
நான்கைந்து நாட்களிலேயே அவரிடம் இருந்து பதில் வந்தது.
திருநெல்வேலி ராயல் டாக்கீஸில் 'அழியாத கோலங்கள்’ திரையிடப்பட்டபோது, நான் சின்னப் பையன். பல வருடங்கள் கழித்து செல்வம் தியேட்டரில் அதே 'அழியாத கோலங்கள்’ பார்க்க வாய்த்தது. அதுவரை நான் பார்த்துப் பழகிய சினிமாக்களில் இருந்து முற்றிலும் வேறு ஒரு சினிமாவாக அது இருந்தது. வண்ணதாசனின் கதைகள்போல கதையே சொல்லாமல் நெஞ்சைப்போட்டு அப்படி ஓர் அழுத்து அழுத்தியது. அதன் பிறகு 'யாத்ரா’ என்றொரு மலையாளப் படம். பாலுமகேந்திரா என்ற பெயர் என் மனதில் ஆழப் பதியத் தொடங்கியது. பிறகு 'ஓளங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை, வீடு, சந்தியா ராகம்’ எனப் பல படங்கள். பட்டப் படிப்பு முடித்துவிட்டு, எந்த எதிர்கால நோக்கும் இல்லாமல், நான் உண்டு, எனது இசை வகுப்புகள் உண்டு என்றிருந்த சமயத்தில்தான், பார்வதி தியேட்டரில் 'வண்ண வண்ணப் பூக்கள்’ படம் பார்த்தேன். அதற்கு முன்பு வரை தோன்றாத யோசனை மனதைத் தூண்ட, பாலுமகேந்திரா என்ற கலைஞருக்கு ஒரு கடிதம் எழுதினேன். நான்கைந்து நாட்களிலேயே அவரிடம் இருந்து பதில் வந்தது. கடிதத் தொடர்பு பலப்பட, 'கிளம்பி வாடா’ என்றார். வந்தேன்.

எட்டு வருடங்கள். வாத்தியாருடன் இருந்து சினிமாவையும் வாழ்க்கையையும் கற்றுக்கொண்ட அற்புதமான காலம். திருநெல்வேலி மாதிரியான ஒரு சிறு நகரத்தில் இருந்து வந்திருந்த ஓர் இளைஞன், அதற்கு முன்பு ஓரிரு முறை மட்டுமே பார்த்திருந்த பிரமாண்ட மாநகரமான சென்னையையும், 'சொப்பனத் துறை’ சினிமாவையும் பார்த்து மிரண்டுவிடாமல், மிக முக்கியமாக மனம் முழுதும் வியாபித்து இருந்த தாழ்வுமனப்பான்மையைப் பூப்போல வருடிக் கொடுத்து அகற்றினார் வாத்தியார்.
சினிமாத் துறையைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் ஒரு கூரையின் கீழ் வாழ்பவர்கள். கக்கூஸுக்கே காரில்தான் போவார்கள் என்ற பாமரத்தனமான நம்பிக்கைகளை எல்லாம் அடித்து நொறுக்கினார். அப்போது வாத்தியாரிடம் ஒரு பழைய அம்பாஸடர் கார் இருந்தது. கதவோரங்களில் துரு பிடித்திருக்கும். முன் ஸீட்டின் ஒரு கதவு நிரந்தரச் செவிடு. எத்தனை முறை 'பூங்கதவே தாழ் திறவாய்’ பாடினாலும் திறக்காது. டிரைவர் ஸீட் வழியாகத்தான் ஏற வேண்டும். எங்காவது சென்றால், வாத்தியார் இறங்கிய பிறகு காருக்குள் இருந்துகொண்டு தவிப்பேன். டிரைவர் இறங்கும் வரை பொறுக்க மாட்டாமல் அவரை இடித்துக்கொண்டு இறங்கி வாத்தி யாரைப் பிடிக்க ஓடுவேன்.

வாத்தியாருடன் நான் இருந்த ஆரம்ப காலம் வெகு சிரமமான ஒரு காலகட்டம். இருந்த அந்தப் பழைய காரையும் கொடுத்த பின், ஆட்டோவில் பயணிப்போம். நடக்கும் தூரம் என்றால்... நடைதான். சாலிகிராமத்து வீதிகளில் வாத்தியாருடன் நான் நடந்து செல்லாத பகுதியே இல்லை. அப்படி நடக்கும்போது எல்லாம் இளையராஜாவின் 'How to name it’ மனதுக்குள் ஒலிக்க 'வீடு’ திரைப்படத்தில் சொக்கலிங்க பாகவதர் தன் பேத்திகளுடன் வீடு பார்க்க நடந்து செல்வதை நினைத்துக்கொள்வேன். சமயங்களில் தாங்க மாட்டாமல் வாத்தியாரிடம் குறைபட்டுக்கொள்வேன்.
