`அனைவருக்கும் கல்வி' எனும் பெரும் கனவை நிறைவேற்றிக்கொண்டிருப்பவை அரசுப் பள்ளிகள்தாம். ஏனெனில், கட்டணமில்லா கல்வி என்பது அரசுப் பள்ளிகளில்தாம் சாத்தியம். அதனால், எளியப் பொருளாதாரம் கொண்ட வீட்டுக் குழந்தைகளுக்கும் கல்வியைச் சேர்க்க இவையே உதவுகின்றன. ஆனால், தனியார்ப் பள்ளி மீதான மோகம் பெற்றோர்களிடையே அதிகரித்துவிட்ட நிலையில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துகொண்டே செல்கிறது. இந்த நிலையை மாற்றி, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசுத் தரப்பில் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளப்படுகின்றன. இப்படியான சூழலில், ஓர் அரசுப் பள்ளியில், தொடங்கவிருக்கும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டது. இனிமேலும் மாணவர்களைச் சேர்க்க இயலாது என்று அறிவித்திருக்கிறது என்பது ஆச்சர்யப்பட வைக்கிறதுதானே?
ஆம்! காரைக்குடியில் உள்ள இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில்தான் இந்த வியக்கத்தக்க அறிவிப்பு வைக்கப்பட்டிருக்கிறது. அதுவும் ஏப்ரல் மாதமே அட்மிஷனை முடித்து மேலும் ஆச்சர்யத்தை அளிக்கிறது இந்தப் பள்ளி. இது எப்படிச் சாத்தியமானது? என்ன வகையில் இதற்குத் திட்டமிட்டீர்கள் என்று அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆ.பீட்டர் ராஜாவிடம் கேட்டோம்.

``எங்கள் பள்ளி நகரத்தின் மையத்தில் உள்ளது. இந்தப் பள்ளிக்காகத் தனது இடத்தை அளித்தவர்தான் ராமநாதன் ஐயா அவர்கள். அதனால்தான் அவரின் பெயரும் பள்ளியின் பெயரோடு இணைந்திருக்கிறது. நான் இந்தப் பள்ளிக்கு 2013 ம் ஆண்டு தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றுக்கொண்டு இணைந்தேன். அந்த ஆண்டில்தான் நடுநிலைப் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. அப்போது, 218 மாணவர்கள் படித்துவந்தனர். பள்ளியின் ஆசிரியர்களிடம் கலந்து, 'இந்தப் பள்ளியின் மாணவர் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு நம்மால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்' என்ற தீர்மானம் கொண்டோம்.
எங்களின் முயற்சி சரியான பாதையில் செல்லும் என்பதன் அறிகுறியாக 2014 - 15 ம் கல்வி ஆண்டில் பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 318 ஆக உயர்த்தினோம். இது எங்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்தது. அந்த ஆண்டில், தமிழக அரசின் வழிகாட்டலில் ஆங்கில வழிக்கல்வியை எங்கள் பள்ளியில் நடைமுறைப்படுத்தினோம். மேலும், ஐந்து பாடங்களுடன், கம்ப்யூட்டர் சயின்ஸ், பொது அறிவு ஆகிய இரண்டு பாடங்களையும் சேர்த்துப் பயிற்றுவித்தோம். இது பெற்றோர்களை எங்கள் பள்ளியை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தது. பிறகு, வகுப்பு வாரியாகப் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டங்களை நடத்தினோம். தனியார்ப் பள்ளி மாணவர்களைப் போலச் சீருடை, டை, ஷூ ஆகியவற்றைக் கொண்டுவரும் முடிவுகள் உள்ளிட்ட பல விஷயங்கள் அக்கூட்டங்களால் சாத்தியமாயிற்று.
