மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 27

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

திடுதிப்பென்று கீர்த்தனாவைக் காணவில்லை. பஸ் ஸ்டாண்டே ப்ளாக் அண்ட் ஒயிட்டில் வெறுமையாகக்கிடந்தது.

இந்தக் கட்டுரையில் வரும் காதலிகளுக்கு, 'கீர்த்தனா’ என்பதை பொதுப் பெயராக வைத்திருக்கிறேன்... ஆமென்!

 'வண்டுக் கடி’ தெரியுமா உங்களுக்கு?

மதுரை மரக்கடை ஏரியாவுக்குப் பின்புறம் 'வண்டுக் கடி’ கிடைக் கும். ஒரு கடிக்கு அஞ்சு ரூபா (பத்து வருஷங்களுக்கு முன்பு!). சிவப்பு நிறத்தில் ஒரு வண்டை உள்ளங்கைக்கு மேலே ஊசி நரம்பில் விடுவார்கள். 'சுருக்’என்று ஒரு கடி. கிர்ர்ர் என்று தலை வரைக்கும் ஒரு ஃபீலிங் ஏறும். கொஞ்ச நேரத்துக்கு உலகம் மசமசத்து, மனசு நசநசத்துத் திரியலாம். கீர்த்தனாவுடனான காதல் ஃப்ளாப் அடித்தபோது, தனபால்தான் என்னை வண்டுக்கடி ஏரியாவுக்குக்கொண்டுபோனார். ஒரு 'சுருக்’ வாங்கிக்கொண்டு, தங்கம் தியேட்டரில் ஏதோ ஒரு படத்துக்குப் போய் உட்கார்ந்தோம்.

இடையில் எழுந்து பாத்ரூம் போனவன், அந்த போதையிலும் அதிர்ந்தேன். பாத்ரூம் உள்ளே இரண்டு பேர் ஆதாம்-ஏவாள் கெட்டப்பில், டெரர் போஸில் கிடந்தார்கள். பின்னாலேயே வந்து எட்டிப்பார்த்த தனபால் வெளியே வந்து, ''அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா, நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து

ஓடு ராஜா... ஹேஹேய்...'' எனச் சத்தம் போட்டுப் பாடினார். எந்தப் பரபரப்பும் இல்லாமல், கொஞ்ச நேரம் கழித்து அந்த ஜோடி வெளியே வந்தது. அந்தப் பெண் தலையை முடிந்துகொண்டு போய்விட, அந்த ஆள் எங்களிடம் வந்தான். ஒரு சிகரெட் டைப் பற்றவைத்துக்கொண்டே படுகூலாக, ''ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்றோம்... எடம் இல்ல தலைவா. லவ்வர்ஸ்தான் தலைவா!'' என்றபோது எனக்குத் திடுக்கென்றது.

வரும்போது தனபால் சொன்னார், ''ஏன்டா... ஒரு வருஷமா கே.எஸ்.ஆர். லாட்டரி பக்கத்துல நின்னு அவளை லுக்கு விட்டுக்கிட்டே இருந்த... இப்ப வந்து லவ்வு புட்டுக்கிச்சுங்கற. வேற என்ன பண்ண நீ? பார்த்தியா... அவனவன் பப்ளிக் டாய்லெட்லேயே காவியம் படைக்கிறான்!''

வட்டியும் முதலும் - 27

நிஜமாகவே ஒரு வருஷமாக கீர்த்தனாவைப் பார்த்துக்கொண்டே இருந்ததைத் தவிர அந்தக் காதலில் எதுவும் இல்லை. ஒரு காம்ப்ளெக்ஸில் இரண்டாவது மாடி ஜெராக்ஸ் கடையில் கீர்த்தனாவும் மூன்றாவது மாடி ரியல் எஸ்டேட்டில் நானும் வேலை பார்த்தோம். மாடிப் படிகளில் ஏறும்போதும் இறங்கும்போதும் ஒரு பார்வை. 'ஷ்ஷ்ஷ்ளிச்’ என ஒரு பேப்பர் நகலாகி வெளிவரும் மின்னல் நொடிப் பார்வை. ஆறு மாதங்களாகத் தினசரி நாலைந்து 'ஷ்ஷ்ஷ்ளிச்’... அவ்வளவுதான். ஒருமுறை மொட்டை மாடியில் சாப்பிட்டுவிட்டுக் கை கழுவும்போது, பக்கத்து டேப்பில் வந்து கை கழுவியபடியே, ''நீங்க எந்த ஏரியாலேர்ந்து வர்றீங்க?'' என்றாள்.