''ரொம்ப சங்கடமா இருக்கு சார்?''
''எதுக்குடா?''
''இப்பிடி நடந்து போறோமே?''
''அறிவின்மைக்குத்தான்டா வருத்தப்படணும், இடியட். இதுக்குப் போயி கலங்கலாமா? Beggars can't be choosers'' - எளிதாக உணர்த்துவார்.
படங்கள் இல்லை. வேறு வேலைகளும் இல்லை. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள். ஆனாலும் வாழ்க்கை வெறுமையாக இல்லாமல் நிறைவாகவே இருந்தது. காரணம், வாத்தியாரின் நூலகத்தில் இருந்த புத்தகங்கள். திருமூலரில் தொடங்கி திலீப்குமார் வரை வகை வகையான, விதவிதமான எழுத்தாளர்களின் புத்தகங்களுடன் நாளும் பொழுதும் பயனுடன் ஓடும். ஒரு திரைப்பட இயக்குநருக்கு இலக்கியப் பரிச்சயம் அவசியம் என்பதை வாத்தியார், தன்னிடம் வந்து சேரும் உதவி இயக்குநருக்கு ஆரம்பத்திலேயே உணர்த்திவிடுவார். ஏதாவது, ஒரு சிறுகதைத் தொகுப்பைக் கையில் கொடுத்து, படிக்கச் சொல்லி, அதன் ஒவ்வொரு கதைக்கும் கதைச் சுருக்கம் எழுதப் பணிப்பார். இதுவே அன்று முதல் இன்று வரை பாலுமகேந்திரா பள்ளி மாணவர்களின் பால பாடம்.
எழுத்தாளர்கள் செ.யோகநாதன், கணேசலிங்கம் போன்றவர்கள் வந்து பேசிக்கொண்டு இருப்பார்கள். கோமல் சுவாமிநாதனைச் சந்திக்க 'சுபமங்களா’ செல்வோம். அங்கு வாத்தியாரும் கோமலும் பேசிக்கொண்டு இருக்க, நான் எங்களூர்க்காரர் 'அண்ணாச்சி’ வண்ணநிலவனுடன் பேசிக்கொண்டு இருப்பேன். ஜெயகாந்தன், சுஜாதா (வாத்தியாருக்கு அவர் ரங்கா) போன்றவர்களைச் சந்திக்கச் செல்லும் போதும் வாத்தியார் உடன்அழைத்துச் செல்வார்.

வாத்தியாரின் படங்களில் இசை சிறப்பாக இருப்பதற்குக் காரணம், அவரது இசை ஆர்வம்தான். சிறு வயதில் புல்லாங்குழல் பயின்றிருக்கிறார். பழைய இந்தித் திரைப்படப் பாடல்களின் காதலர் அவர். 'செம்மீன்’ எடுத்த ராமு கரியத்தின் 'நெல்லு’ படம்தான் அவர் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய முதல் படம். அதற்கு இசை அமைத்த சலீல் சௌத்ரிதான் வாத்தியார் முதலில் இயக்கிய 'கோகிலா’ கன்னடப் படத் துக்கும், பின்பு தமிழில் முதலில் இயக்கிய 'அழியாத கோலங்கள்’ திரைப்படத்துக்கும் இசையமைத்தார். அந்தப் படத்தின் 'நான் எண்ணும் பொழுது’ என்ற டைட்டில் பாடல், சலீல் சௌத்ரி ஏற்கெனவே இந்தியில் இசைஅமைத்து, ரிஷிகேஷ் முகர்ஜியின் இயக்கத்தில் வெளியான 'ஆனந்த்’ திரைப்படத்தின் 'நா ஜீயா லாகே நா’ என்ற பாடலின் மெட்டு.
