மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 32

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

ஞாயிற்றுக் கிழமைகளில் 11 மணிக்கு எழுந்து பல் விளக்கி, மொத்தப் பேரும் துணி துவைக்கச் சண்டையிடுவார்கள். விசித்திரமாக ஒருவன் எப்போது பார்த்தாலும் மிருதங்கம் வாசித்துக்கொண்டே இருப்பான்.

'இங்கு வீட்டுச் சாப்பாடு கிடைக்கும்!’ - சென்னையில் அங்கங்கே இப்படி எழுதி இருக்கும். வீட்டுச் சாப்பாடு என்றால், எந்த வீட்டுச் சாப்பாடு? எந்தக் குடும்பத்தின் கை வாசனை? எந்த உறவுகளின் சுவை?

எனில், ஒவ்வொரு வீட்டுக்கும் தனிக் குணம் இருக்கிறது. சுவை இருக்கிறது. பக்குவம் இருக்கிறது. ஒவ்வொரு வீட்டுச் சாப்பாட்டிலும் அந்தந்தக் குடும்பத்துப் பெண்களின் ஆண்டாண்டுக் காலக் கண்ணீரும் புன்னகையும் கலந்திருக்கிறது. அந்தப் பாரம்பரியத்தின் உப்பும் உறைப்பும் இருக்கிறது. வீட்டுச் சாப்பாடு என்ற வார்த்தையில் இவ்வளவும் கிளர்ந்து வருகிறது இல்லையா?

திருவல்லிக்கேணியில் விநாயகா மேன்ஷனிலும் ஷோஃபியா மேன்ஷனிலும் சில காலம் இருந்தேன். திருவல்லிக்கேணியை 'பேச்சிலர்ஸ் பேரடைஸ்’ என்பார்கள்.அது சொர்க்கமா... நரகமா? என்பது இருக் கிறவனுக்குத்தான் தெரியும். உண்மையில் அது வறண்ட பிரதேசம். எங்கெங்கும் பெர்முடாஸும் சிகரெட்டுகளுமாக பிரம்மச்சாரிகள் திரிவார்கள். கூட்டம் கூட்டமாக பெல்ஸ் ரோடு முக்கில் மசாலா பால் குடிப்பார்கள். நேரங்கெட்ட நேரத்தில் பேக்கரிகளில் உட்கார்ந்து எக் பப்ஸ் சாப்பிடுவார்கள்.

வட்டியும் முதலும் - 32

பார்களிலும் மொட்டைமாடிகளிலும் சரக்கடித்துவிட்டு ஹோம் மார்க்கெட்டிங், கிரெடிட் கார்டு கலெக்ஷன், அனுஷ்கா, 'தி ஆர்ட்டிஸ்ட்’, சங்கரன்கோவில், காவல் கோட்டம், அம்மன் மெஸ், சுகுமாரி எனப் பிரித்து மேய்ந்து திரிவார்கள். பார்த்தசாரதி கோயிலில் சாமி கும்பிட்டு, மெரினாவில் சைட் அடித்து, பைலட் தியேட்டரில் ஹாலிவுட் டப்பிங் மசாலா படங்கள் பார்த்து... அது ஒரு வாழ்க்கை! எவனையாவது பார்க்க ஊரில் இருந்து அம்மா-அப்பா வந்தால், மொத்தப் பேரும் ஓடிப்போய் சாப்பாடு வாங்கி வந்து, துணிக் கடைக்குக் கூட்டிப் போய், பஸ் ஏற்றிவிடுவார்கள்.

ஒருபக்கம் வட மாநிலப் பையன்கள் இந்தி பாடல்களைப் போட்டுவிட, இன்னொரு பக்கம் நம்ம பயலுவோ தமிழ்ப் பாட்டுக்களைத் தட்டிவிட... கிறுகிறு ஜுகல்பந்தியாக இருக்கும். யாரையாவது தேடி அவனது ஃபிகர் வந்துவிட்டால், அவ்வளவுதான்... மொத்தப் பேரும் நிலைகொள்ளாமல் திரிவான்கள். விஷயம் தெரிந்தால், 'சிஸ்டர்... சிஸ்டர்...’ என உருகுவான்கள். திடீரென்று போலீஸ் வந்து பக்கத்து ரூமில் பரமசாதுவாக இருந்த பையனைத் தூக்கிப்போகும். ''அண்ணா நகர்ல மூணு நாளைக்கு முன்னாடி ஒரு மர்டர் நடந்துச்சுல்ல... இவன்தான் ஏ-3யாம்...'' எனத் திகிலடிக்கவைப்பார்கள்.

