Published:Updated:

``இளமையைத் தரும் நீரூற்று!" - 2000 ஆண்டுகளாகத் தொடர்ந்த மர்மம்

``இளமையைத் தரும் நீரூற்று!" - 2000 ஆண்டுகளாகத் தொடர்ந்த மர்மம்

செல்வ வேட்கை தணலும் கண்களோடு கடலுக்குள் இறங்கியவர்களில் பலரும் கடலுக்கே இரையானார்கள். அவர்களின் வரலாறுகள் ஏடுகளுக்கு வந்ததைவிடக் கடலோடு போனதே அதிகம். என்ன செய்வது! வரலாறும் கடல் போன்றதுதான்.

Published:Updated:

``இளமையைத் தரும் நீரூற்று!" - 2000 ஆண்டுகளாகத் தொடர்ந்த மர்மம்

செல்வ வேட்கை தணலும் கண்களோடு கடலுக்குள் இறங்கியவர்களில் பலரும் கடலுக்கே இரையானார்கள். அவர்களின் வரலாறுகள் ஏடுகளுக்கு வந்ததைவிடக் கடலோடு போனதே அதிகம். என்ன செய்வது! வரலாறும் கடல் போன்றதுதான்.

``இளமையைத் தரும் நீரூற்று!" - 2000 ஆண்டுகளாகத் தொடர்ந்த மர்மம்

செல்வம். அதைத் தேடிக் கடல் கடலாக, கப்பல்கள் கப்பல்களாக, கூட்டம் கூட்டமாக மேற்கத்திய நாட்டவர்கள் சுற்றினர். மாலுமிக் கூட்டம் பூமியின் மத்திய கால வரலாற்றில் கடல் முழுவதும் தங்கள் கப்பல்களை மிதக்க விட்டுக்கொண்டிருந்தனர். அதுபோக தங்க நகரம், நீரூற்று, பூமியின் எல்லை என்று கற்பனையான பல கட்டுக்கதைகளை நம்பியும் நிறைய மாலுமிகள் கடலில் சுற்றிக் கொண்டிருந்தனர்.

புதிய உலகைத் தேடிச் சுற்றிய மாலுமிகள் அனைவரும் இப்படிச் செல்வத்திற்காகவே கடலோடவில்லை. சிலர் சாகசங்களை விரும்பினர். சிலர் பெயர், புகழ், அரசியல் அதிகாரங்களை விரும்பினர். 

அலைகளின் வழியே நீரோட்டத்தின் பாதையிலே ஏதேனும் ஒரு புதிய நிலம் தென்படாதா, அந்தப் புதிய நிலத்தில் அள்ள அள்ளக் குறையாத செல்வம் கிடைக்காதா என்ற வேட்கை. அந்த வேட்கை தணலும் கண்களோடு கடலுக்குள் இறங்கியவர்களில் பலரும் கடலுக்கே இரையானார்கள். அவர்களின் வரலாறுகள் ஏடுகளுக்கு வந்ததைவிடக் கடலோடு போனதே அதிகம். என்ன செய்வது! வரலாறும் கடல் போன்றதுதான். அதில் மிதக்கும் கப்பல்களே கண்களுக்குப் புலப்படுகின்றன. மூழ்கியவை கண்டுகொள்ளப்படுவதில்லை. 

``இளமையைத் தரும் நீரூற்று!" - 2000 ஆண்டுகளாகத் தொடர்ந்த மர்மம்

புதிய நிலங்களைத் தேடிப் பயணித்த மாலுமிகளின் பேராசைகளைத் தூண்டிவிட்டுத் தன்னுள் கரைத்துவிடக் கடல் பல கட்டுக்கதைகளை அலைகளோடு திரிய விட்டிருந்தது. அதில் அழிந்தவர்கள் ஏராளம். ஆசியாவைத் தேடிக் கடல்வழிப் பாதையை வகுக்கப் பல மேற்கத்திய மாலுமிகள் முயற்சி மேற்கொண்டார்கள். இப்படிச் செல்வம் தேடித் திரிந்தவர்களில் பலரும் இல்லவே இல்லாத நிலங்களின் மீது சொல்லப்பட்ட கட்டுக்கதைகளை நம்பித்தான் பயணிக்கத் தொடங்கினர். அந்தக் கதைகளின் மர்மங்களும் பல நூறு ஆண்டுகளுக்குத் தெளிவாகாமலே இருந்தது. அதில் சில கதைகள் சுவாரஸ்யமானவை. 

