மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 29

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

இப்போது நரை ஓடி, காய்த்த கைகளில் பிள்ளைகளை இழுத்துக்கொண்டு விசேஷ வீடுகளிலும் எழவு வீடுகளிலும் காணக் கிடைக்கிறார்கள் அத்தைகள்.

ரு வேலையாக, கால் டாக்ஸி எடுத்துக்கொண்டு மதுராந்தகம் வரை போயிருந்தேன்!

 வேலை முடித்து வருகிற கேப்பில் டிரைவரிடம் பழ வாசனை. ''அய்யய்யோ தலைவா...  நீங்க கட் பண்ணிட்டுக் கௌம்புங்க. நான் பஸ்ல போயிக்கிறேன்!'' என்றேன். அவர் பதற்றமாகி, ''சார்... சார்... சிக்ஸ்டிதான் சார். இங்க பாருங்க ஸ்டாக் வெச்சுட்டேன். ப்ளீஸ் உக்காருங்க  சார்!'' எனக் கெஞ்சி உட்காரவைத்தார். ஈ.சி.ஆரைப் பிடித்ததும் அவர் ஒரு சி.டி சொருகித் தட்ட, 'ஆண்டவனைப் பாக்கணும்... அவனுக்கும் ஊத்தணும்...’ பாடல் ஒலித்தது. நான் போனில் பிஸியாகிவிட்டேன்.

மாயாஜாலைக் கடந்ததும் கவனித்தால், அந்தப்  பாடலே ஒலித்துக்கொண்டு இருந்தது. ''ஏங்க... பாட்டை மாத்துங்க!'' என்றால், ''இல்ல சார்... சி.டி முழுக்க இந்த ஒரு பாட்டைத்தான் பதிஞ்சுவெச்சுருக்கேன்!'' என்றபடி மேலும் ரெண்டு பாயின்ட் சவுண்டைக் கூட்டினான் தலைவன். அடையாறு வருகிற வரை அதே பாடல்தான் ரிப்பீட். வீட்டுக்குள் சென்று பணம் எடுத்து வரும் இடைவெளியில் அவர் குவார்ட்டரை முடித்திருந்தார். காசை வாங்கிக்கொண்டு, என் தோளைப் பிடித்து அழுத்தி இழுத்து, ''ராஜ்ஜியம் இருக்கு... ஒரு ராணி இல்லையே...'' என்று சத்தமாகப் பாடிவிட்டு போயே போய்விட்டார்!

வந்து படுத்தால், மண்டை முழுக்க அந்தப் பாட்டும் அவர் முகமுமே கொலாஜ் ஆகிக்கொண்டு இருந்தது. அவர் யார்... என்ன... எதுவுமே தெரியாது. ஆனால், அவருக்கும் அந்தப் பாட்டுக்குமான உறவு, கடைசியாகப் பாடிவிட்டுப்போன அந்த வரிகள், அவரைப் பற்றி ஏதேதோ கதைகளைச் சொல்லின.

வட்டியும் முதலும் - 29

நினைக்கும்போதே பட்டென்று திறந்த சாயங்கால ஜன்னலில் இளங்கோ அண்ண னின் முகம் தோன்றுகிறது. கூடவே, மணி மொழி அக்காவின் முகம் பரவி, 'மயங்கி னேன்... சொல்லத் தயங்கினேன்’ பாடல் ஒலிக்கத் துவங்குகிறது. 20 வருடங்கள் இருக்கும். ஒரு 'டி 90’ கேசட் முழுக்க 'மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்’ பாடலைப் பதிந்துவைத்து, சாயங்காலம் ஆனால் போட்டுவிடுவான் இளங்கோ அண்ணன்.

