மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 35

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

ஓர் அலை எழுவதற்குள் இன்னோர் அலை விழுவது மாதிரி உறவும் பிரிவும் எப்போதும் சேர்ந்தேதான் வருகின்றன.

ஒவ்வொரு முறையும் அன்பின் அருமை பிரிவில்தான் புரிகிறது.

ஒரு மாதத்துக்கு முந்தைய இரவில், நண்பர் நாகலிங்கம் பதற்றமாக அலைபேசினார்.

''ஒரு முக்கியமான விஷயம் முருகன்...''

''சொல்லுங்க லிங்கம்...''

''என்னோட காதலைப் பத்திச் சொல்லியிருக்கேன்ல... அதுல கொஞ்சம் பிரச்னைங்க. அவங்க வீட்ல சம்மதிக்க மாட்றாங்க. போராடிப் பார்த்துட்டு, இப்போ என்னை நம்பி வந்துட்டாங்க. இப்போ ரெண்டு பேரும் சேலத்துலதான் இருக்கோம். உடனே கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கோம்.''

''கவனம் லிங்கம்... எல்லாம் நல்லபடியா நடக்கும்'' என்று தைரியம் சொன்னேன்.

வட்டியும் முதலும் - 35

சேலத்தில் இருக்கும் ஒரு நண்பனுக்கு தொலைபேசி, அவர்களுக்கான உதவிகளைச் செய்யச் சொன்னேன். மறு நாள் இருவருக்கும் ஒரு கோயிலில் கல்யாணம் நல்லபடியாக நடந்தது. 'நல்லபடியாக’ என்பது நண்பர்களால். உறவுகளும் சொந்தங்களும் கூடி நடந்திருந்தால்... அது இன்னும் 'நல்லபடியாக’! நண்பர் லிங்கம் சினிமாவில் உதவி இயக்குநர். அனுதினமும் கனவுகளும் யதார்த்தங்களும் போட்டியிடும் வாழ்வில் ஜெயிக்க அலைபவர். இத்தனைக்கும் நடுவே வரம் மாதிரி சத்யப்பிரியா வர, காதல் பூத்துவிட்டது.

வயதாலும் மனதாலும் இருவருமே பக்குவமானவர்கள். வாழ்க்கைபற்றிய புரிதல் உள்ளவர்கள். இருவரும் பரஸ்பரம் வீட்டில் பேசினார்கள். ஆனாலும், பெண் வீட்டில் மறுத்துவிட்டார்கள். லிங்கம் சினிமாக்காரர் என்பது முதல் காரணம். அப்புறம் ஏதேதோ காரணங்கள். நிறையப் பேசிப் பார்த்துதான் இப்படி எங்கோ ஒரு கோயிலில் தனியாகக் கல்யாணம் பண்ணிக்கொண்டார்கள். அடுத்த வாரமே கே.கே. நகரில் வீடு பார்த்து, பால் காய்ச்சிக் குடியேறிவிட்டார்கள்.

பேச்சுலர் லிங்கத்தை எனக்குத் தெரியும். நள்ளிரவு வரை கங்கையம்மன் கோயில் தெருவில் சைக்கிள் டீ தேடியபடி ''செப்பரேஷன்ல ஒரு ஷாட் வரும் பாருங்க...'' எனப் பேசித் திரிந்து, அறை மீள அதிகாலையும் ஆகலாம். கட்டிலில் மடிக்காத கைலி கிடக்கும். இஸ்பேடு வடிவில் தோசை சுட்டு, பூண்டு தொக்குவைத்து இதுவரை காணாத காம்பினேஷனில் டிபன். புத்தகங்கள் இறைந்துகிடக்கும் டாய்லெட். யாரும் இல்லாமல் பூட்டப்பட்ட வீட்டுக்குள்ளும் அணைக்கப்படாமல் ஓடும் ஸ்டார் மூவீஸ் என ஒரு வாழ்க்கை. கூட ஓர் இதயம் வந்துவிட்டால் ஒரே நாளில் ஒருவரின் வாழ்க்கை எவ்வளவு மாறிவிடுகிறது என்பதை இப்போது லிங்கத்தின் வீட்டுக்குப் போன போது உணர்ந்துகொண்டேன்.