தங்க நகரங்கள் 

ஐரோப்பாவிலிருந்து மேற்கு நோக்கி நீண்ட தூரத்தில் இருந்த நிலங்களில் அட்லான்டிஸ் என்ற தொலைந்த நகரம் இருப்பதாக மத்திய கால மாலுமிகள் நம்பினார்கள். எட்டாம் நூற்றாண்டில் இஸ்லாமிய நாடுகளின் படையெடுப்பை எதிர்த்துத் துரத்தியடித்த கிறித்துவப் பாதிரிகள் தங்கத்தால் ஆன ஏழு நகரங்கள் அடங்கிய அந்த அட்லான்டிஸ் தீவைத் தம் கண்களால் 712-ம் ஆண்டு பார்த்ததாகக் கதைகள் உலவின. இந்தக் கற்பனைத் தீவு காலப்போக்கில் அன்டில்லியா என்று பெயர் மாற்றம் பெற்றது. அது அட்லாண்டிக் கடலின் நடுவே இருப்பதாக வரைபடங்கள்கூட உருவாகின. அந்த வரைபடங்களைத் தேடித் தேசங்களும் தனியார் மாலுமிகளும் கடற்கொள்ளையர்களும் மாறி மாறி அடித்துக்கொண்டனர். இத்தனைக்கும் அட்லாண்டிக் முழுவதிலும் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்த அந்த மாலுமிகளுக்கு அங்கு அப்படியொரு தீவு இதுவரை தென்படவில்லையே என்ற சிறு கேள்விகூட எழாமல் போனது காலத்தின் கோலம்தான். 

ஒருசில அறிவுஜீவிகள் அதைப் பிற்காலத்தில் கண்டுபிடித்தனர். அட்லாண்டிக் பெருங்கடலில் அந்தத் தீவு இல்லையென்று தெரியவந்த சமயத்தில், கதை வட அமெரிக்காவின் மேற்குக் கோடிக்குக் கொண்டு செல்லப்பட்டது. 16-ம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் அன்டில்லியா குறித்த தேடுதல் முடிவடைந்தது. ஆனால், தங்கத்தால் ஆன அந்த ஏழு நகரங்களைத் தேடுவதை யாரும் நிறுத்தவில்லை. இப்போது அது, வட அமெரிக்காவுக்கு இடையில்தான் எங்கோ இருப்பதாக நம்பத்தொடங்கினார்கள். மீண்டும் தேடுதல் வேட்டை. அன்டில்லியா மறந்துபோனது. அதற்குப் பதிலாக கரீபியன் தீவுக் கூட்டத்தில்தான் எங்கோ தங்க நகரங்களைக் கொண்ட அன்டிலெஸ் என்ற தீவு இருப்பதாக நம்பப்பட்டது. அதைத் தேடிச் சுற்றியதில் கரீபியன் தீவைச் சேர்ந்த கடற்கொள்ளையர்களும் அடக்கம். யார்தான் பேராசைக்கு இரையாகாமல் தப்பித்தார்கள். 

``இளமையைத் தரும் நீரூற்று!" - 2000 ஆண்டுகளாகத் தொடர்ந்த மர்மம்

காலங்கள் போயின. பெயர்கள் மாறின. கதை மட்டும் அதேதான். ஏழு தங்க நகரங்கள் யாராவது ஒருவரால் கண்டுபிடிக்கப்பட வேண்டுமென்று காத்திருக்கிறது என்று மாலுமிகள் நம்பினார்கள். அதற்காக உயிரையும் கொடுக்கும் அளவுக்கு அது தகுதியானது என்று உறுதியாக இருந்தார்கள். கபேஸா டி வாகா என்ற கப்பல் தலைவனும் அவனுடைய அடிமையான எஸ்தெபானும் தங்க நகரங்கள் அமைந்துள்ள சிபோலா என்ற பகுதி தற்கால நியூ மெக்ஸிகோவின் வடகிழக்கில் இருப்பதாகப் பதிவு செய்தார்கள். அதை அவர்களுக்குச் சொன்னது அமெரிக்காவின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்கள் என்றும் கூறியுள்ளார்கள். 