''அது... அது... சம்மட்டிபுரங்க. நீங்க?''

''நான் அரசரடி.''

''ஓ... அப்டிங்களா...''

''இல்ல... சும்மாதான் கேட்டேன்!''

-இவ்வளவுதான் மொத்தமாகவே எங்களுக்குள் நடந்த வசனப் பரிவர்த்தனை. அங்கு இருந்து நான் வேலையைவிட்டு வந்த பிறகு, தினமும் இரவு 8 மணிக்கு பெரியார் பஸ் ஸ்டாண்டில் கே.எஸ்.ஆர். லாட்டரிக் கடைக்குப் பக்கத்தில் போய் நின்றுகொள்வேன். சரியாக அந்த நேரத்துக் குக் கீர்த்தனா வருவாள். எதிரே அரசரடிக் குப் போகும் பஸ்ஸில் ஏறி ஜன்னலோரம் உட்கார்ந்துக்கொள்வாள். பஸ் கிளம்புகிற வரைக்கும் பார்த்துவிட்டு வந்துவிடுவேன்.

இப்படியே ஒரு வருஷம் போனது. திடுதிப்பென்று கீர்த்தனாவைக் காணவில்லை. பஸ் ஸ்டாண்டே ப்ளாக் அண்ட் ஒயிட்டில் வெறுமையாகக்கிடந்தது. பழைய காம்ப் ளெக்ஸுக்குப் போனால், இன்னொரு பாசிமணி ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டு இருந்தது. நினைவுகளால் நெஞ்சு குமுறியது. தூக்கமே இல்லை. இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இன்னொரு வேலையில் சேர்வதற் காக பயோ-டேட்டா ஜெராக்ஸ் எடுக்க, மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர் பக்கம் ஒரு கடைக்குப் போனேன். நெற்றி வகிடு நிறையக் குங்குமம் அப்பிக்கொண்டு அங்கே ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டுஇருந் தாள் கீர்த்தனா. எந்தச் சலனமும் இல்லா மல் என்னைப் பார்த்தாள். காசு கொடுத்த தும் வாங்கிப்போட்டுக்கொண்டே மெல் லிய குரலில் அவள் என்னிடம் கேட்டதை ஆயுசுக்கும் மறக்க மாட்டேன்.

''இன்னமும் அந்த லாட்டரிக் கடை பக்கத்துலயேதான் நிக்கிறீங்களா..?''

திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்தேன். 'டையிங்’கில் வேலை பார்த்த 20 பெண்களில், 19 பேர் என்னை 'அண்ணா’ என்றே அழைக்க, கீர்த்தனா மட்டும் 'வாங்க போங்க’ என்பாள். அந்த வயதில் இது போதாதா ஒருத்தியிடம் எனக்குப் பிரியம் வர?

''வாங்கண்ணே... 'காதல் தேசம்’ வினித்தண்ணே!''

''இல்லடி... அவரு 'ஆவாரம்பூ’ வினித் தண்ணே!'' என அந்தப் பெண்கள் என் னைக் கண்டபடி கலாய்க்கும்போது, ''ச்சீ... சும்மா இருங்கடி... பாவம்'' என்பாள் கீர்த்தனா. இப்படியாக யாரும் அறியாமல் என் இதய பனியனை ஏழு வண்ணச் சாயத்தில் முக்கிமுக்கி எடுத்தாள். வீட்டில் இருந்து சாப்பாடு எடுத்துவந்தாள். வேஸ்ட் பீஸில் எம்பிராய்டரி அடித்து, விண்டோ ஸ்க்ரீன் தந்தாள். நான்கே மாதத்தில் வந்தது ட்விஸ்ட்.

