எழுத்தாளர்களில் இரண்டு வகை உண்டு. முதல் வகை, 'அவர் மிகப் பெரிய எழுத்தாளர்' என்று மரியாதையைச் சம்பாதித்தவர்கள். இரண்டாவது வகை, 'அவர் எனக்குப் பிரியமான எழுத்தாளர்' என்று, தன் எழுத்தைப் படித்தவர்களின் அன்பைச் சம்பாதித்தவர்கள். இதில், எழுத்தாளர் பாலகுமாரன் இரண்டாவது வகை. அவர் எழுத்துக்களை வாசித்தவர்களெல்லாம், அவரை 'பாலா... பாலா...' என்று தன் நண்பனாகக் கொண்டாடினார்கள். தங்கள் வாழ்க்கையில் நடந்த நல்லது கெட்டதைக்கூட நேரில் சென்று, அவரிடம் உரிமையாகப் பகிர்ந்துகொண்டார்கள். சில பத்திரிகைகள் வழியாக தங்களுடைய பிரச்னைகளுக்குக்கூட பாலகுமாரனிடம் தீர்வு பெற்றுக்கொண்டார்கள். அந்த அளவுக்கு தன் வாசகர்களின் மனங்களை 'சிம்மாசனமாக'க் கொண்ட அந்த 'தாயுமானவன்', தன் எழுத்துப் பயணத்தை நிறுத்திய நாள், இன்னும் இரு தினங்களில் வரப்போகிறது. சென்ற வருடம் மே மாதம் 15-ம் தேதிதான் பாலகுமாரன் அவர் குருவடி சேர்ந்த தினம். அவருடைய நினைவு தினத்தையொட்டி விருது விழா நடக்கப்போவதாகக் கேள்விப்பட்டு, அவருடைய மனைவி சாந்தா பாலகுமாரனிடம் பேசினோம்.

''ஆமாம்மா, அவர் உடலளவில் எங்களைவிட்டுப் பிரிஞ்சு, வர்ற புதன்கிழமையோட ஒரு வருஷம் ஆகப்போகுது. மே 15, அவரோட ஆங்கில தேதி நினைவுநாள். திதின்னு பார்த்தா, ஜூன் மாசம்தான் வருது. அவரோட நினைவுநாளை அவருக்குப் பிடிச்ச மாதிரி நடத்தணும்னு ஆசைப்பட்டோம். அதனால, அந்த நாளை 'ஒரு இலக்கிய விருது' வழங்கல் விழாவா நடத்தப்போறோம். எழுத்தாளர் நரனுக்கு 'பாலகுமாரன் இலக்கிய விருது'ம் 25 ஆயிரம் ரொக்கப் பரிசும் கேடயமும் தரப் போகிறோம். வாணி மஹாலில் சாயங்காலம் ஐந்தரை மணிக்கு விழா ஆரம்பிக்கும். எல்லோரும் வரணும். அவருடைய பெயரில் வழங்கப்படப்போகிற இந்த விருதை, வருஷா வருஷம் அவரோட நினைவு தினத்தன்று வழங்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்'' என்றார் சாந்தா பாலகுமாரன்.