மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 33

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

இப்போது எல்லாவற்றுக்கும் டாஸ்மாக்தான். பேரன்பு, பெருங்கோபம், அறம், அதர்மம், அரசியல் என எல்லாவற்றையும் டாஸ்மாக் பார்களிலேயே கொண்டாடித் தீர்த்துவிடுகிறார்கள் மக்கள்.

ந்தியர்களைப் போல ஜனநாயகத்தைக் கொண்டாடுபவர்கள் யாரும் இல்லை.

தஞ்சாவூர் போவதற்காக எக்மோரில் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் பிடிக்கப் போனேன். 4 மணி வண்டிக்கு 3 மணிக்கே போய், டிக்கெட் எடுத்துக்கொண்டு போனால், அன்ரிசர்வ்டு பெட்டிகள் முழுக்கக் கும்மியடிக்குது கூட்டம். நிற்பதற்கே இடம் இல்லை. எங்கெங்கும் மனிதர்கள். ஏதேதோ லக்கேஜ்கள். நடுவே ஒரு வெங்காயக் கூடை. குழந்தையைப் போட்டு சீட் பிடித்ததில், இரண்டு அம்மணிகளுக்கு நடுவே ஆக்ஷன் ப்ளாக். சீட்டில் நெருக்கியடிப்பது போக, தரை எங்கும் நியூஸ் பேப்பர் விரித்து ஜனத்திரள். நாலைந்து பேர் ஒரே நேரத்தில் மொபைல் எஃப்.எம்மில் பாட்டுகள் போட்டு ரகளை பண்ணுகிறார்கள்.

வட்டியும் முதலும் - 33

ஆரஞ்சை உரித்து அசால்ட்டாகப் பெட்டி எங்கும் வீசுகிறார்கள். டாய்லெட் கதவை ஒட்டி உட்கார்ந்தபடி ஒருவர் வெஜிடபிள் பிரியாணி சாப்பிடு கிறார். ஒருவர் பைக்குள் கைவிட்டு கோக் பாட்டிலில் ஓல்டு மங்க் குவார்ட்டரைக் கலக்கிறார். இத்தனை களேபரங்களுக்கு மத்தியில், முதலில் வந்து, மேல் பெர்த்களில் இடம் பிடித்து, பெட்ஷீட் விரித்து, தலை யணைக்குக் காற்று ஊதிக்கொண்டு இருக் கிறது ஒரு குரூப். ''இந்தக் கூட்டத்துல எப்புடிங்க போறது?'' என நான் அப்பாவி யாகக் கேட்க, ''ஹே... ஹே... இதுக்கே சொல்லிட்டா எப்பிடி தம்பி... தாம்பரத்துல ஏறுவாய்ங்க மாப்பிள்ளைய்ங்க. கொடலு குந்தாணியெல்லாம் வெளில வந்துரும்...'' என ஏக குஷியாகக் கொக்கரித்தார் ஒருவர்.

''சார்... இது வேலைக்காவாது. இப்பிடியே போனம்னா, தஞ்சாவூர்ல எறங்கும்போது ஹெரண்யாவோடதான் இறங்கணும்...'' என்றபடி சரியாக ரயில் புறப்படும்போது, என்னை வெளியே தள்ளி கூடவே குதித்தான் கரிகாலன். ரயில் போயே போய்விட்டது. டிக்கெட்டை ரிட்டர்ன் பண்ணுவதற்குள் ரெண்டு மணி நேரம் வரிசையில் போட்டுப் புரட்டி எடுத்தார்கள்.

கோயம்பேடு கவர்மென்ட் பஸ் ஸ்டாண்டில், 'காசு போனாலும் பரவாயில்லை’ என வீடியோ கோச் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்ஸாகப் பார்த்து ஏறினோம்.

