மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

நீ 'ரொம்ப' நல்லவன் இல்லை!

##~##

ராஜமழை, சின்னமனூர்.

 ஒரு பெண்ணிடம் காதலைச் சொல்லும்போது ஏற்படும் பயம், ஒரு நாய் நம்மை விரட்டும்போது ஏற்படும் பயம் - ஒப்பிடுக?

இரண்டு விஷயங்களிலும் பயம்தான் பொதுவானது. நாய் விஷயத்தில் நீங்கள் அலறிக்கொண்டு ஓடுவதால், இதயத் துடிப்பு அதிகமாகிவிடும். பெண் விஷயத்தில் ஜஸ்ட் செங்குத்தாக நின்று பேசும்போதே இதயம் படபடக்கும். அதான் வித்தியாசம்!

வண்ணை கணேசன், சென்னை.

பெண்கள் இல்லாத துறை ஏதாவது உண்டா?

எதிர்காலத்தில், எதுவுமே மிச்சம் இருக்காது. ஒரு பெண், ஆணைக் கர்ப்பமாக்குவதைத் தவிர!

எல்.உக்கிரபாண்டியன், நரிமேடு.

போதையில்தான் ஒருவரிடம் உண்மை வெளிப்படும் என்று சொல்கிறார்களே... அது உண்மைதானா?

கொஞ்சம்தான் வரும். ஆழ் மனதில் இருப்பவை வராது. போதையில்கூட முதலாளியிடம் ஒருவர் 'டேய்... நீ என்ன பெரிய .....?'' என்று உளற மாட்டார்கள். ரொம்பப் போதையில் அப்படிச் சொல்லித் தொலைக்கலாம் என்பதால்தான், கில்லாடியான மூளை உங்களை மயக்கமாக்கி, ஒரேயடியாகக் கீழே சாய்த்துவிடுகிறது. இல்லையென்றால், ஏராளமானவர்களுக்கு வேலை போய்விடும்!

ஜி.மாரியப்பன், சின்னமனூர்.

பிறரைச் சந்தோஷப்படுத்துமாறு, போலியாக நடித்துப் பேசப் பலராலும் முடிவதுபோல், என்னால் முடியவில்லையே? (வீட்டாருக்கும் மனைவிக்கும்கூட 'ஐஸ்’ வைக்கத் தெரியவில்லை மதன்ஜி?!)

போலியாக ஏன்? நிஜமாகவே மற்றவர்கள் சந்தோஷப்படும்படி நடந்துகொள்ளுங்களேன். இதற்குச் சுலபமான வழி - மற்றவர்களின் உணர்வுகளை உன்னிப்பாகக் கவனித்துப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்!

விஜயலட்சுமி, சென்னை-74.

பெண்கள் இல்லாத உலகம் நிம்மதியாக இருக்கும் என்பது சரியா?

ரொம்ப சரி! ஏனென்றால், பெண்கள் இல்லாமல் பூமியில் மனித இனமே கிடையாது. ஆகவே, மனிதர்களே இல்லாவிட்டால் உலகம் நிம்மதியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!

சங்கமித்ரா நாகராஜன், கோயம்புத்தூர்.

மதன் ஹாஸ்டலில் தங்கிப் படித்தது உண்டா?

நான் படித்த பள்ளிக்கூடம், கல்லூரி இரண்டுமே வீட்டுக்கு அருகில் பொடி நடையாகப் போய்விடுகிற தொலைவில்தான் இருந்து தொலைத்தன. ஆகவே, அது  நடக்கவே இல்லை. ஸோ, மாநிலக் கல்லூரியின் பின்னால் இருந்த விக்டோரியா ஹாஸ்டலுக்குச் சென்று, அங்கே நண்பர்களுடன் ஸ்டைலாக (?) லுங்கி கட்டிக்கொண்டு தங்கி என் ஏக்கத்தைப் போக்கிக்கொண்டது உண்டு!

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

அடுத்தவரைக் கெடுக்கக் கூடாது. நல்லதே செய்ய வேண்டும் என்ற எண்ணம் எல்லா மனிதருக்கும் ஒரே நேரத்தில் தோன்றினால்?

'மனிதர்களை ஒப்பிடுதல்’ என்பது ஓர் உன்னதமான நிலைக்குப் போய்விடும். அப்போதும் 'நீ நல்லது செய்யறே. ஆனா, அவரை மாதிரி வராது’ என்று குறை கூறிக்கொண்டு இருப்பார்கள்!

எஸ்.சண்முகசுந்தரம், வைத்தீஸ்வரன்கோவில்.

எனக்குக் கல்யாணமாகிக் குழந்தைகள் உண்டு. சில சமயங்களில் நான் கல்யாணம் ஆகாதவன் மாதிரியும் எனக்குக் குழந்தைகள் இல்லாதது மாதிரியும் அடிக்கடி கனவு வருகிறது. இது எதனால்?

வாழ்க்கையில் எதிர்பார்ப்பு என்று எதுவும் இல்லாமல், 'செட்டில்’ ஆகிவிட்ட ஏக்கம் உங்களுக்குக் கனவாக வருகிறது என்று நினைக்கிறேன். கனவுகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர, வேறு வழி இல்லை!

கி.ரவிக்குமார், நெய்வேலி.

ஹாய் மதன் கேள்வி - பதில்

இப்போது எல்லாம் வீடுகளில் திண்ணைகள் இல்லாதது எதைக் காட்டுகிறது?

அகலமான திண்ணை இப்போது 21 செ.மீட்டராகச் சுருங்கி - டி.வி-யாக மாறி விட்டது. முன்பு 180 டிகிரிக்கு, 3டி-யில் அக்கம்பக்கத்து வம்புகளையும் சண்டை களையும் நேரடியாக ரசிப்பது பொழுது போக்காக இருந்தது. இப்போது டி.வி. என்கிற ஜன்னல் வழியே மற்ற 'குடும்பங்’ களில் நடக்கும் கூத்துக்களை ரசிப்பது பொழுதுபோக்காகிவிட்டது!

கே.சரஸ்வதி, ஈரோடு.

எழுத்தை வைத்து அதை எழுதியவர்களின் வயதைக் கணிக்க உங்களால் முடியுமா?

நீங்கள் 40 வயதைத் தாண்டவில்லை. பரீட்சைகளில், நன்றாக எழுதி மார்க் எடுக்கிற டைப். பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் கலந்துகொள்கிற உங்க ளுக்கு, ஒரு பொருளை எடுத்த இடத்தில் திருப்பிவைக்காவிட்டால் கோபம் வரும். பள்ளி அல்லது கல்லூரியில் படித்தபோது, உங்களைத் தொடர்ந்து வந்த யாரோ ஒரு பையனுக்கு டோஸ்விட்டு அறிவுரை சொல்லி அனுப்பியிருப்பீர்கள். இதில் எவ்வளவு கரெக்ட் என்று எழுதி அனுப் புங்கள்!