மேடிட்ட வயிற்றுடன் சாயம் போட வந்தாள் கீர்த்தனா. கர்ப்பகர்த்தா... சூப்பர்வைஸர் மகேஷ். உடனடியாக கம்பெனி அளவில் பஞ்சாயத்து நடந்து, கல்யாணத் துக்கு ஏற்பாடானது. பிரச்னை என்ன வெனில், கீர்த்தனா பாபநாசம் பக்கம் கள்ளர் வீட்டுப் பெண்.  மகேஷ் ஒரத்தநாடு பக்கம் தலித் பையன். விவசாயம் கெட்டுப் போய், ஏற்றத்தாழ்வுகள் எல்லாம்நொறுங்கி, இரண்டு பேரும் வாழ்க்கையைத் தேடி திருப்பூருக்கு வந்ததில் பூத்துவிட்டது காதல். பாபநாசத்தில் இருந்து பெண்ணின் வீட்டார் டென்ஷனாகி கிளம்பி வர, சேஸிங்குகளுக்கு நடுவே நண்பர்கள் கூடி, திருப்பரங்குன்றத் தில் இருவருக்கும் கல்யாணம் பண்ணி வைத்தோம்.

கோயில் மலைப் படிக்கட்டுகளில் வயிற்றைத் தள்ளிக்கொண்டு நின்றபடி, ''நம்ம செக்ஷன்ல இருக்கறவங்கள்ல நீங்க தான் நம்மூருக்காரவுக... நீங்க இந்தக்கல்யா ணத்துல இருக்கறது எங்க வூட்ல இருந்து ஒருத்தர் வந்தமாரி. ரொம்ப நன்றிண்ணே'' என்று கீர்த்தனா கை கூப்பிய காட்சியை மறக்க முடியுமா என்ன?  

வட்டியும் முதலும் - 27

பஷீர், மெஹரை லவ் பண்ணினான். நானும் அவனும் மிட்லேண்ட் தியேட்டர் பக்கம் மொட்டைமாடிக் கூரைக் கொட்டாய்மேட். நாங்கள் இருந்தது மதுரை. மெஹர் சென்னை. அப்போது மொபைல் கிடையாது. ஒரு முறை காதலியிடம் பேச அவன் லேண்ட்லைனுக்கு போன் போட, அவள் அப்பா எடுத்து கொத்து பரோட்டா ஆனது. அதில் இருந்து பஷீர் ஒரு வியூகம் வகுத்தான். அவனுடைய ஏ.எம்.ஐ.இ. கிளாஸ்மேட் கீர்த்தனாவை விட்டு, காதலி வீட்டுக்கு போன் பண்ண வைப்பான். மாமனார் எடுத்தால் ''மெஹரு ஃப்ரெண்டு மாலினி பேசறேன் அங்கிள்!'' என டுப்கான்ஸ்விட்டு அவள் லைனுக்கு வந்ததும், இவனிடம் கொடுப்பாள் கீர்த்தனா. இதற்கு என்றே ஒரு எஸ்.டீ.டி. பூத்தை வேறு பிடித்துவைத்திருந்தான். இருவரும் போனில் ஃபீலிங் ஓட்ட, நானும் கீர்த்த னாவும் வெளியே காத்திருப்போம். இது போதாதா..?

''லவ் பண்ண ஆரம்பிச்சாலே, மத்த வங்களை மறந்துடுறாங்கப்பா...''

''ஏங்க... நீங்க லவ் கிவ்வெல்லாம் பண்ணலியா..?''

''அய்யோ அதெல்லாம் இல்லப்பா... நீங்க..?''

''நானும் இல்லப்பா...''

இப்படி ஆரம்பித்தது அந்த அத்தியாயம். அடிக்கடி காசு சேர்த்து சென்னைக்குப் போய், மெஹருடன் மகாபலிபுரம், வி.ஜி.பி., ஸ்பென்சர் ப்ளாஸா என போட்டோசெஷன் பண்ணிக்கொண்டு வந்து என் வயிற்றெரிச்சலைக் கிளப்புவான் நண்பன். நான் அப்போது உச்சக்கட்ட வறட்சியிலும் கழிவிரக்கத்திலும் இருந்தேன். இதை அறிந்து ஒரு 'அண்ணா மறுமலர்ச்சித் திட்ட’த்தை முன் வைத்தான் பஷீர்.

