மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

அவள் வருகிறாள்!

##~##

செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்.

 வளையல் ஓசை, கொலுசு ஓசை... எது ரசிக்கத்தக்கது?

கொலுசு ஓசைதான். வளையல் ஓசை - அங்கே எங்கேயோ இருக்கிறாள். கொலுசு ஓசை - வருகிறாள்!

சே.பாக்கியராஜ், கரியாப்பட்டினம்.

நான் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதுகுறித்துச் சொன்னதும், சொந்தக்காரர்கள் இளக்காரமாகப் பேசுகிறார்களே?

எல்லோரும் 'தண்ணி’யடிக்கும்போது நீங்கள் மட்டும் 'நான் குடிப்பதில்லை’ என்று சொன்னால், உங்களை இளக்காரமாகத்தான் பார்ப்பார்கள். என்ன செய்வதாக உத்தேசம்?!

வி.திலகம், திருநெல்வேலி.

அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடங்களில் க்ரவுண்ட் ஃப்ளோரில் கார் பார்க் என்று இடம்விட்டு, முதல் தளத்தை 'மெஸனைன்’ என்று சொல்கிறார்களே... இது எந்த மொழி?

மெஸனைன் (mezzanine) என்றால் நடுவில் உள்ள (middle) என்று பொருள். இத்தாலிய 'மெஸனினோ’ என்பதில் இருந்து வந்த பிரெஞ்சு வார்த்தை இது. ஆரம்பத்தில் நாடக அரங்குகளில் ஆர்கெஸ்ட்ரா வாசிக் கும் இடத்துக்கு மேலே, பால்கனிக்குக் கீழே, நடுவில் சற்று உயரமான மேடையில் ரசிகர்கள் அமர்வார்கள். அதுதான் மெஸனைன் வரிசை. இப்போது எல்லாம் பெரிய கூரை உள்ள அறையில் (கடைகளில்) படிக்கட்டு அமைத்து இன்னொரு மட்டத்தை ஏற்படுத்துவதற்கும் அந்தப் பெயர் வந்து விட்டது!

மா.சுந்தரமூர்த்தி, செய்யாறு.

ஆங்கிலம் என்பது ஒரு தனி மொழியே இல்லை. லத்தீன், பிரெஞ்ச், கிரேக்கம் போன்ற சொற்களின் கலவைதான் ஆங்கிலம் என்கிறேன். சரிதானே?

ரொம்ப சரி! ஆங்கில மொழியில் 30 சதவிகிதம்தான் ஆங்கிலம். அதுகூட பிரிட்டிஷ் மண்ணில் உருவான மொழி அல்ல. டென்மார்க், நார்வே போன்ற ஸ்காண்டினேவியன் நாடுகளைச் சேர்ந்த வைகிங்ஸ் (vikings) என்று அழைக்கப்பட்ட கடல் நாடோடிகள் கி.மு. 4-ம் நூற்றாண்டில் பிரிட்டனில் ஆர்ப்பாட்டமாகப் புகுந்து, புகுத்திய மொழிதான் ஆரம்ப ஆங்கிலம். அதைத்தான் ஆங்கிலோ சாக்ஸன் (Anglo Saxon) அல்லது 'பழைய ஆங்கிலம் (old english) என்கிறோம். மிச்ச 70 சதவிகிதம் பிரெஞ்சு, கிரேக்க, லத்தீன் வார்த்தைகளில் இருந்து மருவி ஆங்கிலமானது. பிறகு, சம்ஸ்கிருதம், தமிழ் உட்பட அத்தனை மொழிகளும் ஆங்கிலத்துக்குள் புகுந்தன (Sugar - சம்ஸ்கிருதம், Catamaran  கட்டுமரம் - தமிழ்.). 'யாதும் ஆங்கிலம், யாவரும் கேளிர்!’ என்பதுதான் ஆங்கிலத்தின் சிறப்பு. இன்று சுமார் 50 நாடுகளில் ஆங்கிலம்தான் தேசிய மொழி!

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

வில்லில் சிறந்தவன் அர்ஜுனனா... கர்ணனா?

ஏகலைவன். துரோணாச்சாரியார் அவனுடைய கட்டைவிரலைக் கேட்காமல் இருந்திருந்தால்!

கி.ரவிக்குமார், நெய்வேலி.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றால், இறைவனுக்கு மனைவி அமைந்தது எல்லாம் யார் கொடுத்த வரம்?

அட, இறைவனின் மனைவியும் இறைவன்தானுங்க!

கண்.சிவகுமார், திருமருகல்.

பஞ்சபூதங்களில் மதன்ஜிக்கு மிகவும் பிடித்தது தீதானே?

காற்று! அது இல்லாவிட்டால் தீயே கிடையாது!

கஜுரஹோ தொடர்ச்சி...

நேருவின் ராஜபாட்டை!