ஒரு திரைப்படத்தின் பின்னணி இசையில் மௌனத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக இளையராஜா அவர்கள் அட்டகாசமாக இசையமைத்திருந்த 'மூடுபனி’ திரைப்படம்தான் வாத்தியாருடன் அவர் இணைந்த முதல் படம். அதுவே அவருக்கு நூறாவது படமும்கூட. வாத்தியாருக்கும் இளையராஜா அவர் களுக்குமான பெரும்பாலான உரையாடல் களின்போது எஸ்.டி.பர்மன், மதன்மோகன், ரோஷன் போன்றவர்களின் பழைய இந்திப் பாடல்களை இருவருமே மாறி மாறிப் பாடிக்கொண்டு இருப்பார்கள். அப்படி ஒரு பிரமாதமான இசைச் சூழலில் வாத்தியாரின் வேண்டுகோளை ஏற்று கல்யாண்ஜி - ஆனந்த்ஜியின் இசையமைப்பில் உருவான 'உப்கார்’ திரைப்படத்தில் மன்னா டேயின் அற்புதமான குரலில் அமைந்த 'கஸ்மேன் வாதே பியார் வஃபா சப்’ என்னும் பாடலை 'நீங்கள் கேட்டவை’ திரைப்படத்தில் பயன்படுத்தினார் இளையராஜா. 'கனவு காணும் வாழ்க்கை யாவும்’ என்ற அந்தப் பாடலின் interludes-ஐ முற்றிலும் புதிதாக அமைத்து, அந்தப் பாடலை வேறு ஓர் உயரத்துக்கு எடுத்துச் சென்றிருந்தார். வாழ்க்கையின் நிலையாமையை உணர்த்தும் வரிகளைக்கொண்ட அந்தப் பாடலின் ஒவ்வொரு ஷாட்டிலும் பாலுமகேந்திரா என்னும் அற்புதமான கலைஞனை நாம் காணலாம்!
'நாங்களும்தான் ஊட்டியில் படம் பிடிக்கிறோம். ஆனாலும் பாலுமகேந்திராவின் ஊட்டி விசேஷமாகத் தெரிவதற்குக் காரணம், அது பாலுமகேந்திராவின் ஊட்டி!’ - ராஜீவ் மேனன் ஒருமுறை சொன்னார். ஊட்டியில் ஒருமுறை வாத்தியாருடன் காரில் சென்றுகொண்டு இருக்கும்போது 'கேத்தி’ ரயில்வே ஸ்டேஷனில் காரை நிறுத்தச் சொல்லி நடந்து சென்றார். எதுவுமே பேசவில்லை. சிறிது நேரம் அங்கு உள்ள ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்தார். மீண்டும் காரில் ஏறிச் செல்லும் போதுதான் அந்த இடம் தெரிந் தது... எதுவும் பேசாமல் வாத்தியார் அவ்வளவு நேரம் அமர்ந்திருந்தது, 'மூன்றாம் பிறை’யின் இறுதிக் காட்சியில் கமல் வந்து அமரும் கேத்தி ரயில்வே ஸ்டேஷனின் பெஞ்ச் என்பது.
இன்னொரு சமயம் ஊட்டியில் பாடல் காட்சிக்கான இடத் தேர்வுக்கு அலையும்போது கண்ணில் பட்ட சிறு குன்று ஒன்றில் சிரமப்பட்டு ஏறிச் சென்று பார்த்தேன். அந்தப் பகுதி வாத்தியாருக்குப் பிடிக்கும் என்று தோன்றியது. அவசர அவசரமாகச் சென்று அவரை அழைத்து வந்தேன். பொறுமையாக ஏறி வந்தார். குப்பையும் கழிவு களுமாக இருந்த அந்தப் பகுதிக்கு வந்து நின்று பார்த்த வாத்தியார் மெதுவான குரலில் சொன்னார். '' 'யாத்ரா’ படத்து க்ளைமாக்ஸ்ல ஷோபனா, மம்மூட்டிக்காக நெறைய வெளக்குகள் வெச்சுக்கிட்டுக் காத்திருப்பாங்களே! அந்த இடம் இதுதான்மா!''
ஊட்டியின் ஒவ்வொரு புல்லும் பூண்டும் அவருக்குத் தெரியும்.