'' 'வேட்டைக்காரன்’, 'வெடி’, 'ஆதவன்’... இதுல ஏதாவது ஒரு படம்தான் போடுவான்... என்ன பெட்டு சார்?'' என்றான் கரிகாலன். பஸ் புறப்பட்டு கால் மணி நேரமாகியும் எந்தப் படமும் போடவில்லை. ''ஹல்லோ கண்டக்டர்... ஏதாவது படத்த போட்டுவிடப்பா...'' என முதல் குரல் கொடுத்தார் முன் சீட்டில் இருந்த வினுச்சக்ரவர்த்தி. கண்டக்டர் எதுவும் பேசாமல் போய் டி.வி. இருக்கும் பெட்டியைத் திறந்து காட்டினார். அதில் டி.வி-யே இல்லை. கொஞ்சம் அழுக்குத் துணிகள் கிடந்தன. ''கடைசியா 'பழனி’ படம் போட்டது... பாதி படத்துல ரிப்பேரானதுதான். சர்வீஸுக்கு குடுத்தது... இன்னும் வரல'' என்றபடி தலைக்கு மேல் கையெடுத்துக் கும்பிட்டார் கண்டக்டர்.

''இதைக் கோயம்பேடுலயே சொல்லியிருக்க லாம்ல... அப்ப டிக்கெட் காசு கொறைங்க...'' எனப் பின்னால் இருந்து ஒரு விஜயகாந்த் எழுந்து நாக்கைத் துருத்த, அங்கங்கே கூச்சல் குழப்பம். எதையும் கண்டுகொள்ளாமல் கண்டக்டர் மன்மோகன் சிங் மாதிரி மௌனமாகவே இருக்க, கொஞ்ச நேரத்தில்... கூல். பக்கவாட்டு சீட்டில் இருந்த ஒரு போதை பார்ட்டி ஃபுல் மப்பில்ஏதோ பினாத்திக்கொண்டே இருந்தார். மேல்மருவத்தூரைத் தாண்டிய தும் அவர் விருட்டென்று எழுந்து பதற்றமாக என் காலடியில் விழுந்து எதையோ தேட ஆரம்பித்தார்.

''என்ன சார்?''

''மொபைலக் காணோம் சார்...''

''நம்பர் சொல்லுங்க... போடறேன்...''

''அது சுச் ஆஃப்ல கெடக்கு சார்...''

இந்த முனையில் இருந்து அந்த முனை வரை எல்லோர் காலிலும் விழுந்து தேடிவிட்டு, வந்து உட்கார்வார். கொஞ்ச நேரத்தில் துள்ளி எழுந்து மறுபடி தேட ஆரம்பிப்பார். இப்படியே விக்கிரவாண்டி வரை தவித்துக்கொண்டு இருந்தார். விக்கிரவாண்டியில் ஒரு ஹோட்டலில் இறங்கி ஆளுக்கு ஒரு செட் தோசை சாப்பிட்டோம். ஒரு செட் தோசை 40 ரூபா, ரெண்டு செட் தோசைக்கு 100 ரூபா கொடுத்தால், மீதி 20 ரூபாய் தர வேண்டுமா இல்லையா? சப்ளையர் மனோபாலா 10 ரூபாய் நீட்டினார். ''என்னங்க இது?'' என்றால், ''10 ரூபா டிப்ஸ் சார்!'' என்றார். ''ஓ... இப்போ டிப்ஸை நீங்களே எடுத்துக்கறதா? நீ குடுத்த எம்.ஆர்.எஃப். டயரையும் எண்ணெக் குருமாவையும் தின்னதுக்கு நீதான்யா டிப்ஸ் குடுக்கணும்!'' என கரிகாலன் எகிற, அவர் ஜாலியாகச் சிரித்துக்கொண்டே, ''தோஸ்ஸ்ஸ்ஸே...'' என்றபடி அடுத்த டேபிளுக்குப் போனார். வெளியே மொபைலைத் தொலைத்த மப்பு பார்ட்டி ஆவேசமாக தம்மில் இருந்தார். ''சார்... நல்லா யோசிச்சுப் பாருங்க. வரும்போது மொபைலை எடுத்துட்டு வந்தீங்களா?'' ''அட... கடைசியா பார்ல உக்காந்து, சூர்யா நடத்துற கோடீஸ்வரன் புரொகிராம்ல கலந்துக்க ஒரு மெசேஜ் அனுப்பினேன் தம்பி. கரெக்ட்டா சார்ஜ் போயிருச்சு... பாக்கெட்ல போட்டது நல்லா நெனப்பிருக்கே. எழவு... அந்த மெசேஜ் வேற சென்ட் ஆச்சானு தெரியலையே!'' ''அப்ப ஜீனியஸ்... கன்ஃபார்ம்...'' எனச் சிரித்தான் கரிகாலன்.

