மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

டார்லிங்... டார்லிங்..!

##~##

கண்.சிவகுமார், திருமருகல்.

 'டார்லிங்’ என்று யாரிடமும் சமீபத்தில் சொன்னீர் களா?

வாசகர்களிடம் உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆமாம், சொன்னேன்! நண்பர் ஒருவர் 'காதலி, மனைவி இருவரி டமும் 'டார்லிங்’ சொல்லலாமா?’ என்று கேட்டார். 'தாராளமாகச் சொல்லலாம். உங்கள் வீட்டைக்கூட 'டார்லிங் ஆஃப் எ ஹவுஸ்’ (Darling of a House) என்று குறிப்பிடலாம்’ என்று சொன்னேன். டியர்லிங் (Dearling) என்பதுதான் டார்லிங் (Darling) என்று மாறியது என்பதையும் சொன்னேன். நண்பர் எதிலோ ஜாலியாக மாட்டிக்கொண்டு இருக்கிறார் என்பது என் சந்தேகம்!

வ.கலைவாணன், மதுரை.

காதல் - காதல் திருமணம்! என்ன வித்தியாசம் நிகழ்கிறது?

குதிரைக்கும் குதிரை வண்டிக்கும் உள்ள வித்தியாசம்தான்!

ஜெ.நீலகண்டன், சென்னை-12.

அண்மையில் திருமணம் ஆன நான் 'ஹேப்பி’யாக வாழ ஓர் அறிவுரை ப்ளீஸ்..?

ரொம்ப சிம்பிள்! வாயை மூடிக்கொள்ளவும். பர்ஸைத் திறந்துவைத்துக்கொள்ளவும்!

கே.எம்.வித்யாசங்கர், கோவை.

என் மனைவி என் மீது உயிரை வைத்திருக்கிறாள். அந்த அளவுக்கு என்னால் பதிலுக்கு ஆசையைப் பொழிய முடியவில்லை என்று மனம் சங்கடப்படுகிறது. என் மீது தவறா?

இதில் போட்டி எதற்கு? இருவருமே ஒருவர் மீது ஒருவர் ஒரேயடியாக 'உயிரையேவைத்தால்’ தெரு பூராவும் பேச ஆரம்பித்து திருஷ்டிப்பட்டுவிடும்! ஆனால் ஒன்று, பசித்த புலியிடம் இருந்தும் ரொம்ப ஆசை வைக்கும் பெண்ணிடம் இருந்தும் (அல்லது மனைவி!) தப்புவதற்கு சான்ஸே இல்லை என்று பழமொழி உண்டு!

அ.உமர், கடையநல்லூர்.

'கள்ளினும் காமம் இனிது’ என்றுதானே வள்ளுவர் சொல்கிறார்; காதல் இனிது இல்லையா?

காதல் வயப்படுவதில் பின் விளைவுகள் கிடையாது. காமத்துக்கு உண்டு - மதுவைப் போல! வள்ளுவர் செய்வது ஓர் எச்சரிக்கை!

எல்.வரலக்ஷ்மி, சென்னை-30.

திரை விமர்சகரே... மிகச் சிறந்த காதல் திரைப்படங்களை வரிசைப்படுத்த உங்களால் முடியுமா?

நான் என்ன வரிசைப்படுத்துவது? 'அமெரிக்கன் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்’ எல்லா விமர்சகர்களையும் ஓட்டுப் போடச் சொல்லி 'Most Passionate films’ என்று 100 படங்களைத் தேர்வு செய்திருக்கிறது. அதில் முதல் 10 படங்கள் மட்டும் இதோ! 1. Casablanca 2. Gone with the wind 3. westside story 4. Roman Holiday 5. An Affair to remember 6. The way we were? 7. Doctor Zhivago 8. It’s a wonderful life 9. love story 10. City Lights.

இவை அத்தனையும் பார்த்தே தீர வேண்டிய படங்கள். தமிழில் இதே மாதிரி 'பெஸ்ட் 10’ படங்களை வாசகர்கள் எழுதி அனுப்புங்களேன்!

ஒரு வாசகி, திருச்சி-6.

எனக்கும் என் பாய் ஃப்ரெண்டுக்கும் செட் ஆகவில்லை. நேரடியாக, வெளிப்படையாக இதுபற்றிப் பேசிப் பிரிந்துவிடலாம் என்று பார்த்தால், தயக்கமாக இருக்கிறது. என்ன செய்வது?

