
பத்திரிகை ரிப்போர்ட்டர் என்றவுடன் மொந்தை கண்ணாடி, ஜோல்னா பை, குர்தாவோடு ஓர் உருவம்தான் பலருக்கும் மனக் கண்ணில் எழும்.
''உங்களுக்கு எதுவும் ஆபத்து வராதா..?'' விகடனில் நான் நிருபராகப் பணிபுரிந்த ஆரம்ப காலகட்டங்களில், சொந்தபந்த நட்பு வட்டாரங்களில் அதிகமாக எதிர்கொள்ளும் கேள்வி இதுதான்.
'ஆமா... லொள்ளு சபா மனோகரை மெரினா பீச் அழைச்சுட்டுப் போய் சுண்டல் விக்கச் சொல்றதுக்கும், நமீதாவை ஜிம்முக்கு கூட்டிட்டுப் போய் போட்டோ எடுக்கிற துக்கும் எனக்கு எதுக்கு ஆபத்து வரப்போகுது? ஒருவேளை மனோகருக்கு ஆபத்து வந்தாத்தான் உண்டு’ என மைண்ட் வாய்ஸ் போட்டுக்கொள்வேன்.
பத்திரிகை ரிப்போர்ட்டர் என்றவுடன் மொந்தை கண்ணாடி, ஜோல்னா பை, குர்தாவோடு ஓர் உருவம்தான் பலருக்கும் மனக் கண்ணில் எழும். (கோ, சதுரங்கம் படங்களுக்குப் பிறகு கொஞ்சம் தேவலாம்!)
அந்த ரிப்போர்ட்டர் நள்ளிரவில் ஊழல் அரசியல்வாதி வீட்டில் ஏறிக் குதித்து, ஏதேனும் தேசத் துரோக ஆவணத்தைக் கைப்பற்றி ஓடி வரும்போது, ஜிம் பாய்ஸ் மடக்கிக் கொண்டுபோய் அழுக்கு கோடவுனில் கழுத்தறுப்பார்கள் அல்லது கார் ஏற்றிக் கொல்வார்கள். அவர் சாவதற்கு முன், ''என்னைச் சாகடிச்சுடலாம்... என் பேனாவை... அதுக்குப் பின்னாடி வரப்போற ஒரு கூட்டத்தை உன்னால ஒண்ணும் பண்ண முடியாது.

ஜெய்ஹிந்த்...'' எனச் சவால்விட்டு சாவார். எனக்கு நடந்த அதிகபட்ச ஆபத்து எல்லாம், ''ஏய்... யாருய்யா அந்த லூஸுப் பையன்... ஒரு 300 ரூவா ரெமுனரேஷன் வாங்குவானா? ஏய்ய்... என்னை வாங்காதீங்கய்யா பழி, அவனைப் போட்ருவேன் பொலி...'' என டி.ஆரிடம் திட்டு வாங்கியதும், ''ஃபைனலி ஐ வார்ன் ஹிம்...'' என பாரதிராஜா சாரிடம் சீறல் வாங்கியதும்தான். 'முரசொலி’யில் அவ்வப்போது 'லூஸுப் பையனின் அராஜகம் பாரீர்’ எனப் பாராட்டு விழா நடக்கும்.
சுஜாதா சார் ஒரு முறை அன்பாகக் கண்டித்து வீட்டுக்குக் கூப்பிட்டு இருந்தார். தங்கர்பச்சான் சார், ''ஏங்க... மோசம் பண்றானுவோங்க...'' என அலைபேசுவார். விகடனில் லூஸுப் பையன் பகுதியை ஆரம்பித்து ஒரு வருடம் வரை நான்தான் எழுதினேன். அதற்கு முன்பு அஞ்சாறு வருடங்கள் பல்வேறு பெயர்களில் காமெடி ஏரியாக்களை எழுதியது உண்டு.
அப்போது சினிமா ஏரியாவில் பேட்டிக்குப் போகிற இடங்களில், ''எவன்யா அவன்... அந்த லூஸு... உள்ள தள்ளிருவேன்யா அவனை...'' எனச் சிலர் என்னிடமே எகிறுவார்கள். ''அட ஏன் சார்... அந்த ஆபீஸுக்குப் போயி அஞ்சு வருஷம் ஆகுது. கொஞ்சம் டைம் குடுங்க... கண்டுபிடிச்சுச் சொல்றேன்...'' என்றபடி வந்துவிடுவேன்.
