மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

இசையமைப்பாளர் Vs பாடகர்!

##~##

மஞ்சுதேவன், மும்பை.

 உத்தரப்பிரதேசத்தில் அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டு அலைக்கழித்ததால், பாம்பாட்டி ஒருவர் பாம்புகளை அலுவலகத்தின் உள்ளேவிட்டு, தன்னுடைய எதிர்ப்பை நூதனமான முறையில் தெரிவித்து இருப்பதுபற்றி?

அதெல்லாம் தவறான அணுகுமுறை! யாரையாவது பாம்புகள் கடித்துத்தொலைத்து, பிறகு அதையே காரணமாகச் சொல்லி, ஒரு மாசம் எல்லோரும் லீவு போட்டு... ஒரேயடியாக வேலையே நடக்காமல் போய்விடும்!

வெ.கா, கடையநல்லூர்.

ஒரு திரைப்படத்தின் குற்றம் குறைகளை, அந்தப் படத்தை இயக்கியவரிடமே, நேர்முகமாகக் கூறினால் அவருக்குத் தர்மசங்கடமாக இருக்காதா?

இடத்தைவிட்டு அவர் போன பிறகு சொல்வதைவிட இது பெட்டர் இல்லையா?!

ஹாய் மதன் கேள்வி - பதில்

ஜி.குப்புசாமி, சங்கராபுரம்.

கல்லணை, தஞ்சை பெரிய கோயில் இவை எல்லாம் பாதுகாப்பாக இருக்கும்போது, முல்லைப் பெரியாறு அணை மட்டும் உடைந்துவிடுமா சார்?

அதானே?! நல்ல பாயின்ட்! ஆனால், பதிலுக்கு 'போன வருஷம் கட்டின பாலமே உடைந்து விழுந்துவிடுகிறது. 100 ஆண்டுகளுக்கு மேலான அணை விழாதா?’ என்று திரும்பிக் கேட்பார்கள்! ஆகவே, இதெல்லாம் வாதம் ஆகாது. சிறந்த வல்லுநர் குழு சோதனை செய்து 'ஓ.கே.’ சொன்னால், அது போதும்!

வே.சித்திரவேலு, கருப்பம்புலம்.

சின்ன பசங்களா இருக்கும்போது நாம் எல்லாம் 'கா’ விட்டுக்குவோமே... ஞாபகம் இருக்கா? அது சரி... இப்ப நீங்க யாருகூடவாவது 'கா’ விட்டுருக்கீங்களா?

இப்ப யாரிடமும் இல்லை. பள்ளிப் பருவத்தில் நானும் சக மாணவனும் 'கா’ விட்டுக்கொண்டோம். அதற்குப் பிறகு, இத்தனை வருஷங்கள் கழித்து ஒரு ஹோட்டலில் அவனைச் சந்திக்க நேர்ந்தது. பேசுவதா, வேண்டாமா என்று ஒரே தயக்கம். பிறகு, நானே போய் 'நாம பழம் விட்டுக்கலாமா?’ என்றேன். அவன் சிரித்துவிட்டான். மனுஷன் இன்னமும் நினைவு வெச்சுக்கிட்டிருக்கான், பாவி!

விஜயலட்சுமி, சென்னை-74.

சிறந்த இசையமைப்பாளர் சிறந்த பாடகராகவோ... சிறந்த பாடகர் சிறந்த

ஹாய் மதன் கேள்வி - பதில்

இசையமைப்பாளராகவோ பரிமளிக்க  (பொதுவாக) முடியாததற்குக் காரணம் என்ன?

இசையமைப்பாளர் - கற்பனைக்கு. பாடகர் - குரல்வளத்துக்கு. 'ஒபேரா’வுக்கு இசையமைப்பவர் ஒருவர். அதில் பாடுகிற ஸொப்ரேனோ (Soprano) இன்னொருவர். இதுதான் உலக நியதி. மொஸார்ட்  ஜான்வில்லியம்ஸ் வரை 'கம்போஸ்’தான் செய்தார்கள். அவர் கள் பாடவில்லை. நம் சினிமாவில்தான் இசையமைப்பாளரே 'பாடுகிறார்’. மியூஸிக் டைரக்டரைவிட மிகச் சிறப்பாகப் பாடுபவர்கள் நிறைய பேர் இருக்கும்போது அவரேபாடுவது தேவைதானா என்பதே என் கேள்வி. இங்கே பல சினிமா இசையமைப்பாளர்கள் பாடிய கர்ணகடூரமான பாடல்களை என்னால் வரிசைப்படுத்த முடியும்!

பொன்விழி, அன்னூர்.

மனிதன் தன் உடலை மறைக்க முதலில் எதைப் பயன்படுத்தினான்?