ஞாயிற்றுக் கிழமைகளில் 11 மணிக்கு எழுந்து பல் விளக்கி, மொத்தப் பேரும் துணி துவைக்கச் சண்டையிடுவார்கள். விசித்திரமாக ஒருவன் எப்போது பார்த்தாலும் மிருதங்கம் வாசித்துக்கொண்டே இருப்பான். ஒருவன் தியானம் பண்ணிக்கொண்டே இருப்பான். இன்னொருத்தன் படித்துக்கொண்டே இருப்பான். நாலு ரூம் தள்ளி காவி தரித்த ஒருவர் எப்போதும் அமானுஷ்யமாகவே நடமாடிக்கொண்டு இருப்பார். ரூம் முழுக்க கேஸ் கட்டுகளோடு ஒரு வக்கீல் எப்போதும் மொபைலில் சட்டம் பேசிக்கொண்டே இருப்பார். திடீரென்று ஒரு சித்த மருத்துவரோ ஜோசியரோ என்ட்ரி கொடுத்து அலப்பறை பண்ணுவார். எல்லா மேன்ஷன்களிலும் பாழடைந்த, பெரிதாகப் பயன் இல்லாத ஒரு லெட்டர் பாக்ஸ் தொங்கும்!

வீட்டுச் சாப்பாடு என்ற வார்த்தைக்கான பேரர்த்தத்தை இந்த மேன்ஷன்வாசிகள்தான் அதிகமாக உணர்வார்கள். திருவல்லிக்கேணி முழுக்க முக்குக்கு முக்கு இருக்கிற மெஸ்களில் கூட்டம் கும்மும். 'வீட்டுச் சாப்பாடு’ என போர்டுவைத்தால் எக்ஸ்ட்ரா கூட்டம் அம்மும். எங்கெங்கு இருந்தோ வீட்டையும் உறவுகளையும் சுமந்து வந்தவர்களுக்கு இந்த வார்த்தைதான் பிடிமானம்.

வட்டியும் முதலும் - 32

'காசி விநாயகா’ என்ற மெஸ் இருக்கிறது. யெல்லோ டோக்கன், க்ரீன் டோக்கன், ரெட் டோக்கன் கொடுத்து வெயிட்டிங்கில் வைப்பார்கள். ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே வந்து டோக்கன் வாங்கிக்கொண்டு பேப்பர் படித்தபடி காத்திருக்கும் கூட்டம். 'யெல்லோ டோக்கன்லாம்வாங்க!’ எனச் சத்தம் வந்தால், திமுதிமுவென உள்ளே ஓடுவார்கள். நான் விநாயகா மேன்ஷனுக்கும் காசி விநாயகா மெஸ்ஸுக் குமாக ஓடிக்கொண்டு இருந்தபோதுதான் கணேசண்ணன் எனக்கு அறிமுகம். பக்கத்து ரூமில் இருந்தார்.

நாற்பது ப்ளஸ் ஆகியும் கல்யாணமாகாத முதிர்கண்ணன். எலெக்ட்ரிக் குக்கர் சேல்ஸ்மேன். பர்மா பஜாரில் அசெம்பிள்டு செட் வாங்கி, எக்கச்சக்கமாகப் பேசி நல்ல ரேட்டுக்கு அப்பர் மிடில் க்ளாஸ் ஆன்ட்டிகளிடம் போணி பண்ணி வண்டி ஓட்டிவந்தார். அவர்தான் என்னை, ''டேய் தம்பி... இனிமே எந்த மெஸ்ஸுக்கும் போகாத. உன்னை ஒரிஜினல் வீட்டுச் சாப்பாட்டுக்கு அழைச்சுட்டுப் போறேன்!'' என்றபடி பிரியங்காம்மா வீட்டுக்கு அழைத்துப்போனார்.

