மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

மணிரத்னம் இயக்கத்தில் மன்மோகன்!படங்கள் : ஜெ.முருகன், விஜய்மணி

##~##

கே.வெங்கட், விழுப்புரம்.

 தாலாட்டு, ஒப்பாரி - பாடுவதற்குச் சிரமமான பாடல் எது?

சத்தியமாக தாலாட்டுதான். மென்மையாக, அழகாகப்  பாடினால்தான் குழந்தை தூங்கும். தப்புத்தப்பாக கர்ணகடூரமாகப் பாடினாலும் ஒப்பாரி ஒப்பாரியே! இருப்பினும், அருமையான ஒப்பாரிகளும் மோசமான தாலாட்டுகளும் உண்டு!

வெ.கா., கடையநல்லூர்

'காதல் காவியம்’ - புரிகிறது; 'காதல் ஓவியம்’ என்றால் எது?

காதல் ஓவியத்தில் இருந்து படிப்பதுதான்... காதல் காவியம்!

ஏ.காந்திமதிநாதன், ஓசூர்.

ஹாய் மதன் கேள்வி - பதில்

ஜாதகப்படி ஒரே ராசி, ஒரே நட்சத்திரம் உள்ள மணமக்களை இணைக்கக் கூடாது என்பதைப் போல, ஒரே குரூப் ரத்தம் உள்ளவர்களையும் இணைக்கக் கூடாதா? தங்கள் கருத்து என்ன?

குரூப்புக்கும் ஆண்-பெண் இணைவதற்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. இருவரும் மனிதர்களாக இருந்தால் போதும்! ஜாதகப்படிகூட, உலகெங்கும் கோடிக்கணக்கில் ஒரே ராசி-நட்சத்திரத் தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டு இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை!

கே.சரஸ்வதி, ஈரோடு.

இதுவரை ஹாய் மதனில் என் கேள்விகள் எதுவும் வந்தது இல்லை என்னும் ரெக்கார்டை நான் வைத்திருக்கிறேன். அதை உங்களால் உடைக்க முடியுமா?

உருப்படியாக எதையாவது நீங்கள் கேட்டால்தானே, உடைக்க முடியும்? (ஐயையோ!)

பி.சக்திவேல், திண்டுக்கல்.

உங்கள் வாழ்க்கைப் பயணத்தை மாற்றிய சம்பவம் என்று ஏதாவது இருக்கிறதா?

ஒரு புத்தகம்! என் டாக்டர் தாத்தாவுக்கு கண் பார்வை லேசாக மங்கியதால், என்னிடம் புத்தகத்தைத் தந்து உரக்கப் படிக்கச் சொல்லிக் கேட்பார். பள்ளி, கல்லூரிப் பருவத்தில் தாத்தா வீட்டில்தான் வளர்ந்தேன். வேறு வழி இல்லை. படித்தேன். அது இத்தாலிய சிற்பி பென்வென்யூடோ செலினி என்பவரின் சுயசரிதை. என் வாழ்க்கையில், 18 வயதில், நான் படித்த முதல் (சீரியஸான) ஆங்கிலப் புத்தகம். அந்த ஒரே நாள்... புத்தகங்களுக்கு நான் அடிமையான நாள்!

மா.சுந்தரமூர்த்தி, செய்யாறு.

காஷ்மீர் பிரச்னைக்கும் அருணாசல பிரதேச பிரச்னைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் மத்திய அரசு, இலங்கைக் கடற்படையினரால் ஏற்படும் பிரச் னைக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லையே... ஏன்?

தமிழர்கள் சூடாக இல்லாததுதான் காரணம்!

மீனாக்ஷி, நங்கநல்லூர்.

பூஜை அறையில் தெய்வ உருவப் படத்துடன் தாய், தந்தையர் படத்தை சேர்த்துவைக்கலாமா?

தாய் - தந்தையின் படங்களை மட்டுமேகூட வைக்கலாம். தெரிந்த, நம்மோடு பழகிய, நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லாத தெய்வங்கள்!

மு.தமிழ்ப்பாண்டியன், சென்னை.

கடவுள், ஆவி, பேய் என்பதெல்லாம் இல்லை என வாதாடுபவர்கள்கூட இரவு நேரங்களில், தனியாக சுடுகாட்டின் வழியே நடப்பதற்கு பயப்படத் தானே செய்கிறார்கள். அது ஏன்?

ஏதாவது பிசாசு வந்து கத்தியைக் காட்டி செயின், வாட்ச் எல்லாவற்றையும் கழட்டிக்கொண்டு போய்விடுமோ என்கிற பயம் காரணமாக இருக்கலாம்!

வண்ணை கணேசன், சென்னை.

பெண்ணின் 'ஆசைப் பிடி’... 'அன்புப் பிடி’ இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

ஹாய் மதன் கேள்வி - பதில்

'ஆசைப் பிடி’ பிஸிக்கல். 'அன்புப் பிடி’ மென்டல். முதலாவதில், கொஞ்ச நேரத்தில் விடுபடலாம். இரண்டாவதில், தப்ப முடியாது!

பி.எ.முஜி, கோயம்புத்தூர்

நாகரிகமாக நடந்துகொள்வது நாம் போடும் வேஷம்தானே மதன் சார்?

அநாகரிகமாக நடந்துகொண்டு மற்றவர்கள் மனதைப் புண்படுத்துவதைவிட, நாகரிகமாக வேஷம் போடுவது பல மடங்கு 'பெட்டர்’தானே முஜி?!

மா.மாரிமுத்து, ஈரோடு.

பிரதமர் மன்மோகன் சிங்கை வைத்து ஒரு சினிமா படம் எடுக்கலாம் என்ற எண்ணம். கதை வசனம் எழுதித்தருகிறீரா நீர்?

மன்மோகன் சிங்கை வைத்தா? என்னைவிட மணிரத்னம் பிரமாதமாக எழுதுவார். முயற்சிக்கவும்!

மு.கார்த்தி, இராந்தம்.

என் காதலி என்னிடம் அடிக்கடி சந்தேகத்துடன் கேள்வி கேட்கிறாள். நான் என் பழைய காதலை அவளிடம் மறைக்காமல் சொல்லியும் அவள் என்னிடம் இப்படி கேட்டுக்கொண்டே இருக்கிறாள். நீங்களாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

நீங்கள் 'ஒரே ஒரு பழைய காதலி’ என்று சொன்னதால்தான் பிரச்னை. 'எனக்கு ஒரு டஜன் காதலிகள் இருந்தார்கள்’ என்று சொல்லியிருந்தால், 'சரியான லூஸ்’ என்று முடிவுகட்டி, சந்தேகமே பட்டிருக்க மாட்டாள். முதலிலேயே என்னிடம் நீங்கள் யோசனை கேட்டிருக்க வேண்டும். டூ லேட்!

மு.விஜி, பொழிச்சலூர்.

மனிதன் இதுவரை கண்டுபிடித்ததில் பெஸ்ட்  எது... வொர்ஸ்ட் எது?

1. சக்கரம். 2. போதைப் பொருட்கள்.