''மாப்ள... நீ ஏன் கீர்த்தனாவை லவ் பண்ணக் கூடாது?''

''அல்ரெடி பண்ணிட்டுத்தான் இருக் கேன்...''

''ஐ நோ மாப்ள... நீ கவலைப்படாதரா... நானே அவகிட்ட லீடு குடுக்கறேன்...''

அன்று பஷீர் என்னை அழைத்துக் கொண்டுபோய் ஒரு முட்டுச் சந்தில் கீர்த்த னாவைச் சந்தித்தான்.

''ஏங்க... இந்த நாயி எப்போ பார்த்தா லும் உங்களைப்பத்தியே பேசிட்டிருக்கான். என்னன்னு கேளுங்க...'' என பஷீர் சொன் னதும், அவள் முகத்தில் சர்க்கரைத் தூக்க லாய் ஒரு வெட்கம்.

''ஆமா... நீங்க என்ன பண்றீங்க?'' என்றாள்.

''அது... டி.வி.எஸ்-ல சூப்பர்வைஸரா இருக்காங்க...'' எனப் பொய் சொன்னான் பஷீர். உண்மையில் நான் டி.வி.எஸ் ஒப்பந்தக் கூலித் தொழிலாளி.

''ஹைய்யோ... அங்கதான் எங்க அப்பாவும் சூப்பர்வைஸரா இருக்கார். எந்த செக்ஷன் நீங்க?'' எனக் குண்டை வீசினாள் கீர்த்து.

''அது... கெமிக்கல் செக்ஷன்ங்க...''

''ஏய்... எங்க அப்பாவும் அந்த செக்ஷன் தான்...''

எந்த நேரமும் தயிர்ச்சாத ஏப்பத்தோடு எங்களைத் திட்டிக்கொண்டே திரியும் சத்தியமூர்த்தி மகளா இவள்? சோலி பாதி முடிந்துவிட்டது.

மறுநாளே சத்தியமூர்த்திக்குச் சாப்பாடு எடுத்துவருகிற சாக்கில், என்னைப் பார்க்க வந்தாள் கீர்த்தனா. அப்பா வேலை பார்க் கிற கம்பெனியிலேயே சூப்பர்வைஸர் என் றால் காரியம் கச்சிதம் என்பது அவள் கணக்கு. ''ஏய்ய்ய்... ட்ரம்மைத் தள்ரா... தள்ரா...'' எனக் கத்தியபடியே கரி வண்டியை உருட்டிக்கொண்டு ஷேக்  தாவூதோடு ஓடி வந்த எனக்கு எதிரே அவள் வந்து நின்ற கணமே, அந்தக் காதலுக்கு 'எ ஃபிலிம் பை பஷீர்’ என கார்டு விழுந்தது!

அரசுப் பள்ளி ஐந்தாம் வகுப்பில் என்னை விட்டுவிட்டு நீலன் மெட்ரிகுலேஷன் பள்ளிக்குப் போன கீர்த்தனாவில் இருந்து, நடுத்தெருவில்... நள்ளிரவில்... பெரு மழையில் முத்தங்கள் தந்து, அழுதபடி திட்டி அனுப்பிய கீர்த்தனா வரை எனக் கும் ஒரு பட்டியல் உண்டு. பாரதிக்கு கண்ணம்மா மாதிரி, நகுலனுக்கு சுசீலா மாதிரி, கலாப்ரியாவுக்கு சசி மாதிரி, எனக்கு இந்த கீர்த்தனா.