அந்த நேரத்தில் அம்சாத்தா வீட்டுக் கொல்லையில் ஆட்டுக்கல்லில் மாவாட்ட வந்திருக்கும் அக்கா. 'கம்னேட்டி... அத அமுத்துரா’ என ஆத்தா திட்டத் திட்ட, அதே பாட்டு மறுபடி மறுபடி ஒலித்துக்கொண்டு இருக்கும். கைலி, முண்டா பனியனோடு துண்டால் முதுகை முறுக்கிக்கொண்டு, பாடல் பின்னணியில் வேலிப்படலோரம் அவன் நிற்கிற காட்சி புகைப்படம்போல் இருக்கிறது இப்போதும். நெடுந்தூர ஊர் ஒன்றில் அக்கா வாக்கப்பட்டுப்போன நாளில் இருந்துதான் அந்தப் பாட்டுச் சத்தம் நின்றிருக்கக்கூடும்!

அதன் பிறகு, பூண்டி காலேஜில் சேர்ந்திருந்த ரவி மாமா, வீட்டில் நேஷனல் டேப் ரெக்கார்டர் வாங்கிவைத்து, பாட்டுப் போட ஆரம்பித்தார். 'கண்மணி நீ வரக் காத்திருந்தேன், ஜன்னலில் பூத்திருந்தேன்’ அவரது ஃபேவரைட். கொல்லையில், எறும்புகள் ஊரும் செம்பருத்திச் செடியின் அடியில், சீயக்காய் மணக்க ஈருளியில் பேன் பார்த்தபடி கிசுகிசுத்துக்கொண்டு இருக்கும் அத்தைகளின் மேல் அந்தப் பாடல் ஒலிக்கும்.

கோகுல் சாண்டல் பவுடர், ரோஸ் கலர் ரிப்பன், மருதாணி காயும் விரல்கள், காற்றில் உருளும் கொத்து முடி, பித்த வெடிப்புப் பாதம், ஆதுரம் ததும்பும் ஸ்பரிசங்கள்... இவ்வளவும் எழுகிறது இந்தப் பாட்டுக்குப் பின்னால். 'ஈரமான ரோஜாவே, என்னைப் பார்த்து மூடாதே’ பாடலைப் பிரபலப்படுத்தியது கட்டாரி மாமா. 'உன் வாசலில் என்னைக் கோலம் இடு, இல்லை என்றால் ஒரு சாபம் இடு’ என்ற வரிகள் ஒலிக்கும்போது 'மாலைமதி’க்குள் லெட்டர் வைத்துக்கொண்டு, அத்தைகளின், அக்காக்களின் வீடுகளுக்குப் போன தேவதூதர்களில் நானும் ஒருவன். யாரும் அறியாத் தனிமை களில், இதயத்தில் இருந்து மெல்லிய குரலில் அக்காக்கள் பாடுவதைக் கேட்டுஇருக்கிறீர்களா? அது... ஏக்கமும் பிரியமும் ததும்பும் எல்லை இல்லாத ஆத்மார்த்தம்.

இப்போது நரை ஓடி, காய்த்த கைகளில் பிள்ளைகளை இழுத்துக்கொண்டு விசேஷ வீடுகளிலும் எழவு வீடுகளிலும் காணக் கிடைக்கிறார்கள் அத்தைகள். செம்பருத் திச் செடிகள் முளைத்துக்கிடந்த இடத்தில் பாத்ரூம் கட்டியாயிற்று. புழக்கடையில் ஓடும் பாத்திரம் கழுவிய தண்ணீரைப் போல, காலம் ஓடிவிட்டது. ஆனால், இன்னும் சில பாடல்களில்தான் அத்தை கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்... தேவதைகளாய்... சிறு தெய்வங்களாய்... அப்பழுக்கற்ற பிராயத்தின் பேரழகி களாய்!

'ஒலியும் ஒளியும்’ பார்க்க ஊரே திருவிழா மாதிரி ஆயத்தமாகும் காலம் இருந்ததே... வெள்ளிக் கிழமைதான் டி.வி-யில் அப்போது புதுப் பாட்டு கேட்க முடியும்.
வட்டியும் முதலும் - 29

முபாரக் அலி வீட்டில் அடித்துப் பிடித்து ஆளுக்கு நாலணா கொடுத்துக் கூடுவோம். அண்ணன்கள் ஆளுக்கொரு பேப்பர் கொண்டுவந்து, ஒளிபரப்பாகிற பாடல்களைக் குறித்துக்கொண்டு, கொரடாச்சேரி போய் ரெக்கார்ட் பண்ணிக் கொண்டுவருவார்கள்.

