் தண்ணீருக்குள்ளேயே வளையவிட்டு (குழந்தையைப் பொருத்தமட்டில் சின்னதில் இருந்து பெரிய ஸ்விம்மிங் பூல்!) பிறகு வெளியே எடுப்பார்கள். குழந்தைக்கு மூச்சுத் திணறாது. கருப்பையில் இருந்து வெளியே வந்தவுடன் அதற்குத் துளியும் அதிர்ச்சி இருக்காது. 'இதுதான் பெஸ்ட்’ என்கிறார்கள் சில ரஷ்ய மருத்துவர்கள். இப்போது இந்த முறை பல நாடுகளில் பின்பற்றப்படுகிறது (தாய் விரும்பினால்)!

மு.விஜி, பொழிச்சலூர்.

நாளைய தினத்தைக் கொல்வது எப்படி? (டுமாரோ நெவர் டைஸ் என்கிறார்களே?)  

ஹாய் மதன் கேள்வி - பதில்

இன்று இரவு 12 மணிக்கு 'நாளை’ தற்கொலை செய்துகொண்டுவிடும். நீங்கள் அதுபற்றிக் கவலைப்படாதீர்கள்!

மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்.

இன்றைய காலகட்டத்தில் உங்கள் நட்பு வட்டம் குறுகி இருக்கா? பெருகி இருக்கா?

நட்பு விஷயத்தில் குவான்டிட்டி  முக்கியம் அல்ல. குவாலிட்டிதான் அவசியம். நட்பு என்பது நுணுக்கமானது. வைரம் போன்றது. லாரிகளில் கொண்டுவந்து இறக்கப்படுவது அல்ல. ஏராளமானவர்கள் ஒருவருக்கு நண்பர்களாக இருக்க முடியாது. அது ஒரு உச்சி மாநாடு. அங்கே மிகச் சிலரே நிற்க முடியும்!