'பாண்டி ஆட்டத்தின் முதல் உப்பை/ நான் கடவுளுக்குக் கொடுத்தது கிடையாது/ முதல் பல் விழுந்தபோது/ சாணத்தில் பொதிந்து சொர்க்கம் நோக்கி எறிந்தது கிடையாது/ ஒரே ஒருமுறைதான் நூலில் பக்கத்திற்கொன்றாய்/ விட்டில்பூச்சிகளைக் கட்டி பரிதவிக்க விட்டிருக்கிறேன்/ இருந்தும் மருதமர நிழல்கள் மீட்டாத தண்டவாளச் சோகங்களை எனக்கேன் நிரந்தரித்தாய்  சசி’ என்ற கலாப்ரியாவின்  கவிதை,  காதலின் நெடுவழியில் நின்று எப்போதும் கைகாட்டுகிறது.

வட்டியும் முதலும் - 27

ஒரு வாரச் சண்டைக்குப் பின்பு, அழுது வீங்கிய முகத்துக்கு பவுடர் போட்டுக்கொண்டு, டி.வி.எஸ். 50-ல் உட்கார்ந்து அப்பாவின் தோள் பிடித்து, ஒளவையார் தியேட்டருக்குக் கிளம்பும்போது அம்மாவின் முகத்தில் நெளிந்து மறையும் அந்தப் புன்னகையில்தான், முதன்முதலில் நான் கீர்த்தனாவைப் பார்த்தேன். 'நெஞ்சு சளிக்கு நல்லது’ என வைத்தியர் சொன்னதால், அப்பா போய் அணில் கறி கொண்டுவர, ''அறிவிருக்கா உங்களுக்கு... அணிலைப் போய் யாராவது சாப்பிடுவாங்களா...'' என வயல் சேத்து வாசத்தோடு அம்மா சொன்ன வார்த்தைகளை ஒரு குழந்தையின் கைகளால் இறுக்கிவைத்திருக்கிறேன் இக்கணமும்.

யுத்தத்துக்குப் பிறகு மானிக் ஃபார்ம் முகாமில் இருந்து தன் காதலி எழுதி அனுப்பி இருந்த கடிதத்தை, ஓர் ஈழ நண்பன் காட்டிய நொடியில்தான் நான் பிரியத்தின் உதிரத்தைக் கண்டேன். சில ஆண்டுகளாக ஈழத்தில் இருந்து கனடாவில் இருந்த காதலியிடம் சேர்வதற்கு அலைந்த நண்பன் அகிலனின் கதை, காலத்தின் வாசலில் ஒரு மரக்கன்றைப் போல உட்கார்ந்திருக்கிறது.

கதிர் சார் பாப்பா பர்த்டேக்குப் போனபோது, பக்கத்து ஃப்ளாட் பெருசுகள்... எழுபது எம்பது வயசு ஜோடி... உட்கார்ந்து எழும்போது அந்தப் பாட்டி ''ஷ்ஷ்ஷ்... பெருமாளே...'' எனக் காலைப் பிடிக்க, அத்தனை பேருக்கும் மத்தியில் ஓடி வந்து பாதத்தைத் தாங்கிக்கொண்டு நிமிர்ந்த அந்தத் தாத்தாவின் முகம்... டைரக்டர் ரமணா தொண் டையில் கேன்சர் வந்து, ஆப ரேஷனுக்கு அட்மிட் ஆகப் போகும்போது, இரண்டு பெண் பிள்ளைகளை வாரி இடுக்கிக்கொண்டு, ''அவரைப் பத்தி எனக்குத் தெரியாதா... சூப்பரா வந்துருவாருங்க...'' என்ற அவர் காதல் மனைவியின் புன்னகை.... 'மறுபடியும்’ பட க்ளைமாக்ஸில் கணவனையும் காதலிக்க வந்தவனையும் விட்டுவிட்டுப் போகிற ரேவதி உறைந்து சிரிக்கிற ஒரு ஷாட்... சென்ட்ரல் ஸ்டேஷனில் 10 வருடங்களாக அதே இடத்தில் சாமி படங்கள் விற்றுக் கொண்டு இருக்கிற அந்தத் தம்பதி... திடுதிப்பென்று ஃபேஸ்புக் ஃப்ரெண்ட்ஷிப் ரெக்வஸ்ட்டில் குழந்தையோடு சிரிக்கும் கீர்த்தனா... ''அவருக்கு இளையராஜான்னா ரொம்பப் பிடிக்கும்.

