மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 30

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

யோசித்துப்பார்த்தால் காத்திருப்புதான் இந்த வாழ்வின் மிகப் பெரிய சுவாரஸ்யமும் துயரமும் எனத் தோன்றுகிறது. ஒரு தாய்க்குப் பிரசவ வலி எடுக்கும் கணத்தில் இருந்தே தொடங்குகிறது ஒவ்வோர் உயிருக்குமான காத்திருப்பு.

போன வாரம் கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்துக்குப் போயிருந்தேன்!

 மனநிலை தவறி அங்கே இருக்கும் நண்பர் ஒருவரின் அப்பாவைப் பார்ப்பதற் காகப் போனோம். ஆறேழு மாதங்களுக்கு முன்பு அவரை நாங்கள்தான் அங்கே கொண்டுபோய் சேர்த்தோம். அவருக்கு இப்படி ஆகி ஒரு வருடத்துக்கும் மேலாகி விட்டது. நள்ளிரவில் எழுந்து, ''டிரெயின் வருது... டிரெயின் வருது...'' எனக் கத்தியபடி தெருவுக்கு ஓடிவிடுகிறார். ஏதேதோ பேசிக் கொண்டு தெரு நாய்களோடு சண்டையிடுகிறார். வீட்டுக்குக் கூப்பிடும் மனைவியைப் பிராண்டிவைக்கிறார். திடுதிப்பென்று தலையைப் பிடித்துக்கொண்டு பெரும் கூச்சலிடுகிறார்.

வட்டியும் முதலும் - 30

ஒருமுறை இப்படி நள்ளிரவில் எழுந்து போய், பக்கத்துத் தெருவில் தோண்டி வைத்திருந்த குழிக்குள் விழுந்து பலத்த காயம்பட்டார். அக்கம்பக்கத்து ஃப்ளாட் காரர்கள் தங்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என மொத்தமாகப் புகார் கொடுத்த பிறகுதான் அவரை கீழ்ப் பாக்கத்துக்குக் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தோம். போன வாரம் போயிருந்தபோது அவருக்குக் கொஞ்சம் தேவலாம் எனப் பட்டது. கொண்டுபோயிருந்த பிஸ்கட் பாக்கெட்டைப் பாதி தின்று, மீதியை வெளியே விட்டெறிந்துவிட்டு சாதுவாக உட்கார்ந்து இருந்தார். மீன் குழம்பு சாப் பாடு கொண்டுவந்திருந்த மனைவியைப் பார்த்துச் சின்னதாகச் சிரித்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டார்.

''அவரைப் பார்த்தா இப்போ கொஞ்சம் தெளிச்சியா இருக்கே சார்... அழைச்சுட்டுப் போயிரலாமா?'' என டாக்டரிடம் கேட் டார் நண்பரின் அம்மா. அதற்கு அந்த டாக்டர், ''இல்லைங்க... அவர் இன்னும் முழுசாக் குணமாகலை. ராத்திரிதான் அட்ராசிட்டி பண்றார். நிச்சயமா இப்போ கொஞ்சம் முன்னேற்றம் இருக்குதான். இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண் ணுங்க!'' என்றபடி போய்விட்டார். அம்மாவின் முகத்தைப் பார்த்தேன். அதில் உறைந்திருந்தது யுகங்களின் காத்திருப்பு.

ஒரு கணம் மனம் தாள முடியாத துயரத்தில் அமிழ்ந்தது. ''கொஞ்ச நாள் வெயிட் பண் ணுங்க...'' என்ற டாக்டரின் குரல் இப்போது கூட ஒலிக்கிறது. அங்கு இருந்து திரும்பும் போது சொல்ல முடியாத உணர்வு நிலை. ஏதேதோ காரணங்களுக்காக மனநிலைப் பிறழ்ந்து, தன்னிலை அவிழ்ந்து இங்கே கிடக்கும் ஜீவன்களுக்காக, எத்தனை ஆத்மாக்கள் வெளியே காத்திருக்கும்? தனக்குத்தானே என்னென்னவோ பேசிக் கொண்டு, காலத்தை எட்டி உதைத்தபடி திரியும் இவர்கள் ஞாபகத்தில் எந்தெந்த முகங்கள் இருக்கும்? ஒரு தாய்மை... ஒரு காதல்... ஒரு நட்பு... ஒரு சகோதரம்... இவர்களுக்காக இதயம் துடிக்க எங்கோ காத்திருக்கும் என்பதை நினைக்கும்போதே கலங்குகிறது!