இப்போது கே.கே. நகர் வீட்டில் காதலின் இன்னோர் அழகான அடையாளம்போல் வசிக்கிறார்கள். போன வாரம் வீட்டுக்கு சாப்பிடக் கூப்பிட்டிருந்தார்கள். சாப்பிட்டு முடித்துவிட்டு, ''அவங்க வீட்ல பேசிட்டாங் களா லிங்கம்?'' எனக் கேட்டேன். ''சத்யா வீட்லயா... இல்லைங்க...'' என்றபடி மனைவி யைப் பார்த்தார் நண்பர். சட்டென்று அவர் மனைவியின் முகத்தில் சொல்ல முடியாத உணர்வுகள் எழுந்தன. குரல் கொஞ்சம் உடைந்துவிட்டது.

''இல்லைங்கண்ணா... அவங்க இன்னும் சமாதானம் ஆகலை. போன வாரம் அம்மா போன் பண்ணிப் பேசினாங்க. அவங்களுக்கு எங்களைச் சேர்த்துக்கறதுல விருப்பம்தான். சொந்தக் காரங்கதான் ரொம்பக் கோபத்துல இருக் காங்கனு சொன்னாங்க.  வீட்ல இருக்கிற என்னோட துணிமணி, திங்ஸையெல்லாம் கொடுத்துவிடுறேன்னு சொன்னாங்க. அதெல்லாம் வேணாம்னு சொல்லிட்டேன். எங்கப்பாவும் ரொம்ப நல்லவர்ணா. எனக்கு அப்பான்னா உயிரு. அவருக்கும் அப்படித் தான். நாலு பேர் என்ன பேசுவாங்களோங்கிற  ஈகோதாண்ணா அவரைத் தடுக்குது. ஆனா, நான் நிச்சயமா நம்புறேங்கண்ணா... ஒரு நாள் எங்களைப் புரிஞ்சுக்கிட்டு அவங்க வருவாங்கண்ணா. இந்தப் பிரிவும் நாங்க வாழ்ற வாழ்க்கையும் எங்களை அவங்களுக் குப் புரியவைக்கும்ணா'' என அவர் பேசியபோது அழுதுவிடுவார்போல இருந்தது.

'உன் துணிகளையெல்லாம் தந்து விடுறேம்மா...’ என்கிற ஓர் அம்மாவின் குரலும் 'இந்தப் பிரிவு எங்களை அவங்களுக்குப் புரியவைக்கும்...’ என்கிற ஒரு மகளின் குரலும் எவ்வளவு பேசிவிடுகின்றன?

ஓர் அலை எழுவதற்குள் இன்னோர் அலை விழுவது மாதிரி உறவும் பிரிவும் எப்போதும் சேர்ந்தேதான் வருகின்றன.

பிரிவின் கோடை யில் அன்பின் நிழலையும்; அன்பின் நிழலில் பிரிவின் கோடையையும் சுமந்துகொண்டே தான் அலைகின்றன பருவங்கள். ''நிச்சயம் அவங்க வருவாங்கம்மா'' என்று சொல்லி விட்டு வந்தேன்.

சிறு வயதில் எங்கள் வீட்டில் ஒரு பூனை இருந்தது, வெள்ளையும் சாம்பலுமாக. எப்போதும் கத்திக்கொண்டு வீடு முழுக்க சுற்றிக்கொண்டே இருக்கும். ஒளிஞ்சாங்கண்டு விளையாட ஒளியும்போது பத்தாயத்தில் இருந்து வெருண்டு ஓடும். பேபே ஆடும்போது மாட்டுக் கொட்டாயில் இருந்து தெறித்து ஓடும். கத்திரி வத்தல் டின் எடுக்க பரணில் ஏறினால், ரோமம் சுழிக்கக் கொட்டாவி விடும். மீன் குழம்புவைக்கிற நாளில் கூடத்திலேயே குடியிருக்கும். பல நேரங் களில் சமையல் அறை ஜன்னலில் உட்கார்ந்து கொண்டு, அம்மாவையே பார்த்துக்கொண்டு இருக்கும். வீட்டில் எங்கே ஷாட் வைத்தாலும் ஃப்ரேமில் ஏதோ மூலையில் அந்தப் பூனை இருக்கும்.

ஒருநாள் அந்தப் பூனை கர்ப்பம் தரித்தது. இன்னொரு நாள் அதிகாலையில் பத்தாயத்தில் பிலுபிலுவென நாலைந்து குட்டிகளைப் போட்டது. வெயிட் போட்ட உடம்போடு குட்டிகளின் பக்கத்திலேயே உர்ர்ர்ரென உட்கார்ந்திருந்தது. ஒரு வாரத்துக்கு அதன் அராஜகம் தாங்கவில்லை. பிற்பகலில் எல்லாம் தட்ட்டேர் புட்ட்டேரெனப் பால், மோர் தேடிப் பாத்திரங்களை உருட்டிக்கொண்டே இருக்கும். திண்ணைக்கு வரும் தெரு நாய்களோடு ஏக ரகளையாகச் சண்டை கட்டும்.

