
பெப்ஸி, கோக்குகளுக்கு நடுவே, கும்பகோணம் தெரு ஒன்றில் இன்னமும் அழுக்கு வேட்டியோடு பழைய வீட்டில் சோடா தயாரித்துக்கொண்டு இருக்கிறார் ஒரு பெரியப்பா.
''முருகா... இன்னிக்கு மூணாம் பெற...'' - குலசாமிக் கோயிலுக்குப் போய்க்கொண்டு இருந்த இரவில், சித்தார்த்தன் வானத்தைக் காட்டினான். நிமிர்ந்து பார்த்த கணமே, மனசுக்குள் ஏகாந்தம் கொப்பளிக்கத் தொடங்கியது.
நிறைய நிறைய நட்சத்திரங்களுக்கு நடுவே 100 கிராம் வெள்ளிக் கீற்றாய் ஒரு மூன்றாம் பிறை. அபூர்வமாய், காவியமாய், சாவதற்குள் திரும்ப இப்படி ஒரு வானம் கிடைத்திடுமா என்பது மாதிரி இருக்கிறது. யாரும் இல்லாத ரயில் நிலையத்தில் ஒரே மாதிரி புடவைகள் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கிற டீச்சர்கள்போல... மினி பஸ்ஸை நிறுத்திவிட்டு, ஆற்றில் குளித்து உள்ளங்கையில் காயாத மஞ்சளோடு ஓடி வருகிற அக்காவைப் போல... நள்ளிரவில் ஒண்ணுக்கடிக்க எழுந்து போகும்போது, பசுவின் கனத்த மடிக் காம்புகள் நசுங்கப் படுத்திருக்கும் ஆட்டுக்குட்டியைப் போல... இப்படி ஒரு வளர்பிறை நாளில் குலசாமிக் கோயிலுக்குப் போகிற தருணம் எப்போதும் அமையாது இல்லையா?
இரவு மூன்றாம் பிறை பார்த்தது மாதிரிதான் மறுநாள் பகலில் வேணியாத் தாளைப் பார்த்தேன். நான் படித்த அதே பள்ளிக்கூடத்தின் வாசலில், அதே கோலத்தில்... தட்டுக்கூடையில் வெள்ளரிக்காய்களும் எலந்தம்பழங்களும் நெல்லிக்காய்களும் போட்டு விற்றுக்கொண்டு இருக்கிறாள் இன்னமும்.

செங்காமட்டை கலர் பொடிக் கட்டம் போட்ட புடவையில், உதிர்வதற்கு முந்தைய தினத்திலான நாவல்பழம் போன்ற முதிர்ந்த கண்களோடு, மூச்சை புஸ்ஸுபுஸ்ஸுவென இழுத்துக்கொண்டு, ஒரு கோட்டோவியம் மாதிரி அங்கேயே உட்கார்ந்திருக்கிறாள். சிறு வயதில் நான் பார்த்த மாதிரி இந்த ஊர் இல்லை. மனிதர்கள் இல்லை. ஸ்கூல் இல்லை. எத்தனையோ வசதிகளும் மாற்றங்களும் நுழைந்து படர்ந்துவிட்டன. ஆனால், வேணியாத்தாள் இன்னமும் தட்டுக்கூடையில் பழங்களும் முறுக்குகளும் வைத்துக்கொண்டு, இன்டர்வெல்லில் ஓடிவரும் பிள்ளைகளுக்காகக் காத்திருக்கிறாள். வேணியாத்தா நாலு கிலோ மீட்டர் தள்ளி உள்ள ஊரில் இருந்து, தினமும் காலையில் கிளம்பி, தட்டைத் தூக்கிக்கொண்டு, ஆற்றைத் தாண்டி வெயிலில் நடந்துவருகிறாள். சாயங்காலமாய் பஸ்ஸில் குடவாசலுக்குப் போய், தேவையானதை வாங்கிவருகிறாள். வீட்டுக் கொல்லையில் அடுப்பு வைத்து, தனியாக முறுக்கு சுடுகிறாள்.
