மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

என்ன பெட்... ஜுலியட்?

##~##

கே.வெங்கட், விழுப்புரம்.

 அட்சய பாத்திரம், கற்பக மரம், காமதேனு இதில் ஏதாவது ஒன்று உங்களுக்குக் கிடைக்கும் என்றால் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

அட்சய பாத்திரத்தைத் திருடிக்கொண்டு போய்விடுவார்கள். காமதேனுவை மெனக்கெட்டுப் பராமரிக்க வேண்டும். ஆகவே, கற்பக மரம்தான்! 'தண்ணீர் நீயே ஊற்றிக்கொள், ஓ.கே?’ என்று சொல்லிவிட்டு, நிழலில் படுத்துக்கொண்டு நான் போடும் முதல் ஆர்டர் - சூடா ஒரு பிளேட் பொங்கல், இட்லி, மெதுவடை!

சூ.ஜூலியட் மரியலில்லி, கடலூர்.

2012-ல் உலகம் அழியும் முன் நீங்கள் என்னென்ன செய்யப்போகிறீர்கள்?

ஹாய் மதன் கேள்வி - பதில்

தெருத் தெருவாகச் சென்று ரொம்பப் பயப்படுகிறவர்களிடம்   'இப்படி   எல்லாம் உலகம்  அழியாது!’  என்று  எடுத்துச் சொல்வேன். சரி, 2012 முடிவில் உலகம் அழிந்தால், நான் கார்ட்டூன் போடுவதையும் பதில் எழுதுவதையும் நிறுத்திவிடுகிறேன். என்ன பெட்?!

ஜி.குப்புசாமி, சங்கராபுரம்.

வாரிக்கொடுத்த... அள்ளிக்கொடுத்த கர்ணன், கடைசியில் மேல் லோகத்தில் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்பட்டது உண்மையா சார்?

மேல் உலகத்தில் சாப்பாடு, சரவண பவன் எல்லாம் உண்டு என்று யார் சொன்னது? கர்ணன் இணையில்லாத வள்ளல் என்றா லும், திரௌபதியின் துகில் அவிழ்க்கப்பட்ட போது கை தட்டி ரசித்தான். 'மடியில் வந்து உட்கார்’ என்று துரியோதனன் எக்களித்தபோது, 'ஐந்து பேருடன் படுத்துக்கொள்கிற உனக்கு மானம் எதற்கு? போய் துரியோ தனன் மடியில் உட்கார்!’ என்று சுடு சொற்களை உபயோகித்து ஏசியவன் கர்ணன். அதனால், தேவலோகத்தில் பனிஷ்மென்ட் கிடைத்திருக்க வாய்ப்பு உண்டு!

மகிழை.சிவகார்த்தி, புறத்தாக்குடி.

போட்டுக்கொடுப்பவன் புத்திசாலியா... போட்டு வாங்குபவன் புத்திசாலியா?

போட்டுக்கொடுப்பவன் பொறாமை பிடித்த பயந்தாங்கொள்ளி. போட்டுவாங்குபவன்தான் புத்திசாலி - உதாரணமாக, நீங்கள்! கேள்வி யைப் போட்டு என்னிடம் பதில் வாங்குகிறீர்கள் அல்லவா?!

ஹாய் மதன் கேள்வி - பதில்

பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

கதாநாயகன் மழையில் நனைந்துகொண்டே பாடி ஆடுவது... கதாநாயகி மழையில் நனைந்துகொண்டே ஆடிப் பாடுவது... என்ன வேறுபாடு?

எந்தப் படத்தில் ஹீரோ மழையில் நனைந்துகொண்டே பாடுகிறார்? பார்க்கச் சகிக்காது என்பதாலும், தலையில் சொட்டை தெரியும் என்பதாலும் பல ஹீரோக்கள் அதை விரும்புவது இல்லை. மழையில் நனையும்போது உடலின் பல இடங்களில் மலர்வது கதாநாயகி மட்டுமே!

விஜயலட்சுமி, பொழிச்சலூர்.

முத்தம் என்பது கடவுள் தந்த வரம்தானே?

உதடுகள்தான் கடவுள் தந்த வரம். 'கிஸ்’ மனிதனின் கண்டுபிடிப்பு!

என்.பாலகிருஷ்ணன், மதுரை.

அமைச்சரவையை  அடிக்கடி  மாற்றுவது, ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையின்மையைக் காட்டுகிறதா?

நான் அப்படி நினைக்கவில்லை. பெரும்பாலான மாவட்டங்களுக்குப் பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தோடு, அங்கு

ஹாய் மதன் கேள்வி - பதில்

உள்ள செல்வாக்கான கட்சிக்காரர் களை அமைச்சராக்குகிறார் முதல்வர். அவர்களை எல்லாம் முதல்வருக்கு பெர்சனலாகத் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அமைச்சராகி, அவர் முதல்வரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் வந்த பிறகு, நிர்வாகம் பண்ணத் தெரியாமல் சொதப்பினாலோ, அதற்கான திறமை இல்லாதவராக இருந்தாலோ, ஒற்றராக இருந்தாலோ என்ன செய்வது? ஐந்து வருடங்களும் தகுதி இல்லாத அமைச்சரை வைத்துக் கொண்டு மாரடிக்கச் சொல்கிறீர்களா? அதான் மாற்றுகிறார். அதில் தப்பே இல்லை. எனக்கு என்னவோ எல்லா அமைச்சர்களுக்குமே ஆரம்பத்தில் ஒரு 'மூணு மாசப் பரீட்சை’ வைக்கலாம் என்று தோன்றுகிறது. இந்த செமி ஃபைனலில் ஜெயித்தால் ஃபைனல்ஸ் - அமைச்சர் பதவி!

மா.மாரிமுத்து, ஈரோடு-1.

உங்களுக்குக் கோபம் வரும்போது என்ன வார்த்தை சொல்லி எதிரில் இருப்பவரைத் திட்டுவீர்கள்? ஓப்பன் பதில் தேவை!

முன்பெல்லாம் ஒரே ஒரு வார்த்தையால் சம்பந்தப்பட்டவரை சிரச்சேதம் செய்து விடுவேன்! சிரம் போனால் மிச்சம் என்ன?! போகப்போக எனக்கே அது 'கொடூர’மாகப்பட்டதால் 'முட்டாள்’ என்பதுடன் நிறுத்திக்கொண்டேன். இப்போது கொஞ்சம் ஞானியாக மாறிக்கொண்டு இருக்கிறேனோ என்னவோ... யாரையும் எதுவும் திட்டு வது இல்லை!

இரா.தேன்மொழி அண்ணாதுரை, தென்கடைகுறிச்சி.

வவ்வால்கள் தனக்கு வசதிப்பட்ட தேதியில் 'டெலிவரி’யை வைத்துக்கொள்ளுமாமே... ரியலி?

இது என்ன பீலா?! வவ்வாலுக்கு காலண்டர், தேதி எல்லாம் உண்டா என்ன? வவ்வால் தலைகீழாகத் தொங்கும்போதே பிரசவிக்கும், குஞ்சு கீழே விழாமல் இருக்க இறக்கையால் 'கேட்ச்’ பிடித்துக்கொள்ளும் என்பது மட்டும் எனக்குத் தெரியும்!