ராத்திரி எல்லாம் அதுவும் குட்டிகளுமாக ஆர்.ஆர். வாசித்துக்கொண்டே கிடந்தன. ஒருநாள் வீட்டுக்கு வந்த மாமா, ''டேய்... ஏண்டா இதுகள வூட்ல வெச்சுக்கிட்டு சேவண்டி அடிக்கிறீங்க... தரித்திரம்... தரித்திரம்...'' எனத் தூங்க முடியா மல் எழுந்து கத்தினார். தூங்கிக்கொண்டு இருந்த அவர் மேல் தொபுக்கென்று விழுந்து ஓடிவிட்டது பூனை. அதிகாலையில் எழுந்து ''வாடா...'' என என்னை எழுப்பிவிட்டார் மாமா. தாய்ப் பூனையைப் பிடித்து ஒரு மூட்டைக்குள் போட்டுக் கட்டிவிட்டார். ''ங்க பாரு ஆயி... இந்தக் குட்டிங்களை எல்லாம் கேக்குற ஆளுகளுக்குக் குடுத்துவிட்ரு. அதெல்லாம் பொழைச்சுக்கும்...'' என அம்மாவிடம் சொன்னார்.

வட்டியும் முதலும் - 35

''அதுங்க பாவம்... இப்ப எதுக்கு?'' என அம்மா கேட்கும்போதே என்னிடம் மூட்டையைக் கொடுத்து டி.வி.எஸ்.50-ஐக் கிளப்பிவிட்டார் மாமா. அந்த அதிகாலையில் ஆற்றைத் தாண்டி கம்மங்குடி போய் நின்றுகொண்டு, ''மூட்டையைப் பிரிச்சுவுட்றா...'' என்றார். மூட்டையைப் பிரித்ததுமே விருட்டென்று வெளியே குதித்து ஓடி நின்று உர்ர்ரென்று பார்த்தது வெள்ளைச் சாம்பல். ''பார்றா மொறைக்கறத... ஓடு கம்னாட்டி...'' என மாமா விரட்ட, அது ஓடியே போனது. அதன் பிறகு அந்தக் குட்டி களையும் யார் யாருக்கோ கொடுத்துவிட்டோம். அப்போது எதுவும் புரியவில்லை. அது எவ்வளவு பெரிய பாதகம். அந்த அதிகாலை இருளில் கம்மங்குடி ஆற்றங்கரையில் மிரண்டு ஓடிய அந்த தாய்ப் பூனை எங்கே போனது? என்ன ஆனது? அதன் குட்டிகளைப் பார்க்க முடியாமல் பிரிவில் எப்படி எல்லாம் தவித்தது? அந்தக் குட்டிகள் என்ன ஆகின? எதுவுமே தெரியவில்லை!

வாழ்க்கை முழுக்க வெள்ளையும் சாம்பலுமாகக் கண்கள் ஒளிர... ஒரு பிரிவு நம்மைத் துரத்திக்கொண்டே இருக்கும் என்பது இப்போதுதான் புரிகிறது. மாய்ந்து மாய்ந்து நம்மை அன்பு செலுத்துபவர்களின் அருமை அவர்கள் அருகில் இருக்கும்போது நமக்குப் புரிவதே இல்லை. பிரியத்தின் பெருமழையை அவர்கள் பொழியும்போது எல்லாம் குடை பிடித்துக்கொண்டு போகும் கயவர்கள் நாம். மணிக்கு மூணு தரம் போன் பண்ணி ''எங்க இருக்க? என்ன பண்ற..?'' எனக் கேட்டுக்கொண்டே இருக்கும் ஒரு குரல்... சதா தலை வருடத் துடித்துக்கொண்டே இருக்கும் ஒரு கரம்... காய்ச்சலில் கிடந்த அத்தனை நாளும் பக்கத்திலேயே இருந்த ஓர் ஆதூரம்... கேட்கும்போது எல்லாம் கேட்காததையும் சேர்த்துத் தரும் மாகாதல்... எளிதாய்க் கிடைத்துவிடுகிற எதையும் மனசு மதிப்பது இல்லை.