சில சமயம் லொகேஷன் பார்க்கச் செல்லும்போது, ஆர்வக் கோளாறில் 'சார், ஸீன் நம்பர் 23-க்கு இது சரியாயிருக்குமே?’ என்பேன். 'ஏன்டா அறிவுமதி மாதிரியே ஸீன் நம்பரைச் சொல்றே? என்ன ஸீன்... அதைச் சொல்லு’ - எரிச்சலேபடாமல் சொல்வார். வாத்தியாரின் குடும்பத்தில் எங்களின் மூத்த சகோதரரான அறிவுமதி அண்ணன் உதவி இயக்குநராக இருந்தபோது, ஸீன் பேப்பரின் ஓரங்களில் அந்தந்த ஃபிரேமைப் படமாகவே சின்னச் சின்னதாக வரைந்து வைத்திருப்பார் என்பார்கள். அண்ணனின் கையெழுத்தே ஓவியம்போல இருக்கும்.

வாத்தியாரிடம் இருந்து நாங்கள் கற்றுக்கொண்டது ஏராளம் என்றாலும், வாத்தியாரின் பள்ளியில் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவர் ஒருவர் இருக்கிறார். கே.பாலச்சந்தர் அவர்களின் ஆரம்ப கால நண்பரும், அற்புதமான நடிகரும், அதைவிட அருமையான மனிதருமான அவர் எங்களுக்கு ராமன் சார். 'நாயர் ராமன்’ என்றால் பழைய நாடக, சினிமாக்காரர்களுக்குத் தெரியும்.
''எதிர் நீச்சல் டிராமால 'எடோ மாது’ன்னு தொடையைத் தட்டிட்டு ஸ்டேஜ்ல இவர் நடிக்கிறதப் பாத்தா, நமக்குத் தொடை நடுங்கும் சார்!''
- 'சதிலீலாவதி’ படப்பிடிப்பின்போது கிரேஸி மோகன் சொன்னார்.
அப்போதெல்லாம் மானிட்டர் கிடையாது. Action continuity-யைச் சுடச்சுட live ஆகவே பார்த்துதான் எழுத வேண்டும்.
''கண்ண அங்கெ வெச்சுக்கோ. கைய பேப்பர்ல வச்சுக்கோ. குனிஞ்சு பாக்காம எழுதிக்கிட்டே இரு.''
உதவி இயக்குநர் வேலையை எளிதாக்கிக் கொடுப்பார். 'நாயர் ராமன்’ அவர்களைத் தனது முதல் படமான 'சேது’வில் கதாநாயகியின் தகப்பனாராக நடிக்கவைத்துப் பெருமைப்பட்டவர் நண்பர் பாலா.
வாத்தியாரிடம் உதவி இயக்குனராக இருந்த காஞ்சிபுரத்து இளைஞன் ஒருவன் நிறையப் படிப்பவன். கவிதைகள் எழுதுபவன். உற்சாகமான மனநிலையிலேயே எப்போதும் இருப்பவன்.
''அண்ணே, பாட்டு எழுதப் போறேண்ணே.''
திடீரென்று ஒரு நாள் சொன்னான்.
கொஞ்சம் அதிர்ச்சியானேன். ஆனாலும், ''சூப்பர்டா. அசத்து'' என்றேன். வாத்தியாருக்குக் கடும் வருத்தம். கொஞ்சம் கோபமும்கூட. இருந்தாலும் வாழ்த்தி அனுப்பினார். அப்போது வாத்தியாரும், உடன் இருந்த நானுமே அந்த இளைஞனின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று பெரிதாக நம்பவில்லை. ஆனால், இன்றைக்கு அவனது வளர்ச்சியை நாங்கள் அண்ணாந்து பார்க்கிறோம். எந்தத் தொலைக்காட்சி, பண்பலை அலைவரிசையைத் திருப்பினாலும், அவன் பாடல்கள். நண்பர் சீமானால் பாடலாசிரியனாக அறிமுகப்படுத்தப்பட்டு, இன்றைக்கு எங்கள் குடும்பத்துக்குப் பெருமை சேர்த்துக்கொண்டு இருக்கும் அந்த இளைஞன் நா.முத்துக்குமார்.
லத்தீன், அமெரிக்க, ருஷ்ய இலக்கியம் தொடங்கி, சங்க கால, புறநானூறு, தொல்காப்பியம், நவீன இலக்கியம் என எதைப்பற்றியும் அட்சரசுத்தமாக கொங்கு தமிழில் பேசும் உதவி இயக்குநர் ஒருவர் வாத்தியாருடன் இருந்தார். தாய்மொழியாம் தமிழில் இன்னும் நாம் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது என்பதைத் தனது அபாரத் தமிழறிவால், இலக்கணப் புலமையால் அவ்வப்போது நமக்கு உணர்த்தும் அந்த நண்பரின் பெயர் மிகப் பொருத்தமாக 'ஞான சம்பந்தன்’. விரைவில் ஒரு வனப் படம் இயக்க இருக்கும் அவர், வாத்தியாரின் மாணவர்களில் மிக மிக முக்கியமான ஒருவர்.