தஞ்சாவூரில் இருந்து ஊருக்குப் போனால், அங்கே தினமும் ஒன்பது மணி நேர மின்வெட்டு. எந்த அளவுக்கு என்றால், இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்சை ஓவருக்கு மூணு பால் பார்க்க முடியும். மூணு பால் பார்க்க முடியாது.

''மாப்ள... லைன் போறதுக்குள்ள தூங்கிருங்க!'' என ஒரு சீப்பு கற்பூரவல்லியோடு வந்து சொல்லிவிட்டுப் போனார் மாமா. ''ஓகைலேருந்து வெங்கடேஷ் பேசறேன்... பத்தரை மணிக்கு கரன்ட்டைப் போட்டுத் தள்ளிருவானுங்கரா... நாலு கற்பூரவல்லிய உள்ள தள்ளிட்டு அதுக்குள்ள தூங்கிரு...'' என இன்னொரு போன்.

பகலெல்லாம் காந்துகிறது. ராத்திரியானால், நாத்தனார் யார் கொழுந்தியாள் யாரெனத் தெரியாத கும்மிருட்டு. அடையாளம் தெரிய, அத்தனை பயபுள்ளைகளும் ரோட்டில் பாட்டுப் பாடிக்கொண்டு போகிறார்கள். இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் தஞ்சாவூரில் இருந்து வந்த சித்தப்பா, கரன்ட் வந்த கேப்பில் டி.வி.டி-யில் ஏதோ வித்தியாசமான படம் பார்த்துக்கொண்டு இருந்தார்.

''என்ன படம் சித்தப்பா?'' என்றால், ''அட... 'அரவான்’தான் கேட்டேன். அந்தக் கம்னாட்டி 'கொண்டான் கொடுத் தான்’ குடுத்துருக்கு. கழுத... எதையாவது பாப்போம்...'' என்றபடி காலாட்டினார். ஊரில் வீட்டுக்கு வீடு ரிலீஸான ரெண்டாவது நாளே கிராமத்து ஹோம் தியேட்டர்களுக்குச் சுடச்சுட வந்துவிடுகின்றன திருட்டு டி.வி.டி-க்கள். வாசலில் கருவடாம் காயப் போட்டுக்கொண்டே,  '' 'காதலில் சொதப்புவது எப்பிடி?’யா... பேரப் பாருய்யா... என்னடா அது... படம் முழுக்கப் பேசிட்டேக் கெடக்குறானுவோ...'' என ஒரு அத்தை சொல்ல, ''யம்மா... அது கே.எஸ்.ஒய்மா... என்னா சூப்பர் படம்... கூத்தாநல்லூர்ல இருந்து ஒரு அமலா பாலை உனக்கு மருமகளாக் கொண்டுவந்தாத்தான் அடங்குவ நீயி...'' என்றபடி மொபைலில் நெட்டை நோண்டிக்கொண்டு இருக்கிறான் மருமகன். பட்டாசுக் கதறல் கேட்டு திடுக்கிட்டு விழித்துப் பார்த்தால், ''செஞ்சுரிஸ் ஆஃப் செஞ்சுரிஸ்... சச்சின் நூறாவது சதம் அடிச்சிட்டான்ல...'' என்கிறார்கள். ''ஏண்டா... கரன்ட்டே இல்ல எப்பிடிறா பார்த்தீங்க?'' என்றால், லேப்-டாப்பைக் காட்டுகிறார்கள்.