அவர்கள் ஒரு சௌராஷ்டிரா குடும்பம். ஐஸ் ஹவுஸ் பக்கம் ஒரு பாழடைந்த வீடு. கம்பி வேலியிட்ட தாழ்வாரமும் பித்தளைப் பாத்திரங்கள் மினுங்கும் கூடமுமாகப் பார்க்கும்போதே ஏதேதோ நினைவுகளுக்கு இட்டுப்போகும் வீடு அது. கூடத்தில் நான்கு மர பெஞ்சுகள் போட்டு மெஸ் நடத்திவந்தார்கள். பிரியங்காம்மா என்பது நாற்பது வயதிருக்கும் ஒரு அக்கா. அவருக்கு பதின்பருவத்துப் பெண் ஒருத்தி இருந்தாள்.

அப்புறம் ஒரு முதிர்ந்து கனிந்த பாட்டி. இன்னொரு செவசெவ மாஸ்டர். பாசி படிந்த முற்றத்தில் புறாக்கள் வந்து போன அந்த வீடு எனக்கு அந்தக் கணமே பிடித்துவிட்டது. கூடவே, அவ்வளவு ருசியான சாப்பாடு. கணேசண்ணனைப் பார்த்ததும் பிரியங்காம்மா முகத்தில் பெரும் புன்னகை. என்னை அறிமுகப்படுத்திவிட்டு, இருவரும் பேசிக்கொண்டே இருந்தார்கள். அப்போதுஇருந்து ரெகுலராக அங்கேயே சாப்பிட ஆரம்பித்துவிட்டேன். அந்த வீட்டுக்கென்று ஓர் அபூர்வமான வாசனை, அந்தச் சாப்பாட்டுக்கென்று அபூர்வமான சுவை இருந்தது.

ஒரு முறை சாப்பிட்டு முடித்த பிறகு கணேசண்ணன் உள்ளே போய் பிரியங்காம் மாவிடம் வெகு நேரம் பேசிவிட்டு வந்தார். வரும்போது,

''டேய் தம்பி... இவங்க வாழ் வாங்கு வாழ்ந்த குடும்பம்டா. கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் அழிஞ்சுபோச்சு. அவங்க புருஷன் ஓடிப்போயிட்டான். அதிலேருந்து என்ன பண்றதுனு தெரியாம இப்படி மெஸ் வெச்சுப் பொழைக்கிறாங்க.

இப்போ அவங்க புருஷன் வீட்டு ஆளுங்க இந்த வீட்டு மேல கேஸ் போட்டாங்களாம். அதான் இதைவிட்டுப் போகப்போறாங் களாம். மதுரைல அவங்களுக்குத் தெரிஞ்ச வங்க இருக்காங்களாம். அங்கன ஒரு மெஸ் வைக்கிறதுக்கு எதாவது எடம் இருந்தா சொல்லச் சொல்றாங்க...'' என்றார்.

அதுதான் நான் அங்கே கடைசியாகச் சாப்பிட்டது. இரண்டு நாட்கள் கழித்து ஒரு சாயங்காலம் மேன்ஷனுக்குக் கீழே தனது பெண்ணை அழைத்துக்கொண்டு வந்து நின்றது அந்த அக்கா. கணேசண்ணன் கொஞ்சம் பணம் எடுத்துக் கொண்டுபோய் பார்த்துவிட்டு வந்து சொன்னார், ''மதுரைல நமக்குத் தெரிஞ்ச ஒரு எடத்தைச் சொல்லிவிட்ருக்கேன்.

அங்கன மெஸ் போட்டுக்கச் சொல்லிட்டாக. என்னடா வாழ்க்கை. போற எடத்துல நல்லா இருக்கட்டும். நமக்கு இனிமே காசி விநாயகாதான் கதி!'' என்றபோது கணேசண்ணனின் கண்கள் கலங்கிஇருந்தன. புறாக்கள் வந்து போகும் அந்த வீட்டுக்கும் பிரியங்காம்மாவின் கை மணக் கும் சாப்பாட்டுக்கும் கணேசண்ணனின் பூர்வ ஜென்மத்துக்கும் தொடர்பு இருப்ப தாக எனக்குத் தோன்றியது!