பிற்பகலில் ஊரில் யார் வீட்டுத் திண்ணையிலாவது உட்கார்ந்து தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு, ''தொரக்கண்ணு மவனா இது... ஆளு அடையாளமே தெரியல...'' எனப் பேசிவிட்டுப் போகிறாள். ஒரு தகர டப்பாவில் நைந்த ரூபாய் நோட்டுகளையும் சுருக்குப்பையில் சில்லறைக் காசுகளையும் போட்டுக்கொண்டு அலைகிறாள். நான் ஸ்கூல் படிக்கிறபோதே ஒரு நாள் வேணியாத்தாளின் மகனும் மருமகளும் ஸ்கூல் வாசலுக்கு வந்து சண்டை போட்டார்கள். ஹெட் மாஸ்டரிடம் வந்து, ''சார்... இந்தக் கெழவிய இனிமே இங்க சேக்காதீங்க சார். நான்தான் சம்பாரிக்கிறேன். சோறு போடுறேன்... வீட்டோட கெடன்னா கேக்காம, அங்கேருந்து கௌம்பி வந்துருது. இந்த வெயில்ல வந்து எதுக்கு இந்தக் கருமத்தப் பண்ணணும்... சொன்னாக் கேக்க மாட்டுது கம்னாட்டி...'' எனச் சத்தம் போட்டார். தட்டுக் கூடையைத் தூக்கிக்கொண்டு வேகவேகமாய்ப் போன வேணியாத்தா, நாலைந்து நாட்கள் வரவில்லை.
அடுத்த வாரமே தட்டு நிறைய நாவல்பழங்களோடு வந்துவிட்டது. கலைவாணி யக்கா வீட்டு வாசலில் உட்கார்ந்துகொண்டு, ''என்ன இவனுவோ ஒண்ணும் பண்ண முடியாது. நாஞ் சாவுற வரைக்கும் இந்தப் புள்ளைவோளுக்குத் தீனி வித்துட்டுத்தான் கெடப்பேன்'' என்றபடி மூச்சு வாங்கவாங்கத் தண்ணீர் குடித்தது. தசைகள் சுருங்கி, கை கால்கள் நடுங்க, இன்னமும் ஓர் அரசுப் பள்ளிக்கூடத்தின் வாசலில் உட்கார்ந்துஇருக்கிறாள் வேணியாத்தா... நாம் பார்க்க வேண்டும் என்பதற்காகவா மூன்றாம் பிறை வருகிறது என்பது மாதிரி.
வேணியாத்தாளைப் பார்த்துவிட்டு வருகிறபோது, தவிர்க்க முடியாமல் ஆனந்தியக்காவின் ஞாபகம் வருகிறது. மாதவரத்தில் ஒரு பழைய ஆஸ்பெஸ்டாஸ் வீட்டுக்குள் இப்போதும் வியர்வை வழிய மெழுகுவத்தியைத் தயாரித்துக்கொண்டு இருக்கிறது ஆனந்தியக்கா. 10 வருடங்களுக்கு முன்பு சென்னையில் வேலை இல்லாமல் திரிந்தபோது, கென்னடிதான் அந்த ஆஸ்பெஸ்டாஸ் வீட்டுக்கு அழைத்துப்போனார். நைட்டி போட்டுக்கொண்டு, நாலைந்து பிள்ளைகளோடு அச்சில் மெழுகை ஊற்றி ஊற்றி எடுத்துக்கொண்டு இருந்தது ஆனந்தியக்கா. தரை எல்லாம் பிசுபிசுவென உருகிக்கிடக்கும் மெழுகும் வாசமுமாகக் கிடந்தது வீடு. இன்னொரு பக்கம் கொஞ்சம் பிள்ளைகள் உட்கார்ந்து பாலிதீன் கவரில் பாக்கெட் போட்டுக்கொண்டு இருக்கும். ஒரு பாக்கெட் விற்றால் 20 பெர்சன்ட் கமிஷன்.
