மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

உலகப் பொது மொழி எது?

எம்.கணபதி, கடையம்.

உலகில் உள்ள 193 நாடுகளில் வாழும் 700 கோடி மக்களுக்கும் தெரிந்த ஒரே மொழி பாடி லாங்வேஜ்தானா? இல்லை... வேறு ஏதாவது 'பொதுமொழி’ உண்டா?

ஹாய் மதன் கேள்வி - பதில்

'பாடி லாங்வேஜ்’கூட நாட்டுக்கு நாடு மாறும். அதெல்லாம்நிச்சயமே இல்லை. உதாரணமாக, பல்கேரியா, துருக்கி, க்ரீஸ் போன்ற நாடு களில் இட - வலமாகத் தலையசைத்தால் 'யெஸ்’ என்று அர்த்தம். ஸ்ரீலங்காவில்கூட 'ஆமாம்’ என்பதற்கு இட-வலமாகத் தலையசைக் கும் வழக்கம் உண்டு. நம்ம ஊரில் அப்படித் தலையாட்டினால் 'ம்... மேலே சொல்லு!’ என்று அர்த்தம். ஒரு ரஷ்யர் இட-வலமாகத் தலையாட்டினால் 'நோ’. பல்கேரியர் அதேபோல் செய்தால் 'யெஸ்’ - ஒருமுறை இதனால் ஏதோ தப்பாகப் புரிந்துகொண்டு, இருவருக்கும் அடிதடி ஆகிவிட்டது. ஆகவே, உலகப் பொதுமொழி - சிரிப்பும் அழுகையும் மட்டுமே!

ச.ஆ.கேசவன், இனாம் மணியாச்சி.

ஏ,பி,சி. இம்மூன்றும் தவிர்த்த ஆங்கில வார்த்தைகள் நூறு எவை?

நூறு? நீங்கள் சொல்கிற நூறு-ஹன்ட்ரட் (Hundred) என்பதி லேயே ஏ,பி,சி.  கிடையாது.

மஞ்சுதேவன், நவிமும்பை.

கிரிக்கெட் அம்பயர் கையைத் தூக்கி, விரலைக் காட்டுவதற்கும் கிரிக்கெட் வீரர் கையைத் தூக்கி விரலைக் காட்டுவதற்கும் என்ன வித்தியாசம்?

அம்பயர் ஆள்காட்டி விரலைத் தூக்கினால் 'இந்த ஒரு விக்கெட் விழுந்துவிட்டது. நீ அவுட்!’ என்று அர்த்தம். கோக்லி காட்டியது நடுவிரலை! 2,000 வருடங்களாக நடுவிரல் காட்டுவதற்குக் கெட்ட அர்த்தம் இருந்து வருகிறது. ரோமானியர்கள் ஆரம்பித்த வழக்கம். உலகெங்கும் அதற்கு 'உன்னோடு உடலுறவுகொள்வேன் (I'll F...u!)’ என்று அர்த்தம். அரேபிய நாடுகளில் மட்டும் நடுவிரலை 'உல்டா’வாகக் கீழ் நோக்கிக் காண்பிப்பார்கள் (தமிழர்களும்!). பிரான்ஸ் நாட்டில் மட்டும் இதைப் பெரிய தப்பாக எடுத்துக்கொள்வது இல்லை. 'நரகத்துக்குப் போ’ (go to hell) என்று அர்த்தமாம்! கோக்லி நம்ம ஆளு... பிரெஞ்சு அர்த்தத்தில் சொன்ன தாகவே எடுத்துக்கொள்வோம்!

##~##

கோ.விஜயராஜன், விழுப்புரம்.

மன்மோகன் அரசு இந்தியாவுக்கு விபத்தா? ஆபத்தா?

இரண்டும் இல்லை, டிராஃபிக் ஜாம்!

அ.குணசேகரன், புவனகிரி.

தேர்வில் மதிப்பெண்கள் வழங்குவது தேவையா?

என் கேள்வியும் அதுவே! வேண்டும் என்றால், 80 சதவிகிதம் மதிப்பெண்களைத் தாண்டியவர்களுக்கு மட்டும் எவ்வளவு மார்க் என்று அறிவிக்கலாம் (போய்ப் பீத்திக்கொள்ளட்டும்). மற்றவர்கள் அனைவரும் பாஸ். இதுவே என் யோசனை! ஏன் குறைந்த மார்க் எடுத்தவர்களை எல்லாம் 'ஃபெயில்’ பண்ணி 'நீ, மக்கு!’ என்றுசொல்லி அவர்கள் வாழ்க்கையோடு விளையாட வேண்டும்? நான் பள்ளியில் ஆங்கிலம், தமிழ் தவிர, எதிலும் 35 மார்க் தாண்டியது இல்லை. வரலாற்றில் 30தான். சிவப்பு 'இங்க்’கில் கோடிட்டுக் காண்பித்தார்கள். ஆசிரியர் சத்தமாக என் மார்க்குகளை அறிவித்து உருப்பட மாட்டேன் என்றும் முழங்கினார். அதனால், எனக்குத் தாழ்வு மனப்பான்மை வந்து, மன நிலை பாதிக்கப் பட்டு லூஸாக, தெருத் தெருவாக அலைய நேரிட்டு இருந்தால், இப்போது வாசகர்கள் கேள்விகளுக்குப் பதில் எல்லாம் சொல்லி இருக்க முடியுமா? ஏதோ தப்பித்தேன்!

எம்.ஹரிஹரன், சென்னை-56.

ரயில் பயணம் ஒன்றில் ஒரே கம்பார்ட்மென்ட்டில் உங்களோடு நமீதா, அசின், தமன்னா, சமீரா ரெட்டி, அனுஷ்கா, அமலா பால்ஆகியோரோடு மன்மோகன் சிங்கும் வருகிறார். யாருக்குப்

ஹாய் மதன் கேள்வி - பதில்

பக்கத்தில் அமர்ந்து பயணம் செய்வீர்கள்? (எல்லோரோடும் ஒரு மணி நேரம் என்று பதில் சொல்லக் கூடாது!)

சத்தியமாக மன்மோகன் சிங்குடன்தான். அவரிடம் (கோபத்தை அடக்கிக்கொண்டு) கேட்பதற்கு என்னிடம் நிறையக் கேள்விகள் இருக்கின்றன. நடிகைகளுடன் பேசி நான் என்னத்தைக் கிழிக்கப்போறேன்?!

வண்ணை கணேசன், சென்னை-110.

சோகத்திலும் ஒரு சுகம் இருக்கிறது என்கிறார் களே... அது எந்த சுகம்?

திருமணம் பண்ணிக்கொண்ட கையோடு அதை நீங்கள் 'ஃபீல்’ பண்ணியிருப்பீர்களே?!