அப்போது ஒரு சித்தப்பா கொரடாச்சேரியில் ப்ரியா என்ற பெண்ணைக் காதலித்தார். ஒரு ஹெட்மாஸ்டரின் மகள் அந்த ப்ரியா. சித்தப்பா கொரடாச்சேரியில் ரெக்கார்டிங் கடை நடத்திய அன்பரை நட்பு பிடித்தார். 'ஓ... ப்ரியா ப்ரியா’, 'ப்ரியா ப்ரியா என் ப்ரியா’ என்று ப்ரியா என்கிற பெயர் வருகிற பாடல்களாகத் தேர்ந்தெடுத்து, ஒரு கேசட்டில் பதிவு பண்ணினார். அந்தப் பெண் கிராஸ் ஆகிற நேரங்களில் 'ப்ரியா பாடல்’களைத் தட்டிவிட்டு, காலாட்டியபடி கோல்ட் ஸ்பாட் குடித்துக்கொண்டு இருப்பார் சித்தப்பா. ஆறேழு மாதங்களாக ரோட்டிலும் வீட்டிலுமாக இதே ரப்சர்.

பாட்டு போடும்போது அந்தப் பெண் மட்டும்தானா கடந்துபோகும்? ஹெட் மாஸ்டர் தகப்பன், மாமன், பெரியப்பன் களை எல்லாம் 'ப்ரியா பாட்டு’ கடுப்பேற்றி இருக்கிறது. ஒரு விசேஷ தினத்தில், வெட்டாத்துப் பாலத்தில் வைத்து சித்தப்பாவை வெளுத்தெடுத்தது அந்தப் பெண்ணின் உறவுக்காரக் கும்பல். அடுத்த வாரமே அந்தப் பெண்ணை மன்னார்குடிக்கு ஷிஃப்ட் பண்ணினார்கள். கையில் மாவுக்கட்டுடன் அந்தச் சித்தப்பா, இளையராஜா சிரிக்கும் ரெக்கார்டிங் கடையில் 'ஓ பாப்பா லாலி’ ஒலிக்க உட்கார்ந்திருந்த காட்சி ஓர் ஈஸ்ட் மென் கலர் காவியம்!

இப்போது யாரைப் பார்த்தாலும் எஃப்.எம்-களிலும் சேனல்களிலும் பாடல்களை டெடிகேட் பண்ணிக்கொண்டே இருக்கிறார்கள். ' 'டெடிகேட்’ என்பது எவ்வளவு பெரிய வார்த்தை? அதை இவ்வளவு சாதாரணமாக அடித்துத் துவைக்கிறார்களே’ என எனக்கே கோபம் இருந்தது. இப்போது யோசித்துப்பார்த்தால், 'டெடிகேட்’தான் நமக்கும் இசைக்கும் பொருத்தமான இணைப்பு வார்த்தை என்று படுகிறது.

ஆடிக் காத்துக்கு நொச்சிப் பழங்கள் கொட்டிக்கொண்டே இருக்கும் கோடைகாலச் சாலைகள் மாதிரி, ஒரே பாட்டில் குப்பென்ற ஞாபக வாசத்தால் நிறைந்துவிடுகிறதே இந்த மனம்... எப்படி? பாடல்கள் தரும் நினைவுகளாலும் கண்ணீ ராலும் கருணையாலும் ஏகாந்தத்தாலும் தானே இயங்குகிறது நம் ஒவ்வொருவருக்கு மான உலகம்? 'தாயின் மணிக்கொடிபாரீர்’ எனச் செம்பட்டைத் தலை சிலுப்பிச் சிலுப்பி பிரேயரில் பாடும் லீலா, சடங்கான பிறகு பாடுவதை நிறுத்திவிட்டாள். சர்ச்சில் கூடப் பாடுவது இல்லை. ஆனால், அவளுக் குப் பாடல்கள் மேல் அவ்வளவு பிரியம். எப்போது பார்த்தாலும் பாட்டுப் புத்தகங் களைக் கொண்டுவந்து, சர்ச் திண்டில் வைத்து பாடிக் காட்டிக்கொண்டே இருக் கும் முரளியோடு வாழ்வதற்காகத்தான் அவள் ஓடிப்போனாள்.