லயோலா கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்ற ஓர் இளைஞன் வாத்தியாரிடம் வந்து இணைந்தான். நுனிநாக்கில் தப்பும் தவறுமாக ஆங்கிலம் பேசுவதை ஒரு பெருமையாகச் செய்து வரும் எத்தனையோ பேருக்கு மத்தியில், முறையாகப் பயின்ற ஆங்கிலத்தை தமிழ்போல் தங்குதடையின்றிப் பேசுபவன். பரபரவென்று இருப்பவன். மனதில் பட்டதை எங்கும், யாரிடமும் பேசக்கூடியவன். கடுமையான உழைப்பாளி.
''அண்ணே, நான் நல்லா மிமிக்ரி பண்ணுவேண்ணே.''
சாலிகிராமத்து டீக்கடை ஒன்றில் அமர்ந்திருந்தபோது அப்படியே நடிகர் கார்த்திக் மாதிரி பேசிக் காட்டி அசத்தினான். வெகு எளிதான கதை ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதைத் தன் அசாதாரணத் திரைக்கதையால் எல்லோரும் ரசிக்கும்வண்ணம், அசரும்வண்ணம் 'பொல்லாதவன்’ என்ற திரைப் படத்தின் மூலம் திரையில் சொன்ன அந்த சகோதரன் 'வெற்றிமாறன்’.
வாத்தியாரின் பள்ளியில் இருந்து வந்துவிட்டாலும், அவரைப் போய்ப் பார்ப்பதில் தொய்வு வந்துவிடாமல் நாங்கள் அனைவருமே நடந்துகொள்வோம். அப்படிப் போய் வரும்போது வட்டத் தொப்பி அணிந்த ஓர் இளைஞனை ஒன்றிரண்டு முறை பார்த்தேன். முகத்திலும் தோற்றத்திலும் ஓர் அறிவுஜீவிக் களை. பிறந்ததில் இருந்தே சிரித்திராத முகமோ என்று தோன்றியது. கொஞ்சம் பயமாகக்கூட இருந்தது.
''டேய் தம்பி. யாருடா இது?''
வெற்றிமாறனிடம் மெதுவாக வினவினேன்.
''இவர் ஒரு ரைட்டர்ணே. ராஜ்குமார் சந்தோஷி கூடல்லாம் வொர்க் பண்ணி இருக்காரு. பேரு ராமசுப்பு.''
கே.விஸ்வநாத், பரதன், மணிரத்னம் போன்றவர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த 'வாத்தியார்’ பாலுமகேந்திரா, 'இந்த இளைஞன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய ஆர்வமாக இருக்கிறேன்’ என்று சொன்னார். அப்படி ஆசீர்வதிக்கப்பட்ட அந்த இளைஞன், 'கற்றது தமிழ்’ திரைப் படத்தின் இயக்குநர் ராம்.
ஃபெடெரிக்கொ ஃபெலினி, ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக், மார்டின் ஸ்கார்சிசி. அப்பாடா, நமக்கும் உலக சினிமாக்காரர்கள் பெயரெல்லாம் தெரிந்திருக்கிறது என்று கொஞ்சமும் சந்தோஷப்பட்டுவிடாமல், 'பில்லி வைல்டர்னு ஒரு ஃபிலிம் மேக்கர்ங்க. அவரோட 123 பாருங்க. அடிமையாயிருவீங்க’. சரி, நமக்கு இன்னொரு பேராச்சு என்று மனதுக்குள் ஸ்ரீராமஜெயம் போல 108 முறை சொல்லிப்பார்த்து மனப்பாடம் செய்து பழகுவதற்குள், அடுத்த குண்டு வந்து விழும். 'ஃப்ரிட்ஸ் லேங்னு ஒரு டைரக்டர்ங்க. ஆஸ்திரியாக்காரர். அவரோட Human Desire பாக்கணும். ஐயையோ... பேஜாராயிடுவீங்க.’
