மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

ஈக்வல் இம்சை?

##~##

கே.வெங்கட், விழுப்புரம்.

 குழந்தை காட்டும் டாட்டா, குமரிப் பெண் காட்டும் டாட்டா... ஒப்பிடவும்?

முதலாவதுக்கு, 'இடத்தைக் காலி பண்ணு, கிளம்பு’ என்று அர்த்தம். சில குழந்தைகள், விருந்தாளிகள் வீட்டுக்கு வந்தவுடனேயே 'டாட்டா’ காட்டிவிடும். இரண்டாவதுக்கு, 'மீண்டும் சந்திக்கலாம்’ என்று அர்த்தம். மறுநாள் போன் போட்டு, 'ஏய்! இன்னிக்கு எங்கே மீட் பண்ணலாம்?’ என்று தாராளமாகக் கேட்கலாம். மறவாதீர்!

பொன்விழி, அன்னூர்.

மதனுக்கு இதுவரை கிடைத்த இலவசப் பொருட்கள் என்னென்ன?

காற்று, மழை, வெயில்!

விக்டர் சுரேஷ், புதுச்சேரி.

'கிளியோபாட்ராவின் மூக்கு மட்டும் சற்று சிறியதாக இருந்தால் உலக வரலாறே மாறியிருக்கும்’ என்கிற கருத்தைப் பல இடங்களில் கேட்டும் படித்தும் இருக்கி றேன். அப்படிச் சொன்னவர் யார் என்று விசாரித்தால், சிலர் ஷேக்ஸ்பியர் என்கிறார்கள். பலர், 'தெரியவில்லை’ என்கிறார்களே?

அதைச் சொன்னவர் 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ப்ளைஸ் பாஸ்கல் (Blaise Pascal) என்கிற பிரெஞ்சுக் கணித - தத்துவ மேதை. 'சிந்தனைகள்’ (Pens’ees)  என்கிற புத்தகத்தில் இது வருகிறது!

ஹாய் மதன் கேள்வி - பதில்

ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.

மனிதனைப் போல் மிருகங்களுக்குள்ளும் ஆணாதிக்கம் உண்டா?

யானையில் இருந்து எலி வரை, மிருகங்களில் ஆணாதிக்கம் மட்டுமே உண்டு. சில பூச்சி வகைகளில் மட்டும் (சிலந்தி மாதிரி!) பெண்ணா திக்கம். 'மனிதனைப் போல’ என்கிறீர்கள். என்ன துணிச்சல்! பெண்களிடம் தர்ம அடி வாங்க வேண்டுமா?!

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்-1.

சின்ன வீடு வைத்துக்கொண்ட முதல் புண்ணியவான் யார்?

இங்கேயா... தேவலோகத்திலா?!

க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்.

பிச்சை எடுப்பவர், பணக்காரரைப் பார்த்து பொறாமைப்படாமல், இன்னொரு பிச்சைக்காரரைப் பார்த்தே பொறாமைப்படுகிறாரே, ஏன்?

அதுதான் சைக்காலஜி! அம்பானி 10 'ரோல்ஸ்ராய்ஸ்’ கார்கள் வாங்கினால் நமக்குப் பொறாமை வராது. நாம் ஸ்கூட்டர் வைத்திருக்கும்போது, பக்கத்து வீட்டுக்காரர் ஒரு 'நானோ’ காரை வாங்கினாலும் நமக்கு ஒருமாதிரி ஆகிவிடும். நாம் எல்லோரும் சரிசமமாக இருக்கும்போது, அவர் மட்டும் சட்டத்தை மீறுகிறார். அது தப்பு. அதாவது, 'ஈக்வல்’ ஆக இருப்பவர்களிடையேதான் பொறாமை வரும்!

ஆர்.சபரிவாசன், ஆற்காடு.

ஒவ்வோர் அரசு அதிகாரியின் மேஜை மீதும் 'நான் லஞ்சம் வாங்குவது இல்லை’ என்பது போன்ற வாக்கியப் பலகை வைத்தால் எப்படி இருக்கும்?

வாங்க மறைவாக இருக்கும்!

ஹாய் மதன் கேள்வி - பதில்

என்.பாலகிருஷ்ணன், மதுரை.

'டாஸ்மாக்’ வருமானம் இல்லாமல், ஒரு மாநிலத்தை ஆட்சி செய்ய (அதாவது நிர்வாகம் பண்ண) முடியாதா?

பெருந்தலைவர் காமராஜர், அவரைத் தொடர்ந்து வந்த பக்தவத்சலம் வரை அப்படித்தான் செய்தார்கள். இனி... முடியாது!

 உங்களுக்குச் 'சவால்’ பிடிக்குமா?