'ஒரு ஜீவன் அழைத்தது’ பாடலில், 'இனி எனக்காக அழ வேண்டாம்’ என அவன் இழுத்துப் பாடும்போது... 'யேசப்பா...’ என ஒவ்வொரு முறையும் லீலா தன் நெஞ்சில் கை வைத்துக்கொள்வது நினைவில் இறகாகிறது. அவர்கள் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. குழந்தைகள் நிறைந்த, மேரி மாதா சிலை வைத்து சாமந்திப்பூ பூத்த வீடு ஒன்றில் இப்போதும் 'பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ’ பாடலை அவன் அவளுக்காகப் பாடிக்கொண்டு இருந்தால்... எவ்வளவு அழகாக இருக்கும்?!

எட்டாவது படிக்கும்போது ஆண்டு விழாவில் மகேஸ்வரியோடு சேர்ந்து 'ஆட்டமா தேரோட்டமா’ பாடலுக்கு நெற்றியில் ரிப்பன் கட்டி, லிப்ஸ்டிக் போட்டு டான்ஸ் ஆடினேன். ஆடி முடித்துக் கை கோத்தபடி கடைசியாக போட்டோவுக்கு நிற்க வேண்டும். அந்தப் பிள்ளை கையை நீட்டியபடி வியர்வை வழிய நிற்க, நான் கூச்சத்தில் ஓடிப்போய்ப் பதுங்கிக்கொண் டேன். அது எனக்கு ஒரு வருஷம் ஜூனியர். எட்டாவது முடிந்து வேறு ஸ்கூலுக்குப் போன பிறகு ஒருநாள், குடவாசலில் பஸ்ஸுக்கு நிற்கும்போது பக்கத்தில் இருக்கும் மகேஸ்வரி வீட்டுக்குத் தண்ணி குடிக்கப் போனோம். திண்ணையில் நாங்கள் உட்கார்ந்து இருக்க, உள்ளே போய் டேப்பில் 'ஆட்டமா தேரோட்டமா’ பாட்டைப் போட்டுவிட்டு, மூச்சிரைக்க மகேஸ்வரி தண்ணீர் கொண்டுவந்து நீட்டியதை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது.

கோயம்புத்தூரில் இருந்து கருமத்தம்பட்டிக்கு வரும் கல்லூரிப் பேருந்தில் 'என்னைத் தாலாட்ட வருவாளா’ பாட்டை மட்டுமே போடவைப்பான் பிரசாத். அதுதான் விஜயலட்சுமிக்குப் பிடித்த பாட்டு. எங்கள் வகுப்பில் 20 பேர் விஜி மேல் காதல்வயப்பட்டு இருந்தார்கள். அந்த நேரத்தில் அத்தனை பயல்களும் 'என்னைத் தாலாட்ட வருவாளா’ எனப் பாடிக்கொண்டே திரிந்தார்கள். போன வருடம் கோயம்புத்தூர் போனபோது நண்பர்களோடு ஒரு கல்லூரிப் பேருந்தில் போனேன். 'மன்னிப்பாயா... மன்னிப்பாயா’ பாடல் திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டு இருந்தது. பாடல்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன...  காதலும் பிரியமும் ஒருபோதும் மாறுவது இல்லை.

'நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’ பாடல் கீர்த்தனாவுக்கும் எனக்குமான ரிங்டோனாக வெகு நாட்கள் இருந்தது. இப்போதும் எங்கேனும் அந்தப் பாடல் வழிந் தால், தொண்டைக்குள் பபிள்ஸ் பறக்கின் றன. முதுகில் வரி எழுதிக் கண்டுபிடிக்கும் பால்யத்தின் விளையாட்டை மறுபடி காதலில் ஆடிப்பார்க்கும்போது பாடல்கள் எவ்வளவு பெரிய காவியங்களாக மாறி விடுகின்றன? பாடல்கள் வெறும் பாடல்கள் மட்டுமே இல்லை.

ராமநாதபுரத்தில் அப்பாவோடு முதல்முறையாக தியேட்ட ருக்குப் போய் 'கடலோரக் கவிதைகள்’ படம் பார்த்துவிட்டு வந்து பஸ் ஸ்டாண் டில் படுத்திருந்தபோது, 'கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே’ பாடலை மாமாவும் ஒரு போலீஸ்காரரும் மாறி மாறிப் பாடிக்கொண்டு இருந்தது, இந்த நொடி வரை பிசிறு இல்லாமல் நினை விருக்கிறதே எப்படி?

நண்பன் குணா, மனைவி கர்ப்பமாக இருந்தபோது எப்போதும் வயிற்றுக்குப் பக்கத்தில் இளையராஜாவின் 'ஹவ் டு நேம் இட்’டையும் 'நத்திங் பட் விண்ட்’டையும் 'ரமண மாலை’யையும் வைத்துக்கொண்டே உட்கார்ந்திருந்தான். பெண் குழந்தை பிறந்தபோது, குடும்பமே கூடி அங்கலாய்த்தபோதும் ஜென்ஸி எனப் பெயர் வைத்து அவன் கொஞ்சியது எவ்வளவு பெரிய பிரியம்!

'தாழம்பூவே கண்ணுறங்கு...’ பாடலைத் தேடித் தேடிப் பிடித்து ரிங்டோனாக வைத்துக்கொண்ட கீதக்குமாரி சிஸ்டருக்கு 40 வயதாகியும் ஏன் இன்னும் கல்யாணம் ஆகவில்லை? ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு தஞ்சாவூர் ஞானம் ஒயின்ஸ் வாசலில் எப்போது பார்த்தாலும் 'உலவும் தென்றல் காற்றினிலே’ பாட்டைப் பாடிக்கொண்டு காசு கேட்கும் பெரியவர் எங்கே போனார்?  ஒவ்வொரு முறையும் 'அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு’ பாடலை கே.ஏ.குணசேகரன் குரூப்பில் அந்தப் பெண் பாடி முடிக்கும்போது எல்லாம் அழுகை வருகிறதே... ஏன்? 'சம்மதமா சம்மதமா... நீ இந்துவென்றால் சொல் சம்மதமா?’ பாடலை கோவன் பாடிக் கேட்கும்போது எல்லாம், உதிரம் சூடாகி இன்னும் கொஞ்சம் மனுஷனாகிறோமே... எப்படி?

ஒரு நள்ளிரவில் பேசின் பிரிட்ஜ் பக்கம், குடிசை வாசலில் இறந்துகிடந்த ஒரு அம்மாவுக்கு முன் பறையடித்தபடி 'மரண கானா’ விஜி பாடிய, 'இந்த ஊத்த உடம்பு மனுஷனுக்கு’ பாட்டை ஜென்ம ஜென்மத்துக்கும் மறக்க முடியுமா? காசி ஆனந்தனின் 'அழகான அந்தப் பனைமரம்’ பாடலை தேனிசை செல்லப்பா குரலில் கேட்கும்போதெல்லாம் ஒரு நூற் றாண்டு உயிர்க்கிற மாதிரி இருக்கிறதே!

சிரிப்பு, அழுகை, பிறப்பு, இறப்பு எனப் பாடல்களாலேயே ஆகிவிட்டது இந்த வாழ்க்கை. அதுவும் நாலு தலைமுறைக் கண்ணீரையும் புன்னகையையும் இந்தப் படுபாவி இளையராஜா எடுத்துக் கொண்டார். நள்ளிரவுக்கு மேல் 'நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா’ பாடலைக் கேட்கும்போது இன்ப - துன்பம், வன்மம்  எல்லாம் கரைந்து, மனம் ஒரு விண்மீனாகி எல்லையற்ற பெருவெளியில் ஒளிர்ந்து ஒளிர்ந்து உதிர்கிறது. எத்தனை எத்தனை பாடல்கள்... பேரன்பின் கண்ணீரில் ஆன்மா கரையும் தருணத்தைத் தாய்மையும், காதலும், இசையும்தானே தர முடியும்?