யோசித்துப்பார்த்தால் காத்திருப்புதான் இந்த வாழ்வின் மிகப் பெரிய சுவாரஸ்யமும் துயரமும் எனத் தோன்றுகிறது. ஒரு தாய்க்குப் பிரசவ வலி எடுக்கும் கணத்தில் இருந்தே தொடங்குகிறது ஒவ்வோர் உயிருக்குமான காத்திருப்பு.

நார்மலா... சிசேரியனா? ஆணா... பெண்ணா? அலைபாயும் உறவுகளின் காத்திருப்பில் இருந்துதானே ஆரம்பிக்கிறது நமக்கான உலகம். கருவின் இருளில் இருந்து பூமியின்

முதல் ஒளிக்கீற்றை வாங்கும் நொடிக்குத்தானே பத்து மாதம் காத்திருந்தோம்?

''அடங்க... கொற மாசத்துல பொறந்தவனா நீயி... பின்னால போய்யா'' - சென்ட்ரல் ஸ்டேஷனில், ஆபீஸ் அவர்ஸில் டிக்கெட்டுக்குக் காத்திருக்கும் வரிசையில் புகுந்துவிட்ட ஒருவனை மொத்தப் பேரும் கொந்தளித்துப் பின்னால் தள்ளுகிறார்கள். ''இந்த எழவுக்குத்தானய்யா ஓட்ட மாத்திக் குத்துனோம். எப்பய்யா கரன்டு வரும்?'' - நின்றுவிட்ட மோட்டார் செட்டைப் பார்த்தபடி, வரப்பில் தவித்துக் காத்திருக்கிறார் ஒரு விவசாயி. ''இன்னும் ஆறு மாசத்துல எல்லாம் செட்டில் ஆகிரும் குட்டி. உடனே, மேரேஜ் பண்ணிக்கலாம்''- யாரோ ஒரு காதலன், காதலியைச் சமாதானப்படுத்திக்கொண்டு இருக்கிறான். ''கம்பெனில வேல பார்த்துட்டு இருக்கும் போது டவர்லேருந்து தவறி வுழுந்துட் டானாம்... அங்க மலேசியா கவர்மென்ட்ல பேசித்தான் வாங்கணுமாம். பாடி வர்றதுக்கு நாலு நாள் ஆகுமாம்பா''- தூர தேசத்தில் செத்துப்போய்விட்ட மகனின் சடலத்துக்காக, தஞ்சாவூர் பக்கம் குக்கிராமத்தில் காத்திருக்கிறது ஓர் ஏழைப்பட்ட குடும்பம்.

''ரெண்டு மூணு நா லீவு கெடைச்சா... ஊர்ல புள்ளைய போய் பாத்துட்டு வந்துருவேன்'' - பீகார் பக்கம் போர்வெல் கம்பெனிக்கு வேலைக்குப் போன புருஷனின் போனுக்காக அனுதினமும் காத்திருக்கிறாள் மனைவி. ''ஜீவாவுக்குக் கதை சொல்லிட்டேன் பாஸ்... சொல் றேன்னு சொல்லியிருக்கார்'' - பதற்ற மாக தம் அடித்தபடி சொல்கிறான் ஓர் உதவி இயக்குநர் நண்பன். ''ஆகவே, தலைவர் வந்துகொண்டு இருக்கிறார்...'' தலைவர்களைப் பார்க்க இப்போதும் இரவுகளில் ஏதேனும் ஒரு முச்சந்தியில் காத்துக் கிடக்கிறது ஜனக் கூட்டம்.

