யானை பிளிறும் சத்தம், மயில் அகவும் ஒலி, சிங்கம் கர்ஜிக்கும் ஓசை என பிற இனங்களின் சத்தங்களை எழுப்புவதுபோல் மாணவர்கள் கற்பனையாக நடித்து, கைதட்டல்களைப் பெற்றனர்.
மதுரை கீழசந்தப்பேட்டையில் உள்ள டாக்டர் டி.திருஞானம் தொடக்கப் பள்ளியில்தான், மாணவர்களின் கற்பனை பறந்துவிரிந்து காட்சியானதைப் பார்க்க முடிந்தது. அரசு உதவி பெறும் இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சரவணன், கற்கால மனிதர்கள் தொடர்பான பாடத்தை சுவாரஸ்யமான உடல் அசைவுகளின் மூலம் மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தார். தொடர்ந்து மாணவர்களோடு கதையையும் பாடத்தையும் கவனித்தோம். உணவு இடைவேளையில் நம்மிடம் பேசினார் சரவணன்...

``நான் 20 வருடங்களாக ஆசிரியர் பணியில் உள்ளேன். கடந்த 12 வருடங்களாக தலைமை ஆசிரியர் பதவியில் இருக்கிறேன். தொடர்ந்து ஆசிரியர் பணியில் இருக்கும் எனக்கு, கல்வி கற்பிக்கப்படும் முறையை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வெகுநாளாக இருந்தது. இதனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக மாணவர்களுக்குப் பிடிக்கும்படி பாடங்களை எளிமைப்படுத்தி கற்பித்துவருகிறேன். தற்போது இரண்டு வருடங்களாக நாடகம், விளையாட்டு, விநாடி வினா, பொது அறிவு கேள்வி பதில்கள் உள்ளிட்டவற்றைக் கற்பிக்கத் தொடங்கினேன். இதனால் மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இவ்வாறு பாடம் கற்பிக்கும்போது மாணவர்களுக்கு நினைவூட்டல் திறனும் மேம்படுவதை அறிய முடிந்தது. மாணவர்களும் பள்ளிப் பாடங்களைப் படிக்க ஆர்வமாகின்றனர். என்னிடம் படிக்கும் மாணவர்களுக்கு, சொந்தப் பணத்தில் நூலகத்தில் உறுப்பினராகப் பதிவுசெய்து, படிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளேன். இதனால் அவர்களுக்கு சிறு வயதிலேயே பல்வேறு புத்தகங்கள் வாசிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன.

மாணவர்கள் மத்தியில் ஆடிப்பாடி, கதை சொல்லி ஊக்கப்படுத்துவதால், என்னால் அவர்களுக்கு மகிழ்ச்சியோடு பாடம் சொல்லிக்கொடுக்க முடிகிறது. ஏலியன் கதை, டைனோசர் கதை, பறக்கும் தட்டு, பேய்க்கதை என மாணவர்களின் கவனத்தை வெகுவாக என் பக்கம் ஈர்ப்பதால், மாணவர்களுக்கு முழுமையாக பாடம் நடத்த முடிகிறது. பாடங்களை கதை வடிவில் சொல்வதால், மாணவர்கள் அதைச் சுலபமாகப் புரிந்துகொள்கின்றனர். வித்தியாசமான கதைகளைச் சொல்லி பள்ளிக் குழந்தைகளை உற்சாகப்படுத்தி பாடம் நடத்துவதால், மாணவர்களிடையே சுய கற்றல் திறன் மேம்படுகிறது. அவர்களின் கற்பனைத்திறனும் பெருகுகிறது.
குழந்தைகளுக்காக ஸ்பைடர் மேன், கண்ணாமூச்சி, சத்யாவும் மாய பென்சிலும், கிட்டிப்புள் உள்ளிட்ட கதைப் புத்தகங்களையும் எழுதியுள்ளேன். கதை கேட்கும் குழந்தைகள் கதையோடு பொய் சொல்லக் கூடாது, எல்லோரிடமும் அன்பாக இருக்க வேண்டும், வேறுபாடு இல்லாமல் பழக வேண்டும், நேர்மையாகச் செயல்பட வேண்டும் என்ற நல்ல பல கருத்துகளையும் எழுத்தின் வழியே கொண்டுசெல்கிறேன். இதனால் பெற்றோர்களின் நம்பிக்கையையும் பெற முடிகிறது.

பிள்ளைகள் பள்ளியில் இருந்தாலும் வீட்டில் இருக்கும் சூழலை உருவாக்குவதோடு, தாய்,தந்தையின் அரவணைப்பையும் அன்பையும் பள்ளியில் குழந்தைகளுக்கு கதை சொல்லி ஏற்படுத்துவதன் மூலமாகத்தான் ஏற்படுத்தி தர முடியும். நான் கதை சொல்வது மட்டுமல்ல, மாணவர்களையும் கதை சொல்லத் தூண்டுகிறேன். இதனால் அவர்கள் தன் கற்பனைச் சிறகை விரித்துப் பறக்கின்றனர். வண்ணங்கள், வடிவங்கள், வார்த்தைகள் என்று எதையும் வசப்படவைக்கின்றனர். ஓவியம் என்பது அழகாகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல. அவர்களின் கற்பனையில் கிடைக்கும் ஓவியங்கள்தான் சிறந்தவை என்று அவர்களின் திறமையை மேம்படுத்துகிறேன். கற்பனையில் அவர்கள் பார்த்த, கேட்ட விஷயங்கள் என எல்லாமே கற்பனைக் கதையில் கலந்து வரும். இதனால் அவர்கள் நல்ல கிரியேட்டராக வர வாய்ப்புகள் உள்ளன. இப்படியான கல்விதான் மாணவர்களுக்குத் தேவை. இதைத்தான் மாணவர்களும் விரும்புகிறார்கள்" என்றார்.

ஆசிரியர் சரவணன், தனது பள்ளி மாணவர்களுக்கு மட்டுமன்றி மதுரையில் பல்வேறு இடங்களுக்கும் சென்று குழந்தைகளிடம் கதை சொல்லிவருகிறார். தாய்மொழிக் கல்வியில் படிக்க வேண்டும் எனவும், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்ந்து படிக்க வேண்டும் எனவும் கதை சொல்லி, விழிப்புணர்வு செய்துவருகிறார். விடுமுறை நாள்களில்கூட மாணவர்களின் முன்னேற்றத்துக்காகச் செலவு செய்யும் தலைமை ஆசிரியர் சரவணனுக்கு, சமூக ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிகின்றன.