அப்போது செவ்விந்தியர்களுக்கு ஐரோப்பியர்கள் மேல் அப்படியென்ன கோவமோ! ஒருவேளை, அந்தப் புதிய மனிதர்கள் எப்படியாவது தங்கள் நிலத்திலிருந்து போனால் போதும் என்றுகூட அப்படிக் கூறியிருக்கலாம். இல்லையேல், அவர்கள் மத்தியிலும் இந்தக் கட்டுக்கதை உலவியிருக்கலாம். 

1540-ம் ஆண்டு ஃபிரான்சிஸ்கோ கோரொனாடோ இந்த நகரங்களைத் தேடி மீண்டும் கிளம்பினார். இன்றைய மெக்சிகோவிலிருந்து 5872.2 கிலோமீட்டர்கள் தொலைவிலிருந்த கியுவிரா (Quivira) என்ற நிலப்பகுதியைக் கண்டுபிடித்தார். அந்த நிலம் மிகச் செழிப்பாக இருந்ததாகவும் ஸ்பெயினுக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்யத் தகுந்த நிலம் என்றும் அவர் பதிவு செய்துள்ளார். கடலைகள், மல்பெர்ரி பழங்கள், திராட்சைகள் என்று அனைத்தையும் அங்கு உடனடியாக விளைவித்து ஸ்பெயினுக்கு அனுப்புவதில் பேரார்வம் கொண்டிருந்தார் ஃபிராசிஸ்கோ. ஆனால், தங்க நகரங்களைத் தேட வேண்டுமென்ற ஆர்வம் அதைவிட அதிகமாக அவரிடம் பீடித்திருந்தது. 

``இளமையைத் தரும் நீரூற்று!" - 2000 ஆண்டுகளாகத் தொடர்ந்த மர்மம்

அது அவரை மேலும் தேடச்சொல்லித் தூண்டியது. புறப்பட்டார், ஆனால், காலம் அவருடன் ஒத்துழைக்கவில்லை. அதன்பிறகு தென்னமெரிக்காவின் அமேசான் பள்ளத்தாக்கில் கொன்ஸாலோ என்ற ஸ்பானியரும் ஆங்கிலேயர் ஒருவரும் தங்க நகரம் இருப்பதாகக் கேள்விப்பட்டுத் தேடினார்கள். இன்றைய கொலம்பியாவின் ஆண்டஸ் மலைத்தொடரில் கௌதவிடா என்ற ஏரியில் ஒரு பழங்குடியினத்தைச் சேர்ந்த அரசன், நீர்க்கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காகத் தன்னிடமிருந்த தங்கங்களை அவ்வப்போது அந்த ஏரியில் போட்டுக் கொண்டேயிருந்திருக்கிறான். எல் டொராடோ என்ற அந்த அரசனின் பெயரே பின்னாளில் அந்த இடத்தின் பெயராகவும் மாறியது. கொன்ஸாலோ அந்த ஏரியைத் தோண்டியபோது அங்கிருந்து நிறைய தங்கம் கிடைத்தது. அந்த ஆதாரத்தை வைத்து, தங்க நகரம் நிஜமாகவே இருக்கிறது என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். அவர்களுக்குப் பிறகும் பலர் அந்த நகரத்தைத் தங்க நகரமாக நினைத்து அதைத் தேடி வரத் தொடங்கினார்கள். ஆனால், இறுதிவரை யாருக்கும் அந்த நகரம் காட்சி தரவே இல்லை. இருந்தால்தானே தருவதற்கு... 

இந்தத் தேடலில் அழிந்துபோனவர்கள், காணாமல் போனவர்கள் ஏராளம். அவர்களின் கதைகளும் தங்க நகரக் கதையோடே கடலில் கரைந்துவிட்டது. 

இளமையைத் தரும் நீரூற்று 

ஹாலிவுட்டில் வெளியான பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படம் பார்த்தவர்களுக்கு இதைப் பற்றித் தெரிந்திருக்கும். கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் தொடங்கிய இந்த மர்மம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மாலுமிகளைக் கடலில் பித்து பிடித்தாற்போல் அலையவிட்டது. பான்ஸ் டி லியோன் என்ற மாலுமி ஃப்ளோரிடாவுக்குப் பயணம் மேற்கொண்டபோது இளமையைத் தரும் நீரூற்றைக் கண்டுபிடித்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அந்த நீரூற்று பற்றிய தகவல்களையோ ஆதாரங்களையோ அவ்வளவு ஏன் இளமையைத் தரும் நீரூற்று குறித்த ஒரு செய்தியைக்கூட அவரது எழுத்துகளில் எங்குமே ஆய்வாளர்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. 

