Published:Updated:

குழந்தைகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமா... என்ன சொல்கிறது சட்டம்? #DoubtOfCommonman

ஹெல்மெட்

தமிழகத்தில் ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து சிந்தித்தாலே மக்களுக்கு ஹெல்மெட்டின் அவசியம் தெளிவாகப் புரியும்.

Published:Updated:

குழந்தைகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமா... என்ன சொல்கிறது சட்டம்? #DoubtOfCommonman

தமிழகத்தில் ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து சிந்தித்தாலே மக்களுக்கு ஹெல்மெட்டின் அவசியம் தெளிவாகப் புரியும்.

ஹெல்மெட்

``வாகனப் பரிசோதனையின்போது அசல் ஓட்டுநர் இல்லாமல் இருந்தாலோ ஹெல்மெட் அணியாமல் சென்றாலோ ஏதோ கைதிகளைப்போல நடத்துகின்றனர். சிலமுறை வண்டியைப் பறிமுதல் செய்துவிடுவோம் என மிரட்டுகின்றனர். இப்படி வண்டியைப் பறிமுதல் செய்வதற்கு அவர்களுக்கு உரிமை உண்டா. சட்டப்படி இதற்கு என்ன தண்டனை. எவ்வளவு அபராதம்? குழந்தைகளும் ஹெல்மெட் அணிய வேண்டுமா?" என #DoubtOfCommonman பகுதியின் மூலம் கேட்டிருந்தார் மதுரையிலிருந்து கிஷோர் என்ற வாசகர். அந்தக் கேள்விக்கு விரிவாக விடையளிக்கிறது இந்தக் கட்டுரைத் தொகுப்பு.

மிழகத்தில் பலருக்கும் இருக்கும் சந்தேகம் இது. காவல்துறையின் சோதனையின்போது நகல் ஓட்டுநர் உரிமத்தைக் காட்டினாலே போதும் என்பதுதான் இங்கு வழக்கமாக இருந்தது. ஆனால், அதை மாற்றும்படி அண்மையில் ஒரு புதிய அறிவிப்பைச் செய்தது அரசு. அதன்படி, ``சாலை விபத்தைக் குறைப்பதற்காகக் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி முதல் வாகனம் ஓட்டுபவர்கள் அனைவரும் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்" என்று தமிழகப் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார். அதன்படி அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டிச்சென்று காவல்துறையிடம் பிடிபட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். மேலும், ``அவரது உரிமம் 6 மாதத்துக்குத் தற்காலிகமாக ரத்துசெய்யப்படும். 4 சக்கர மற்றும் கனரக வாகனங்களாக இருந்தால் அவற்றின் பர்மிட் இடைநீக்கம் செய்யப்படும் என்றும்" அமைச்சர் அப்போது தெரிவித்திருந்தார். 

ஹெல்மெட்
ஹெல்மெட்

சரி, சட்டம் என்ன சொல்கிறது?

மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 3-ன் படி ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பொது இடத்தில் யாரும் வாகனம் ஓட்டக் கூடாது. மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 181-ன் படி உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுபவருக்கு 3 மாத சிறைத்தண்டனை அல்லது 500 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். மேலும், மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 130-ன் படி பொது இடங்களில் சீருடையில் உள்ள எந்த ஒரு காவல்துறை அதிகாரியும், வாகன ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமத்தைக் கோரும்போது, அவர்கள் அக்காவல் அதிகாரியின் ஆய்வுக்கு அவர்களது ஓட்டுநர் உரிமத்தை உட்படுத்த வேண்டும்.   

குழந்தைகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமா... என்ன சொல்கிறது சட்டம்? #DoubtOfCommonman

இதற்கு மாற்றுவழிகள் என்னென்ன?

அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தும் பலர் அதை எப்போதும் உடன் வைத்துக்கொள்ளாததற்குக் காரணம், அது தொலைந்துவிடலாம் அல்லது சேதமடைந்துவிடலாம் என நினைப்பதுதான். புதிய ஓட்டுநர் உரிமம் பெறுவதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களே இதற்கு முக்கியக் காரணம். தற்போது தமிழக அரசின் புதிய உத்தரவு அமலில் இருந்தாலும்கூட, பெரும்பாலான சமயங்களில் நகல் ஆவணங்களைக் காட்டினாலே காவலர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இதுதவிர டிஜிலாக்கர்கள் மூலம் ஓட்டுநர் உரிமம், காப்பீடு ஆவணங்கள் போன்றவற்றை மின்னணு முறையிலும் சேமித்து வைத்துக்கொள்ளலாம். நகல் ஆவணங்களோடு, இவற்றையும் காவல்துறை அதிகாரிகளிடம் காட்டலாம். ஒருவேளை அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருந்து, அது தொலைந்துபோனாலும் பெரிய பிரச்னையில்லை. எளிதாக புது உரிமம் பெற்றுவிடலாம். 

