மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 26

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

''ஆறு மாசத்துல காரு... ஒரு வருஷத்துல சொந்த வீடு... இப்பிடிப்பட்ட வேலை இந்தியால எங்க கிடைக்கும்..? வாங்க பாஸு''

''மூத்தவனுக்குப் பிரச்னை இல்லைங்க... அவன் கவர்மென்ட் காலேஜ்ல தமிழ்ப் பேராசிரியர் ஆகி கண்ணுக்கழகா வந்துருவாங்க...''

அப்போதெல்லாம் சொந்தபந்தங்களிடம் அப்பா அடிக்கடி சொல்கிற டயலாக் இது!

 சரவணன் அண்ணனைத் தமிழ்ப் பேராசிரியர் ஆக்கிவிட வேண்டும் என்பதுதான் பிள்ளைகளைப் பற்றிய அப்பாவின் முதல் அஜெண்டா. அதற்குக் காரணமும் அண்ணன்தான். 2-விலேயே தி.ஜா-வையும் பாலகுமாரனையும் கரைத்தடித்துவிட்டு, வெட்டாத்தங்கரையில் வீறுநடை போடுகிறவனை தமிழ்ப் பேராசிரியராகத்தானே ஆக்க முடியும்? அதுவும் இல்லாமல் தமிழ்ப் பேராசிரியர் என்றால் ஊர்ப் பக்கம் தனி மரியாதை.

கை நிறையச் சம்பளம். பட்டிமன்றம் அது இதுவென ஹிட்டடித்தால்... டி.வி. புகழ் வேறு. கல்யாணம் என்று வந்தால் 50 பவுன், மாருதி கார், ரொக்கம் என மாப்பிள்ளைக்கு கிராஃப் எகிறும். ஆகவே, அது நல்கனவுதான். அப்பாவின் கனவுக்கு லிட்டர் கணக்கில் பால் வார்க்கிற மாதிரியே இருந்தன அண்ணனின் அட்ராசிட்டிகள். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் பி.லிட்., எம்.ஏ. படித்தவன், எக்கச்சக்கமாக குர்தா தைத்து மாட்டிக்கொண்டு, வைரமுத்துவின் ஜெராக்ஸாக அலைந்தான்.

வட்டியும் முதலும் - 26

தனது நடை உடை பாவனைகளால் பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தில் மூத்தவன் அதிர்வலைகளை உருவாக்கிக்கொண்டு இருந்தபோதே அடுத்தவன் குரு விளைந்து நின்றான். குரு விஷயத்தில் நடந்தது எங்கள் தாலுக்காவே எதிர்பாராத அதிரடி. அவனை கேட்டரிங் டெக்னாலஜி என்னும் சமையல் கலைப் படிப்பில் சேர்த்துவிட்டார் அப்பா.

அதுவரை அப்படி ஒரு படிப்பு இருப்பது எங்கள் ஊருக்கே தெரியாது. அவன் வேறு லீவுக்கு வரும்போது, செஃப் ஜேக்கப் மாதிரி நீள குல்லா எல்லாம் போட்டுக்கொண்டு, கரி மண்டிய எங்கள் அடுக்களையில் மஷ்ரூம் பன்னீர் ஃப்ரை எல்லாம் செய்து கலவரப்படுத்தினான். படிப்பு, பயிற்சி முடித்ததும் அவனை மலேசியாவுக்கு வேலைக்கு அனுப்புகிற ஏற்பாட்டில் இருந்தார் அப்பா. அங்கே ஆரம்பச் சம்பளமே 50 ஆயிரம். ஆக, இந்த இருவரின் செயல்திட்டங்களிலேயே குடும்பம் தன்னிறைவை எய்திவிடும்!

மூன்றாமவன் சித்தார்த்தன் படிப்பைப் பொறுத்தவரை 'பாஸ் என்கிற பாஸ்கரன்’. கிரிக்கெட் வெறியில் திரிந்தவனை லோக்கல் தொழிலதிபர் ஆக்கிவிடலாம் எனக் குறைந்தபட்சச் செயல்திட்டம் வைத்திருந்தார் அப்பா. நான் படிப்பில் சுமார் என்பதால், என்னை காசு கீசு கட்டி இன்ஜினீயர் ஆக்கிவிடலாம் என்கிற பேராசையில் எலெக்ட்ரானிக் டிப்ளமோ சேர்த்துவிட்டார் (எனக்கு இன்றுவரை ஜீரோ வாட்ஸுக்கும் 100 வாட்ஸுக்குமே வித்தியாசம் தெரியாது என்பது தனிக் கதை).

