மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மூங்கில் மூச்சு! - 03

Moongil Moochu series by Suga
News
Moongil Moochu series by Suga ( மூங்கில் மூச்சு - சுகா )

சுகா

ம்மன் சந்நிதி யில் எங் கள் வீட்டுக்கு எதிரே எங்கள் ஆச்சிக்குச் சொந்தமான இரண்டு வீடுகள் இருந்தன. அவற்றில் ஒன்று ஒரு குச்சு வீடு. அதாவது அளவில் சிறிய, ஒரே ஒரு அறைகொண்ட வீடு. அங்கு குடியிருந்த ராஜேஸ்வரி அக்காவுக்குக் கல்யாணமாகி அவள் சென்னைக்குச் சென்ற பிறகு, பரமசிவம் அண்ணன் அந்த குச்சு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டார். பரமசிவம் என்பது அவர் பெயராக இருந்தாலும், 'சிவாஜி பரமன்’ என்று சொன்னால்தான், யாருக்கும் தெரிய வரும். அவருக்கேகூட!

குள்ளமணி என்று ஒரு நடிகர் இருக்கிறாரே... அவரைவிட 'சிவாஜி’ பரமன் அண்ணன் ஒரு நான்கு இஞ்சுகள் உயரமாக இருப்பார். எந்தவிதமான அந்நிய வண்ணக் கலப்பும் இல்லாத சுத்தமான கறுப்பு. முகத்தில் தடிமனான கறுப்பு ஃபிரேம் கண்ணாடி. 'ஊட்டி வரை உறவு’, 'வசந்த மாளிகை’ சிவாஜிபோன்று டைட்டாகவே சட்டை அணிந்திருப்பார். தொளதொள பெல் பாட்டம் பேன்ட்டும், அபூர்வமாக வேஷ்டியும் உடுத்துவது உண்டு.

மூங்கில் மூச்சு!
மூங்கில் மூச்சு!

சிவாஜி பரமன் அண்ணன் குடியிருந்த குச்சு வீட்டில் ஒருநாள் 'ரோஜாவின் ராஜா’ சிவாஜி ரசிகர் மன்றம் உருவானது. கலர் கலராக அலங்காரப் பேப்பர்கள், சுருள் சுருளாக வெட்டி ஒட்டப்பட்டு இருந்தன. அந்தச் சிறிய வீடு எங்கும் சிவாஜி பட போஸ்டர்களும், புகைப்படங்களும் இறைந்து, நிறைந்துகிடந்தன. எந்தச் சமயம் அங்கு போய்ப் பார்த்தாலும், சிவாஜி பரமன் அண்ணனும், அவரது நண்பர்களும் பரபரப்பாக ஏதோ செய்துகொண்டு இருப்பார்கள். கோடு போட்ட ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தில் சிவாஜி பரமன் அண்ணன் ஏதோ சீரியஸாக யோசித்து எழுதிக்கொண்டு இருப்பார். எப்போதாவது உள்ளே சென்று எட்டிப் பார்த்தால், 'தம்பி, அண்ணனைத் தொந்தரவு பண்ணக் கூடாது. நெறைய சோலி இருக்கு. இந்தா இந்த புஸ்தகத்தைப் படி’ என்று சொல்லி ஒரு புத்தகத்தைத் தருவார்.

'சாகுலு, தம்பிக்கு ஒரு டொரினோ வாங்கிட்டு வா!’

மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து எழுத ஆரம்பிப்பார். அட்டையில் 'நடிகர் திலகம், கலைக் குரிசில், பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் அவர்களின் சாதனை மலர்’ என்று கொட்டை எழுத்தில் போட்டு இருக்கும் புத்தகத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பிப்பேன். சிவாஜி கணேசனின் முதல் படமான 'பராசக்தி’யில் தொடங்கி ஒவ்வொரு படமும் வெளியான தேதி, தியேட்டர்களின் பெயர், ஓடிய நாட்களின் விவரம், மற்றும் போஸ்டர் டிசைன்கள் என சிவாஜியைப் பற்றிய விவரங்கள் நிறைந்து இருக்கும்.