அவர் காதாண்ட இந்த டேப்ரெக்கார்டரை வைக்கிறீங்களா...'' கூடத்தில் கிடத்தப்பட்டு இருந்த நண்பனின் அப்பாவைப் பார்த்தபடி சொன்ன அவன் அம்மாவின் குரல்... டைவர்ஸ் வாங்க வரும்போது, 'இது உங்ககிட்டயே இருக்கட்டும்’ எனக் கல்யாண ஆல்பத்தைக் கொண்டு வந்து கொடுத்த நண்பரின் மனைவி... எவ்வளவு இருக்கிறது? ஒரு முறையா... இரு முறையா... அதுவா... இதுவா... காதலிலும் பிரியத்திலும் வியாக்கியானம் என்னய்யா வேண்டிக்கிடக்கிறது?

இப்போதும் கீர்த்தனாதான் என்னிடம் காதலைச் சொன்னாள்!

பெசன்ட் நகர் பீச்சுக்கு அழுக்குச் சட்டை போட்டுப் போயிருந்த நாளில், ஓட ஓட துரத்தி அடித்தாள். காஃபி ஷாப் அழைத்துப்போய், மெனு கார்டு கிளாஸ் எடுத்தாள். சேகுவேராவையும் சாப்ளினையும் ஃப்ரேம் பண்ணி, 'காதல்தான் புரட்சியை வழிநடத்தும்’ என்ற வாசகங்களோடு பரிசு கொடுத்தாள். மருத்துவமனையில் படுத்துக்கொண்டு சிரித்தபடி, அழவைத்தாள். நிறையப் பிரியம்வைத்து, நிறைய சண்டை போட்டாள். கேட்கும் போதெல்லாம் காசு கொடுத்தாள்.

அம்மாவைப் போல இருந்தாள். எவ்வளவோ நல்ல நினைவுகளைத் தந்தாள். பதிலுக்கு அவளுக்கு எதுவும் செய்யவில்லை நான். ரயிலடி மேம்பாலங்களின் இருளைக் கடக்கும்போது முத்தமிடும் த்ரில்லிங்கைக் கடந்துவிட்டால்... காதலுக்கு முன்பு நிறைய சவால்கள் இருக்கின்றன. கமிட்மென்ட்கள் இருக்கின்றன. இயலாமை ஒரு கரையிலும் அன்பு மறு கரையிலுமாக ஓடிக்கொண்டே இருக்கிறது காதல் நதி.

''ரெண்டு பேருக்குமே நிறைய கமிட்மென்ட்ஸ், தேவைகள் இருக்கு. பரஸ்பரம் உதவி பண்ண முடிஞ்சா, பண்ணிக்குவோம். இல்லைன்னா... தனித்தனியா எதிர்கொள்வோம். இதெல்லாம் முடிஞ்ச பின்னாடி சந்திப்போம்... அப்புறம் பார்க்கலாம்!''

அது சரி. பார்த்தால், பேசினால்தான் காதலா..? நினைவுகள் போதாதா..? வாழ்க்கையை இன்னும் கடுமையாக, தீவிரமாக எதிர்கொள்வதற்குக் காதல்தான் கற்றுத்தருகிறது. அதுதான் உலகின் மகத்தான உந்து சக்தி. இன்னும் அற்புதமான சந்திப்பு... இன்னும் மகத்தான நம்பிக்கை... இன்னும் அழகான வாழ்க்கை... காதலால்தானே தர முடியும்? ஃப்ரேமுக்குள் இருந்து சே குவேராவும் சாப்ளினும் புன்னகைக்கிறார்கள்.  

இந்தக் காதலர் தினத்துக்கு கீர்த்தனாவிடம் இருந்து எனக்கு எந்தப் பரிசும் வராது. அது சரி... பிரிவைவிடவும் பெரிய பரிசு காதலில் இருக்கிறதா என்ன..?

(போட்டு வாங்குவோம்...)

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan