மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 36

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

சைதாப்பேட்டை பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டு, ''பாஸ்... பாண்டிச்சேரில இருக்கேன்'' என்பதுபோல் எத்தனை பொய்கள்... ''நான் மீட்டிங்ல இருக்கேன்னு கட் பண்ணு'' என்பதுபோல் எவ்வளவு சமாளிப்புகள்...

'ப்ரிங் ஒன் மசால் தோசா!’ - செல்போன்கள் வராமல், பேஜர் வந்திருந்த புதிது. மெசேஜ்கள் மட்டுமே வரக் கூடிய பேஜர்களே அப்போது பெரிய அதிசயமாக இருந்தன.

வம்பாடு பட்டு நான் ஒரு பேஜர் வாங்கினேன். அதில்தான் தினமும் சாயங்காலமானால், எனது மேன்ஷன் ரூம்மேட் கணேசனின் மேற்சொன்ன மெசேஜ் வந்துவிழும். அந்த மெசேஜைக் கண்டாலே, எனக்கு ரத்தம் கொதிக்கும். ''யோவ் கணேசா...  பேஜர்ங் கிறது எவ்ளோ பெரிய டெக்னாலஜி... அதுல போயி 'ப்ரிங் மசாலா தோசா... பூரிக் கெழங்கு’னு தினம் கடுப்படிக்கிற. இனிமே, இந்த மாதிரி மெசேஜ் அனுப்புன... மிதி வாங்கப் போற பாரு!'' எனக் கொந்தளிப்பேன்.

ஆனாலும், மறுநாளே 'ப்ரிங் டூ பனானாஸ்’ என ஸ்க்ரோலிங் ஓடும். அந்த பேஜரை சைடு பெல்ட்டில் சொருகி, தேவையே இல்லாமல் அவ்வப்போது பொது இடங்களில் ஸ்டைலாக எடுத்துப் பார்ப்பது... பஸ்ஸில் சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு பட்டன்களை அழுத்திக்கொண்டு இருப்பது... இரவு, ரூமில் அதைத் துடைத்துவைத்துவிட்டு அவ்வப்போது பார்த்துக் கொள்வது...  கணேசன் தொட வந்தால் அவனை விரட்டி அடிப்பது எனக் கொஞ்ச நாளைக்கு பேஜார் பண்ணித் திரிந்தேன்.

ஒருநாள் திடுதிப்பென செல்போன்கள் என்ட்ரி. மை.பா. அண்ணனுடன் சரத்குமாரைப் பேட்டி எடுக்கப் போகும்போதுதான் முதன் முதலில் அதைப் பார்த்தேன். 'வாகை சூட வா’ செங்கல் மாதிரி ஒரு வஸ்துவை வைத்துக்கொண்டு வெட்டவெளியில் நின்று சரத்குமார் அதில் பேசிக்கொண்டு இருந்தார். ''இதாண்டா செல்போனாம்...'' என்றார் மை.பா. அண்ணன் ஹஸ்கி வாய்ஸில். எனக்கு செல்லூர் நெல்லுக் கடை ராமதாஸ் வீட்டில் ஒன்றரை டன் வெயிட்டில் உட்கார்ந்திருக்கும் கறுப்பு போன் நினைவுக்கு வந்தது. சுத்துப்பட்டில் அந்த ஒரு வீட்டில்தான் போன் இருந்தது.

வட்டியும் முதலும் - 36

ஆத்திர அவசரம் என்றால் பெர்மிஷன் கேட்டு, அதில் ஒரு நம்பரைச் சுத்துவதற்குள் கடைசி பஸ் போய்விடும். 'கிணிங்கிணிங்கிணிங்’ என அந்த போன் அடிப்பது அய்யனார் கோயிலில் மணியாட்டுகிற மாதிரியே இருக்கும். இப்போது நினைவு கலைந்து சரத்குமாரின் கையில் இருந்த செங்கல்லைப் பார்த்து எனக்குப் புல்லரித்தது. அதன் பிறகு, செல்போன்கள் கிடுகிடுவெனப் பரவத் தொடங்க, எனது பணக்கார நண்பன் ஒருவன், ஒரு செங்கல்லை வாங்கினான். அவன் ஒரு காதலில் வேறு இருந்தான். அப்போது அவுட்கோயிங், இன்கமிங் எல்லாவற்றுக்கும் காசு. இன்கமிங்குக்கே நிமிஷத்துக்கு எட்டு ரூபா. அப்படியும் அவன் எப்போது பார்த்தாலும் செல்லில் கடலை போட்டபடியே இருந்ததில், அந்த மாத பில் மட்டும் 26 ஆயிரம் ரூபாய் வந்தது. அவனையும் அங்கங்கே செல்போனும் கையுமாகப் பேசிக்கொண்டு நடப்போரையும் பார்க்கும்போது எல்லாம் எனக்கு, 'வாழ்க்கைல எப்பிடியாவது ஒரு செல்போன் வாங்கிரணும்ரா...’ என்ற லட்சிய வெறி ஏறியது. ஆறு ஆயிரத் துக்கு ஒரு நோக்கியா வாங்கிய நாளில்தான், ஜென்ம சாபல்யம் அடைந்தேன்.

லேண்ட் லைனில் நானே என் நம்பருக்கு போன் அடித்து, இன்னொரு காதில் வைத்து எக்கோவில் 'ஹல்லோ... ஹல்லல்லோ’ எனப் பரவசமானேன். பொது இடத்தில் நின்று மொபைலில் பேசினாலே, வி.ஐ.பி. ஆகிவிட்ட மாதிரி ஒரு ஃபீலிங். 'ப்ளிங்’ என ஒரு மெசேஜ் வந்து விழுந்தாலே... பூப்பூக்கும். கொஞ்ச நாட்கள் கழித்து ரூமில் நக வெட்டி தேடும்போது பார்த்தால், கேட்பாரற்று கிடந்தது பழைய பேஜர்... 'போங்கடா போங்க’ என்கிற எப்போதைக்குமான மெசேஜுடன்!

யாரைப் பார்த்தாலும் செல் நம்பரைக் கொடுத்து, 'எப்ப இருந்தாலும் கூப்பிடுங்க சார்’ எனப் பித்தாய்த் திரிந்ததும் எந்த நாளில் போரடித்தது? இப்போது 'நோ மேன்ஸ் லேண்ட்’ பட க்ளைமாக்ஸில், கண்ணிவெடியில் கால் வைத்துவிட்டு, எடுத்தால் வெடித்துவிடும் என்பதால்... அப்படியே கிடப்பவனை மாதிரி ஆகி விட்டது மொபைலுக்கும் நமக்குமான உறவு.

சைதாப்பேட்டை பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டு, ''பாஸ்... பாண்டிச்சேரில இருக்கேன்'' என்பதுபோல் எத்தனை பொய்கள்... ''நான் மீட்டிங்ல இருக்கேன்னு கட் பண்ணு'' என்பதுபோல் எவ்வளவு சமாளிப்புகள்...

''மொத்தம் மூணு சிம் கார்டு தலைவா... இது பி.எஸ்.என்.எல்...'' என்பதுபோல் எவ்வளவு தலைமறைவு கள்... ''ஒரு மாசத்துக்கு செல்லை ஆஃப் பண்ணி வீசிட்டு, ஸ்க்ரிப்ட் எழுதப் போறேன்...'' என்பதுபோல் எவ்வளவு தயாரிப்புகள்... ''எத்தனை கால் பண்றது... ஏன் எடுக்கலை?'' என்பதுபோல்எத்தனை ரகளைகள்... ''ப்ளீஸ் சார்... வேலையா இருக்கேன் அப்புறம் கூப்பிடுங்களேன்'' என்பதுபோல் எவ்வளவு இம்சைகள்!

போன வாரம், வெகு நாட்களுக்குப் பிறகு அந்த 26 ஆயிரம் ரூபாய் பில் பார்ட்டி நண்பனைப் பார்த்தேன். ''உன் நம்பர் என்னடா? குடு...'' என்றதற்கு, ''இல்ல மாப்ள... நான் மொபைல் யூஸ் பண்றதில்ல...'' என்றான். ''ஏண்டா..?'' என்றால் சிரித்தபடி சொன்னான், ''இப்ப எல்லாம் மொபைல் இல்லைன்னாதான் மாப்ள அவன் வி.ஐ.பி.!''

இப்போது ஃபேஸ்புக் ஃபீவர் உலுக்கி எடுக்கிறது. ''தண்டையார்பேட்டைல டிராஃபிக்ஜாம்...'' என ஆன் தி வேயில் யாராவது ஸ்டேட்டஸ் போட்டால், அடுத்த செகண்டே, ''நுங்கம்பாக்கத்துல டொமட்டோ ஜாம் வாங்கிட்டு இருக்கேன் பாஸ்'' எனப் பதில் கமென்ட்டுகள் பறக்கின்றன. சும்மா இருக்க முடியாமல் மூணு வருஷத்துக்கு முன்பு மூணாறு போனபோது எடுத்த போட்டோவை எல்லாம் அப்லோட் பண்ணிவிட்டு, எத்தனை லைக்ஸ், எத்தனை கமென்ட்டுகள் எனப் பார்க்கிற பரவசத்திலேயே, பாதி நாள் காலியாகிவிடுகிறது.

அணு உலையில் இருந்து '3’ பட விமர்சனம் வரை ஒரு ரவுண்டு வந்தால், தலை கிறுகிறுக்கிறது. நார்வே, கனடா, சின்னமனூர் என ஒரே நேரத்தில் மூன்று பேர் சாட்டிங்கில் 'கமான்... கமான்’ என்கிறார்கள். ''பெரியார் என்ன சொன்னாரு தெரியும்ல...'' என ஒருவர் ஆரம்பித்தால், ''இங்க என்ன சொல்லுது... சின்ன சில்க்கு, சின்ன சில்க்குனு சொல்லுதா...'' என்பது வரை தெளியவைத்து தெளியவைத்து அடிக்கிறார்கள்.

ரெண்டு, மூணு மணி நேரத்துக்கு ஒரு முறை சிஸ்டத்தில் மேயாமல் இருக்க முடியவில்லை. எந்நேரமும் ஃபேஸ்புக்கிலேயே கிடக்கும் ஒரு நண்பரைக் கொஞ்ச நாளாக ஆளையே காணோம். நேற்று போனில் வந்தபோது, ''என்னங்க எஃப்.பி-ல ஆளையே காணோம்?'' என்றேன். ''அய்ய... அது போரடிச்சுருச்சுங்க!'' என்கிறார். ''ஏங்க..?'' என்றால், ''நேரத்தைக் கொன்னுறுதுங்க... அதான் எஸ்கேப்'' என்கிறார். ''ஏங்க... எஃப்.பி-லதான் எகிப்து புரட்சிலாம்நடந்து இருக்கு...'' என்றால், ''புரட்சி நடக்கறது இருக்கட்டுங்க... எனக்கு மொதல்ல வேலை நடக்கணும்ல...'' எனச் சிரிக்கிறார்.

நமக்கு எல்லாமே போரடித்துவிடுகிறது. 'சன் டி.வி-யின் தமிழ் மாலை’ என்ற குரல் எவ்வளவு குதூகலமாக இருந்தது ஒரு நேரத்தில். கேபிள் வந்த புதிதில் டி.வி. பார்ப் பதே வேலையாகக்கிடந்தது எவ்வளவு பரவசமாக இருந்தது? இப்போது 10 நிமிஷத்தில் 17 சேனல்கள் மாற்றிவிட்டு, அதையும் அணைத்துவிட்டு வாக்கிங் கிளம்பிவிடுகிறோம். ஆட்டோவில் போகும் போது 12-பி-யில் 'ஹோ££££...’வென ஃபுட்போர்டு அடித்துப் போகும் பையன்களைப் பார்த்தால் தோன்றுகிறது... ஒரு நேரத்தில் இப்படி பஸ்ஸில் ஃபுட்போர்டு அடித்துப் போக எவ்வளவு பிடித்தது? அந்த சாகசத்துக்கும் சுவாரஸ்யத்துக்கும் மனசு எவ்வளவு ஏங்கியது? இப்போது பைக் கதறக் கதற... அதில் போகிறவர்களைக் கண்டாலே, 'எதுக்கு இந்தக் கொல வெறி’ எனத் தோன்றுகிறது. சைட் அடிப்பதையே குறிக் கோளாகக்கொண்டு, வீட்டில் இருந்து கிளம்பிய நாட்களும் இருந்ததே... பெண் களைப் பின்தொடர்வதும் ஓரமாக நின்று ஒரு சைஸாகப் பார்ப்பதும், பார்வை உரசும் மின்னல் நொடியில் வயலின்கள் பிளிறுவதுமாக இருந்த நாட்கள் இப்போது போரடித்துவிட்டன.