வாராவாரம் அரசியல் நிருபர் மைபா அண்ணன் படு பயங்கரக் கெட்ட வார்த்தைகளைப் போட்டு, ''ஏண்டா என் ஏரியால தாலியறுக்குற... எங்க போனாலும் எவன் அவன்னு என்னைக் காய்ச்சுறாங்கடா...'' எனப் பூ மாரிப் பொழிவார். சின்னக் குத்தூசி அய்யா ஒரு முறை, ''இந்த லூஸுப் பையன் பக்கம் இருக்கே... தமிழ்ச் சமூகத்தோட முகமூடிகளைக் கிழிக்கிற பக்கம்யா. நையாண்டியும் ஒரு வலுவான ஆபரேஷன் கத்திதான்...'' என்றார். அதுதான் நிஜம்!
இதுபோக, அவ்வப்போது நைட் ரவுண்ட்ஸில் இருக்கும்போது ஜெமினி பக்கமோ, கோயம்பேடு பக்கமோ டிராஃபிக் போலீஸ் நிறுத்தி, ''வாய ஊது!'' என்பார்கள். ''சார்... பிரஸ் சார்...'' என்றால், ''சார், என் மச்சான எதாவது மினிஸ்டர்கிட்ட பி.ஏ-வா சேத்து விட முடியுமா?'' எனப் பகீர் அப்ளிகேஷன் போடுவார்கள்.
திடுதிப்பென்று எடிட்டோரியல் மீட்டிங்கில், ''சைக்கோ கொலைகாரன் மேட்டரை யார் டீல் பண்றா? நேத்துகூட ஒரு வாட்ச்மேன் தலைல கல்லைத் தூக்கிப் போட்டுக் கொன்னுருக்கான். முருகா... போட்டோகிராஃபர் விவேக்கைக் கூட்டிட்டு இன்னிக்கு நைட் ஃபுல்லா வடபழனி, கே.கே.நகர் ஏரியால நீ ரவுண்ட்ஸ் போயிரு...'' என ஃபிக்ஸ் பண்ணுவார்கள். காலையில் கண் சிவக்க வந்து, ''சார்... போலீஸும் மக்களும் ஆயுதங்களோட தேடுறதை எல்லாம் போட்டோஸ் எடுத்திருக்கோம். அவனைப் பார்க்க முடியலை...'' என்றால், ''இல்லையில்ல... நான் டிபார்ட்மென்ட்ல விசாரிச்சுட்டேன். இன்னிக்கு அவன் வியாசர்பாடி, புளியந்தோப்பு ஏரியாவுக்கு ஷிஃப்ட் ஆகிட்டானாம். இன்னிக்கு நைட் அந்தப் பக்கம் போயிருங்க...'' என போலீஸ் ரிப்போர்ட்டர் கொளுத்திப்போட்டுவிட்டுப் போவார். அன்றைக்கும் சிவராத்திரிதான்.
மங்களகரமாக மறுநாளே சிம்ரன் பேட்டி அமையும். இருப்பதிலேயே புதுச் சட்டையைப் போட்டுக்கொண்டு கிளம்புவோம். ஆன் தி வேயில் சப்-எடிட்டர் போன் பண்ணி, ''முருகன்... 'ராஜுசுந்தரத்தோட காதல் முறிஞ்சுருச்சா? இப்போ கமல் சாரோட லிவிங் டுகெதர்ல இருக்கீங்களாமே?’ங்கிற கேள்விக்குப் பதில் வாங்காம ஆபீஸ் பக்கம் வந்துறாதீங்க...'' என வெடிகுண்டைக் கடித்து வீசுவார். ''ஹாய்... ஹவ்ஸ் யூ?'' என கேரவனில் காபி கொடுத்துச் சிரிக்கும் சிம்ரனிடம் இந்தக் கேள்வியை எப்படிக் கேட்பது? சுற்றி வளைத்து, மென்று முழுங்கி அந்தக் கேள்விக்குப் பதில் வாங்கி வருவதற்குள் மனுஷனுக்கு டவுசர் கிழியும்.

'எடக்குக் கேள்வி -மடக்குப் பதில்’ என விடியும்போதே விசித்திரமான ஐடியாவோடு வருவார் ஒரு ரிப்போர்ட்டர். அதுவும் பலர் தலையில்தான் வந்து விடியும். 'விஜய் அரசியலுக்கு வர்றதைப்பத்தி என்ன நினைக்கிறீங்க?’ இந்தக் கேள்வி அஜீத்துக்கு. 'அழகிரி நல்லவரா... கெட்டவரா?’ இது ஸ்டாலினுக்கு. 'சிம்பு - தனுஷ் யார் சிறந்த நடிகர்?’ இது நயன்தாராவுக்கு. 'ஜெயலலிதா - சசிகலா ஒப்பிடுக?’ இது ஓ.பன்னீர்செல்வத்துக்கு... என சகல திசைகளிலும் தலை கிறுகிறுத்துத் திரிவோம்.