அடுத்தடுத்து அதிரடியாக இப்படிக் குண்டுகளை எறியும் ராஜா கருணாகரன் என்ற அந்த இளைஞன், ஒரு தீவிர சினிமாக் காதலன். விரைவில் ஒரு நடிகர் - இயக்குநரை இயக்க இருக்கும், ஆத்மார்த்தமாக சினிமாவை நேசிக்கும் ராஜா கருணாகரனின் உலக சினிமா அறிவைப் பார்த்து வாத்தியாரே அடிக்கடி வியப்பார்.
புகழ் பெற்ற மலையாளத் திரைக் கதைஆசிரியர் பத்மராஜனின் 'பெருவழியம்பலம்’, அடூர் கோபாலகிருஷ்ணனின் 'எலிப்பத்தாயம்’, எம்.டி.வாசுதேவன் நாயரின் 'நிர்மால்யம்’ திரைக் கதைகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கும் வாத்தியாரின் மற்றுமொரு மாணவன், 'அவள் பெயர் தமிழரசி’ இயக்குநர் சகோதரன் மீரா கதிரவன். எனக்குப் பிறகு வாத்தியாரிடம் இணைந்த இன்னொரு திருநெல்வேலிக்காரனான மீரா கதிரவனின் உருவாக்கத்தில், வாத்தியாரின் 'அழியாத கோலங்கள்’, மற்றும் 'அது ஒரு கனாக் காலம்’ திரைக்கதைகளும் புத்தகங்களாக உருவாகி இருக்கின்றன.
''வேடிக்கை பாக்க வந்த வெள்ளைக்காரப் புள்ளைய, வேலயில்லாத வெட்டிப்பயலுகஒண்ணு சேந்து கற்பழிச்ச குற்றத்துக்குச் சமமானது இல்லையாண்ணே, அது?''
இப்படித் தனது அசாத்தியப் பேச்சுத் திறமையாலும், வெகு இயல்பான கதை சொல்லும் பாணியாலும் கேட்போரைக் கட்டிப் போடும் திறமை வாய்ந்த மாணவன் ஒருவன் வாத்தியாரிடம் பயின்றான். தற்போது வெளியாகி மண் மணக்க ஓடிக்கொண்டு இருக்கும் 'தென் மேற்குப் பருவக் காற்று’ திரைப்படத்தின் இயக்குநர் சீனு ராமசாமிதான் அந்த சுவாரஸ்ய மாணவன்.
வாத்தியாரிடம் நேரடியாகப் பயிலும் வாய்ப்பு கிடைக்காத இயக்குநர்கள் சீமான், பாலாஜி சக்திவேல், அமீர் போன்றவர்களும் அவரை வாத்தியாராக மானசீகமாக நினைத்து வணங்குகிறார்கள். அந்த வகையில், இன்றைய தமிழ் சினிமாவில் நிறைந்து நிற்பவர்கள் எங்கள் வாத்தியாரின் மாணவர்களே!
இவர்கள் போக ஒருவர் உண்டு.
'அவர் இயக்குவதாக இருந்தால் சொல்லுங்கள். உடனே தமிழ்ப் படத்தில் நடிக்கிறேன்’ - மூன்று முறை தேசிய விருதுகள் வாங்கிய நடிகர் மம்மூட்டி சொல்கிறார்.

'இந்த மனிதரைப் பார்த்து வியக்கிறேன். எப்படி எங்கள் பகுதியில் வந்து அப்படி ஒரு படத்தை எடுத்தார்?’ என திரைக்கதையாசிரியரும் இயக்குநருமான அனுராக் காஷ்யப் சொல்கிறார். இப்படி ஒட்டுமொத்த இந்தியத் திரைப்படத் துறையையும் மிரண்டு திரும்பிப் பார்க்கவைத்த எனதருமை நண்பர் பாலா, வாத்தியாரின் முத்தான சொத்து. எங்கள் குடும்பத்தின் பெருமை!
திரைத் துறையில் கால் பதித்து 40 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் 'வீடு’, 'சந்தியாராகம்’ போன்ற ஒப்பற்ற படைப்புகளைப் படைத்த அசல் கலைஞனான எங்கள் வாத்தியார் 'பாலுமகேந்திரா’ அவர்களை ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநராக ஆனவர் என்று சொல்வார்கள். அப்படிச் சொல்பவர்களைப் பார்த்து வாத்தியாரின் மாணவர் களான நாங்கள் மனதுக்குள் சிரித்துக்கொள்வோம். காரணம், வாத்தியாருக்கு ஒளிப்பதிவும் தெரியும் என்பதுதான் உண்மை!
- சுவாசிப்போம்...