
வாலி, ஒவியம் : மணி, படம் : கே. ராஜசேகரன்
மஹாப் பெரியவாள்!
##~## |
ஒரு பழைய திரைப்படம். 'மதன மஞ்சரி’ என்று பேர். ராஜா ராணிக் கதை.
கலைவாணர் நடித்திருக்கிறார். ஒரு காட்சியில், கதாநாயகியோடு உரையாடுவார். அந்தக் கதாநாயகியின் பெயர் 'குஞ்சரி’; அவள் பட்டத்து இளவரசி.
இளவரசி 'உம்’மென்று முகத்தை வைத்துக் கொண்டிருக்க, அவளை சகஜ நிலைக்குக் கொண்டுவர வேண்டி -
கலைவாணர் அவளிடம் 'குஞ்சரி! கொஞ்சஞ் சிரி!’ என்பார்; கதாநாயகி, கடுகடுப்பை விடுத்துக் 'களுக்’கென்று சிரிப்பாள்.
அந்த - 'மதன மஞ்சரி’ படத்தில் 'குஞ்சரி’ என்னும் கதாநாயகி பாத்திரம் ஏற்று நடித்தவர் திருமதி லீலா அவர்கள்!
ஒரு படத்தோடு சரி; பிறகு இசையமைப்பாளர் திரு.கே.வி.மகாதேவன் அவர்களை மணந்து கொண்டு குடும்பத் தலைவி ஆகிவிட்டார்.

திருமதி லீலா மகாதேவன் அவர்கள் நல்ல குரல் வளம் மிக்கவர். ரேடியோ நாடகங்களில் ஒரு புகழ்வாய்ந்த நட்சத்திரமாகவே விளங்கினார்.
நான் திரு.கே.வி.எம். வீட்டிற்குச் செல்லும் போது, அந்த அம்மையாரைச் சந்தித்து, குசலம் விசாரிப்பது உண்டு.
ஒரு சமயம் அப்படி அவர்களிடம் நான் நலம் விசாரிக்கும்போது, பெருங் கவலையில் அவர் மனம் அமைதியற்றிருப்பதை நான் ஊகித்து அவரிடம் வினவினேன்.
நான் இன்னணம் வினவியதும், திருமதிலீலா அவர்கள் உள்ளம் உடைந்துபோய்ப் பொல பொலவெனக் கண்ணீர் வடித்துவிட்டுப் - பின் சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு என்னிடம் தன் விசனத்திற்கான காரணத்தை விளக்கினார்கள்.
'என் பிள்ளை, பல மாசங்களா எங்கே இருக் கிறான்னே தெரியல்லே; வளர்ந்த பையன்; திடீர்னு ஒருநாள் வீட்டைவிட்டுப் போய்ட்டான்.
எங்கயோ - இமயமலைப் பக்கம், ஹிப்பி களோட சேந்து, 'ஹரே கிருஷ்ணா; ஹரே ராம்’னு பாடிண்டு -
ஒரு தேசாந்திரிபோல வாழறதாத் தகவல் வந்தது. ஒரே பிள்ளை; எனக்கு ராப் படுத்தாத் தூக்கமில்லே, பகல் படுத்தாத் தூக்கமில்லே! பெத்த வயிறாச்சே... பரிதவிச்சுண்டிருக்கிறேன்! யாரோ சொன்னா - காஞ்சீபுரம் போய், மஹாப் பெரியவாளெப் பாத்தா, விமோசனம் கிடைக்கும்னு! என்னெ - அவர்கிட்ட உங்களாலே கூட்டிண்டு போக முடியுமா?’
- இப்படி திருமதி லீலா அவர்கள் கேட்டதும், 'இதென்ன ப்ரமாதம்! நாளைக்கே - நீங்களும் மாமாவும் வாங்கோ - என் கார்லயே, காஞ்சீபுரம் கூட்டிண்டு போறேன்!’ என்றேன் நான்.
'அது சரி, நான் அவர் பக்கத்துல நின்னு என் குறையச் சொல்ல முடியுமா? கிட்ட அனுமதிப்பாளா?’ என்று லீலா அவர்கள் கேட்டார்.
'ஏன், உங்களுக்கு இந்தச் சந்தேகம்?’
'இல்லெ... மாமா, ப்ராமின்; மாமாவோட மனைவியானாலும், நான் - நான்ப்ராமினாச்சே! அதான் பெரியவாள் என்னெ...’
- என்று லீலா அவர்கள் முடிக்கு முன் நான் சொன்னேன்.