வரலாற்றுச் சம்பந்தமான சவாலை மட்டும் ஓரிருமுறை ஏற்றுக்கொண்டது உண்டு. நண்பர் ஒருவர் 'தாஜ்மஹாலைக் கட்டியது சந்திரகுப்த மௌரியர்!’ என்றார். நான் 'இல்லை, ஷாஜஹான்!’ என்றேன். 'என்ன பெட்?’ என்றார் நண்பர். 'நூறு ரூபாய்!’ என்றேன். ஜெயித்தது யார் என்று சொல்ல வேண்டுமா?!

கஜுரஹோ தொடர்ச்சி...

ந்திய வரைபடம் ஒன்றை எடுத்து மேஜை மீது வைக்கவும். மருத்துவர்களைக் கூப்பிட்டு 'இந்தியாவுக்கு இதயம் எங்கே வைப்பீர்கள்? அந்த இடத்தை புள்ளிவைத்துக் குறிப்பிடுங்களேன்!’ என்று கேட்கவும். மருத்துவர்கள்வைக்கும் புள்ளியின் மீதே நீங்கள் ஒரு புள்ளியைவைத்து 'இதுதான் கஜுரஹோ!’ என்று சொல்லிவிடலாம். அவ்வளவு கச்சிதமாக, ஆச்சர்யமாக கஜுரஹோ 'இந்திய இதய’த்தின் மீது உட்காருகிறது!

   மத்தியப்பிரதேசத்தில், பண்டல் கன்ட் என்கிற பகுதியில்தான் கர்ஜுரவாஹ தாக்கா என்கிற சிறிய ஊர் அமைந்திருக்கிறது - சுருக்கமாக மருவி கஜுரஹோ!

சீன யாத்ரீகர் யுவான் சுவாங் கி.பி. 601-ல் கஜுரஹோ வந்திருக்கிறார். உடனே அவரால் திரும்பிப் போக முடியவில்லை. மனசில்லை. கஜுரஹோவை அவர் சீன மொழியில் 'சீசீ-தோ’ என்று குறிப்பிடுகிறார் (பொருத்தமாக இருக்கிறதே என்பீர்கள் சிலர்!)

ஹாய் மதன் கேள்வி - பதில்

'பண்டல் கட்’டுக்குப் பழைய சம்ஸ்கிருதப் பெயர் ஜேஜகாபுக்தி. அதன் சீன மொழிபெயர்ப்புதான் சீசீ..! பல ஆண்டுகள் கழித்து கி.பி. 1335-ல் மொராக்கோ யாத்ரீகர் இபன் பதூதாவும் கஜுரஹோ வந்து பிரமித்துப் போய், அதுபற்றி எழுதியிருக்கிறார். (எஸ்.எம்.எஸ்., இ-மெயில் எல்லாம் இல்லாமல் எப்படித்தான் தெரிந்துகொண்டார்களோ?!)

க்ஷத்திரிய வீர வம்சத்தில் பிறந்த ராஜபுத்திர மன்னர்களில் 36 பிரிவினர் உண்டு. அதில் ஒரு பிரிவினர்தான் சண்டேளர்கள் என்று அழைக்கப் பட்டனர். இவர்கள் வம்சத்தில் வந்த மன்னர்கள் கட்டிய கோயில்கள்தான் கஜுரஹோவில் இன்று வரை நிலைத்து நின்று மெய்சிலிர்ப்பூட்டுகின்றன.

முதல் மன்னரான நன்னுகாவின் பேரப் பிள்ளைகளில் ஒருவரான யசோதவர்மன்தான் திபெத்தை வென்று அங்கிருந்து கொண்டுவந்த விஷ்ணு சிலைக்காக ஒரு கோயில் எழுப்பினார். அதுதான் பிள்ளையார்... விஷ்ணு சுழி. யசோத வர்மனின் மகன் தாங்கா. அவர் ஆட்சியில் மேலும் கோயில்கள் கற்களில் இருந்து கிளர்ந்துஎழுந்தன. அவர் 1019 வரை வாழ்ந்து, தன் 100-வது வயதில் ஆட்சியும் வாழ்க்கையும் போரடித்துப் போய், கங்கையில் இறங்கி மூழ்கி தற்கொலை செய்துகொண்டார் என்கிற குறிப்பு மட்டும் இருக்கிறது. அடுத்த பத்திதான் வாசகர்கள் மனதுக்குள் கிலி ஏற்படுத்தும்.

தாங்கா உயிர் துறப்பதற்குப் பல ஆண்டு களுக்கு முன்பே துருக்கியில் இருந்து இந்தியா வுக்குள் - கஜினி முகமதுவின் படை - ஆர்ப் பாட்டமாக நுழைந்தது. போகிற வழி எல்லாம் கொள்ளையடித்துவிட்டு, பிறகு மத்தியப்பிரதேசத் துக்குள் புகுந்தது...

கஜுரஹோவின் கதி..?!

- தொடரும்...