நிற்க. படிப்பெல்லாம் முடித்து, பூண்டி காலேஜில் புரொஃபசர் போஸ்ட் வந்தபோது, சரவணன் அண்ணன் அசால்டாகச் சொன்னான்: ''நான் மெட்ராஸ் போறேன். சினிமால டைரக்டராகிட்டுதான் ஊருக்கு வருவேன்.'' அப்பா அதிர்ந்துபோய், நண்பர்களைத் தூதுவிட்டு பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். அனைத்தும் தோல்வியில் முடிந்து, அண்ணன் லட்சிய வெறியோடு ஆம்னி பஸ் ஏறினான். தாஜ் கொரமண்டலில் டிரெயினிங் போன குருவும் மலேசிய விளக்கை விசிறி அணைத்தான். ''மூட்ட மூட்டையா வெங்காயம் உரிக்கச் சொல்றானுங்க... பேஸிக்கலி ஐ அம் எ கலைஞன். ஒரு சிற்பியை அம்மிக் கொத்தச் சொல்லாதீங்க...'' எனப் பல பக்க வசனங்களோடு வந்தவன், ''நானும் சினிமாவுக்குப்

போறேன்...'' என அடுத்த ஆம்னி பஸ் பிடிக்க, அப்பா செங்கல் சூளைக் கொட்டா யில் செய்வது அறியாது படுத்துக்கிடந்தார்.

பல வருடங்கள் கழிந்துவிட்ட இன்று... அப்பா இல்லை. தமிழ்ப் பேராசிரியர் ஆவான் என நினைத்தவன் சினிமாவுக்கு வந்துவிட்டான். மலேசியாவில் செஃப் ஆவான் என நினைத்தவன் 'புதிய தலைமுறை’ சேனலில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருக்கிறான். படிப்பே வராதவனுக்கு அரசு வேலையில் இருந்த அப்பாவின் வழியில் வேலை கிடைத்து, கவர்மென்ட் சர்வென்ட் ஆகிவிட்டான். என் விஷயத்தில் நடந்ததும் அப்படியே உல்டா. ஆக... மகன்களின் வேலை விஷயத்தில் அப்பாவின் ஒரு கனவுகூடப் பலிக்கவில்லை!

சம்பளம், அன்றாடம், சமூகத் தேவைகள் என்பதைத் தாண்டி... வேலை என்பது விருப்பம் சார்ந்த விஷயமாக இருப்பதுதான் இங்கே பெரிய பிரச்னை. நானறிந்த நண்பர்களில் அதிக வேலைகள் பார்த்தவர் க.சீ.சிவகுமார் அண்ணன். தோராயமாக 40 வேலைகள் பார்த்திருப்பார். வேலை விஷயத்தில் அவர் நாடோடித் தென்றல் அல்ல... நாடோடிப் புயல். போட்டோ ஸ்டுடியோ வேலையில் இருந்து பத்திரிகைப் பணி வரை அது பெரிய லிஸ்ட் (சமூகச் சேவைகள் தனிக் கணக்கு). அவரிடம் இது பற்றிப் பேசும்போது, ''அது ஏண்ணே நம்மளால மட்டும் இங்கே சரியா சர்வை வல் பண்ண முடியலை?'' என்றால், ''அதுக்கு மேனேஜர் மைண்ட் வேணும்டா... உனக்கும் எனக்கும் அது கம்மி'' என்பார்.

''அது என்னண்ணே மேனேஜர் மைண்டு..?''

''வாட்டர் பாட்டில் வாங்கினா எக்ஸ்ஃபையரி டேட் பார்ப்பியா நீ..?''

''அப்பிடின்னா?''

''அதான்... அதான் மேனேஜர் மைண்டு. எக்ஸ்ஃபயரி டேட்டுன்னாலே என்னன்னு கேட்குறம்ல... நமக்கு ஒருக்காலும் அந்த மைண்டு வராது. வெளங்குதா..?''

வட்டியும் முதலும் - 26

எனது இன்னொரு நண்பர், ஒரே நேரத்தில் பல வேலைகள் பார்க்கிறார். ஏழெட்டு கேரவன்கள் வாங்கி வாடகைக்கு விடுகிறார். பார்ட் டைமாக ஒரு சேனலில் நியூஸ் வாசிக்கிறார். இன்னொரு பக்கம் மாடல் கோ-ஆர்டினேட்டராக இருக்கிறார். 'ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ என்று சொல்லிக்கொண்டு டிராஃபிக் க்ளீன் பண்ணுகிறார். அவரிடம், ''ஏங்க... எதுக்குங்க இவ்வளவு வேலைகளை இழுத்துப் போட்டுக்கிட்டு பார்க்கறீங்க? டைம் கிடைச்சா, வீட்ல உக்கார வேண்டியதுதானே?'' என்றால், ''டேய்... வேலைங்கிறது ஒரு அனுபவம். ஒவ்வொரு வேலையும் ஒவ்வொரு விதமான படிப்பு. டைம் கிடைச்சா இன்னும் மூணு வேலைகளைப் பார்ப்பேன்'' என்கிறார்.