''இப்பத்தான் புதுசா வர்றியா? ஒரு வாரம் வித்துட்டு அப்பால துட்டு குடு'' என்றது அக்கா. மெழுகுவத்தி தயாரிப்பதையே வேலையாக, வாழ்க்கையாக வைத்திருக்கும் ஓர் அக்காவைப் பார்ப்பதற்கு எனக்கு ஆச்சர்யமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. பெரிய லாபம் புண்ணாக்கெல்லாம் கிடையாது. ஒரு பாக்கெட் விற்பதற்குள் தொண்டைத் தண்ணி போகும். ஆனாலும், அக்காவும் இன்னும் பலரும் அதில்தான் வாழ்கிறார்கள். ஓரிரு மாதங்கள் அவ்வப்போது அங்கே போவேன். ஒருநாள் போனபோது, ஆனந்தியக்காவின் புருஷனுக்கு ஹார்ட் அட்டாக் என ஆஸ்பத்திரிக்குத் தூக்கிப்போயிருந்தார்கள். அன்றும் ஆஸ்பத்திரிக்குப் போய்விட்டு வந்து, அச்சில் மெழுகை ஊற்றிக்கொண்டு உட்கார்ந்திருந்தது அக்கா. மறுநாள் ராத்திரி ஆஸ்பெஸ்டாஸ் வீட்டு வாசலில், கண்ணாடிப் பெட்டிக்குள் அது புருஷன் துயில, சுற்றி மெழுகுவத்திகள் எரிந்து வழிய, ஓரமாக உட்கார்ந்து டீ குடித்துக்கொண்டு இருந்தது அக்கா.
வாழ்க்கைப்பாடின் மகத்தான காட்சிகளில் அதுவும் ஒன்று. அணைந்துகிடந்தது ஒரு மெழுகுவத்தி. எரிவதும் உருகுவதும் எப்போதும் ஒரு மனுஷி. ஜொலித்து இருளும் உயிர் மனுஷி. எரிந்து வழிந்து கையில் விழும் ஒரு பொட்டு மெழுகு சட்டெனக் காந்துவது மாதிரி அந்த இரவு இருக்கிறது இப்போதும். இத்தனை வருடங்களுக்குப் பிறகு, சமீபத்தில் மாதவரத்தில் ஆனந்தியக்கா வீட்டுக்குப் போனேன். இன்னமும் அப்படியே மெழுகு வார்த்துக்கொண்டு இருக்கிறது நரை கூடிய அந்தக்கா. அதன் மகளும் மருமகளும்கூட வேலை செய்கிறார்கள். ''இப்ப ஆர்ட்டினு, மாதா, ஃப்ளவர்லாம் வார்ப்பு வாங்கிப் பண்றோம்...'' என ஆனந்தியக்கா சிரித்தது மூன்றாம் பிறை வெள்ளிக் கீற்று மாதிரி!
இதைச் சொல்லி முடிக்கிறபோதே சுப்புவின் முகம் நினைவுக்குள் வந்துவிட்டது. ரொம்பவும் யதேச்சையாக, சமீபமாய் ஒரு பிற்பகலில், பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் வந்த பஸ்ஸில் சுப்புவைப் பார்த்தேன். மடியில் பெரிய மயிலாட்டப் பொம்மையை வைத்துக்கொண்டு, புகை யிலை போட்டபடி வெளியே வந்தார். நான் பார்த்து விசாரித் ததும், புகையிலைச் சாறு தெளிக்க, என் கைகளைப் பற்றிக் கொண்டார். மெலிதாய் சரக்கு வாசம். ''காயாவூர்ல ஒருதிருவிழா தம்பி... மயிலாட்டம்னு கூப்புட்டிருந்தானுவோ... என்னமோ இன்னமும் நம்மள நெனப்புவெச்சுக் கூப்புடுறானுவோ... நல்ல ஆட்டம் தம்பி...'' என்றார்.