வட்டியும் முதலும் - 33

திடுதிப்பென்று 'திருவரங்கநல்லூரைச் சேர்ந்த அ.தி.மு.க. கிளைக் கழகச் செயலாளர் சந்துரு, நேற்று இரவு அகால மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரது இறுதி ஊர்வலம் இன்று மாலை திருவரங்கநல்லூர் அவரது இல்லத்தில் இருந்து புறப்படும்...’ என ஒரு ஆட்டோவில் மைக் கட்டி அலறிக்கொண்டே போகிறார்கள். அடுத்த ஒரு மணிக்கெல்லாம் கொரடாச்சேரி, செல்லூர் டாஸ்மாக்குகளில் கூட்டம் கட்டி ஏறுகிறது. சுடுகாட்டாங்கரையில் வளைத்து உட்கார்ந்து 'சில்டு பீர்’ குடிக்கிறார்கள். ''ஏன் மாமா... அஞ்சு வருசத்துக்கு ஒருக்கா தேர்தல் வர்றதுக்குப் பதிலா ஆறு மாசத்துக்கு ஒரு தேர்தல் வந்தா, சீஸனுக்கு சீஸன் வாழலாம்ல...'' என ஒருவர் திகில் கிளப்புகிறார்.

இப்போது எல்லாவற்றுக்கும் டாஸ்மாக்தான். பேரன்பு, பெருங்கோபம், அறம், அதர்மம், அரசியல் என எல்லாவற்றையும் டாஸ்மாக் பார்களிலேயே கொண்டாடித் தீர்த்துவிடுகிறார்கள் மக்கள்.

''மச்சான்... 'சேனல் 4’ க்ளிப்பிங்ஸ் பார்த்தியா? தாங்க முடியலடா... தலைவரோட மகனைச் சுட்டுப் போட்ருக்கானுங்க. இந்த மானங்கெட்ட மத்திய அரசப் பார்த்தியா... இலங்கைக்கு எதிரா ஓட்டுப் போட மாட்றானுங்க. நான் இப்ப என்னடா பண்ணணும்... உசுரக் குடுக்க ரெடியாஇருக் கேன்டா. ஆனா, தீக்குளிக்க மாட்டேன். நாலு பேரயாச்சும் போட்டுத் தள்ளிட்டுப் போவணும்... அதுக்கு என்னடா பண்ண ணும்...'' வயலில் நிற்கும் பிற்பகலில், போன் பண்ணிக் குமுறும் நண்பனுக்கு நாக்கு நடனமிடுகிறது. பின்னணியில் யாரோ ஆம்லெட் சொல்கிறார்கள்.

''அது சரி... அதுக்கு எதுக்குரா நீ குடிச்ச?''

''முடியல மச்சான்... மனசப் பெசையுது. நம்ம இயலாமைய என்ன பண்ணித்தான் மறைக்கறது... குடிச்சுக் குடிச்சுச் சாவ வேண்டியதுதான் போ....''

நண்பனின் மனநிலைதான் இப்போதைய பெரும்பான்மை இந்தியர்களின் மனநிலை. ''கரன்ட் கட் அதிகமானதுல இருந்து சேல்ஸ் டபுள் மடங்காயிருச்சு முருகா...'' என்கிறார் கொரடாச்சேரி டாஸ்மாக்கில் சரக்கு விற்கிற, டிகிரி ஹோல்டர் தோழர். முன்பெல்லாம் கரன்ட் கட் அதிகமானால், மக்கள்தொகை அதிகமாகும். இப்போது டாஸ்மாக்கில் விற்பனை அதிகமாகிறது. ''கூடங்கொளத்துல கடையத் தொறந்தானுங்கன்னா, 24 அவர்ஸ் கரன்ட் வரும்யா... முக்கா அடிச்சாலும் காங்கிரஸ்காரன் காந்தியவாதி... நான் சொன்னாக் கேளுங்கய்யா!''