போன வாரம் என் அத்தைப் பெண் போன் பண்ணினாள். ஒரு பன்னாட்டு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள். ''வேலை எப்பிடிப் போகுதுடி?'' எனக் கேட்டதற்கு, ''நாட் பேட் மாமா. இங்கே ஃபோர் லேக்ஸ் பேக்கேஜ் பெர் ஆனம் மாமா. இப்போ இன்னொரு கம்பெனியில ஃபைவ் லேக்ஸ் பேக்கேஜ் சொல்றாங்க... நெக்ஸ்ட் மன்த் அங்கே ஜாயின் பண்ணலாம்னு இருக்கேன்'' என்றாள். அவளது அப்பா 40 வருஷமாக ஒரே தனியார் கம்பெனியில் வேலை பார்த்து ரிட்டையர்ட் ஆனவர். இவ்வளவுக்கும்

ரிட்டையர்ட் ஆவதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்புதான் அவர் சீனியர் மேனேஜர் ஆனார். அவர் பேசும்போது அடிக்கடி, ''இத்தனை வருஷத்துல மொதலாளிக்கு விசுவாசமா இருந்திருக்கேன். அந்தத் திருப்தி போதும் எனக்கு...'' என்பார். அவரது மகள் பேக்கேஜ் பேசி, நாலு வருடங்களில் மூணு கம்பெனி மாறிவிட்டாள். முதலாளி, கம்பெனி விசுவாசத்துக்கெல்லாம் கிட்டத்தட்ட போட்டோ மாட்டி மாலை போட்டாகி விட்டது. தனது உடல், பொருள், ஆவியை எல்லாம் ஓர் இடத்துக்காக, ஒரு மனிதனுக்காக அர்ப்பணித்துக் காலம் முழுதும் வேலைக்கான சரியான ஊழியம் பெறாமலே தேய்ந்துபோனவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இந்தத் தலைமுறைக்குத் தனிமனித வளர்ச்சிதான் வேலை குறித்தான பெரிய அளவுகோல். சமூகத்துக்கும் மக்களுக்கும் பயன்படும் நோக்கம் குறைந்துவருவது மட்டுமே இதில் கவலைக்குரிய அம்சம். மற்றபடி இந்தத் தலைமுறையில் வேலை குறித்த பார்வையையும் அதிவேக வளர்ச்சி விகிதத்தையும் நிச்சயமாக ஆதரிக்க வேண்டும்!

ஆனால், இந்த அரசு உத்தியோகஸ்தர்களில் சரி பாதி சதவிகிதத்தினர் ஒருபோதும் திருந்த மாட்டார்கள். எனது செக்ரட்டரியேட் தோழன் ஒருவன் எப்போது போனாலும் கம்ப்யூட்டரில் சீட்டாடிக்கொண்டு இருக்கிறான். அவ்வப்போது வாரக்கணக்கில் லீவு போட்டுவிட்டு, சினிமா டிஸ்கஷனுக்கெல்லாம் வருவான்.

டோக்கன் வாங்க மக்கள் க்யூவில் நிற்கும்போது கூட செல்போனில் மொக்கை போட்டுக்கொண்டு இருப்பான். கேட்டால், ''மாப்ள... எவன்டா உருப்படியா இருக்கான்? நம்ம லெவலுக்கு இதை யூஸ் பண்ணிட்டுப் போயிட்டே இருக்க வேண்டியது தான்'' என்கிறான். காசு கொடுத்து அரசு வேலை வாங்கிய பல பேரின் மனநிலை இப்படித்தான் இருக்கிறது!

பத்து ஆண்டுகளுக்கு முன்பு நான் மதுரையில் தீவிரமாக வேலை தேடிக்கொண்டு இருந்தபோது,

''ஆறு மாசத்துல காரு... ஒரு வருஷத்துல சொந்த வீடு... இப்பிடிப்பட்ட வேலை இந்தியால எங்க கிடைக்கும்..? வாங்க பாஸு''

என்றபடி என்னை ஓர் இடத்துக்கு அழைத்துப்போனார் நண்பர் செந்தில். பெரியார் பஸ்ஸ்டாண்ட் பக்கம் ஒரு ஹோட்டல் ஹாலில் எக்கச்சக்கமாக இளைஞர், இளைஞிகள் கூடியிருந்தார்கள்.