சிவாஜியின் படங்கள் ரிலீஸ் ஆகும் தினங்களில், தியேட்டர் வாசலில் சிவாஜி பரமன் அண்ணன் கிட்டத்தட்ட 'சிவாஜி’ மாதிரியே நடந்துகொள்வார். அவரைச் சுற்றிலும் ஒரு கூட்டம் நிற்கும். கர்லிங் குருவிக் கூடு முடி கலையாமல், கூலிங் கிளாஸ் போட்டபடி ஸ்டைலாகத் தன் மன்ற நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருப்பார். படம் போடுவதற்கு முன் 'ரோஜாவின் ராஜா’ சிவாஜி ரசிகர் மன்றத்தின் சார்பாக, சிவாஜி பரமன் அண்ணன் நம்மை ஸ்லைடு மூலம் வரவேற்பார். அப்போது சிவாஜி பரமன் அண்ணனின் நண்பர்கள் பலமாகக் கை தட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்வார்கள். அவர்களுக்கு நடுவே அண்ணன் எந்தவிதமான ஆர்பாட்டமும் இல்லாமல், அமைதியாக கூலிங் கிளாஸைக் கழற்றாமல் சோஃபா டிக்கெட்டில் உட்கார்ந்திருப்பார்.

'தொலைவில் புணரும் தண்டவாளங்கள் அருகில் போனதும் விலகிப் போயின’ என்ற கவிதையை எழுதிய கவிஞர் கலாப்ரியா, தன் இள வயதில் ஒரு தீவிர எம்.ஜி.ஆர். ரசிகராக இருந்திருக்கிறார். 'நிருத்தியச் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம் சார்பாக ஸ்லைடு மூலம் 'அன்பே வா’ திரைப்படம் பார்க்க வந்த எம்.ஜி.ஆர். ரசிகர் களை வரவேற்றதைத் தனது 'எட்டயபுரம்’ வலைப்பூவில் அவரே எழுதி இருக்கிறார். திருநெல்வேலி ஊரில் முதன்முதலாக இப்படி ஸ்லைடு போட்ட பெருமை, கவிஞர் கலாப்ரியா வையே சாரும்.

'மனசு சரியில்லேன்னா, தலைவர் படப் பாட்டு கேஸட்டப் போட்டு ஒரு மணி நேரம் கேட்டாப் போதும். உற்சாகமாயிருவோம்லா!’ கபாலி மாமாவின் நிரந்தர வாக்கு இது.

'இதய வீணை’ எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தின் செயலாளராகப் பணியாற்றிய கபாலி மாமா, பிற்காலத்தில் 'அலைகள் ஓய்வதில்லை’ பட ரிலீஸுக்குப் பின், 'நெல்லை மாவட்ட ராதா நற்பணி மன்றத்தின்’ செயலாளராகவும் சிறப்பாகச் செயலாற்றினார். அதற்குச் சான்றாக, நடிகை ராதாவுடன் அவர் எடுத்துக்கொண்ட வண்ணப் புகைப்படம், இன்றைக்கும் மாமாவின் ஆல்பத்தை அலங்கரிக்கிறது.

மூங்கில் மூச்சு!
மூங்கில் மூச்சு!

ள்ளி இறுதி நாட்களில் நாங்கள் 'கமல்’ ரசிகர்களாக இருந்தோம். ராயல் டாக்கீஸில் 'தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தை கணக்குவைத்துக்கொள்ளாமல் மீண்டும் மீண்டும் பார்த்தோம்.' வீட்டுப் பாடம்லாம் செய்வேளா, எப்பிடிடே?’ - டிக்கெட் கிழிப்பவர் ஒருமுறை கேட்டார்.

படப் பெட்டி வருவதற்கு முன்பே தியேட்டர் வாசலில் காத்துக்கிடப்பதில் ஆரம்பிக்கும் எங்கள் தவம். 'திருச்செந்தூர்ல பூஜை முடிஞ்சுட்டு. பெட்டி பாளையங்கோட்டப் பக்கம் வந்துட்டாம்!’ - 'காக்கிச் சட்டை’ கமல் ரசிகர் மன்றச் செயலாளர் 'கமல்’ முப்பிடாதி சொல்லுவார்.

அப்போதைய கமல் எந்தத் தோற்றத்தில் இருக்கிறாரோ, அந்தத் தோற்றத்தில் சிலபல கமல் ரசிகர்கள் தியேட்டர் வாசலில் நடமாடுவார்கள். தீவிர இலக்கிய ரசிகரும், 'வண்ணை வாசகர் இலக்கிய வட்டம்’ நடத்திக் கொண்டு இருந்தவருமான சுந்தரம் அண்ணன் அந்த வகையைச் சேர்ந்தவர். 'தேவர் மகன்’போது அதே கிடா மீசை, வேஷ்டி, சட்டையில் நடமாடினார். 'நாயகன்’ டைமில், மழுங்கச் சிரைத்து, அரைக்கைச் சட்டை மடக்கிவிட்டு, தொளதொள பேன்ட் அணிந்து மிரட்டியவர். 'சத்யா’ சமயத்தில் மொட்டைத் தலையும், அழுக்கு ஜீன்ஸும். 'ஹே ராம்’ ரிலீஸானபோது சந்நியாசி தாடி, ஜடாமுடி. நல்லவேளை, 'பதினாறு வயதினிலே’ யின்போது, நான் சின்னப் பையன் என்பதால், அப்போது சுந்தரம் அண்ணன் 'அந்த உடை’ அணிந்துதான் மார்க்கெட்டுக்கு எல்லாம் போனாரா என்று தெரியவில்லை.