''யோவ்... அணு உலை வெடிச்சதுன்னா என்னாவும் தெரியும்ல... நீ ஃபேன் போட்டுத் தூங்கறதுக்குள்ள எமன் பாதித் தமிழ்நாட்ட பேன் பார்த்துட்டுப் போயிருவான்யா'' என ஜஸ்ட் லைக் தட் தேசியப் பிரச்னைகளை பார்களில் கொத்துக்கறி போடுகிறார்கள்.

இப்படிப்பட்ட பஞ்ச் டயலாக்குகளை எல்லாம் எத்தனை ரூம் போட்டு யோசித்தாலும் எழுத முடியுமா என்று தெரியவில்லை. ஈழப் பிரச்னை, இடைத்தேர்தல், கூடங்குளம், என்கவுன்டர், பட்ஜெட், விலை உயர்வு, சசிகலா... அத்தனையும் பேசுகிறார்கள். துயரங்களைக் கொண்டாடுகிறார்கள். குற்ற உணர்வை மறைக்கிறார்கள். அவனவனும் தனி சேனலாக அலைகிறார்கள். சண்டையிடுகிறார்கள். பாசத்தைப் பொழிகிறார்கள். கொள்கைகளாக உருவெடுக்கிறார்கள்.

கொரடாச்சேரியில் இருந்து ஊருக்கு வண்டியில் வரும்போது பார்த்தால், வயல்கரை முழுக்க நெடும் பனைகள் மொட்டை மொட்டையாக நிற்கின்றன. 10 வருடங்களுக்கு முன்பு பார்த்ததில் பாதிப் பனை களைக் காணோம். முன்பு ஊரில் அஞ்சாறு வருடங்கள், பனை மரங்கள் ஏலம் எடுத்து கள்ளுக் கடை நடத்திவந்தோம். மாட்டு டாக்டர் கள்ளுக் கடை, ஆப்பாவூர் கள்ளுக் கடை எல்லாம் சுத்துப்பட்டில் அவ்வளவு ஃபேமஸ்.

சாயங்காலமானால், பனங்கரை எல்லாம் கூட்டம் நுரை தள்ளும். சாயங்காலம் எப்போது போனாலும் ஐஸ் வண்டிக்காரர் நெற போதையில் பனங்கொட்டாயில் சரிந்திருப்பார். கள் இறக்கும் அவினாசி நாடார் பையனும் பொண்ணும் 'பாம்... பாம்’ என ஐஸ் வண்டி ஹாரனை அடித்துக்கொண்டு இருப்பார்கள். கலியன் ஒரு குடம் கள்ளு குடித்துவிட்டு, பத்தூரு வாய்க்காலில் பொறுக்கி வரும் பனம்பழம் வாசத்தை மறக்க முடியுமா?

வட்டியும் முதலும் - 33

பஞ்சாயத்து, பாச மழை, கச்சேரி, கருமாந்திரம் எல்லாம் அப்போது கள்ளுக் கடையில்தான். அதிகாலையில் போனால் நுரை தள்ளத் தள்ள... ஈக்கள் மிதக்க அப்போதுதான் இறக்கிய கள்ளை அவினாசி நாடார் நீட்டுவது இப்போதும் நெஞ்சுக் குழி வரை இனிக்கிறது. இப்போது மணல் அள்ளி அள்ளிக் கட்டாந்தரை ஆகிவிட்ட வெட்டாற்றுத் தரை முழுக்க, யூஸ் அண்ட் த்ரோ கப்புகளும் ஏதேதோ பெயரிட்ட பாட்டில்களும் சிதறிக்கிடப்பதைப் பார்க்கக் கொடுமையாக இருக்கிறது.