அலட்சியப்படுத்தி, புறக்கணித்துத் திரிவோம். ஒருநாள் நிர்தாட்சண்யமாக நம்மைவிட்டு அவை பிரியும் நேரம் வரும். அப்போது வெறுமையை நம்மால் தாங்க முடியாது. அதுவரை கொட்டிய அன்பெல்லாம் அப்போதுதான் விஸ்வரூபமெடுத்து வந்து நம்மைக் கொல்லும். அந்தப் பிரிவுதான் அன்பின் முழுமையை, அருமையை உணர்த்தித் தவிக்கடிக்கும்.

எனது அத்தையும் மாமாவும் மூன்று பெண் பிள்ளைகளைப் பெற்ற பிறகு இதயம் கசந்து டைவர்ஸ் வாங்கிக்கொண்டு பிரிந்துவிட்டார்கள். 10 வருடங்களுக்கு அப்புறம் மகள்கள் எல்லாம் வளர்ந்துவிட்ட பிறகு ஏதோ ஒருநாளில் போனில் பேசி, சந்தித்துச் சேர்ந்துவிட்டார்கள். இப்போது திரும்ப ஒன்றாகி அதே வீட்டில் வசிக்கிறார்கள். சின்னச் சின்ன சலிப்புகளைத் தவிர, 10 வருடங்களுக்கு முன்பு இருந்த சண்டைகள் எதுவும் இப்போது அவர்களுக்குள் இல்லை. ப்ளஸ் மைனஸ்களை இட்டு நிரப்ப முடியாத வெறுமையை, அவரவருக்கான தேடலை... எல்லாவற்றையும் அந்தப் பிரிவு அறியவைத்துவிட்டது.

பிரிவுதான் எவ்வளவு புதிரானது? எவ்வளவு கொடூரமானது? ''அவளை நெனைச்சாலே எரியுதுரா... பெரிய ஒலக அழகினு நெனைப்பு அவளுக்கு...'' என முதல் நாள் தண்ணியடித்துவிட்டு மனைவி யைத் திட்டும் நண்பர் மறுநாளே, ''அவ மாரி யாரும் வர முடியாதுரா. அவவேறடா...'' எனப் புலம்புகிறார். இரண்டு வருடங்களாக இருவரும் பிரிந்து இருக்கிறார்கள். யாரோ எதுவோ சொல்லிவிட, நம்மைத் திடுதிப் பென்று புறக்கணித்து நடமாடும் நண்பன் எவ்வளவு துயரங்களைத் தருகிறான்?

சமயபுரம் பக்கம் ஒரு பிற்பகலில் லாரியில் மோதி உருண்டுகிடந்த வேனில், காலையில்தான் கல்யாணமாகி மணக் கோலத்திலேயே ரத்தமாகக் கிடந்த மணமக்களைப் பார்த் தேன். திருச்சி ஆஸ்பத்திரியில் அந்த மாப்பிள்ளை செத்துப்போனார்; பலத்த காயத்தோடு அந்தப் பெண் பிழைத்துக்கொண்டார். காலையில் இருந்து அவர்கள் என்னவெல்லாம் பேசியிருப்பார்கள்? கிஃப்ட் கொடுக்க வந்த தோழர்கள் அடித்த கமென்ட்டுகளுக்கு எப்படிச் சிரித்திருப்பார் கள்? காணக் கிடைக்காத புன்னகைகளோடு புகைப்படங்களுக்கு நின்றிருப்பார்கள். பூக்களும் வியர்வையுமாக உரசிய ஸ்பரிசங் களில் எத்தனை எத்தனை கனவுகள் கண்டிருப்பார்கள்? இப்படிச் சில நொடிகளில் அவரை நிரந்தரமாகப் பிரிவோம் என்று அந்தப் பெண் நினைத்திருப்பாரா? ''இனி இவரைப் பார்க்கவே முடியாது...'' என்ற தீராப் பிரிவைச் சுமந்துகொண்டு தினம் தினம் யாரேனும் சுடுகாட்டாங்கரையில் இருந்து திரும்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

வட்டியும் முதலும் - 35

மொட்டைத் தலையோடு, அப்பாவை எரித்துவிட்டு, உடல் நடுங்க வந்து தென்னந்தோப்புப் படித்துறையில் முங்கிய கணம்... ஆறோடா போய்விடும்? பைக் ஆக்ஸிடென்ட்டில் செத்துப்போன பிரேம் சாரை, திருப்பூர் ஜி.ஹெச்-ல் காக்கி கலர் லெதர் ஷூவை வைத்து அடையாளம் சொன்ன நொடிகள் பிரிவின் துயரச் சித்திரம். அரக்கோணம் பக்கத்தில் ரயில் விபத்து நடந்தபோது, ''எந்தம்பி அதுலதான் போனான்... போன் பண்ணா நாட் ரீச்சபிள்னு வருது. கொஞ்சம் போய்ப் பாரேன்...'' எனத் தோழி ஒருத்தி கதற, அங்கே போய் இறந்துபோனவர்களின் பட்டியலுக்காகக் காத்திருந்த கணங்கள் எவ்வளவு பயங்கரமானவை?