திடீரென்று, ''ரிசப்ஷன்ல ஒருத்தர் வெயிட் பண்றார்... போய் சின்சியரா அட்டெண்ட் பண்ணு. கவர் ஸ்டோரிக்கே வாய்ப்பு இருக்கு...'' எனக் கோத்துவிட்டுப் போவார்கள். கீழே போனால், நம்மைப் பார்த்ததும் நெஞ்சு வரைக்கும் பேன்ட் போட்ட ஒருவர், கையில் இருக்கும் குண்டு பல்பைக் கரகரவெனக் கடித்துத் தின்ன ஆரம்பிப்பார். பையில் இருந்து ஒரு பாம்பை எடுத்து வாய்க்குள்விட்டு மூக்கு வழியே இழுத்துக்காட்டி, அப்துல் கலாமோடு நிற்கிற அஞ்சாறு போட்டோக்களை வீசிக் கலவரப்படுத்துவார். கண்ணடைக்கும்போதே மெரிடியன் ஹோட்டல் வாசலில் நின்றபடி, ''ஜி... இன்னிக்கு நம்ம பிரஸ் மீட் இருக்கு... மறந்துட்டீங்களாஜி!'' என போன் அடிப்பார் ஒரு பி.ஆர்.ஓ. 'புரட்சி... புரட்சி’ என மனசு கூவிக்கொண்டு இருக்கும்போதே, டி.வி. காம்பியர்களை அழைத்துப்போய் ரங்கநாதன் தெருவில் தீபாவளி பர்சேஸ் செய்கிற அசைன்மென்ட் வரும். காதலியோடு மாயாஜாலில் படம் பார்க்க பிராமிஸ் பண்ணி, வாழ்வில் முதல்முறையாக கால் டாக்ஸி எல்லாம் புக் பண்ணி, ரொமான்டிக் மூடில் கிளம்பும்போது, ''நீங்க லக்கி பாஸ்... நடிகர் செந்திலோடு எலெக்ஷன் பிரசாரம் கவரேஜுக்குக் கிளம்பறீங்க. இப்பிடியே சிந்தாதிரிப்பேட்டை ரவுண்டானா போனீங்கன்னா, அப்பிடியே காஞ்சிபுரம், ஈரோடு, பொள்ளாச்சி...'' என அசைன்மென்ட் வரும்.
சாயங்காலம் சாரு நிவேதிதா சந்திப்பு, நள்ளிரவு வரை எஸ்.ராமகிருஷ்ணன் உரை என ஒரு நாள் அமையும். 'மனசே சரியில்லையே’ என ஈஷாவில் யோகா சேர்ந்திருப்போம். கிளாஸ் முடிந்து பார்த்தால், ஒரே நம்பரில் இருந்து 17 மிஸ்டு கால்கள் இருக்கும். அவசரமாகப் பேசினால் ஒருவர் ஹஸ்கி வாய்ஸில், ''ரெட் ஹில்ஸ் பக்கம் சாராயம் காய்ச்சுறாங்க... எடத்தைக் காட்றேன் ஒடனே வாங்கய்யா...'' என்பார். விடியற்காலையில் ஒருவர் நாகர்கோவிலில் இருந்து போன் பண்ணி, ''த்ரிஷா அம்மா மொபைல் நம்பர் கெடைக்குமா சார்... திறப்பு விழாவுக்குக் கூப்பிடணுங்க!'' எனக் கடுப்பேத்து வார். அதிகாலை 4 மணிக்கு காசிமேட்டில் இருந்து நடுக் கடல் வரை ஒரு மீன்பிடிப் படகுப் பயணம் கிடைக்கும். எதிர்பாராத ஒரு நாளில், கேரளக் காடுகளில் போராளி அஜிதாவுடன் அதி அற்புதமான சந்திப்பு வாய்க்கும்!