வட்டியும் முதலும் - 36

ஒரே ஒரு பார்வை... சிறு வார்த்தைக்குத் தவம் இருந்த காதல் எல்லாம் கொஞ்ச காலத்தில் எவ்வளவு பேருக்குப் போரடித்துவிடுகிறது? ''உனக்காக எதை வேணும்னாலும் விட்ருவேம்பா'' என்றவர் இப்போது, ''வேலையா இருக்கேன்றன்ல... டூ டேஸ் என்னை விட்றேன்...'' என எரிந்து விழுவது எதனால்? எங்கே, எப்போது, என்ன சாப்பாடு கிடைக்கும் எனத் தேடித் தேடிப் போய்ச் சாப்பிட்டதும் ஒருகட்டத்தில் போரடிக்கிறது. ''அய்யய்யோ! இந்தத் தெள்ளவாரி வாழ்க்கை போரடிக்குதுப்பா... சம்சாரி ஆகிரணும்பா'' எனக் கல்யாணம் பண்ணிக்கொண்டவன், கொஞ்ச காலத்திலேயே வந்து, ''கல்யாணம் மட்டும் பண்ணிக் காத மச்சான்... இப்பிடியே ஜாலியா இருந்துரு...'' என்றபடி என் அறையில் துண்டை விரித்துப் படுக்கிறான். குடி, கொண்டாட்டம், கூத்து எனத் திரிந்தவர்கள் போரடித்து, சாமியாராகிவிடுகிறார்கள். கெட்டது பண்ணியே போரடித்து நல்லது பண்ணுகிறார்கள் சிலர். வேலை, உறவு, ரசனை... எல்லாவற்றிலும் ஏதோ ஓர் இடத்தில் அயர்ச்சியாகிவிடுகிறது நமக்கு.

சமீபத்தில் நண்பர் ஒருவரோடு சேர்ந்து யோகா வகுப்புக்குப் போனேன். கூடவே, தியானமும் உண்டு. 60 வயது இருக்கும் யோகா மாஸ்டருக்கு. முதல் நாள் வகுப்பில் அந்த மாஸ்டர், வந்திருந்த ஒவ்வொருவரிடமும் அவர்களைப் பற்றி பேசச் சொன்னார். ஒருவர் எழுந்து, ''எனக்கு லைஃபே போரடிக் குது மாஸ்டர். அதே வேலை... அதே முகங்கள்... ரொட்டீனா இருக்கு. அதனாலதான் இந்த கிளாஸுக்கே வந்தேன்...'' என்றார். இன்னும் சிலரும் இந்த 'லைஃப் போரடிக்குது’ என்பதையே சொன்னார்கள்.

அந்த மாஸ்டர் மறுநாள் கிளாஸுக்கு நடுவே   15 நிமிடம் ஓடும் குறும்படம் ஒன்றைப் போட்டு, எல்லோரையும் பார்க்கச் சொன்னார். அந்தக் குறும்படம் இரும்புப் பட்டறையில் வேலை செய்கிற ஒருவனைப் பற்றியது. 15 நிமிடமும் அவன் அந்தப் பட்டறையில் இரும்பு அடிப்பதை மட்டுமே காட்டி, முடித்துவிட்டார்கள். ''எப்பிடி இருக்கு..?'' என்றார் மாஸ்டர். ''அய்யோ! செம போர் மாஸ்டர்...'' என அலறினார்கள். உடனே அந்த மாஸ்டர், ''15 நிமிஷம் பார்க்கறதுக்கே உங்களுக்கு இவ்வளவு போரடிக்குதே... இதையே வாழ்க்கையா வாழ்ற அவனுக்கு எப்பிடி இருக்கும்?'' என்றார். எனக்குத் தடக்கென்றது.

எதையும் அறியாமல், இயலாமல் இப்படி எத்தனை எத்தனை எளிய மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதை எவ்வளவு சுருக்கமாகச் சொல்லிவிட்டார்? சத்யஜித் ரேவின் படம் ஒன்றில் ஒரு பெண் ஜன்னல் வழியே தெருவைப் பார்த்துக்கொண்டு இருக்கிற ஷாட் மட்டும் 10 நிமிடங்கள் வரும். பார்க்கவே போரடிக்கும். அதுபற்றிக் கேட்டபோது, ''அந்தப் பெண்ணோட பல வருஷத்து வெறுமையையும் தனிமையையும் நான் எப்படித்தான் உங்களுக்கு உணர்த்துவது..?'' என்றார் ரே!