''பரமாச்சாரியார் ஓர் அத்வைதி; பல்லுயிருளும் உறைவது பரப்பிரமம் என ஓர்ந்தவர். நீங்க அவர் பக்கத்துல நின்னு பேசலாம். நான் அறிமுகப்படுத்திவைக்கிறேன்!''
- என் மொழி கேட்டதும், மாமாவும் மகிழ்ந்தார். மாமா என்பது திரையுலகில் மகாதேவனைக் குறிக்கும்.
மறு நாள், நான் மாமாவையும் திருமதி லீலாவையும் காஞ்சீபுரத்திற்கு அழைத்துப் போனேன்!
திரு.சிவாஜி ஒரு முறை என்னிடம் சொன்னார்.
'வாத்யாரே! நான் யாரையாவது உண்மை யான சந்யாசீன்னு - உள்ளத்துல வெச்சு வணங்குறேன்னா - அது காஞ்சிப் பெரியவர்தான்!’
வாஸ்தவம்தான். நாமக்கல் கவிஞரின் பாடல் ஒன்று கீழ்க்கண்டவாறு வரும்.
'காந்தி காந்தி காந்தியென்று
நமது நாட்டிலே -
கால் நடக்கும் தெய்வம் தன்னைக்
கண்டுகொண்டோமே!’
- நாமக்கல் கவிஞர், மஹாத்மாவைப் பற்றிப் பாடியது, மஹாப் பெரியவாளுக்கும் பொருந்தும்!
நூறும் புகுந்தவரை, நான் முதன் முதலாகத் தரிசிக்கும் பாக்கியம் - அற்றை நாள் ஆனந்த விகடன் ஆசிரியராயிருந்த என் நெருங்கிய நண்பர் -
திரு. மணியனால்தான் எனக்குக் கிட்டியது!
1972 காஞ்சீபுரம் அருகில் உள்ள தேனம்பாக்கம் என்னும் இடத்தில்தான் மஹாப் பெரியவாள் தங்கியிருந்தார்கள்.
நேர் கண்டதும் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்கி, எழுந்து நின்று - விழிகளால் அவரை விழுங்கி, என் அக அழுக்குகளை அலம்பிக்கொண்டேன்!
ஆம். மனத்துள் புதரென மண்டிக்கிடக்கும் வினைகளை -
வேரொடும், வேரடி மண்ணோடும் - அரிந்து அப்புறப்படுத்த வல்ல -
மகாப் பெரிய வாள்தான், மகாப் பெரியவாள்!
அரிசிப் பொரி உண்டு, அஞ்சு பொறியை அவித்த அந்த மகானை -
நான் மீண்டும் அதே தேனம்பாக்கத்தில் சந்தித்தேன்.
திரு கே.வி.மகாதேவனோடும் அவர் தம் வாழ்க்கைத் துணைவியார் திருமதி லீலாவோடும்.
பெரியவாளைக் கண்டதும் -
'பிரபோ! என் மகனை, மறுபடி காண்பேனா?’ என்று வாய்விட்டு அலறி, மஹாப் பெரியவாள் மலரடியில், 'தடா’லென்று -

விழுந்தார் திருமதி லீலா மகாதேவன், கண்ணீரில் குளித்தவாறு.
பெரியவாள் ஒரு வினாடி திருமதி லீலாவின் மேல் தன் அருள் நோக்கைச் செலுத்திவிட்டு, சற்று நிமிர்ந்து பார்த்தார்.
கூப்பிடு தூரத்தில் -
மழித்த தலையோடும், வெள்ளை மடிசாரோடும் ஒரு விதவைப் பெண்மணி வந்துகொண்டிருந்தார்.
தன் சீடர்களில் ஒருவரை அழைத்து, ''அந்த அம்மாகிட்டபோய், 'நீங்க சுமங்கலியா’ன்னு கேளு!'' என்று பெரியவாள் பணிக்க -
அந்த சீடரும், அந்த அம்மாவைச் சந்தித்துவிட்டு வந்து, 'ஆமாம் - சுமங்கலிதானாம்’ என்றார் பெரியவாளிடம்!
'விதவை எப்படி சுமங்கலியாயிருக்க முடியும்?’ என்று நான் வியந்து நிற்கையிலேயே, பெரியவாள் பர்ணசாலைக்குள் புகுந்துவிட்டார்!
நான் திரு மகாதேவனோடும், அவர் மனைவியோடும் காருக்குத் திரும்பிவிட்டேன். சென்னை புறப்பட.
'பெரியவாள், எனக்கு ஆறுதலா ஒன்றுமே சொல்லவில்லையே!’ என்று ஆதங்கப்பட்டார் திருமதி.லீலா.
'அவர், உங்களை ஒரு வினாடி பார்த்தாரே - அதுதான் உங்கள் கேள்விக்குப் பதில்!’ என்றேன் நான்.
கார் வரை வழியனுப்ப வந்த சீடரிடம், 'அது என்ன - விதவைப் பெண்மணியைச் சுமங்கலிதான் என்று நீங்கள் சொன்னது?’ என்று கேட்டேன்.
சீடர் சொன்னார். 'பெரியவாள் கேட்கச் சொன்னார்; நான் கேட்டேன்! அவாள் எது சொன்னாலும் அதில் அர்த்தம் இருக்கும்... எதிர்ப் பேச்சு பேசி எனக்குப் பழக்கமில்லை! சுமங்கலி - என்பது, செய்யாறுக்கும் திருவண்ணாமலைக்கும் பக்கம் உள்ள ஒரு சிறு கிராமம்; அந்த அம்மாள், அந்த ஊரைச் சேர்ந்தவரா என்பதைத் தான் பெரியவாள் அப்படி கேக்கச் சொன்னார்கள். பல ஆண்டுகளுக்கு முன்னால், பெரியவாள் அந்த ஊருக்கு விஜயம் செய்தபோது - அந்த அம்மாளைப் பார்த்திருப்பார்!’
'மஹான்கள் திருவுளத்தை, மண் மிசை ஆரே அறிய வல்லார்?’ என்று சிந்தித்தவாறே... நாங்கள் சென்னை திரும்பினோம்.
என்ன ஆச்சர்யம்?!
திருமதி லீலா மகாதேவனின், காணாமல் போன மகன் -
வீட்டு வாசலில் நின்று எங்களை வரவேற்றான்!
- சுழலும்...