நான் அரசியல் - புலனாய்வுப் பத்திரிகையாளனாக இருந்தவன் இல்லை. இவை ஒரு சாமான்யப் பத்திரிகையாளனின் குறிப்புகள். பத்திரிகையாளனின் வாழ்க்கை நிஜமாகவே அதி சுவாரஸ்யமானது. வாழ்வின் பல பக்கங்களுக்கும் பயணப்படும் வாய்ப்பைத் தருவது. அவன் அனு தினமும் கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தைக்காரனாகவே வாழ ஆசீர்வதிக்கப்பட்டவன் அல்லது சபிக்கப்பட்டவன். தனது எல்லாப் பொழுதுகளையும் அவன் இந்தச் சமூகத்துடனும் சமூகத்துக்காகவுமே பகிர்ந்துகொள்கிறான். வரலாறுகளை அவன்தான் உருவாக்குகிறான். ஆனால், அவன் ஒருபோதும் வரலாறு ஆவதில்லை. அனைத்துக்கும் அவன் சாட்சி. அசையும் மரங்களை உணரும் கண்கள், காற்றை அறியாதது மாதிரி... எல்லோரையும் எழுதிவிட்டு, காற்றைப் போல வாழ்பவர்கள்தான் பல நிருபர்கள்!
வாழ்வின் மிச்ச சொச்சங்களையும் உச்சபட்சங்களையும் தினசரி கடப்பதால், அதன் நிலையாமையைப் பத்திரிகையாளர்களைப் போல் அறிந்தவர்கள் யாரும் இல்லை.
அதனால்தான் ஒரு கொடூரத்தை போலீஸைப் போலவும், ஒரு மரணத்தை டாக்டரைப் போலவும் அவர்களால் பார்க்க முடிகிறது. ஓர் அரசை உருவாக்கவும் அகற்றவுமான வலிமை மக்களுக்கு அடுத்ததாக மீடியாக்களுக்கே இருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன்.
தவறான, அதிகாரத்துக்கு விலை போகும் மீடியாக்காரர்களும் இருக் கிறார்கள். ஆனால், உண்மையான, துணிவான பத்திரிகைக் குரல்கள் இல்லாவிட்டால் என்ன ஆகும் இந்த தேசம்? போஃபர்ஸில் இருந்து அலைக்கற்றை வரை ஊழலில் திளைக்கும் அதிகாரத்தின் முகமூடிகள் கிழிக்கப்படாமலேயே போயிருக்காதா? நேற்று நடந்த சமச்சீர்க் கல்வி குழப்பம் வரை மீடியாக்களின் எதிர்ப்பு அலைகள் இல்லாவிட்டால், இன்னும் எத்தனை அவலங்கள் அரங்கேறிக்கொண்டு இருக்கும். இப்போதே இந்தக் கேவலமான அரசியல் ஆட்டத்தில் இந்தப் பாடு... ஈழப் போராட்டத்தில் விகடன் மாதிரியான நேர்மையான பதிவுகள் இல்லாவிட்டால், என்ன கூத்தடிப்பார்கள் இந்த அரசியல்வாதிகள்?
சட்டசபையில் கேடுகெட்ட எம்.எல்.ஏ-க்கள் ஆபாசப் படம் பார்த்தால், அடுத்த அரை மணி யில் தேசம் அலறுகிறதா இல்லையா? பெண் சிசுக் கொலையில் இருந்து மரபணு மாற்றம் வரை இவர்கள் கொண்டுவந்த உண்மைகள் எவ்வளவு இருக்கும்? ஒரு மேதா பட்கரை... கத்தாரை... சுப.உதயகுமாரனை... மக்கள் முன்பு கொண்டுவந்து நிறுத்தியிருக்காவிட்டால், வரலாற்றையே திரித்துவிட மாட்டார்களா இந்தப் போலிவாதிகள்?
பத்திரிகைக்காரன் என்பவன் இரவு, பகல், விடுமுறை எல்லாம் இல்லாதவன். எல்லோருக்குமான அடையாளங்களைத் தந்துவிட்டு, எந்த அடையாளங்களும் இன்றி அந்திமத்தில் வாழும் பத்திரிகை நண்பர்களையும் நான் அறிவேன். அவர் களின் திசைக்குக் கை தொழுகிறேன்!
நான் பத்திரிகைக்காரனாக ஆனது ஒரு வரம். அண்ணா சாலை காயின் பூத் ஒன்றில் இருந்து தொலைபேசிய ஒரு கிராமத்தானை, கண்ணன் சார் மட்டும் விகடனில் வேலைக்குச் சேர்க்காமல் போயிருந்தால், வாழ்வின் அரிய தரிசனங்களையும் மதிப்பீடுகளையும் நான் இழந் திருப்பேன். அதுதான் இந்த வாழ்வை, எழுத்தை எனக்குச் சொல்லித் தந்தது.