அதன் பிறகு கோடம்பாக்கம் வந்த பிறகு, டிரஸ்ட்புரத்தில் ஒரு கையேந்திபவனுக்கு நான் ரெகுலர் கஸ்டமர். வைரமுத்து சார் வீட்டுப் பக்கமாக ஒரு தம்பதியினர் தள்ளுவண்டிக் கடை போட்டு இருந்தனர். சாயங்காலமானால் அவ்வளவு சுத்தமாகப் புடவை கட்டி, மஞ்சள் பூசி, பூ வைத்து ஆவி பறக்க இட்லிகளை எடுத்துக் கொடுக்கும் அந்த அக்கா. அது புருஷன் கைலி, முண்டா பனியனோடு பீடி இழுத்தபடி படுகப்பியாக தோசைக்கல்லில் நிற்பார். வண்டியில் ஒரு சிலேட்டில் 'வீட்டு இட்லி கிடைக்கும்’ என எழுதிப் போட்டிருக்கும். அந்த அக்கா இட்லி மட்டும் எடுத்துவைக்கும். முட்டை தோசை, பீஃப் கறி, சேர்வை என எல்லாவற்றுக்கும் அது புருஷன்தான் இன்சார்ஜ். 'பெண்தான் வீடு, வீடுதான் பெண்’ என்பதை ஒரு கையேந்திபவன்காரன் எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டான் என்பதை இப்போது நினைத்துக்கொள்கிறேன்.

ஒரு வருடம்போல் அங்கேதான் இரவுச் சாப்பாடு. ஒருநாள் அங்கே போனபோது தள்ளுவண்டிப் பக்கம் வழக்கத்துக்கு அதிகமான கூட்டம். அந்த அக்கா அழுதுகொண்டு உட்கார்ந்திருந்தது. அந்தத் தள்ளுவண்டி நிற்கும் இடத்துக்குப் பக்கத்தில் உள்ள அபார்ட்மென்ட்டில் மதியம்வாக்கில் திருட்டு நடந்துவிட்டது. சந்தேகத்தின்பேரில் தள்ளுவண்டிக் கடைக்காரனைத் தூக்கிப் போய்விட்டது போலீஸ்.

நான் அந்த அக்காவை அழைத்துக்கொண்டு வடபழனி போலீஸ் ஸ்டேஷன் போனேன். அக்கா புருஷன், அயர்ன் வண்டிக்காரர், வாட்ச்மேன் மூவரையும் உட்காரவைத்திருந்தார்கள். இவரைப் போட்டு அடித்திருந்தார்கள். அந்த அக்கா அங்கேயே உருண்டு புரண்டு அழுதது. நெடுநேரம் பேசி, திருட்டுக்கு அவர் எந்த வகையிலும் காரணம் இல்லை எனத் தெரிந்துகொண்டதும் வெளியே விட்டார்கள்.

ஆட்டோவில் அழைத்து வரும்போதுதான் அவர்களைப் பற்றித் தெரியும். ''நான் தஞ்சாவூர் பக்கம் ஒரத்தநாடுண்ணே. லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஊர்ல இருக்க முடியாம ஓடியாந்துட்டோம். இங்க கொத்து வேலை, ரோடு வேலைனு போனது புடிக்காம, இதுதான் இப்பிடிக் கடை போடலாம்னு சொல்லுச்சு. நான் நல்லா சமைப்பேண்ணே. சொந்தக்காரவுகள்லயே எங்கூட்டு சமையல்தான் பேமசு. சரின்னுதான் இப்பிடிக் கடை போட்டு யாவாரம் பாத்தோம்... இனிமே இங்க எப்பிடிண்ணே நிக்கிறது... ரொம்ப தேங்க்ஸுண்ணே...'' என்றது அந்த அக்கா. நள்ளிரவில் மீந்திருந்த இட்லிகளைச் சாப்பிட்டுவிட்டு, அவர்கள் வண்டியைத் தள்ளிக்கொண்டு போனது இப்போதும் கண்களில் இருக்கிறது. அந்தச் சாப்பாட்டின் வாசம் தொண்டைக்குழிக்குள் இருக்கிறது இப்போதும்!