கமல்ஹாசன் ரசிகர் மன்றங்கள், நற்பணி இயக்கங்களாக மாறத் தொடங்கின. ரத்த தானம், நூலகங்கள் திறத்தல் போன்ற பணிகளில் கமல் ரசிகர்கள் ஈடுபடத் துவங்கிய போது, ஒருநாள் தீவிர கமல் ரசிகனான கமல் சொக்கலிங்கத்தின் நண்பர்களை அவன் அம்மா வாரியலைக்கொண்டு அடிக்க வந்துவிட்டாள்.

'நானே ஒத்த பிள்ளை வெச்சிருக்கென். அவன்கிட்டெ இருந்து ரத்தத்தெல்லா உறிஞ்சப் பாக்கான்வொ. என்னமாத்தான் வருது எனக்கு!’

'எம்மா, அதெல்லாம் ஒடனே ஊறிரும்மா. நீ என்னத்த பிள்ளையளுக்கு பள்ளியூடத்துல பாடம் சொல்லிக்குடுக்கெ?’

ஆரம்பப் பள்ளி ஆசிரியையான அந்த அம்மாவின் கோபத்தை மேலும் கிளறுமாறு அவரது மகன் சொக்கலிங்கம் சொல்ல, கொப்பளித்து வந்த கோபத்தை அவன் மீது திருப்பினார். 'அந்தக் கறி திங்கிற பிராமணன்கூடச் சேராதே... சேராதேன்னா கேக்கியா? அவந்தானலெ இப்பிடியெல்லாம் ஒனக்கு பேசச் சொல்லிக்குடுக்கான்!’

மூங்கில் மூச்சு!
மூங்கில் மூச்சு!

திருநெல்வேலி கல்லத்தி முடுக்குத் தெருவில் இருந்துகொண்டு, எங்கோ 600 கிலோ மீட்டர் தாண்டி சென்னையில் இருக்கும் கமல்ஹாசனை ஏசுவார். தன் மகன் சொக்கலிங்கம், ஏதோ தினமும் கமல்ஹாசனுடன் பேசிப் பழகிக்கொண்டு இருப்பதாக ஒரு நினைப்பு அந்தத் தாய்க்கு!

'நம்மளத் தேடி ஒரு பதவி வருது. சீக்கிரம் சட்டைய மாட்டிட்டு எங்கூட வா!’ - ஒருநாள் காலையில் நண்பன் குஞ்சு அழைத்தான். நேரே தெற்குப் புதுத் தெருவில் உள்ள சரவணக்குமாரின் வீட்டுக்குக் கூட்டிப் போனான். சரவணக்குமாரை, 'ரஜினி சரவணக்குமார்’ என்றே அழைக்க வேண்டும் என்பது சரவணக்குமாரே இயற்றிய விதி. 'ரஜினி’ சரவணக்குமாரின் வீட்டு மாடியில் நெல்லையப்பர் கோயில் ஆனித் தேர்த் திருவிழாவுக்கு ரஜினி ரசிகர் மன்றம் சார்பாக போஸ்டர் அடித்து, நெல்லை வாழ் மக்களை வரவேற்பதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எங்கள் பெயர்களை குஞ்சுவே, ரஜினி சரவணக் குமாரிடம் இருந்து ரசிகர் மன்ற நோட்டுப் புத்தகத்தை வாங்கி எழுதினான். எனக்குக் கலக்கமாக இருந்தது. காரணம், அப்போது நாங்கள் கமல் ரசிகர்கள் என்று நான் நம்பிக் கொண்டு இருந்தேன். கமல்ஹாசனுக்குத் துரோகம் செய்ய மனசு கேட்கவே இல்லை. நாளைக்கு அவர் முகத்தில் எப்படி முழிப்பது? நம்மைப்பற்றி என்ன நினைப்பார்? என்றெல்லாம் ஏகப்பட்ட கேள்விகளுடன் கவலை. அதைவிட, குஞ்சு எப்படி இப்படித் திடீர் எனக் கட்சி மாறினான் என்று குழப்பமாக இருந்தது.