முன்புதான் இதெல்லாம் கஷ்டம். மொபைல், எஸ்.எம்.எஸ்., இ-மெயில் எல்லாம் வந்துவிட்ட இந்தக் காலத்தில் என்ன உங்களுக்குப் பிரச்னை? மென்மையாக, உண்மையைச் சொல்லிவிடுங்கள். இனிப்பு அடியோடு போய்விட்ட பிறகும் எத்தனை நேரம் 'சூயிங்கம்’மை மென்றுகொண்டு இருப் பீர்கள்?!

விஜி, பொழிச்சலூர்.

உள்ளாடைகளும் அழகாக... கவர்ச்சியாக இருக்க வேண்டுமா என்ன?

ஹாய் மதன் கேள்வி - பதில்

பின்னே? நாம் கடைசியாகப் பார்ப்பது... அதைத்தானே?!

ஸ்ரீவத்ஸன், சென்னை-20.

ஆச்சர்யம்! ரொமான்டிக்கான பதில்களை எழுதுவதில் தேவை இல்லாத (!) ஆர்வம் காட்டும் மதன், ஏன் இதுவரை முக்கியமான கஜுரஹோ கோயில் சிற்பங்கள்பற்றி எழுதவில்லை?

நீங்களாவது இந்தப் பகுதிக்குப் புதுமுகம். வாசகர்களுக்குப் பரிச்சயமான, அநேகமாக எல்லாக் 'கேள்வி நாயகர்’ களும் இதே கேள்வியைப் பல முறை கேட்டாச்சு! நான் பதில் எழுதத் தயங்கியதற்குக் காரணம், கஜுரஹோபற்றி கட்டுரைதான் எழுத முடியும். ஒரு பதிலில் அடக்க முடியாது. கடைசியில் ஒரு ஐடியா தோன்றியது! அது...

கஜுரஹோ என்றால் பேரீச்சம் மரம் என்று பொருள். அதில் இருந்து வந்த பெயர் இது. ஒரு காலத்தில் எட்டு பெரும் கதவுகள்கொண்ட பிரமாண்டமான கோட்டைச் சுவருக்குள் பேரீச்சம் மரங்கள் அடர்ந்த ஊரும் ஏராளமான கோயில்களும் பாதுகாப்பாக இருந்தன. காஷ்யப கோத்திரத்தைச் சேர்ந்த, சண்டேளர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்ட ராஜபுத்திர மன்னர்கள் ஆட்சியில் கட்டப் பட்டதே கஜுரஹோ கோயில்கள். கி.பி. 950-ல் தொடங்கி கி.பி. 1150 வரை பல மன்னர்கள் போட்டிபோட்டுக்கொண்டு, சுமார் 100 கோயில்களை அங்கே பக்கத்துப் பக்கத்தில் கட்டினார்கள். ஒரு கோயில்கூட மற்றொரு கோயிலைப் போல இருக்கக் கூடாது என்பது முடிவு. 'வெரைட்டி’தான் வாழ்க்கையின் சாரம் - என்பதைப் போல!

ஹாய் மதன் கேள்வி - பதில்

ஏன் கஜுரஹோ சிற்பங்கள் மட்டும் செக்ஸுக்கும் சிருங்காரத்துக்கும் முக்கியத்துவம் பெற்றன? உண்மையில் அங்கே உள்ள பல்லாயிரக் கணக்கான சிற்பங்களில் 10 சதவிகிதம்தான் பாலியல் சிற்பங்கள் என்பது சிலருக்கு ஆச்சர்யம் தரலாம்! பற்பல 'போஸ்’களில் உடலுறவுச் சித்திரிப்புகள். ஆனால், காமசூத்திரத்தில் வாத்ஸாயனர் குறிப்பிட்ட முறைகளும் இல்லை. தனி பாணி! அங்கு உள்ள சில 'போஸ்’களை சராசரி மன்னர்கள் பின்பற்ற முடியுமா என்பது சந்தேகம். ஒருவேளை... ஜிம்னாஸ்டிக் வீரர்களுக்குச் சாத்தியம் ஆகலாம்! ஏன் அப்படி? அந்த மன்னர் கள் தலைமுறை தலைமுறையாகக் காம வேட்கை கொண்டவர்களாக இருந் தார்களா? பிற்பாடு இந்தியாவில் முஸ்லிம் மன்னர்கள் ஆட்சி தொடங்கிய போது... அங்கே அவர்கள் படை எடுத்துச் செல்லவில்லையா?

கஜுரஹோ எந்த அளவுக்கு முஸ்லிம் மன்னர்களிடம் இருந்து தப்பியது? சரி, நம்ம ஜவஹர்லால் நேரு கஜுரஹோ பற்றி என்ன சொன்னார்?!

- தொடரும்...