மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

முத்தம் எதிர்ச் சொல் வரைக?

எம்.செல்லையா, சாத்தூர்.

 'நாட்டியப் பேரொளி’ பத்மினி, 'அபிநய சரஸ்வதி’ சரோஜாதேவி, 'நடிகையர் திலகம்’ சாவித்திரி, 'புன்னகை அரசி’ கே.ஆர்.விஜயா என்று பழைய நடிகைகளுக்கு பட்டம் கிடைத்ததுபோல் இப்போது யாருக்கும் பட்டம் கிடைக்கவில்லையே?

ஹாய் மதன் கேள்வி - பதில்

கிடைப்பதற்குள் பட்டம் அறுந்து விடுவதால்!

சி.பி.நாராயணன், செக்கானூர்.

மகா விஷ்ணுவும் மகாலட்சுமியும் கடல் நடுவில் இருக்கிறார்கள். அவர்களுடைய ஆடைகள் நனையாமலேயே இருக்கின்றனவே, அது எப்படிங்க? (சத்தியமாக இது தெய்வ நிந்தனை இல்லை.)

அது நீங்க நினைக்கிற பாற்கடல் இல்லை. அப்படி இருந்தால் பால் கெட்டுப் போய் மகாவிஷ்ணு மூக்கைப் பிடித்துக்கொண்டுதான் உட்கார வேண்டிவரும். கோடானு கோடி நட்சத் திரங்களைக் கொண்ட 'கேலக்ஸி’ என்கிற விண்வெளிக் கடலில் அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்று அர்த்தம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அதற்கு இந்தியர்கள் 'பாற்கடல்’ என்றுபெயர் வைத்துவிட்டார்கள். போன நூற்றாண்டில்தான் விஞ்ஞானிகள் அதற்கு ஆச்சர்யமாக 'மில்கி வே’ என்று பெயர் வைத்தார்கள். நாம வசிக்கிற 'கேலக்ஸி’ங்க!

##~##
பா.ஜெயபிரகாஷ், பொள்ளாச்சி.

மதனுக்குப் பிடித்த பக்கவாத்தியம் எது?

உலகில் பெரும்பான்மையானவர்களுக்குப் பிடித்தது - ஜால்ரா. எனக்குப் பிடித்தது டிரம்ஸ்!

ஆதி மனிதனின் வாத்தியம். சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நியாண்டர் தால் மனிதர்கள்கூட எதிலாவது தாளம் போட்டு ஆடியிருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு விகட னுக்கு வருகை தந்த விஜய டி.ராஜேந்தர் என் மேஜை மீது விதவிதமாகத் தாளம் எழுப்பி, பாடிக் காட்டி பிரமாதப்படுத்தியது நினைவுக்கு வருகிறது!

விஜயலட்சுமி, பொழிச்சலூர்.

முத்தத்துக்கு எதிர்ச் சொல் எதுவும் உண்டா?

அகண்ட கண்டத்துக்குக்கூட மாற்றாக, இன்னோர் (Anti) அகண்ட கண்டம் (Parallel Universe) இருக்கக் கூடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆனால், முத்தத்துக்கு எதிர்ச் சொல் கிடையாது. இப்போது என்ன செய்யப்போவதாக உத்தேசம்?!

ஜி.மகாலிங்கம், காவல்காரபாளையம்.

ஆண்களின் மூளையைவிட பெண்களின் மூளை அளவில் சிறிது குறைவாக இருப்பதினால், ஆண்களைவிட பெண்களுக்கு அறிவும் சிறிது குறைவுதானே?

என்ன அல்ப ஆசை? மூளையின் அளவுக்கும் அறிவுக்கும் சம்பந்தமே கிடையாது. 'கனெக்ஷன்’களின் வீரியம்தான் முக்கியம். புகழ்பெற்ற இலக்கிய மேதையான அனடோல் ப்ரான்ஸ் என்பவரின் மூளை சராசரி மனிதனின் மூளையைவிட ரொம்பச் சின்னது (அவர் இறந்த பிறகு மூளையை எடை போட்டார்கள்). சராசரி மனிதனின் மூளை 1,400 கிராம். சராசரி பெண்ணின் மூளை 1,350 கிராம். அனடோலின் மூளை 1,017 கிராம். வாட்டசாட்டமாக வளர்ந்த ஒரு முட்டாளின் மூளையையும் சோதித்தார்கள். எடை 2,050 கிராம் இருந்தது. ஆகவே, பெரிய களிமண் உருண்டை வேறு, குட்டி வைரக்கல் வேறு!

அ.உமர், கடையநல்லூர்.

ஹாய் மதன் கேள்வி - பதில்

சினிமா டைட்டிலில் புதிய இயக்குநரை 'அறிமுகம்’ என்று காட்டுவது இல்லையே?

இயக்குநர்தான் ஒரு ஹீரோ அல்லது ஹீரோயினை அறிமுகப்படுத்துகிறார். ஆகவே, அப்படிப் போடுகிறார்கள். இயக்குநரே புதுசாக இருந்தால் அவரை அறிமுகப்படுத் துவது யார்? தயாரிப்பாளரா? ஆனால், தயாரிப்பாளரும் அறிமுகம்? 'அறிமுகம்’ என்பது ஒரு தகவல்தான். மற்றபடி, அது அவசியம் இல்லை. 'அறிமுக நடிகர்கள்... சற்று இரக்கப்பட்டு படத்தை வெற்றியடையச் செய்யுங்கள்!’ என்கிறார்களா?! நான் பார்த்தவரை மேலை நாட்டு சினிமாக்களில் இப்படி எல்லாம் போடுவது இல்லை!

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

உயிரின் மகிமை தெரியாதவர்கள்தானே தற்கொலை செய்துகொள்கிறார்கள்?

வாழ்க்கையின் ஆச்சர்யங்கள் தெரியாதவர்கள்!