அப்புறம் இந்த ஃப்ளெக்ஸ் பேனர்கள்... 'வழுக்கைத் தலையால் உங்கள் காதல் திருமணம் தடைப்பட்டுவிட்டதா? இனி கவலை வேண்டாம். ஃபேர் அண்ட் ஹேர்’ என வெட்டாற்றுப் பாலத்தை அடைத்து வைத்திருக்கிறார்கள். அம்மா பிறந்த நாள், தளபதி பிறந்த நாளில் ஆரம்பித்து, கல்யாணம், கருமாதி, காதுகுத்து என எதற்கெடுத்தாலும் நாலு பேர் கூடி ஃப்ளெக்ஸ் வைத்துவிடுகிறார்கள். 'மலர் தூவி வாழ்த்தினால் வாடிவிடும் என்பதற்காக, தமிழ் தூவி வாழ்த்துகிறோம்’ என்ற ஃப்ளெக்ஸ் வரிகளைப் பார்த்துவிட்டு, 'எங்கடா அந்தக் கவிஞன்?’ என என் நெஞ்சு கூத்தாடியது. நிலா பேக்ட்ராப்பில் பொண்ணும் மாப்பிள்ளையும் சிரிப்பது, 'பில்லா’ அஜீத் தலையில் லோக்கல் அரசியல்வாதி முறைப்பது என எங்கெங்கும் அட்ராசிட்டி ஜனநாயகம்.

அடுத்த ஜனநாயகக் கொண்டாட்டம் ரியல் எஸ்டேட். சித்தப்பா ஏரியா பால் பண்ணைக்குப் போய், காலாற நடக்கக் கிளம்பினேன். 'விளார் ஊராட்சி உங்களை வரவேற்கிறது’ என போர்டு இருந்தது. ஊர்தான் இல்லை. வயல்வெளி எல்லாம் பிளாட் போட்டு நிஷா நகர், நிலா நகர், எம்.ஆர்.பி. நகர்... எல்லாம் நகர்கள். கொஞ்ச தூரம் போனால், அப்பால் காலெடுத்து வைக்க முடியவில்லை. ஒரே நாற்றம்... ஒரு மாடு செத்துப்போய், தூக்கிப் போடாமல் அது கூழாகி முந்திரிச் செடிகளுக்கு நடுவே கிடந்தது. அந்த வயல்வெளிகளைப் போல... வாழ்க்கையைப் போல!

கும்பகோணம் வந்து சென்னை வண்டிகளிலேயே வல்லிய வண்டியாகத் தேர்ந்தெடுத்து ஏறினேன். அதுவும் அல்ட்ரா டீலக்ஸ் வீடியோ கோச்தான். முன் சீட்டில் ஒரு குடும்பம் உட்கார்ந்து ஒரு கிலோ கறுப்பு திராட்சையை வைத்து மொத்திக்கொண்டு இருந்தது. டி.வி-யில் லோக்கல் துணிக் கடை, நகைக் கடை, விளம்பரங்கள். வண்டி கிளம்பியதும் சாய்ந்து உட்கார்ந்தேன். கண்டக்டர் வந்து டி.வி-யை நோண்டினார். என்ன படம் போடப்போகிறாரோ என பீதியாக இருந்தது.

கண்டக்டர் நகர்ந்த நொடி காதடைக்கிற சவுண்டில், 'திருவண்ணாமலை’ என டைட்டில் ஓட ஆரம்பிக்க... திராட்சைக் குடும்பம் பயங்கர த்ரில்லாகிக் கை தட்ட ஆரம்பித்தது. கண்ணு பொங்க சென்னையில் இறங்குவதை நினைத்தாலே பயமாக இருக்கிறது. வாழ்க ஜனநாயகம்!

- போட்டு வாங்குவோம்...