''கடவுள் வருவார்... நம்மை எல்லாம் காக்க வருவார்'' - மொட்டை மாடிகளில் ஷாமியானா போட்டு பேசிக்கொண்டே இருக்கிறார்கள் மத போதகர்கள். ''அடுத்த மாசம் வேஜ்போர்டுல ஸ்கேல் இன்க்ரீஸ் பண்ணிருவாங்கம்மா...'', ''புரட்சி வரும் தோழர்...'', ''சனிக்கெழம தண்ணி லேட்டாதான் வருமாம்...'', ''எதாவது ஒரு முடிவை சொல்லுடி...'', ''அச்சச்சோ... பொசுக்குனு தொடரும் போட்டானே...'', ''திரும்பவும் நாங்க சேருவோம்னு நம்பிக்கை இருக்கு சார்...'', ''இப்பிடிப் பண்ணுவானு நெனைக்கலைங்க... என் பையனை எப்பிடியாவது கண்டுபுடிச்சுக் குடுங்களேன்'', ''உங்க கடக ராசிக்குக் கூடிய சீக்கிரமே நெனைச்சது கைகூடுற கட்டம் இருக்கு...'', ''....த்தா.... ஜெயிச்சுட்டு வந்து உன் முன்னாடி நிக்கிறேன்டா...'', ''மாப்ள வூட்ல போன் பண்றேன்னு சொல்லியிருக்காங்க...'', ''டைவர்ஸ் அப்ளை பண்ணிட்டு வெயிட் பண்றோம் நண்பா...'', ''நீயும் பணம் அனுப்புவ... ஒரு பொடவ எடுத்துத் தருவனு பாத்தேன். கோடித் துணிதான் கொண்டுவருவபோலயிருக்கு...'', ''அழாதீங்கம்மா... ஐ.சி.யூ. கொண்டு போறோம். இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது...'' அய்யோ சாமி... எத்தனை எத்தனை காத்திருப்புகள் இந்த வாழ்க்கையில்? எங்கெங்கும் எல்லோரும் எதற்காகவேனும் காத்துக்கொண்டே இருக்கிறோம். உறவுகள், வியாபாரம், வேலைகள்... எல்லாமே காத்திருப்புகளாலேயே நிறைந்திருக்கின்றன.  

எட்டு வருடங்களுக்கு முன்பு ஒரு ராத்திரி, கோடம்பாக்கம் ஹவுஸிங் போர்டு லேண்ட் லைனுக்கு வீட்டில் இருந்து போன். ''அய்யா... அப்பாவுக்கு ஒடம்பு சரியில்ல'' என அழுதது அம்மா. ''ஒடனே கௌம்பி வாங்கடா... ஒங்களப் பாக்க ணும்...'' என்றார் அப்பா. என்னவோ உள்மனசு திக்கென்றது. அப்போதே அப்பாவைப் பார்க்க வேண்டும்போல் இருந்தது. மருந்து வாசத்தோடு, தூங்கிவிட்டோம் என நினைத்து, தடவிக் கொடுக்கும் மரமரத்த கையை உடனே பற்ற வேண்டும் என தவித்தது மனசு. ஆம்னி பஸ்ஸில் அவரை நினைத்துக்கொண்டே போன அந்தப் பயணம் பயங்கரமானது. வீட்டில் அவர் பிணமாகக் கிடத்தப்பட்டு  இருக்கும் ஒரு காட்சி மறுபடி மறுபடி தோன்ற, ''மகமாயி... சாமீ...'' என முணுமுணுத்துக்கொண்டே விடிந்த இரவு.

பழங்கள் வாங்கிக்கொண்டு கும்பகோணம் பஸ் ஸ்டாண்டில் நின்றபோது மனம் கொஞ்சம் தெளிந்திருந்தது. ஊருக்குப் போய் தெருமுக்கில் திரும்பும்போதே வீட்டில் கூட்டம் கூடியிருந்தது. ''தஞ்சாவூர் பெரியாஸ்பத்திரிலதான்... இன்னும் பாடியைத் தரல...'' என்றார் மாமா. ஓடிவந்து என் கையை இறுக்கிக்கொண்டு விம்மியது விமலா அத்தை. அப்பாவின் 'பாடி’க்காகக் காத்திருந்த அந்தத்  தருணங் கள் வார்த்தைகள் அற்றவை. எல்லோரும் வந்துவிட்டார்கள். நேரமும் ஆகிவிட்டது. பொய்யாமொழி மாமா மட்டும் வரவில்லை. ''அவன் வராம எப்பிடிய்யா தூக்கறது...'' சாயங்காலம் வரை காத்திருந்து தூக்கிவிட்டோம்.