பாஸ்கர் சக்தி சார் ஒரு பாட்டு டிக்ஷனரி. ஒரு கார் பயணத்தில், 'பூ வண்ணம்போல நெஞ்சம்’ பாடலைக் கேட்டு, ''என்னங்க இந்த ராஜா...' என அசந்தபோது, ''இல்ல முருகன்... இதுக்கு மியூஸிக் சலீல் சௌத்ரி'' என்றார் பாஸ்கர் சார். 'காதல் வைபோகமே’ பாட்டு வந்தபோது ''இது கங்கை அமரன்!'' என்றபடி ஒரு லிஸ்ட்டே சொன்னார். 'மேகமே மேகமே’ பாட்டுக்கு இசை சங்கர் கணேஷ் என்று உங்களுக்குத் தெரியுமா? நமக்கு எல்லாமே இளையராஜாதான்! அலைகடலும் அவரே ஆழ்கடலும் அவரே என்றான பின், கரைகளும் நுரைகளும் என்னவாகும்? எனது 20 வருடங்களை நடத்தியதும் ராஜாதான். அவரைப்பற்றி எழுதவே போரடிக்கிறது. காதலியிடம் முத்தம் கேட்பதைப் போல... மனைவியிடம் திட்டு வாங்குவதைப் போல... அம்மாவைப் பற்றி கவிதை எழுதுவதைப் போல!

பாடல்கள் போலவே எல்லோருக்குள்ளும் ஒரு பாடகன் எப்போதும் துள்ளிக்கொண்டு இருக்கிறான். சிறுவயதில் திருவிழாவில் அண்ணன்கள் மைக் ஏரியாவைக் குத்தகைக்கு எடுத்துக்கொள்ளும்போது, அவர்கள் இல்லாத கேப்பில் 'அல்லோ அல்லோ... பொங்கல் வைக்க இருப்பதால் அனைவரும் வருக!’ எனச் சொல்லிவிட்டு ஓடிவிடுகிற ஆசை எல்லோருக்குள்ளும் இருக்கிறது. கண்ணதாசனின் வரிகளையே வாழ்க்கையாக்கிக்கொண்டவர்கள்... எம்.ஜி.ஆரின் பாடல்களையே வெறியாக, வேதமாக எடுத்துக்கொண்டவர்கள்... டி.எம்.எஸ்.போல, எஸ்.பி.பி.போல லோக்கல் ஆர்கெஸ்ட்ராக்களில் பாடிக்கொண்டு அந்த மகிழ்ச்சியிலேயே வாழ்ந்து முடித்தவர் கள்... எவ்வளவு பேர்?

பறவைகள் தடயங்களே இல்லாமல் போய்விடுகின்றன. அவற்றின் எச்சங்கள் மரங்களாவதைப் போலத்தான் இந்த இசையும் பாடல்களும். நேற்று சந்தோஷமாயிருந்த மனம் இன்று சோகமாகிவிட்டது. ஏதோ மனச் சோர்வு. பகிர முடியாத தனிமை. பயம். நள்ளிரவைத் தாண்டியும் உறக்கம் இல்லாமல் எழுந்து சிஸ்டத்தில் பாட்டு வைக்கிறேன். பொசுக்கென்று நெஞ்சில் ஏதோ நிம்மதி பூக்கிறது. ஜன்னலில் நிலா இறங்கும்போது இந்தப் பாட்டில் தூங்க ஆரம்பிக்கிறேன்...

'துன்பம் இனியில்லை சோர்வில்லை தோற்பில்லை...’

(போட்டு வாங்குவோம்...)