``இளமையைத் தரும் நீரூற்று!" - 2000 ஆண்டுகளாகத் தொடர்ந்த மர்மம்

பான்ஸ் டி லியோன் காலத்திற்குப் பிந்தைய காலத்தில் ஸ்பானிய அரசவையைச் சேர்ந்த ஓர் உறுப்பினர்தான் அவர் பார்த்ததாகப் பேசத் தொடங்கியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால், அவரது காலத்திலேயே ஸ்பானிய அரசவை உறுப்பினராக இருந்த கொன்ஸாலோ ஒவியேடோ, ``தான் முதுமை எய்துவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், மீண்டும் இளமையைப் பெற்று இழந்த சுகங்களைப் பெறவேண்டுமென்ற வேட்கையில் பான்ஸ் அந்த நீரூற்றைத் தேடிப் பித்துப் பிடித்து அலைந்துள்ளார். ஆனால், அவருக்கு அது கிடைக்கவில்லை" என்று பதிவு செய்துள்ளார். போர்டோ ரிகாவின் முதல் கவர்னராகப் பதவி வகித்த பான்ஸ், 1513-ம் ஆண்டு தொடங்கி தன் 47 வயதுவரை நீரூற்று இருக்கிறதென நம்பித் தேடியலைந்து இறுதியில் 1521-ம் ஆண்டு கூபாவில் உயிரிழந்துள்ளார். 

இளமையைத் தரும் நீரூற்றைத் தேடி 16-ம் நூற்றாண்டில் பலரும் அலைந்திருந்தாலும் அப்போதுகூட ஒரு சாரரால் இந்தத் தேடுதல் மூடத்தனமாகத்தான் கருதப்பட்டது. இருப்பினும் இதைத் தேடிச் செல்வதாகத் திட்டங்களை முன்மொழிந்து பல மாலுமிகள் பல செல்வந்தர்களிடம் பயணத்துக்கான பொருளுதவி வாங்கிக்கொண்டு கிளம்பியுள்ளார்கள். ஒருவழியாக பதினாறாம் நூற்றாண்டோடு இந்த நீரூற்று தொடர்பான தகவல்கள் அனைத்துமே பொய்யென்று மாலுமிகளும் மக்களும் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.

இதுபோன்ற கட்டுக்கதைகள் மாலுமிகளால் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. கடல் முழுக்க அளக்க வேண்டுமென்றும் பல வீரசாகசங்களைச் செய்து வரலாற்றின் சாகசப் பக்கங்களில் இடம்பெற வேண்டுமென்றும் நிறைய மாலுமிகள் விரும்பினார்கள். அதற்குத் தகுந்த பொருள்செலவுக்கு அவர்களிடம் நிதி இல்லாத சூழல்களில் இத்தகைய கட்டுக்கதைகளைக் அவிழ்த்துவிட்டு அதன்மூலம் முதலீட்டாளர்களைத் தன் வசம் ஈர்க்கத் தொடங்கினார்கள். அதன்மூலம் அவர்களும் பல புதிய நிலங்களைத் தேடிக் கடலை அளக்கப் புறப்பட்டனர். 

``இளமையைத் தரும் நீரூற்று!" - 2000 ஆண்டுகளாகத் தொடர்ந்த மர்மம்

இப்படியாகக் கிளப்பிவிடப்பட்ட கதைகள் அனைத்தும் உண்மையைப் போலவே இருந்தன. அப்போது அதைத் தேடிச் சென்றவர்கள் அனைவருமே அது உண்மையாக இருக்க வேண்டுமென்றுதான் நினைத்தனர். அப்படி நம்பிச் சென்றவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இருப்பினும் தேடுதல் நிற்கவில்லை. மர்மக் கதைகளுக்கு இன்றுவரை செல்வாக்கு குறையாமல் இருக்கக் காரணமே அதை நம்புவதற்கென ஒரு கூட்டம் இருந்துகொண்டேயிருப்பதுதான். 

எப்போதேனும் பெருங்கடல்களில் சுற்றும் நவீனகால மாலுமிகளைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் கேட்டுப்பாருங்கள். இன்றும் ஏதேனும் கட்டுக்கதைகளைச் சுமந்துகொண்டு அந்தக் கடல் அலைகள் அவர்களைத் தேடி வந்திருக்கலாம். இனியும் வரலாம்...