சுப்பு திருவிழாக்களில் 'மயிலாட்டம் மாடாட்டம்’ ஆடுபவர். இன்னமும் அதையே வாழ்க்கையாக வைத்திருப்பவர். அவரைப் பற்றி ஒரு டாகுமென்ட்டரி எடுப்பதற்காக நண்பரோடு சுற்றியபோதுதான் பழக்கம். ஒருகாலத்தில் எங்கு திருவிழா என்றாலும் 'மயிலாட்டம், மாடாட்டம்’ எனப் பரபரப்பாக இருந்தவர். அந்த வழக்கம் எல்லாம் எவ்வளவோ குறைந்துவிட்ட பிறகும், இப்படிப் பொம்மையைத் தூக்கிக்கொண்டு அலைகிறார். தஞ்சாவூர் புது பஸ்ஸ்டாண்டில் அந்தப் பொம்மையோடு அவர் நின்ற கோலம் ஒரு கணம் நெஞ்சை அறுத்தது. ''இதுக்கு வேற பெயின்ட் அடிக்கணும் தம்பி'' என்றார். ''வீட்ல குடுங்க...'' என அரை டஜன் ஆப்பிள் வாங்கிக் கொடுத்துவிட்டு வந்தேன். நான் போய்விட்டேனா என்று பார்த்துவிட்டு, அவர் சாலையைக் கடந்து எதிரே இருக்கிற ஒயின் ஷாப்புக்குள் நுழைவதைப் பார்த்தேன்.

இன்னமும்... இன்னமும் இருக்கிறார்கள். வள்ளுவர் கோட்டம் பிளாட்ஃபார்ம் முழுக்க கிளி ஜோசியக்காரர்கள் உட்கார்ந்து இருக்கிறார்கள். தண்டட்டி குலுங்க, ஒரு கிழவி ''சரி... சரி... பத்து ரூவா குடுத்துட்டு ஒரு டீ வாங்கியா போதும்...'' என யாருக்கோ ஜோசியம் சொல்லிக்கொண்டு இருக்கிறது.
பெப்ஸி, கோக்குகளுக்கு நடுவே, கும்பகோணம் தெரு ஒன்றில் இன்னமும் அழுக்கு வேட்டியோடு பழைய வீட்டில் சோடா தயாரித்துக்கொண்டு இருக்கிறார் ஒரு பெரியப்பா.
மட்ட மதியம் அபார்ட்மென்ட் கதவைத் தட்டி, ''சார்... ஊதுவத்தி வாங்கிக்கங்க சார்...'' என்கிறாள் ஒரு சிறுமி. மீனம்பாக்கம் ஏர்போர்ட்டுக்கு எதிரே உள்ள ஒரு வீட்டில், ஏழெட்டு பெண்கள் ஏதேதோ பேசிக்கொண்டு காது குடைகிற பட்ஸ் ரெடி பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். கையெல்லாம் எரிய எரிய... சீரியல் கதை சொல்லிக்கொண்டே பீடி சுற்றுகிறார்கள் இன்னமும் நம் தோழிகள். 'வீட்டிலேயே காளான் வளர்ப்பு’, 'கலர் மீன்கள் வளர்ப்பு’ என்றெல்லாம் ஆரஞ்சு, மஞ்சள், கறுப்பு - வெள்ளை நோட்டீஸ்களை பஸ்களில் ஒட்டிக்கொண்டு இருக்கிறான் இன்னமும் ஒருவன். சேமியா பால் ஐஸ்களை 'பாம்பாம்’ என விற்றபடி கோடையின் தெருக்களில் சுற்றுகிறார்கள் இன்னமும்.
நெரிசல் மிகுந்த தெருவில் கயித்தைக் கட்டி 'டமக்கு டமக்’என அடித்தபடி நடக்கிறாள் ஒரு குட்டிப் பெண். நாச்சியார்கோவிலில் ராத்திரி எல்லாம் ரேடியோவில் பாட்டைப் போட்டுவிட்டு, 24 மணி நேரமும் சைக்கிளில் ரவுண்டு அடித்துக் கொண்டு இருக்கிறார் ஒருவர். ''மக்கள் டி.வி-ல வந்துருக்கோம்க...'' எனத் தலையைச் சொறிகிறார் அரிச்சந்திரன் வேஷம் கட்டும் பத்மநாபன். டிராஃபிக் மண்டிய சாலையோரம் களிமண் பொம்மை களைப் போட்டுக் காத்திருக்கிறது ஒரு தம்பதி. பஸ் ஸ்டாண்டுகளில் இஞ்சி மரப்பா விற்கிறார்கள் இன்னமும். ஆளாளுக்கு மொபைல் கேமராவோடு அலையும்போது, ''சார்... போட்டோ எடுத்துக்கங்க சார். சூப்பர் குவாலிட் டில பிக்சர் சார்'' என சுற்றுலாத் தலங்களில் பழைய கேமராவோடு துரத்துகிறார்கள் சிலர்.
