மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

பிளாஸ்திரி மெளனம்!

##~##
ஆர்.இளைய பெருமாள், கடலூர்.

பாபர், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜகான், ஒளரங்கசீப் இவர்கள் அனைவரும் ஒரே கொடியைப் பயன்படுத்தினார்களா? இல்லை, அவர்களின் ரசனைக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டார்களா?

இஸ்லாமிய மதத்தில் கொடி, சின்னம் எதையும் உருவாக்கி வைத்துக்கொள்ளக் கூடாது. எந்தவித உருவ வழிபாடும் அந்த மதத்தில் கிடையாது. 'குர் ஆனி’ல் குறிப்பிடப்பட்டதால் வளர்பிறைச் சந்தி ரனை மட்டுமே அவர்கள் கொடிகளில் பயன்படுத்தலாம். கூடவே, நட்சத்திரமும் சேர்க்கப்பட்டது. ஆனால், பிறைச் சந்திரன் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே மெசபடோமியாவில் சின்னமாகப் பயன்படுத்தப்பட்டது. 12-ம் நூற்றாண்டில் துருக்கி அதைக் கொடியில் பயன்படுத்தியது. இன்று எல்லா இஸ்லாமிய நாட்டுக் கொடிகளிலும் பிறைச் சந்திரன் மற்றும் நட்சத்திரம் உண்டு. சொர்க்கத்தைக் குறிக்கும் குறியீடுகள் இவை!

விஜயலட்சுமி, பொழிச்சலூர்.

நகர்வாலா, போஃபர்ஸ், ஹவாலா, ஆதர்ஷ், ஸ்பெக்ட்ரம் எல்லாமே காங்கிரஸ் கட்சியின் ஆட்சித் தொடர்பில்தான் நடந்திருக்கின்றன என்பதைப் பார்க்கும்போது..?

மற்றவர்களுக்கு ஏதாவது சான்ஸ் கொடுத்தால்தானே?! கொஞ்ச காலமாகத்தானே கூட்டணி அரசு அமைத்து ஊழல் சோஷலிச மயமாக்கப்பட்டு இருக்கிறது!

கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்வதற்காக பிரதானக் கட்சிகள் துடிப்பது ஏன்?

உங்களிடம் எட்டு ஓட்டுகள். என்னிடம் ஏழு ஓட்டுகள். ஆகவே, நீங்கள் ஆட்சி அமைத்து விடுவீர்கள். காங்கிரஸிடம் நாலு ஓட்டுகள் உண்டு. அந்த நாலு ஓட்டுகள் எனக்குக் கிடைத்தால், இப்போது

ஹாய் மதன் கேள்வி - பதில்

என்னிடம் 11 ஓட்டுகள். நான் ஆட்சி அமைத்துவிடுவேன். இதுதான் காரணம்! இருவரிடமும் சேராமல், தனியாக நின்று மக்களுக்காக உண்மை யாகவே உழைத்து நல்ல பெயர் எடுத்தால், காங்கிரஸின் நாலு ஓட்டு பத்து ஓட்டாகும். பிறகு... 'யோவ்! ஏதாச்சும் நடக்கற காரியமாப் பேசுங் கப்பா!’ என்கிறீர்களா?!

ச.ஆ.கேசவன், இனாம் மணியாச்சி.

'சின்ன வீடு’ என்பதைத் 'துணை இல்லாள்’ என்று கூறலாமா?

நீங்கள் என்னவென்று வேண்டுமானாலும் கூறிக்கொள்ளுங்கள். ஆனால், மற்றவர்கள் விடாமல் 'சின்ன வீடு’ என்றுதான் (பொறாமை யோடு?!) சொல்வார்கள்!

பா.அசோக், பிள்ளையார்குளம்.

தீவிரக் காதல்; பயங்கரக் காதல்; என்ன வித்தியாசம்?

சிம்பிளாக விளக்க, இருக்கவே இருக்கிறது சினிமா!

'ஏக் துஜே கேலியே’, 'காதல்’ படங்களில் வந்தது தீவிரக் காதல். 'சேது’, 'குணா’ படங்களில் வந்தது பயங்கரக் காதல்!

ம.இரமேஷ், வீரணம்.

பிரதமர் 'மன்மோகன் சிங்’கின் மௌனம் எதைக் சுட்டிக்காட்டுகிறது?

முதலில் அது மௌனமே இல்லை! வாயில் பிளாஸ்திரி போடப்பட்டு இருப்பதால் ஏற்பட்ட நிர்பந்தம். பிளாஸ்திரியைப் பிய்த்துப் போட்டுவிட்டு, 'என்னைத் தயவுசெய்து விட்டுவிடுங்கள். நான் நேர்மையானவர்களோடு இருக்க விரும்புகிறேன். நடக்கும் ஊழல்களைப் பார்க்கச் சகிக்கவில்லை. எனக்கு இந்தப் பதவி வேண்டாம்’ என்று சொல்வதற்குக்கூட பர்மிஷன் வாங்க வேண்டிய நிலைமையில் இருப்பவரைப்பற்றி நாம் வேறு என்ன சொல்ல முடியும்?!

ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

ஹிட்லர், முசோலினி, இடி அமீன் இன்னும் பலர்! இவர்களில் தங்களைக் கவர்ந்த சர்வாதிகாரி?

ஹாய் மதன் கேள்வி - பதில்
ஹாய் மதன் கேள்வி - பதில்

அரண்மனையில் சிம்மாசனத்தில் அமர்ந்தவாறு ரோம் நாட்டின் சர்வாதிகாரி காலிகூலா (Caligula) சொன்னான் - 'நான் லேசாகத் தலையசைத்தால் போதும்... மறு நிமிடம், இங்கே கூடியிருக்கும் அத்தனை பேருடைய தலையும் தரையில் உருளும். இந்த நினைப்பு எனக்கு மிகுந்த குதூகலத்தை ஏற்படுத்துகிறது!’

ஒரு சர்வாதிகாரியின் எதிரே நான் நின்று 'உங்களிடம், என்னைக் கவர்ந்த விஷயங்கள் என்ன தெரியுமா?’ என்று பட்டியலிடுகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதைக் கேட்ட பிறகு அவர், 'அது சரி! ஆனால், குறிப்பிட்ட ஒரு விஷயத்தைத் தாங்கள் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். அதை மட்டும் நீங்கள் சொல்லவில்லை. இது பெரும் குற்றம். ஆகவே, உங்களுக்கு மரண தண்டனை விதிக்கிறேன்!’ என்று ஆணையிடக்கூடும். சர்வாதிகாரிகள் எப்படி என்னைக் கவர முடியும்?!