தினம் தினம் ரயில் நிலையங்களில், பேருந்து நிலையங்களில், விமான நிலையங்களில் எவ்வளவு பேர் பிரிவின் பொருட்டு தவிக்கும் மனதைச் சுமந்துகொண்டு நிற்கிறார்கள்? முதன்முதலாக வீட்டைவிட்டு விடுதியில் சேரும் நாளில், நம்மை விட வருகிற தகப்பனும் தாயும் ''ஒழுங்கா இருந்துக்கணும்ரா... நேரத்துக்குச் சாப்பிட்டுக்கிட்டு சேட்ட பண்ணாம இருந்துக்கணும்ரா...'' எனச் சீமாட்டி கடைப் பையில் சீடை குடுத்துவிட்டுப் போன கொஞ்ச நேரத்துக்கெல்லாம் நெஞ்சு கனத்துப் பயமாகி அழுகை முட்டாதவர்கள் யாரும் இருக்கிறோமா? ரயில்களிலும் மலையடிவாரங்களிலும் பேருந்து நிலைய பாத்ரூம்களிலும் மண்டபங்களிலும் சேர்ந்து சேர்ந்து எழுதிக்கிடக்கும் பெயர்களில் இருப்பவர்கள் எல்லாம் இப்போதும் சேர்ந்திருக்கிறார்களா... பிரிந்திருக்கிறார்களா? பணம், தொழில், தேடல், காதல், நட்பு என எங்கெங்கும் பிரியங்களாலும் பிரிவுகளாலும் நிறைந்துஇருக்கிறது பிரபஞ்சம்!

சமீபத்தில் கனடாவில் இருந்து ஒரு நண்பர் என்னைப் பார்க்க வந்திருந்தார். ஒரு நாள் முழுக்க அவரோடு இருக்க வேண்டும் என்று முன்பே கேட்டுக்கொண்டார். ''எனக்கு என்ன நண்பரே அப்பாய்ன்மென்ட்..?'' எனச் சிரித்தால், ''இருந்தாலும் பிஸியா இருப்பீங்கள்ல...'' என்றார். ஒரு நாள் முழுக்க சென்னையில் பல இடங்களுக்குச் சென்றோம். அவருக்குப் பிடித்த எழுத்தாளர் கள் வீடுகளுக்கு அழைத்துப்போனேன். ஈழத்தில் அவருடை பால்யம், குடும்பம், இயக்கம், காதல், ஒரு யுத்த நாளில் அங்கே இருந்து வெளியேறியது பற்றி எல்லாம் அந்த நாள் முழுக்கப் பேசிக் கொண்டே இருந்தார். இரவு அவர் தங்கி இருந்த ஹோட்டலில் அவரைவிட்டு வரப் போனேன்.

அறைக்கு வந்ததும் அவர் அணிந்திருந்த முழுக்கைச் சட்டையைக் கழற்றினார். பகீரென்றது. அவர் உடம்பு முழுக்க வெந்து போன தழும்புகள். புன்னகைத்தபடியே இருந்த அவர் முகத்துக்கு நேரெதிராக இருந்தது அந்த உடம்பு. நான் பார்ப்பதைப் பார்த்துவிட்டு அவர், ''இதுவா... யுத்த நாளிலே ஊரைவிட்டு வந்தேனென்டு சொன்னேனில்லையா... அன்றைக்கு நெருப்பிலே மாட்டிக்கொண்டன்...'' என்றார் சிரித்தபடி. மறுபடியும் ஒரு முழுக்கை டி-ஷர்ட்டை எடுத்து மாட்டிக்கொண்டு அமர்ந்தார். ஆனால், அப்போதும் மறையாமல் என் கண்களுக்குத் தெரிந்தன... நமது உலகம் உணரவே முடியாத பிரிவின் தீரா வடுக்கள்!

- போட்டு வாங்குவோம்...