அட, இந்த பால்ராஜ் அண்ணாச் சியை எத்தனை வருடங்களாக இதே கடையில் பொட்டலம் கட்டுகிற சித்திரத்திலேயே பார்க்கிறேன். காலையில் கடை திறந்தால், ராத்திரிக்கு எண்ணெய், புண்ணாக்கு வாசத்தோடு வீடு மீள்வது எவ்வளவு காலமாக நடக்கிறது? யாழினி அக்கா... அதிகாலை 4 மணிக்கு அடுப்பு மூட்டி, நள்ளிரவில் மாவு ஆட்டி இந்த மெஸ் வாழ்க்கையை எவ்வளவு வருடங்களாக வாழ்கிறாள்? 20 வருடங்களாக அதிகாலை 4 மணிக்கும் பிற்பகல் 3 மணிக்குமாக டெப்போவுக்கு வந்துவிடுகிற பால்கார மணிக்கு போரே அடிக்காதா? எப்போது பார்த்தாலும் யாரும் வராத பேக்கரியில் கொட்டாவி விட்டபடியே உட்கார்ந்து இருக்கும் கனியப்பா... ஒரு குயர் நோட்டில் கோலம் வரைந்தபடியே பி.சி.ஓ. பூத்தில் உட்கார்ந் திருக்கும் பெரியம்மா... ஒரு நாள்கூட லீவு போடாமல் 35 வருடங்களாக ரயில்வேயில் சிக்னல் மேனாக இருக்கும் சண்முகம் சார்... ஒரே வேலை... வாழ்க்கை... அனு தினங்கள் என எத்தனை எத்தனை பேர் இருக்கிறார்கள்!

சபரிமலை போயிருந்தபோது, வழியில் ஓர் இடத்தில் அன்னதானச் சாப்பாடு வாங்க நின்றேன். வயதான முதியவர் ஒருவர் இரண்டு தட்டுக்களில் சாப்பாடு வாங்கிக்கொண்டு நடக்க முடியாமல் நின்றார்.

''தம்பி ஒரு உதவி... இந்தத் தட்டைக் கொஞ்சம் கொண்டாந்து தர முடியுமா?'' என்றார்.

அவரோடு போனேன். கொஞ்சம் தள்ளி விரிப்பில் ஒரு மூதாட்டி உட்கார்ந்து இருந்தார். இருவருக்குமே 70 வயதுக்கு மேல் இருக்கும். ஒரு தட்டை மூதாட்டியிடம் வைத்தேன். பக்கத்திலேயே இவர் உட்கார்ந்துகொண்டார்.

''தம்பி... நீங்களும் வாங்கிட்டு இப்பிடி வாங்க...'' என்றார். ''ந்தா... பொரியலையும் சேத்துச் சாப்பிடு...'' என அந்தப் பாட்டி யிடம் பேசிக்கொண்டே இருந்தார். அவர்களோடு சாப்பிட்டுவிட்டு, அவர்களுடனே சரங்கொத்தி வரை நடந்துபோனேன்.

இருவரும் கணவன் - மனைவி. ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடியே நடந்து வந்தார்கள். நான்கு பிள்ளைகள் இருந்தும் யார் வீட்டிலும் இருக்கப்பிடிக்காமல், திருச்சியில் இருக்கிற முதியோர் இல்லத் துக்கு வந்துவிட்டார்கள். ''அவங்களுக்கு அப்பா - அம்மாவைப் போரடிச்சிருக்கு... நாம யாருக்கும் பாரம் ஆயிரக் கூடாது இல்லையா? அதான் வந்துட்டோம். ரெண்டு பேரும் சந்தோஷமாத்தான் இருக்கோம். இவளுக்கு நான்... எனக்கு இவ... இதோ அய்யப்பனைப் பார்க்க ரெண்டு பேரும் சேர்ந்து வர்றது இது அஞ்சாவது வருஷம்!'' என்றார்.

கோயிலுக்குப் போய்விட்டுத் திரும்பும் போது, நெய்த் தேங்கா கொளுத்துகிற இடத்துக்குப் பக்கத்தில், நசநசவென நிரம்பிக்கிடக்கிற கூட்டத்துக்கு நடுவே அந்தத் தம்பதி கைகோத்தபடி உட்கார்ந்து இருந்தார்கள்.

இந்த இடத்தில் ரே சொன்னது மாதிரி அந்த ஷாட்டை 10 நிமிடங்கள் வைக்கிறேன். எனில், காலாகாலமும் உண்மையான அன்பு போரடிக்குமா என்ன?                      

- போட்டு வாங்குவோம்...