2015 - 16 ம் கல்வி ஆண்டில் 478 மாணவர்களும். 2016 - 17 ம் ஆண்டில் 650, 2017 - 18 ம் ஆண்டில் 950, 2018 - 19 ம் ஆண்டில் 1192 மாணவர்களாகப் பள்ளியில் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வந்தது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக, 10 ம் வகுப்புப் பொதுத் தேர்வில் 100 சதவிகித தேர்ச்சியைப் பெற்று வருகிறோம். இது எங்கள் பள்ளி ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனுக்கு ஓர் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
பள்ளியின் அடிப்படைத் தேவைகளுக்கு உதவவும், பெற்றோர்கள் தானாக முன் வந்தனர். 2016 ம் ஆண்டில் கல்விச் சீராக, 1,70,000 ரூபாய் மதிப்புள்ள பொருள்களையும், 2018 ம் ஆண்டில், 3,70,00 ரூபாய் மதிப்புள்ள பொருள்களைக் கல்விச் சீராக அளித்தனர். அது எங்களுக்கு ரொம்பவும் உதவியாக இருந்தது." என்று மகிழ்ச்சியுடன் கூறியவரிடம், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பற்றிக் கேட்டோம்.

``ஒவ்வோர் ஆண்டும் ஆறாம் வகுப்பில் சேர்வதற்கு, 200 முதல் 300 பேர் வரை விண்ணப்பிப்பார்கள். ஆனால், இந்த ஆண்டு 450 பேர் விண்ணப்பித்திருந்தார்கள். நாங்களே இவ்வளவு பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. எல்லோரும் எங்கள் பள்ளியில் படிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம். ஆனால், வகுப்பறைக் கட்டடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அதிகபட்சம் 300 மாணவர்களை மட்டுமே சேர்க்கும் சூழல். இவர்களில். 250 பேர் ஆங்கிலக் கல்வி வழியிலும், 50 பேர் தமிழ் வழிக் கல்வியிலும் சேர்ந்திருக்கிறார்கள். இவர்களையும் சேர்த்து வரும் கல்வி ஆண்டில் எங்கள் பள்ளியில், 1320 மாணவர்கள் கல்வி கற்பார்கள்.
நான் பள்ளியில் சேர்ந்தபோது ஆறு ஆசிரியர்கள் பணியாற்றினார்கள். இப்போது, 28 ஆசிரியர்கள் ரெகுலராகவும் பெற்றோர் ஆசிரியர் சங்க ஆசிரியர்களாக 13 பேரும் பணியாற்றுகிறார்கள். எங்கள் பள்ளியின் வெற்றிக்கு முழுக் காரணம் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் ஆசிரியர்களும் ஆர்வம் மிக்கப் பெற்றோர்களும்தான்.
எங்கள் பள்ளிக்கு என்று முகநூலில் தனிப்பக்கம் ஒன்றைத் தொடங்கி, தினமும் அப்டேட் செய்துவருகிறோம். பள்ளியின் நடைமுறை மட்டுமல்லாமல், மாணவர்களின் பிறந்த நாளைக்கூட அதில் பதிவேற்றி வாழ்த்துகளைப் பரிமாறி வருகிறோம். இப்போது, பள்ளி வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் முயற்சியில் இருக்கிறோம். மாணவர்களின் பாதுகாப்பு இது பெருமளவில் உதவும் என்று நம்புகிறோம்.
மாணவர் சேர்க்கை முடிவடைந்துவிட்டது என்று அறிவிப்பைப் பார்த்துவிட்டு, பல பெற்றோர்கள் ஏமாற்றத்தோடு திரும்பிச் செல்கின்றனர். சிலர் உரிமையோடு சண்டை போடுகின்றனர். சில வீடுகளில், அண்ணன் இந்தப் பள்ளியில் படிக்க, தம்பி அல்லது தங்கையை வேறு பள்ளியில் சேர்க்க வேண்டியதானதைச் சொல்கிறார்கள். முன்பே சொன்னதைப் போல, எல்லோருக்கும் கல்வி அளிக்க எனக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் விருப்பம்தான் இட வசதிப் பற்றாக்குறையே குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர் சேர்க்கையை நிறுத்த வேண்டியதாயிற்று." என்கிறார் தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜா.
இந்தப் பள்ளியில் அமெரிக்காவிலிருந்து ஒரு மாணவர் வந்து ஒரு மாதம் தமிழ் கற்றுச் சென்றது இன்னொரு சிறப்பு. அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியை முன்னெடுக்கும் அனைவரும் பாராட்டுக்கு உரியவர்களே!