வட்டியும் முதலும் - 30

சந்திக்கரை திரும்பும்போது அம்பாஸடர் கார் ஒன்றில் பழ வாசத்தோடு வந்து இறங்கினார் பொய்யாமொழி மாமா. ''யோவ்... நான் வராம மச்சானைக்கொண்டு போறீங்களா? வர்றவரைக்கும் காத்திருக்க மாட்டீங்களா? எம் மச்சான்யா...'' என முறுக்கியவரைச் சமாதானப்படுத்துவதே பெரும்பாடானது. சுடுகாட்டாங்கரையில் இருந்து திரும்பிய பிறகு, கழுவிவிட்ட வெறிச்சென்ற வீடு விசித்திரமாக இருந்தது. கொல்லைக்கட்டில் மௌனமாக அம்மா உட்கார்ந்து இருந்தது. இப்படியே இந்த வீட்டில் அப்பாவுக்காக எத்தனை இரவுகள் காத்திருந்தாள் இவள்! இனி, பிள்ளைகளுக் காகக் காத்திருப்பாள். காத்திருப்பின் பெரு வானில் உதிராத கடைசி விடிவெள்ளியாய் எப்போதும் இருக்கிறாள் நம் தாய்!

தினமும் சாயங்காலமானால் வாசல் நிறைய விளக்கேத்தி வைத்துக்கொண்டு, சரசரவென புடவை, தலை நிறையமல்லிப் பூவோடு வாசலில் வந்து உட்கார்ந்திருக்கும் ரூபா அக்கா.

அது கணவர் துபாய் போயிருந்தார். மூணு வருஷ கான்ட்ராக்டில் போயிருந்தவர், அஞ்சு வருஷமாகியும் வரவில்லை. ஆனால், ஒவ்வொரு நாளும் அப்படி ஓர் அழகுக் கோலத்திலேயே வந்து வாசலில் உட்கார்ந்திருக்கும் அக்கா. என் காதுபட, அந்த அக்காவைப் பற்றி தப்புத்தப்பாகக் கேட்டிருக்கிறேன்.

''புருஷந்தான் இல்லைல்ல... எதுக்காக இப்பிடி மினுக்கிட்டு அலையுது?'' தவறான கற்பனைகளோடு அக்காவை நெருங்கி, தெறித்து ஓடியவர்களையும் எனக்குத் தெரியும். சில்லறை கேட்கிற சாக்கில் சில்மிஷம் பண்ணப் போன ஒரு நண்பனை, வீடு கட்டக் கொட்டியிருந்த ஜல்லியால் அடித்து விரட்டியது அக்கா. பத்து வருடங்களுக்குப் பிறகுதான் அக்காவின் கணவர் வந்தார். நரை கூடி, சொட்டை விழுந்து வந்தார். மூஞ்சி முழுக்க வெட்கமும் சந்தோஷமும் பூசி, அவரோடு புடவையும் பூவும் சரசரக்க பைக்கில் உட்கார்ந்து அக்கா போன ஒரு காட்சி காத்திருப்பின் கவிதையாய் எஞ்சியிருக்கிறது எனக்குள்.

இப்போதுகூட நாங்கள் இருக்கிற ஃப்ளாட்டில் ஒரு அக்கா இரவு போகும் போதெல்லாம் அலங்காரத்தோடு வாசலில் வந்து நிற்கிறது. அப்படியே ரூபாக்கா மாதிரி. எல்லோரும் சீரியல் பார்த்துக் கொண்டு இருக்கும்போது, இந்தக்கா மட்டும் ஏன் இப்படி நிற்கிறது எனத் தோன்றும். ஒரு காலையில் தெருவில் புருஷனோடு இளநி வாங்கிக் குடித்துக் கொண்டு இருந்தபோது பார்த்தால், அவரும் அப்படியே ரூபாக்கா கணவன் சாயலிலேயே இருந்தார். ''எங்கூரு கிராமம்ணே... இதக் கட்டிக்கிட்டு வந்த பொறவுதான் கடலே தெரியும் எனக்கு.

