தடகள வீராங்கனை டுட்டி சந்த் தான் ஒரு தன்பாலின ஈடுபாடு கொண்டவர் என்றும் கல்லூரி மாணவி ஒருவருடன் 5 ஆண்டுகளாக ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். டுட்டி சந்தின் சொந்த ஊரான சாகா கோபால்பூரைச் (ஒடிசா) சேர்ந்த கல்லூரி மாணவியின் பெயரை அவர் வெளியிடவில்லை. தேவையில்லாமல் தன் பார்ட்னர் மீது கவனம் திரும்புவதை நான் விரும்பவில்லை என்றும் தான் நேசிக்கும் பெண்ணுடன் ஒரே வீட்டில் வாழவே ஆசைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டுட்டி சந்தின் விருப்பத்துக்கு அவரின் சகோதரி சரஸ்வதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சரஸ்வதி கூறுகையில், ``டுட்டி சந்த் வளர்ந்தவர். என்ன முடிவு எடுக்க வேண்டுமென்பது அவருக்குத் தெரியும். ஆணையோ அல்லது பெண்ணையோ திருமணம் செய்து கொண்டு விட்டுப் போகட்டும். ஆனால், அவருடன் ரிலேஷன்ஷிப்பில் உள்ள பெண் சொத்துகள் மீதுதான் நாட்டம் வைத்துள்ளார். அந்தப் பெண்ணால், டுட்டி சந்த் தன் சொத்துகளை இழக்க நேரிடும். பார்ட்னர் வற்புறுத்த தான் ஒரு தன்பாலின ஈடுபாடு கொண்டவர் என்று இப்போது வெளியே சொல்கிறார். டுட்டி சந்தை அந்தப் பெண் மிரட்டி வைத்துள்ளார். என் சகோதரியின் உயிருக்கும் சொத்துகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பிரகாசிக்கத் தேவையான பயிற்சிகளை மேற்கொள்வதை விட்டுவிட்டு தேவையில்லாத விஷயங்களில் அவர் கவனம் செலுத்துவது எனக்குப் பிடிக்கவில்லை '' என்று தெரிவித்துள்ளார்.
தற்போது 23 வயதான டுட்டி சந்த், ஹைபர் ஆண்ட்ரோஜெனிஸம் காரணமாகப் பாலின விவகாரத்தில் சிக்கி தடையைச் சந்தித்தவர். இதனால், 2014-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் அவரால் பங்கேற்க முடியாமல் போனது. Court of Arbitration of Sports வழக்கு தொடர்ந்து தடை நீக்கம் பெற்றார். ரியோ ஒலிம்பிக்கில் 100 மீட்டர் தகுதிச் சுற்று ஓட்டத்தில் பங்கேற்ற இந்திய வீராங்கனை என்ற பெருமையும் டுட்டி சத்துக்கு உண்டு. தற்போது 23 வயதான அவர் தீவிர பயிற்சியில் கவனம் செலுத்தினால், அவரால் அடுத்தடுத்து வெற்றி குவிக்க முடியும். ஆனால், தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்கிக்கொள்கிறார்'' என நெருக்கமானவர்கள் வருந்துகிறார்கள்.

இதற்கிடையே, தன் சகோதரிக்குப் பதில் அளித்துள்ள டுட்டி சந்த், ``என் தோழி எனக்கு உயிரானவர். விளையாட்டில் அக்கறை கொண்டவர். என்னை நன்றாக பார்த்துக்கொள்ளக் கூடியவர். எப்போதுமே தன்பாலின உறவுக்கு நான் ஆதரவு அளித்து வந்துள்ளேன். அவரவர் விருப்பம், அவரவர் உரிமை. என் மூத்த சகோதரி மிரட்டுகிறார். என்னைச் சிறைக்கு அனுப்பி விடுவேன் என்கிறார். என் சகோதரர்களின் மனைவியைக்கூட வீட்டை விட்டுத் துரத்தி விட்டவர் அவர். உச்சநீதிமன்றத்தின் உத்தரவுதான் தன்னை தன்பாலின ஈடுபாடு கொண்டவர் என்பதை அறிவிக்கும் துணிச்சலைத் தந்தது'' என்கிறார்.
தன்பாலின ஈடுபாடு கொண்டவள் என்பதைப் பொதுப்படையாக அறிவித்த முதல் இந்திய விளையாட்டு வீராங்கனை டுட்டி சந்த் என்பது குறிப்பிடத்தக்கது.