முன்பெல்லாம் அசல் ஓட்டுநர் உரிமம் தொலைந்து போனால், அதன் நகல் பெறுவதற்குள் பெரும் அலைச்சலும், பணச்செலவும் ஏற்படும். ஆனால், இப்போது அவ்வளவு அலைச்சல் ஏதுமில்லை. தங்களின் அசல் ஓட்டுநர் உரிமம், வாகனத்தின் பதிவுச் சான்று (ஆர்.சி.புக்) எதுவும் தொலைந்துபோனால், அதற்குப் பதிலாக நகல் (டூப்ளிகெட்) உரிமம் பெற www.eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தில், தங்களின் தொலைந்துபோன ஆவணங்களை (Lost Document Report) என்ற பிரிவில் சென்று புகார் பதிவு செய்யுங்கள். அந்தப் புகார் விவரங்கள் உங்களுக்கு அனுப்பப்படும். அந்த விவரங்களை நீங்கள் சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று விண்ணப்பித்து, அதற்கான தொகையைக் கட்டி பெற்றுக்கொள்ளலாம். இப்போது கட்டாய ஹெல்மெட் விஷயத்துக்கு வருவோம்.

கட்டாய ஹெல்மெட் சட்டம் சொல்வது என்ன? 

தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் சட்டம் கடந்த 2007-ம் ஆண்டு மாதம் அமலுக்கு வந்தது. இரு சக்கர வாகனங்களில் செல்வோரும், பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று தமிழக அரசின் மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 129 கூறுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை கட்டாய ஹெல்மெட் சட்டம் அமலிலிருந்தாலும், இந்தச் சட்டம் காகித வடிவில் மட்டுமே இருந்துவந்தது. கடந்த 2015-ம் ஆண்டு இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்புதான், தமிழ்நாட்டில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.  

மத்திய மோட்டார் வாகனச் சட்டத்தின் 129-வது பிரிவின் படி, அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும், பின் இருக்கையில் பயணிப்பவர்களும், ISI முத்திரை பெற்ற ஹெல்மெட் அணிவது கட்டாயம். இதில் சீக்கியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, இதைத் தவிர்த்து தேவைப்படும் விதிவிலக்குகளை அந்தந்த மாநில அரசு வழங்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் யாருக்கெல்லாம் விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது?

2007-ம் ஆண்டு தமிழக அரசு அமல்படுத்திய விதிகளின் படி, தலைப்பாகை அணியும் ‘மெய்வழிச்சாலை’ பிரிவைச் சேரந்தவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் இல்லை. இருசக்கர வாகன பின் இருக்கையில் பயணம் செய்யும் பெண்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் இல்லை. ஆனால், வாகனம் ஓட்டும் பெண்களுக்கு ஹெல்மெட் கட்டாயம். இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் பயணம் செய்யும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் இல்லை. தற்போது நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன திருத்தச் சட்டம் நிலுவையில் உள்ளது. அது நிறைவேற்றப்பட்டால், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் 4 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே விலக்கு வழங்கப்படலாம்.

வாகனங்கள்
வாகனங்கள்

எவ்வளவு அபராதம் விதிக்கலாம்? 

இருசக்கர வாகன ஓட்டுநர் மற்றும் பயணிப்பவர் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும். தவறும்பட்சத்தில், மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 206-ல் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, சம்பந்தப்பட்ட இருசக்கர வாகனத்தின் அனைத்து ஆவணங்கள் மற்றும் ஓட்டுநரின் உரிமம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்ய முடியும். பின்னர், இந்திய தரநிர்ணயச் சான்று பெற்ற புதிய தலைக்கவசம் மற்றும் அதை வாங்கியதற்கான ரசீது ஆகியவற்றைக் காண்பித்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் திரும்பப் பெறமுடியும். ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்களுக்கு, தற்பொழுது, 100 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத்தை அதிகரிப்பது தொடர்பான சட்டமசோதா நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அபராதம் விதிக்க போக்குவரத்து பிரிவு மட்டுமல்லாது அனைத்துப் பிரிவு சப் இன்ஸ்பெக்டர்களுக்கும் நீதிமன்றம் அதிகாரம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இந்த மாதம் முதல்வாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம், ஹெல்மெட் அணியாமல் சென்றால் இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்ற உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்தும்படி அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளது. மேலும் அவர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவைத் தொடர்ந்து தமிழகக் காவல்துறை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளதை நாம் தினமும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதுதவிர தமிழக அரசு, "புதிய இருசக்கர வாகனம் விற்கும்போது இரண்டு தலைக்கவசங்கள் இலவசமாக வழங்க வேண்டும்" என்றும் உற்பத்தியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தச் செய்தி தெரியுமா உங்களுக்கு? 