இது மீன் புடிக்கப் போயிட்டாலே திக்குதிக்குனு கெடக்கும்...'' பெசன்ட் நகருக்கு மீனவ நண்பன் ராஜேந்திரன் வீட்டுக்குப் போகும்போது அவன் மனைவி சிரித்தபடிதான் சொன் னது. லண்டனில் இருக்கும் அக்காவைப் பற்றி பேச்சு வந்தபோது, கோடம்பாக்கத்தில் தங்கியிருக்கும் ஈழத் தமிழ் நண்பன் அஜந்தன், ''எப்போ பார்க்கறதுண்டு தெரியலையேண்ணே...'' என்றான் புன்னகையோடு. ஏதோ பெயர் தெரியாத நோய் தாக்கி உடல் 15 கிலோவாகச் சுருங்கி, பேராவூரணி வீட்டில்கிடந்த பாலு அண்ணனைப் பார்த்து, ''இவன் சீக்கிரமா போயிட்டா தேவலைனுதான் காத்திருக்கோம்... பாக்க முடியலைங்க...'' என்ற சகோதரனின் குரல் காத்திருப்பின் இருண்ட பள்ளத்தாக்குகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

வட்டியும் முதலும் - 30

''ஒரு கொழந்த பொறந்தா வருவாங்கனு பார்த்தோம்... வரலை. என்னைக்காவது வராமலா போயிருவாங்க?'' ஓடி வந்து கல்யாணம் பண்ணிக்கொண்ட நண்பனும் தோழியும் விலகியிருக்கும் பெற்றோர்கள் வருவார்கள் என இப்போதும் காத்திருக்கி றார்கள். ஐந்து வருடங்களாகக் குழந்தை இல்லாமல் இருந்த நண்பர் ஒருவர், சமீபத்தில் வளசரவாக்கத்தில் உள்ள காப்பகத்துக்கு மனைவியோடு சென்று ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக்கொண்டு வந்தார்.

ஒரு வாரம் அழுதுகொண்டு இருந்த அந்தக் குழந்தை இப்போது அவர்களோடு ஒட்டிக்கொண்டது. அந்த வீட்டில் சிரித்துச் சிரித்து விளையாட ஆரம்பித்துவிட்டது. 'ம்மா...' 'ப்பா...’ என அவர்களைக் கூப்பிட ஆரம்பித்துவிட்டது. சட்டென்று அந்த வீட்டுக்குள் பெருவெளிச்சம் வந்த மாதிரி இருந்தது. யுகங்களின் காத்திருப்பை ஒரு நொடியின் தரிசனம் துடைத்தெறிவது மனித வாழ்வில்தான் நடக்கும். காத்தி ருப்பின் வலியைச் சுகமாக்கும் உயிர்கள்தான் பிரபஞ்சத்தின் பெருங்கொடை இல்லையா?

எதிர்பார்த்துக் காத்திருப்பது பல நேரங் களில் நடப்பது இல்லை. ஆனால், காத்தி ருந்ததைவிடவும் அழகான விஷயங்கள் நடந்துவிடுகின்றன பல நேரங்களில். நண்பனின் வீட்டில் இருந்து திரும்பும் போது எனக்கு எப்போதைக்குமான கல்யாண்ஜியின் கவிதைதான் ஞாபகத்துக்கு வந்தது.

'சிவப்பு லில்லியென்று தொட்டியிலே புல் வளர்த்து புல் வளர்ந்து இளம் வெள்ளை பூ வெடித்து பூவைவிடப் புல் அழகு என உணர்ந்து புல் என்றே மறுபடியும் புல் வளர்க்க ஈரம் நிரந்தரம் தொட்டிக்குள்!’    

(போட்டு வாங்குவோம்...)