நான் கலவரமாக... டை கட்டிய நான்கைந்து ஆசாமிகள் மேடையில் ஏறி முழங்க ஆரம்பித்தார்கள். ''இதோ இவர்தான் ப்ரவீன்... ஒரு வருஷத் துக்கு முன்னாடி நம்ம நெட் வொர்க்ல ஜாயின் பண்ணி ஷார்ட் பீரியட்ல அச்சீவ் பண்ணி இருக்கார். நேத்து ஹோண்டா சிட்டி கார் வாங்கியிருக்கார். கிவ் ஹிம் எ பிக் ஹேன்ட்...'' என ஒருவர் சொல்ல... பக்கத்தில் நின்ற கறுத்த பையன் கார் சாவியைத் தூக்கிக் காட்டினான். எனக்கு பரவசத்தில் நெஞ்சு விம்மியது. மறுநாளே கடன் வாங்கி 4,000 ரூபாய் கட்டி, அந்த மல்டி லெவல் மார்க்கெட்டிங் (எம்.எல்.எம்.) நெட்வொர்க்கில் சேர்ந்தேன்.

''அதாவது பிரதர்... நீங்க நாலு மெம்பரைச் சேர்க்கணும். அவங்க ஆளுக்கு நாலு நாலு பேரா ஒரு 16 பேரைச் சேர்ப்பாங்க. அந்த 16 பேரும் ஆளுக்கு நாலு நாலு ஆளா...'' என்றபடி அந்த டை பார்ட்டி மேப் போட்டுக்காட்ட, எனக்கு எதுவும் விளங்காமல் செந்திலைப் பார்த்தேன். அவர், ''ஒரு வருஷத்துல ஹோண்டா சிட்டி...'' என்றபடி தம்ஸ்-அப் காட்டி னார். கட்டிய 4,000 ரூபாய்க்கு ஒரு கிட் கொடுத்தார்கள். பவுடர், பேஸ்ட், க்ரீம் என கே.ஆர்.விஜயா வின் மேக்-அப் கிட் மாதிரி இருந்த தைத் தூக்கிக்கொண்டு பெருமித மாக வீட்டுக்கு வந்தேன். ஒரு வாரமாக வெயிலில் அலைந்து திரிந்து மண்டை சூடானதே தவிர, ஒரு மெம்பரும் சேரவில்லை. ''என்ன சார் இது..?'' என சம்பந்தப்பட்ட டை பார்ட்டியிடம் போய் நின்றால், ''நீங்க ப்ளூ டீம் போயிருங்களேன்...'' என்றார்.

''ப்ளூ டீமா..?''

''ஆமாங்க... உங்களுக்குக் குடுத்து இருக்கற கிட் ஆரஞ்ச் டீம். மேக்னெட்டிக் பெட் எடுத்துக்கிட்டீங்கன்னா... ப்ளூ டீம். அதுல நீங்க ஈஸியா வொர்க்-அவுட் பண்ணலாம். எக்ஸ்ட்ரா த்ரீ தவுசண்ட் கட்டினாப் போதும்.''

அந்த மேக்-அப் கிட்டை என் ஹவுஸ் ஓனர் பொண்ணுக்குக் கொடுத்துவிட்டு, குவாட்டரைப் போட்டுவிட்டுப் போய் செந்திலை வண்டை வண்டையாகத் திட்டினேன். அவரது மேக்-அப் கிட் சுக்குநூறாக உடைந்துகிடந்தது. உள் ரூமில் கோபமாக உட்கார்ந்திருந்த மனைவியைக் காட்டி, ''உஷ்ஷ்ஷ்... வெளில போய்ப் பேசலாம்...'' என்றார்.

அப்படியே ரெண்டு பேரும் போய் இன்னொரு நண்பர் மூலம் ஒரு கம்பெனியில் சேர்ந்தோம். அது ரியல் எஸ்டேட் கம்பெனி. ''சிட்டிக்குப் பக்கத்துல ப்ளாட்டுங்க. கல்கண்டு மாதிரி தண்ணி... எல்லா வசதியும் உண்டு'' என ஏகப்பட்ட பொய்கள் சொல்லி, சிக்குகிறவனை வேனில் அள்ளிக்கொண்டு மேலூரைத் தாண்டி 30 கிலோ மீட்டருக்குப் போகிற வேலை அது. ஓர் அந்நியன் பொங்கி எழுந்து எங்களை ப்ளாட் காட்டிய இடத்திலேயே வெளுத்து எடுக்க, சாயங்காலமே ராஜினாமா கடிதம் நீட்டினோம்.