அன்றைக்கு சாஸ்திரி நகர் சிக்னலில் ஒரு பூம்பூம்மாட்டுக்காரரைப் பார்த்தேன். இன்னொரு நாள் தி.நகர் அபார்ட்மென்ட் ஒன்றில், இடுப்பில் கருக்கருவாளோடு சட்டை போடாமல் வந்த ஒருவரைப் பார்த்தேன். ஒரு ரிக்ஷா வண்டியில் சாய்பாபா படத்தை வைத்துக்கொண்டு பாட்டு போட்டு ஊர் ஊராகப் போகிறது ஒரு குடும்பம். எப்போதும் தூசி படிந்த விளையாட்டுச் சாமான்களைப் போட்டுக் கொண்டு, கோயில் மலை அடிவாரங்களில் ஒருவர் உட்கார்ந்திருக்கிறார். 'இங்கு பைண்டிங் செய்து தரப்படும்’... 'பாட்டுக்கள் பதிந்து தரப்படும்’ என போர்டு மாட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள்.
பெருநிறுவனங்கள் மிகுந்த பகுதியில் சைக்கிளில் கட்டி பருத்திப் பால் விற்கிறான் ஒருவன். ஊரில் இப்போதும் அப்படியே தோளில் மடையான்கள் தொங்க, சைடில் சுளுக்கி சொருகி டி.வி.எஸ்.50யில் வருகிறார் ஒரு குறவர். சந்தன கலர் சுடிதாரில் சைக்கிளில் நின்றபடி, தலையில் உதிர்ந்த கருவேலம் பூக்களைத் தட்டிவிட்ட படி ஒரு பெண் பேசிக்கொண்டு இருந்த போதுதான் வளையல்காரர் நடந்து போனார். செங்கல்பட்டு பக்கம் விடாப் பிடியாக இப்போதும் டூரிங் டாக்கீஸ் நடத்திக்கொண்டு, பழைய படங்கள் போட்டு... கலர் சோடா, முறுக்கு விற்கிறார் ஒருவர்.

எவ்வளவோ காலம் மாறி, வசதிகள் பெருத்து, ஏதேதோ நிகழும்போது 'தென்றல் உறங்கிடும் போதும்’ கேட்டபடி கூடை பின்னிக்கொண்டு இருப்பவரும் மை டப்பா வாங்கும்போது அழுத குழந்தைக்கு கூடையில் இருந்து ஹேர்பின் எடுத்து ஃப்ரீயாகக் கொடுப்பவரும் எவ்வளவு மகத்தானவர்கள்!
வேணியாத்தா, ஆனந்தியக்கா, சுப்பு என நீளும் நினைவுகளில் எப்போதோ எழுதிய கவிதை ஒன்று தலை நீட்டுகிறது...
'இன்னும் இப்பெருநகரில் மர நிழல் பரவிய சாலைகள் இருக்கின்றன
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் கனிந்து தாழ்ந்த பார்வையுடைய கனகவல்லிகள் வசிக்கிறார்கள்
பத்து ரூபாய்க்கு மூன்று பேனா விற்பவர் அபூர்வமாய்ப் பார்த்த ஓட்டு வீட்டில் தண்ணீர் வாங்கிக் குடிக்கிறார்
கோயில் வாசல் சிறுமி மஞ்சள் வெயில் உதிர மலர் தொடுக்கும் நளினத்தைச் சிலர் நின்று பார்த்துச் செல்கின்றனர்
காலமற்ற காலத்தின் மேல் குடித்துவிட்டுக் கிடப்பவனின் உளறல் கேட்டு ஒரு கை சோடா வாங்கி வருகிறது
இளங்காலையில் பள்ளிக்கூட மைதானத்தில் பாட்டி ஒருத்தி தட்டுக்கூடையில் நாவற்பழம் சுமந்து போகிறாள்
மூன்றாவது முறையாகப் பாலியல் தொழிலாளியிடம் சென்று படுக்க மனமின்றித் திரும்பிக் கொண்டிருக்கிறான் ஒருவன்!’
- போட்டு வாங்குவோம்...