வட்டியும் முதலும் - 32

ஊரில் எங்கள் வீட்டுக்கு க.சீ.சிவகுமார் அண்ணனும் அருள் எழிலனும் வந்திருந்தார் கள். திருவாரூர் போய்விட்டு, குடித்துவிட்டு, வருகிற வழியில் ஆற்றில் குளித்துப் புரண்டுவிட்டு வீட்டுக்கு வந்தோம். கூடத் தில் இலை விரித்து, இட்லியும் மிளகாப் பொடியும் வைத்துவிட்டு ஓரமாக நின்றது அம்மா. சாப்பிட்டு முடித்து விட்டு கொல்லையில் கை கழுவப் போனபோது, சட்டென்று என் கையைப் பிடித்துக்கொண்டு க.சீ. அண்ணன், ''டேய்... உங்கம்மாவைப் பார்த்தா எனக்கு அழுகையா வருதுரா. எங்கம்மா கையால சாப்பிடுற மாதிரியே இருந்துச்சுரா...'' என அழுதது ஈரமாக நினைவில் இருக்கிறது.

இப்படித் தான் மேட்டுப்பாளையத்தில் ஜெகத் வீட்டில் அவன் அம்மா பரிமாறியபோது எனக்கு இருந்தது. காரைக்குடியில் திருமுருகன் சார் அக்கா பரிமாறியபோது தோன்றியது. சபரிமலை போகிற வழியில் விழுப்புரத்தில் சுரேஷ் அம்மா கட்டிக்கொடுத்த எலுமிச்சை சாதத்தைப் பிரித்தபோது இப்படித்தான் நினைவுகள் கிளர்ந்தன.

ஒட்டக்குடியில் பகலிலேயே இருட்டு பரவிக்கிடக்கும் கோவிந்தராஜ் தாத்தா வீட்டுப் பெருங்கூடத்தில், பக்கத்திலேயே உட்கார்ந்துகொண்டு ''சாப்பிடுறா... சாப்பிடுறா...'' என அந்த ஆத்தா வைக்கும் பூசணிக் கூட்டையும் வாசத்தையும் வேறு எங்கும் இதுவரை அறியவே இல்லையே? திருச்சிக்கு விடுமுறைக்குப் போன நாட்களில் சாந்தி சித்தி செய்து தந்த தேங்காய் தோசையின் சுவை அதன் பிறகு எங்கேயும் கிடைக்கவில்லையே? இப்போதும் பார்க்குகளிலும் பீச்சிலும் ஏதேனும் குடும்பம் வந்து, கூட்டமாக ஜமுக்காளம் விரித்து உட்கார்ந்து பிரிக்கும் சாப்பாட்டு வாசம் எவ்வளவு நினைவுகளை, ஏக்கங்களைத் தூண்டிவிடுகின்றன? ஒவ்வோர் அம்மாவும் நமது அம்மாவைப் போலவேதான் சமைக் கிறாள் என்பதுதானே உண்மை!

சமீபத்தில் கல்யாணமான நண்பன் ஒருவனைப் பார்க்கப் போயிருந்தேன். வீட்டுக்குக் கீழே நின்று பேசிக்கொண்டு இருக்கும்போது, அவனுக்கு போன் வந்துகொண்டே இருந்தது. ''ந்தா வந்துட்டேம்மா... வந்துட்டேம்மா...'' எனச் சொல்லிக்கொண்டே இருந்தான். நான் ஒரு மார்க்கமாகப் பார்க்க, ''அண்ணே... நீங்க வேற... இது ரொமான்ஸ் இல்ல. அதுக்குச் சமைக்கத் தெரியாது. ரெண்டு பேரும் சேர்ந்துதான் டெய்லி சமையல்... அதுக்குத்தான் கூப்பிடுது. வாங்க இன்னிக்கு நீங்கதான் பரிசோதனை எலி...'' என்றபடி அழைத்துப்போனான்.

அவனது மனைவி என்னிடம், ''அண்ணே... எங்கம்மா சமையல்லேயே வாழ்ந்துட்டேனா... இவராவது பேச்சிலர் லைஃப்ல சமைச்சுப் பழகிட்டார். இப்போதான் ரெண்டு பேரும் சேர்ந்து சமையல் கத்துக்கறோம். இப்போல்ல... எப்பவும் இந்தக் கூட்டணி சமையல்தான். ஒப்பந்தம் போட்டாச்சு...'' எனச் சிரித்தார். இரண்டு பேரும் சேர்ந்து சமைத்து சாப்பாடு போட்டார்கள். அடடா... அதுதான் வீட்டுச் சாப்பாடு!

- போட்டு வாங்குவோம்...