மின்சாரமே பார்த்ததில்லை. பத்தாவதில் முதலிடம், ப்ளஸ் டூவில் 524 அசத்திய சஹானா என்ற தலைப்பில் விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டோம். விடாமல் துரத்திய வறுமை, கஜா புயலில் குருவிக்கூடு மாதிரி இருந்த குடிசை வீடும் சூறையாடப்பட்டன. மூன்று வேளை முழுதாகச் சாப்பிடக்கூட முடியாத நிலையில் பெரும் துயரத்தில் தன் குடும்பம் இருந்தும் அரசுப் பள்ளியில் படித்து பன்னிரண்டாம் வகுப்பில் எல்லோரும் பாராட்டும் வகையில் 524 மார்க் எடுத்து அசத்தியிருந்தார் சஹானா என்ற மாணவி. மருத்துவருக்குப் படிக்க வேண்டும் என்பது இவரின் கனவு. இதுவரைக்கும் கஷ்டப்பட்டு படிக்க வைச்சுட்டேன். இனி எப்படி உன்னைப் படிக்க வைக்கப் போறேனு தெரியவில்லை' என சஹானாவின் அப்பா கணேசன் கலங்கித் துடித்துக்கொண்டிருந்த சமயத்தில்தான் நாம் அவர்களுடன் வீட்டுக்குச் சென்று அதை அப்படியே செய்தியாக்கினோம். பதறித் துடித்துவிட்டார்கள் விகடன் வாசகர்கள். அக்கவுன்ட் டீடெய்ல்ஸ் மட்டும் கொடுங்கள்... உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று எண்ணற்ற வாசகர்கள் மெசேஜ் அனுப்பினார்கள். இந்தச் செய்தியை அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன் தன் உதவியாளர் மோகன் மூலமாக உன் முழுப் படிப்புச் செலவையும் சிவகார்த்திகேயன் ஏற்றுக்கொள்ள உள்ளார் நீ உன் படிப்பைப் பற்றிக் கவலைபடாதம்மா என்றிருக்கிறார்.
மேற்படிப்புக்கு என்ன செய்ய போகிறோம் என விக்கித்து நின்ற சஹானாவிற்கு இந்த வார்த்தைகள் பெரும் நம்பிக்கை கொடுத்துள்ளன. இது குறித்து சஹானாவிடம் பேசினோம்,
``என்னோட நிலையையும், குடும்பத்தின் வறுமையையும் விகடன் செய்தி வெளியிட்ட பிறகு ஏராளமானவர்கள் என்னிடம் பேசினார்கள். அமெரிக்காவிலிருந்து போன் செய்த ஒருவர் உன் படிப்புச் செலவுக்குப் பணம் அனுப்புகிறேன் என பேங்க் அக்கவுன்ட் நம்பர் கேட்டார். பட்டுக்கோட்டையிலிருந்து பேசிய மூதாட்டி ஒருவர் `நீ எனக்குப் பேத்தி மாதிரிம்மா உனக்கு என்ன உதவி தேவையோ எப்ப வேண்டுமானாலும் என்னிடம் கேட்கலாம்' எனக் கூறினார். இதுபோன்று ஏராளமான அழைப்புகளால் விழுந்த வார்த்தைகள் என்னை தெம்பூட்டியிருக்கிறது. நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து மோகன் என்பவர் போன் செய்து `உன் படிப்புச் செலவு முழுவதும் சிவகார்த்திகேயன் ஏற்றிருக்கிறார். நீ என்ன படிக்க வேண்டும் என நினைக்கிறாயோ அதைப் படிக்கலாம். எந்தத் தயக்கமுமில்லாமல் சிவகார்த்திகேயனை ஒரு அண்ணனாக நினைத்துக் கேட்கலாம்' எனக் கூறினார். உடனே நான் தயங்கிட்டே, `சார்... எல்லோரும் போன் செய்து விசாரிச்சுகிட்டு இருக்காங்க. ஆனால் இதுவரைக்கும் பண உதவி எதுவுமே வரவில்லை. போட்டுக்க ஒழுங்கான டிரஸ் கூட இல்லை முதலில் நீங்க கொஞ்சம் பணம் அனுப்பினால் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செஞ்சுக்குவேன்' எனத் தயங்கியபடி கூறினேன். 'உடனே அக்கவுன்ட் நம்பருக்கு ரூ.5000 பணம் அனுப்பி வைக்கிறோம். மாலை சிவகார்த்திகேயன் சார் உன்னிடம் பேசுவார்' எனக் கூறினார். இப்போதுதான் என் அம்மா, அப்பா முகத்தில் சிரிப்பைப் பார்க்க முடிகிறது. நம் பொண்ணுக்கு இனி எந்தக் கஷ்டமும் இல்லை என நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். இதற்கு வித்திட்ட விகடனுக்கு நன்றி சார் என நா தழு தழுக்க தெரிவித்தார்.
மாணவி சஹானாவுக்கு உதவி செய்வதற்கான விவரங்கள் விரைவில் பதிவிடப்படும்.