நானும் நண்பன் அருள் எழிலனும் ஒரே நாளில் விகடனில் வேலைக்குச் சேர்ந்தோம். நான் ஏவி.எம். ஸ்டுடியோவில் கிசுகிசுக்களுக்கு அலைந்துகொண்டு இருக்கும்போது, அவன் வயநாடு மலைவாழ் மக்களின் வாழ்வைப் பற்றி சி.கே.ஜானுவுடன் பேசிக்கொண்டு இருப்பான். நான் 'கோலங்கள்’ ஷூட்டிங்கில் தேவயானி யைப் பார்த்துக்கொண்டு இருக்கும்போது, அவன் சர்ச்சில் மணிஅடிக்கிற மெலிஞ்சி பற்றி ஹ்யூமன் ஸ்டோரி எழுதிக்கொண்டு இருப்பான். ''மச்சான்... நாமெல்லாம் நெஜமாவே ரிபெல் பாத்துக்க...'' என்பது அவனது பஞ்ச் டயலாக்.
நிஜமாகவே நான் அறிந்த பத்திரிகைப் போராளிகளில் அவனும் ஒருவன். ஈழப் போராட்டத்தில் இருந்து கூடங்குளம் பிரச்னை வரை இடைவிடாமல் இயங்கிக் கொண்டு இருக்கிறான். அருள் அடிக்கடி, ''ஏதோ மச்சான்... கண்ணன் சாரால நாம இந்தச் சமூகத்துக்குக் கொஞ்சமாவது பயன்பட்டு இருக்கோம்ல...'' என்பான். அது உண்மைதான்.
சமூகத்துக்குப் பயன்படும் ஒரு தலை முறையை ஆசிரியர்களும் பத்திரிகை யாளர்களும்தானே தீவிரமாக உருவாக்கித் தர முடியும்?
பத்திரிகையாளனின் உலகம் மனித முகங்களாலும் மனங்களாலும் நிறைந்துகிடக்கிறது. சிறைக்கூடத்தில் இருந்து பெருவெளியை நம்பிக்கையாகத் துழாவும் பேரறிவாளன் முகம் முதல்... எப்போது போனாலும் தாடையைக் கைகளால் தாங்கிப் பிடித்துக்கொண்டு, 'ம்ம்ம்ம்...’ எனக் கண்களை உருட்டும் பி.சி.ஸ்ரீராமின் முகம் வரை எத்தனை முகங்கள்?
''சிட்டிக்குள் மீன்பாடி வண்டி ஓட்டக் கூடாதுனு சொல்லிட்டாங்க. இனிமே நாங்க எப்படிப் பொழைப்போம்?'' எனக் கைகள் நீட்டிக் கதறிய வண்டிக்காரரில் இருந்து, ''சார்... சார்... அவரைப்பத்தி நான் அப்படிச் சொன்னேன்னு எழுதிராதீங்க. ஏதோ உணர்ச்சி வேகத்துல பேசிட்டேன்...'' என்ற ஹீரோயினின் குரல் வரை எத்தனை குரல்கள்?
ஒரு சொல்... செயல்... எழுத்து... ஏதோ ஒன்றுதான் நம் வாழ்வை அர்த்தப்படுத் தும் என்பார்கள். முத்துக்குமார் கடிதம் எழுதிவைத்துவிட்டுத் தீக்குளித்து இறந்துபோனபோது மனசு தகித்துக்கொண்டு இருந்தது. அவரவருக்கான உணர்வுகளிலும் போராட்டங்களிலும் ஏதேனும் செய்ய வேண்டும் இல்லையா..? கண்ணன் சார் போன் பண்ணி, ''முத்துக்குமாருக்கு நீ ஒரு பதில் கடிதம் எழுதேன்...'' என்றார். ஆயிரமாயிரம் நண்பர்களின் குரலாக தோழன் முத்துக்குமாருக்கு ஒரு கடிதம் விகடனில் எழுதினேன். அந்தக் கடிதம்தான் ஒரு பத்திரிகைக்காரனாக என் வாழ்வில் ஓர் அர்த்தம் உள்ள பொழுது.
அப்புறம்... சென்ட்ரல் பக்கம் பிளாட்ஃபாரத்தில் வசிக்கும் ஒரு சிறுமியைப் பற்றி எழுதியிருந்த மறு வாரம், அவள் படிப்பதற்காக விகடன் மூலமாக நிதி கிடைத்தது. ''அண்ணே, இப்போ நான் படிக்கிறேன்ணே... ரொம்பத் தேங்ஸுண்ணே!'' என அவள் கண்கள் மலர்ந்து எதிரே நின்ற ஒரு கணம்... அற்புதம்!
(போட்டு வாங்குவோம்...)