1989 மத்திய மோட்டார் வாகன விதிகள் 138 (4)(F)-ன் படி இருசக்கர வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், இருசக்கர வாகனம் வாங்கும்போது வாடிக்கையாளர்களுக்குத் தரமான தலைக்கவசங்கள் வழங்கப்பட வேண்டும் எனக் கூறுகிறது. இப்படி ஒரு விதி இருப்பதே நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? 2009-ல் டெல்லி உயர் நீதிமன்றம் ஹெல்மெட் வழங்குவது தொடர்பாகப் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து Society of Indian Automobile Manufacture (Siam) உச்ச நீதிமன்றம் சென்றது. 2010-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதிசெய்து விற்பனையாளர்கள் பி.எஸ்.ஐ. தர ஹெல்மெட் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கங்குலி மற்றும் சிங்வி கொண்ட அமர்வு உத்தரவிட்டது. 

இந்தவிதி, கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி நடைமுறைக்கு வந்தது. விதி நடைமுறைக்கு வந்து சுமார் 13 ஆண்டுகள் கடந்துவிட்டன. நம்மில் எத்தனை பேர் வாகனத்துடன் இலவச ஹெல்மெட் வாங்கியுள்ளோம்? அரசு உத்தரவு பிறப்பித்தும் இங்கே அது சரியாக நடக்கவில்லை என்பதே நிதர்சனம்.

குழந்தைகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமா... என்ன சொல்கிறது சட்டம்? #DoubtOfCommonman

கட்டாய ஹெல்மெட் சட்டம் குறித்து போக்குவரத்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். கட்டாய ஹெல்மெட் குறித்த முக்கியத்துவம் பற்றி அவர் குறிப்பிட்டார். "இந்தியாவிலேயே, தமிழகம்தான் அதிகமான விபத்துகள் நடைபெறும் மாநிலமாக உள்ளது. இந்த விபத்துகளில் உயிரிழப்பவர்களில் 70-90 சதவிகிதம் பேர், இறப்பதற்கு முக்கிய காரணம் ஹெல்மெட் போடாததும் சீட்பெல்ட் அணியாததும்தான். ஒரிஜினல் லைசென்ஸ் கையில் வைத்திருந்தால், அவர்கள் சாலை விதிகளை மீறப் பயப்படுவார்கள். அதோடு ஹெல்மெட் அணியாதவர்களுக்கான அபராதத்தையும் தண்டனையையும் மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள். தண்டனை கடுமையானால்தான் தவறுகள் குறையும். அதிக அபராதத்தைக் கட்ட பயந்து அவர்கள் சரியாக நடப்பார்கள். முன்பு போல் எங்களைப் பார்த்து ஓடிஒளிந்து அடுத்த சந்தில் சென்றுவிடலாம் என்று நினைக்காதீர்கள். நீங்கள் எங்கு சென்றாலும், உங்கள் வாகனத்தின் எண் மூலம், உங்களின் தகவல் திரட்டப்பட்டுச் சம்பந்தப்பட்ட முகவரிக்கு நிச்சயம் சம்மன் அனுப்பப்படும். எங்களின் நோக்கமெல்லாம் தமிழகத்தில் சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைய வேண்டும் என்பதே. அதற்கு மக்களின் ஒத்துழைப்புதான் எங்களுக்கு முக்கியம்." என்றார்.

தமிழகத்தில் ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து சிந்தித்தாலே மக்களுக்கு ஹெல்மெட்டின் அவசியம் தெளிவாகப் புரியும். எனவே சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு ஹெல்மெட் அணிவதைவிடவும், அவரவர் மீதான அக்கறையால் ஹெல்மெட் அணிந்தால் அது 'கட்டாயம்' என்ற சுமையாகாது.

குழந்தைகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமா... என்ன சொல்கிறது சட்டம்? #DoubtOfCommonman