மெள்ள உண்மை விளங்கியது. ரஜினி சரவணக்குமாரின் வீட்டுக்கு நேர் எதிரே உள்ள வீட்டில்தான், குஞ்சுவின் அப்போதைய காதலியான 'பேராத்து செல்வி’ இருந்தாள்.

ரஜினி சரவணக்குமாரின் வீட்டுச் சுவர் ரொம்பப் பெரியது. அது வெள்ளையடிக்கப்பட்டு நாங்கள் பார்த்ததே இல்லை. பெரிது பெரிதாக ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள் இருக்கும். அவற்றில் ரஜினி சரவணக்குமாரின் பெயர். ரஜினிகாந்த்தின் பெயரைவிட பெரியதாக அச்சிடப்பட்டு இருக்கும். ரஜினி சரவணக்குமாரின் மன்றத்தில் சேர்வதன் மூலம், 'திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதி அம்பாளின் ஆனித் தேர்த் திருவிழாவுக்கு வருகை தரும் பக்தகோடிகளை வருக வருகவென வரவேற்கிறோம்’ என்ற ரசிகர் மன்ற போஸ்டரில் எங்கள் பெயர் எல்லாம் வரும். அதை அந்தப் பெண் 'பேராத்து செல்வி’ பார்ப்பாள். தன் பெயரை அதில் பார்த்தவுடனே அவள் தனது காதலுக்குப் பச்சைக் கொடி காட்டிவிடுவாள் என்பது குஞ்சுவின் திட்டம். இதற்கு சைடு சப்போர்ட்டாக என் பெயரையும் சேர்த்து இருக்கிறான்.

'நாளைக்கு ஏதாவது பிரச் னைன்னா, நான் தனியா நிக்க மாட் டெம்லா? நீ மட்டுமில்ல.மன்றமே கூட நிக்கும்லா. என்ன சொல்லுதெ?’ - தயங்காமல் சொன்னான்.

குஞ்சுவின் போஸ்டர் திட்டம் என் தூக்கத்தைத் தின்றது. போஸ் டரில் நம் பெயரைப் பார்த்தால், ஊர் முழுக்கத் தெரிந்துவிடுவோமே. அதற்குப் பிறகு, சுதந்திரமாக நடமாட முடியாதே என்றெல்லாம் கவலைப்பட்டேன்.

ஆனித் தேர்த் திருவிழா அன்று காலையில் தனியாகச் சென்று, ரஜினி சரவணக்குமாரின் வீட்டுச் சுவரை நோட்டமிட்டேன். சுவரை நிறைத்து புது போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. திக்திக் என்று இதயம் படபடக்க சுற்றும்முற்றும் பார்த்துக் கொண்டே, வேறு எங்கோ பார்ப்பதுபோல் போஸ்டரை நோட்டம் இட்டேன். எங்கள் இருவரின் பெயர்களும் அதில் இல்லை. ஒரு வகையில் நிம்மதியாக இருந்தாலும், இன்னொரு வகையில் பலத்த ஏமாற்றமாக இருந்தது. நேரே குஞ்சுவைப் பார்க்கப் போனேன். ஜனசமுத்திரத்தில் பெண்கள் வடத்தின் அருகே நின்றுகொண்டு,குஞ்சு உற்சாகமாகத் தேர் இழுத்துக்கொண்டு இருந்தான். கூட்டத்துக்குள் என் தலையைப் பார்த்தவுடன் வடத்தை விட்டுவிட்டு வந்தான்.

'என்னல? போஸ்டர்ல நம்ம பேரக் காணோம்?’

'நாந்தான் போட வேண்டான்னுட்டேன். பின்ன என்னல? மன்றத்து நிதி மொத்தமே நூத்து முப்பது ரூவாதான்னாலும், பொருளா ளர்னா கொஞ்சம் கௌரவமா இருக்கும். துணைப் பொருளாளர்னு ஒரு ஒப்புக்குச் சப்பாணி பதவில நம்ம ரெண்டு பேரையும் கடைசில பொடீ எளுத்துல போடப் போறேன்னான். லென்ஸ் வெச்சுப் பாத்தாலும் தெரியாது. எங்களுக்கு ஒண்ணும் அவசியம் இல்லன்னுட்டேன்!’

சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னான். சுட்டெரிக்கும் விதமாக முறைத்துப் பார்த்தேன். என்னைச் சமாதானப்படுத்தும் விதமாகவோ, சமாளிக்கும் விதமாகவோ குஞ்சு சொன்னான்...

'கடைசி வரைக்கும் நாம கமல்கூடவே இருந்திருவோம்ல!’

- சுவாசிப்போம்...