ஹாய் மதன் கேள்வி - பதில்

அலாவுதீன் கில்ஜியின் படை வீரர்களால் ஆவேசமாக உடைக்கப்பட்ட கோயில்களில் ஒன்றைக்கூட புதுப்பிக்கவோ, சீரமைக்கவோ பணம் இல்லாத நிலைமை ராஜபுத்திர மன்னர்களுக்கு. மிச்சம் இருக்கும் கோயில்களுக்கும் அந்தக் கதி வந்துவிடக் கூடாது என்று கவலையுடன் முடிவுகட்டிய அந்தக் கடைசி வாரிசுகள் ஆச்சர்யமாக இயற்கையின் உதவியை நாடினார்கள்!

எப்படி?! பெரிதாக வளரக்கூடிய மரங்களின் விதைகள் கோயில்களைச் சுற்றி விதைக்கப்பட்டன.

விளைவாக, சில ஆண்டுகளில் அங்கே அடர்த்தியான காடு உருவானது. கஜுரஹோ வறண்ட பூமியாக மாறியது. மக்கள் அந்த ஊரைவிட்டு ஒட்டுமொத்தமாக வெளியேறினர். பிறகு, மிச்சம் இருந்த 25 கோயில்களுக்குக் காடு என்கிற போர்வை முழுவதுமாக போர்த்திக்கொண்டுவிட்டது. சுருக்கமாக, இயற்கை என்னும் தாய் கஜுராஹோ என்னும் அந்த அழகுக் குழந்தையை வாரி அணைத்து மறைத்துக்கொண்டது.

அடுத்த தலைமுறைக்கு கஜுரஹோ பற்றியே தெரியாமல்போனது. எல்லாம் நல்லதுக்குத்தான்.

1850-ம் ஆண்டில் புலிகளும் நரிகளும் உலவிய அந்தக் காட்டுக்குள் வேட்டையாடச் சென்ற சில ஆங்கிலேயர்கள் மரங்களுக்கு இடையே தெரிந்த கோயில்களை ஊடுருவிப் பார்த்துப் பிரமித்துப்போனார்கள். அங்கிருந்து அவர்கள் நேராகப் போனது தொல்பொருள் ஆராய்ச்சி மையத்துக்குத்தான். 'விதவிதமான, ஆச்சர்யமான ஆலயங்கள்!’ என்று அவர்கள் தட்டுத் தடுமாறிச் சொன்னதைக் கேட்டவுடன் (பிரிட்டிஷ்) அரசு தேர்ந்த ஆராய்ச்சியாளர்களான அலெக்ஸாந்தர் கன்னிங்ஹேம் மற்றும் ஜேம்ஸ்ஃபெர்தஸன் இருவரையும் அனுப்பிவைத்தது. ஒரு வழியாக 1906-ம் ஆண்டு மரங்கள் அகற்றப்பட்டன. கஜுரஹோ மீண்டும் உயிர்த்தெழுந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த கையோடு பிரதமர் ஜவஹர்லால் நேரு கஜுரஹோ சென்று சிற்பங்களைச் சுற்றிப் பார்த்து மெய்சிலிர்த்தார். ரொமான்டிக் உணர்வும் கலைரசனையும் கொண்ட பிரதமர் அல்லவா?! நேரு கேட்டுக்கொண்டதற்கு இணங்க சுவிஸ் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ரேமண்ட் பர்னியர் என்னும் புகைப்படக் கலைஞர் கஜுரஹோவுக்கு வந்து பல வாரங்கள் தங்கி ஏராளமான புகைப்படங்கள் எடுத்தார். அதைத் தொடர்ந்து நேருவின் அலுவலக அறையை வரிசையாக கஜுரஹோ படங்கள் அலங்கரித்தன. இந்தச் செய்தி வெளியானதுமே இந்தியா முழுவதும் கஜுரஹோ புகழ் படுவேகமாகப் பரவியது. அங்கு இந்திய மக்கள் செல்வதற்கு வசதியாக ராஜபாட்டைகள் அமைக்கச் சொல்லி உத்தரவிட்டார் நேரு. பிறகு விமான தளம், நட்சத்திர ஹோட்டல்கள்கூட வந்துவிட்டன. இன்று கஜுரஹோ பண்டைய இந்தியர்களின் சிருங்கார ரசனைக்கு எடுத்துக்காட்டாக, கம்பீரமாக, ஒய்யாரமாக அமைந்திருக்கும் ஒரு பெரிய 'டூரிஸ்ட் ஸ்பாட்’!

1850-லேயே பிரிட்டிஷ்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கஜுரஹோ மீண்டும் ஜொலிப்பதற்கு 1947 வரை காத்திருக்க வேண்டிய அவசியம்தான் என்ன?!

கஜுரஹோவின் அழகுச் சிற்பங்களுக்கு எதிரியாக இருந்தவர் ஒரு சக்தி வாய்ந்த பெண்மணி!

அடுத்த இதழில் முடியும்...