அந்த முதலாளி ரொம்ப கூலாக, ''ஓ.கே. இந்த வேலை உங்களுக்குச் சரிப்பட்டு வராது. நம்ம கம்பெனில புதுசா டீத்தூள் பிசினஸ் ஆரம்பிச்சுருக்கோம். அதை டிஸ்ட்ரிப்யூட் பண்ணுங்க...'' என்றபடி 'த்ரீ ரோஸஸ்’ டீத்தூள் பாக்கெட்டை நீட்டினார். எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. 'இவர்தான் 'த்ரீ ரோஸஸ்’ கம்பெனி ஓனரா..? இந்தப் பெருமை தெரியாமலேயா இவரிடம் வேலை பார்த்தோம்?

வட்டியும் முதலும் - 26

பெரிய கம்பெனியாச்சே...’ எனப் பரவசமாகி உற்றுப் பார்த்தேன். அவர் காட்டிய பாக்கெட்டில் ஒரு ரோஸ் குறைந்தது. ஆக்சுவலி அது டூ ரோஸஸ். உடனடியாக ராஜினாமா செய்தேன்!

கரடி பொம்மை விற்றது, டி.வி.எஸ்ஸில் கரி அள்ளியது, கம்ப்யூட்டர் சர்வீஸ், ஸ்டெபிலைசர் கம்பெனியில் லோடு மேன் என ஆரம்பித்து, பத்திரிகை, சினிமா வேலைகள் வரை நானும் பத்துப் பன்னிரண்டு வேலைகள் பார்த்திருக்கிறேன். குடும்ப, சமூக நெருக்கடிகளாலேயே ஏதேனும் ஒரு வேலைக்குச் சேர்ந்துவிட்டு, அந்தச் சூழலை ஏற்க முடியாமல் தவிப்பது வலி மிகுந்த அனுபவம்.

ஓர் அலுவலகம் என்பது ஒரு சமூகம். ஒரு தேசம். அலுவலகத்தையும் அதன் மனிதர்களையும் அனுசரிக்க முடியாததுதான் பல பேருக்கான பிரச்னை என நினைக்கிறேன். வேலையையே தனது சந்தோஷமாகவும் காதலாகவும் அனுபவிப்பவர்கள் நம்மில் எத்தனை பேர்? சுதந்திரத்துக்கும் கனவுக்கும் நடுவில் சிக்கிக்கொண்டு திண்டாடும் வேலைக்காரர்கள் எத்தனை பேர்? கண்காணாத நாடுகளில் வேலையின் பொருட்டு துயரம் சுமப்பவர்கள் எத்தனை பேர்? வெளிநாட்டு வேலையையே கனவாக வைத்துக்கொண்டு தவிப்பவர்கள் எத்தனை பேர்?

போன மாதம் நாங்கள் இருக்கிற ஃப்ளாட்டுக்குப் புதிதாக ஒரு வாட்ச்மேன் வந்தார். அவருக்குக் கிட்டத்தட்ட 70 வயதுக்கு மேல் இருக்கும். இரவுகளில் வீடு திரும்பும்போது பார்த்தால், பனியில் குன்னி இருமிக்கொண்டுகிடப்பார். யாராவது வருகிற மாதிரி தெரிந்தால், முனகிக்கொண்டே ரவுண்ட்ஸ் போகிற மாதிரி நடப்பார். பத்து ரூபாயோ, சாப்பாடோ கொடுக்கும்போதுதான், முகம் பிரகாசமாவார். இரண்டு நாட்களுக்கு முன்பு பனி தாங்காமல் ஓர் ஆட்டோவுக் குள் சுருண்டுகிடந்தார்.

காய்ச்சல் தாங்காமல் சத்தமாக முனகிக்கொண்டு இருந்தார். அவரை எழுப்பி டீயும் மாத்திரையும் வாங்கித் தந்து, ''ஏங்க... எதுக்குங்க இந்த வயசுல இப்பிடி இருக்கும்போது வேலைக்கு வர்றீங்க?'' என்றேன். எதுவும் பேசாமல் தலைகுனிந்து டீயைக் குடித்தார். கண்கள் கலங்கியிருந்தன. சட்டென்று க்ளாஸை வைத்தவர், ''சார்... ஈ ப்ளாக் சார் வர்றாரு. பார்த்தா திட்டுவாரு... வர்றேன்...'' என்றபடி குச்சியைத் தட்டிக்கொண்டே அபார்ட்மென்ட்டைச் சுற்ற ஆரம்பித்தார்!  

(போட்டு வாங்குவோம்...)      

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan