
அறிவு மயக்கம்!டாக்டர் ஷாலினி
##~## |

விளை நிலங்களையும் வீட்டுப் பிராணிகளையும் பராமரிக்க ஆரம்பித்த பிறகு, மனித மனம் புதுப் புது கோணங்களில் வேலை செய்ய ஆரம்பித்தது. அதுவரை, 'எனது’ என்று பெரிதாக எதையும் உரிமை கொண்டாடிப் பழகி இராத மனிதர்களுக்கு, அப்போதுதான் முதன்முதலில், 'இந்த நிலப் பகுதி என்னுடையது. இந்தக் கால்நடைகள் எனக்குச் சொந்தமானவை!’ என்கிற நம்பிக்கைகள் தலை தூக்கின. காரணம், அதற்கு முன்பு வரை மனிதர்கள் நிலத்திலோ, பிற பிராணிகளின் மீதோ தங்கள் உழைப்பைச் செலவழித்தது இல்லை. அதனால், எல்லாமே இலவசமாகக் கிடைத்ததாக நினைத்திருந்தார்கள், உரிமை கொண்டாட அவர்களுக்குத் தோன்றி இருக்கவில்லை. ஆனால், உழைப்பை முதலீடாகச் செலுத்தியபோதோ, 'நான் கஷ்டப்பட்டு வளர்த்தது. அதனால் இது என்னுடையது!’ என்கிற லாஜிக் சரியாகப்பட்டது.
இதே லாஜிக்கை ஆண்கள் பெண்களின் மீதும் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். விலங்கு தாக்குதல், எதிரி தாக்குதல் மாதிரியான அபாயங்களில் இருந்து பெண்களை அவர்கள் காப்பாற்றியபோது எல்லாம், 'கஷ்டப்பட்டுக் காப்பாற்றினேன். அதனால், நீ எனக்குத்தான் சொந்தம்!’ என்று கருத ஆரம்பித்தார்கள். இப்படிக் காக்கப்பட்ட பெண்களை இன்னொருத்தன் தன் சாமர்த்தியத்தால் கடத்திவிட்டாலும், 'கஷ்டப்பட்டுக் கடத்தினேனே, அதனால் நீ எனக்குத்தான் சொந்தம்!’ என்று உரிமை கொண்டாட ஆரம்பித்தான்.

எதற்குக் காப்பாற்ற வேண்டும், எதற்குக் கடத்த வேண்டும்? இந்த ஆண்களுக்கு ஏன் பெண்களின் மீது இவ்வளவு மோகம்? ஏனெனில், பெண்தான் மரபணு ஆட்டத்தில் அவன் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் ஒரே மூலாதார வளம். அதனால் நீர், நிலம் மாதிரி அவளையும் தன் ஆளுமைக்குள் உட்படுத்தும் வேட்கை ஆண்களுக்கு ஏற்பட்டது.
வேட்டுவ காலத்தில் ஆணின் ஒரே வேலை... வேட்டை மட்டும்தான். ஆனால், நதிக்கரையோர நாகரிகங்கள் உருவான பிறகோ, ஆணுக்கு வேட்டையாட வேண்டிய அவசியமே இருக்கவில்லை. அதனால், அவனுக்கு நிறைய நேரம் கிடைத்தது. அதுவரை, பெண்கள் செய்து வந்த பல வேலைகளை ஆண்களும் கவனிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. இந்தப் பெண்பால் வேலைகளில் தனக்குப் பிடித்த ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்து, அதில் தன் வேட்டுவ மூளையைச் செலுத்தினான் ஆண். ஒரே விஷயத்தில் குறியாக இருந்து, அதைத் துரத்திக்கொண்டே போவது அவன் மூளைக்கு வாடிக்கை என்பதால், அதுவரை பெண்களுக்குப் புலப்பட்டு இருக்காத பல நுணுக்கங்கள் புதிதாக ஈடுபட்ட ஆண்களுக்குப் புரிய ஆரம்பித்தன.
அதனால், வாய்ப் பாட்டு, இசை ஆனது. கைவைத்தியம், மருத்துவமானது. தோட்டக் கலை, விவசாயமானது. அறிவு, அறிவியல் ஆனது. மன ஆறுதல், மதமானது. பூர்வீகக் கதைகள் புராணங்கள் ஆயின. பெண்கள் அதுவரை செய்து வந்த சாதாரண வேலைகள் எல்லாமே specialised ஆக ஆரம்பித்தன.
பல புதிய தளங்களைக் கண்டுபிடித்து, ஆண் அதை மென்மேலும் நுணுக்கமாக ஆராய, ஆணின் இந்த கெட்டிக்காரத்தனத்தினால் பெண்களின் வாழ்வு சுலபமானது. அவன் உலோகம் கண்டுபிடித்தான், இவளுக்கு சமையல் சுலபமானது. மருத்துவம் கண்டுபிடித்தான், குழந்தைகளின் பிழைப்பு விகிதம் அதிகமானது. இப்படி ஆணின் மூளைத்திறன் நேரடியாகவும் மறைமுகமாகவும் பெண்களுக்குப் பயன்பட்டதால், பெண்கள் சட்டெனத் தங்கள் கலவியல் தேர்வு விதிகளை மாற்றிக்கொண்டார்கள். சுகம், உணவு வழங்கும் விகிதம், வேட்டுவ வீரியம், பாதுகாக்கும் விகிதம் ஆகிய எல்லாவற்றையும் பின் தள்ளிவைத்துவிட்டு, அவர்களின் அறிவுக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்தார்கள்.

ஆணின் அறிவு பெண்ணுக்கு ரொம்பவே கவர்ச்சியாகத் தோன்ற, அறிவுசார் போட்டிகள் ஆண்களுக்குள் ஆரம்பமாகின. தன் ஆற்றலின் மீது முழு நம்பிக்கை இருந்த நிஜ ஆல்ஃபா ஆண்களுக்குப் பெண்கள் தோழிகளாகவும், காதலிகளாகவும், விசிறிகளாகவும், ஊக்குவிப்பாளிகளாகவும், ஏன்... சேவகிகளாகவும் இருக்க முன் வந்தார்கள். இதைப் பார்த்தால் தோற்றுப்போன ஆண்களுக்கு எப்படி இருந்திருக்கும்? அதனால் தோத்தாங்குளிகளும் சளைக்காமல் வேறு வழிகளில் தங்கள் மூளையைப் பிரயோகித்தார்கள். போட்டியில் கலந்துகொள்ளாமலேயே பெண்களைத் தந்திரமாக அடைய முயன்றார்கள். அது எப்படி?
(காத்திருங்கள்...)