கை!

கஜுரஹோ தொடர்ச்சி...
ஆச்சர்யமான திட்டம்!

ஜினி முகமதுவின் ஆவேசமான தாக்குதலை 'கஜுரஹோ’ மன்னர் தாங்கா நீண்ட நாட்களுக்குச் சமாளிக்க முடியவில்லை. மத்தியப்பிரதேச எல்லைப்புறக் கோயில்களை எல்லாம் சூறையாடிய கஜினி முகமதுவின் படை, வெற்றியோடு ஊர் திரும்பியது. நல்லகாலமாக... கஜுரஹோ கஜினியின் கண்ணில் படவில்லை!

மன்னர் தாங்காவுக்குப் பிறகு பட்டத்துக்கு வந்த வித்யாதரா, ஒரு லட்சத்து 45 ஆயிரம் தரைப் படை வீரர்கள் மற்றும் 40 ஆயிரம் குதிரைப் படை வீரர்களுடன் கஜினி படையை எதிர்த்து மகா வீரத்துடன் போரிட்டார். கஜினியால் ஈடுகொடுக்க முடியவில்லை. போர் மரபை மீறி கஜினியின் படை இரவுத் தாக்குதலில் இறங்கி, வித்யாதரா படையைத் தீர்த்துக்கட்டியது. இந்த முறையும் எங்கேயோ வடக்கு மூலையில் இருந்த கஜுரஹோ தப்பியது!

ஹாய் மதன் கேள்வி - பதில்

பிறகு, பல முஸ்லிம் மன்னர்கள் தொடர்ந்து படையெடுத்தார்கள். ஆனால், யாருமேகஜுரஹோவை நெருங்கவில்லை!

கடைசியாக, அலாவுதீன் கில்ஜி படை எடுத்தபோது அவருடைய தளபதிகள், சுல்தான் காதில் 'கஜுரஹோ என்கிற ஊரில் ஏராளமான கோயில்களை இந்தியர்கள் கட்டியிருக்கிறார்கள்... பல கோயில்களில் படு ஆபாசமான சிற்பங்கள் சுல்தான்!’ என்று போட்டுக்கொடுக்க 'இவர்கள் உருப்பட மாட்டார்கள்!’ என்று உறுமினார் கில்ஜி. அவருடைய பிரமாண்டமான படை கஜுரஹோ ஊரை நோக்கிக் கிளம்பியது. இந்த முறை கஜுரஹோ... தப்பவில்லை!

கஜுரஹோ ஊருக்குள் புகுந்த அலாவு தீன் கில்ஜியின் படையை, கூட்டணி அமைத்து ராஜபுத்திர மன்னர்கள் வீரத்துடன் எதிர்கொண்டும் பலன் இல்லை. கில்ஜி யின் வீரர்கள் வெற்றிக் களிப்புடன் உள்ளே  புகுந்து ஏராளமான கோயில்களை இடித்துத் தள்ளினார்கள். இந்தியக் கோயில் ஒன்றை இடித்துத் தள்ளவே பல வாரங்கள் பிடிக்கும் அல்லவா?! எத்தனை கோயில்களைத்தான் இடிக்க முடியும்? துவண்டுபோன கில்ஜி படை 'சரி, முதலில் நாம் கொள்ளை அடிப்பதற்குத்தானே வந்தோம்!’ என்று முடிவுகட்டி சூறையாடுவதில் இறங் கினார்கள். இடிந்துபோன ராஜபுத்திர மன்னர்கள் ஏராளமான செல்வத்தை யானைகளின் மீது ஏற்றி (யானைகளையும் சேர்த்து) கில்ஜிக்குக் கப்பமாகக் கட்டி... பல கோயில்களைக் காப்பாற்றினார்கள். பிறகு, சண்டேள ராஜபுத்திர வம்சம் துவண்டு போய்... வறுமையில் வீழ்ந்தது என்றுகூடச் சொல்லலாம். கடைசியாக ஆட்சிபுரிந்த இரண்டாம் வீரவர்மன் வாழ்ந்தது ஏழ்மையான ஜமீன்தார் வாழ்க்கை!

இனி, 100 பேர் அடங்கிய ஒரு எதிரிப் படை வந்தால்கூட மிச்சம் இருந்த கஜுரஹோவை மன்னரால் காப்பாற்ற முடியாது!

ஆனால்... ஒரு ஆச்சர்யமான, யாரும் எதிர்பாராத ஒரு திட்டத்தைச் செயல்படுத்தினார் அந்தக் கடைசி மன்னர். கஜுரஹோவை நமக்காகக் காப்பாற்றிய திட்டம் அது!

- தொடரும்...