மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 37

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

அவ்வப்போது இப்படி அபார்ட்மென்ட் வாசல்களுக்கு வந்து போகிறார்கள் அம்மன்கள். மேளச் சத்தமும் வெடிச் சத்தமுமாகச் சட்டென்று கடந்துவிடுகிறார்கள்.

நேற்று சாயங்காலம் சைதாப்பேட்டை சிக்னலில் நிற்கும்போது ஒரு சாமி ஊர்வலம் கடந்துபோனது.

பெண் சாமிதான். மாரியம்மனா, காளியம்மனா, செல்லி அம்மனா, இசக்கியம்மனா... தெரியவில்லை. எதுவாக இருந்தால் என்ன... அம்மன் சாமி... அவ்வளவுதான்! செல்லூர் மகமாயிக்குத் தங்கச்சி மாதிரிதான் தோன்றியது. தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மனைத்தான் ஞாபகப்படுத்தியது இதுவும். திருநெல்வேலி பேராச்சியம்மனைப் பெயர்த்தெடுத்து வந்ததுபோல இருந்தது. ராசிபுரம் நித்திய சுமங்கலி அம்மனைத் தெருமுக்கில் திடுக்கென்று பார்த்துப் பரவசமானது நினைவுக்கு வந்தது. 'படவேடு ரேணுகா பரமேஸ்வரி அம்மா...’ என ஒரு நண்பர் உருகிச் சொன்ன கணம் நிழலாடியது. பாலும் பஞ்சா மிர்தமும் வழிய வழிய... இருட்டுக்குள் ஒற்றை அகல் வெளிச் சத்தில் குளிக்கும் அபிவிருத்தீஸ்வரம் காளியம்மனை இப்படி டிராஃபிக் மண்டிய பெருநகரச் சாலையில் பார்க்கக் கஷ்ட மாக இருக்கிறது.

குருத்தோலைத் திருவிழா இரவில் வாணங்கள் சிதற... தேவன் பாடல்களோடு வரும் மூலங்குடி மாதாவுக்கும் சைதாப்பேட்டை அம்மனுக்கும் ஒரே முகம்தான். இறுக்கிய கையில் குழந்தை இயேசு இல்லாமல், உயர்த்திய கையில் ஆசீர்வாதம் இருக்கிறது... அவ்வளவுதான். எங்கெங்கும் அம்மனும் சாமியும் ஒன்றேதான் இல்லையா? சூழலும் மக்களும்தான் வேறாக இருக்கிறார்கள்.

ஒரு பத்து இருபது பேர்தான் இருக்கும். ஆர்ப்பாட்டமே இல்லாமல் பின்னால் பேசிக்கொண்டு போகிறார்கள். மொத்த மாகவே நாலைந்து குடும்பங்களுக்குத்தான் சாமி போலிருக்கிறது இந்த அம்மன். சாமியைக் கொண்டுபோய் கர்ப்பக்கிரகத்தில் சேர்த்துவிட்டு, வெரசாக வீடுகளுக்குப் போய் டி.வி-யைத் திருகிவிடுவார்கள் என்பதை அவர்களின் நடையே சொன்னது!

அவ்வப்போது இப்படி அபார்ட்மென்ட் வாசல்களுக்கு வந்து போகிறார்கள் அம்மன்கள். மேளச் சத்தமும் வெடிச் சத்தமுமாகச் சட்டென்று கடந்துவிடுகிறார்கள்.
வட்டியும் முதலும் - 37

யாரோ தேங்காய் உடைக்க, கற்பூரமும் பூவுமாக ஒரு வாசம் கணத்தில் கிளம்பி கலைந்துவிடுகிறது. மேளச் சத்தமும் வெடிச் சத்தமும் எங்கோ தூரத்தில் போய்விடுகிறது. இதை எல்லாம் பார்த்துக்கொண்டு அடுக்கு மாடி ஜன்னல்களில் நிற்கிற ஏதேதோ ஊர்க்காரர்கள் எல்லாம் அந்த இரவில் நிம்மதியாகத் தூங்கிவிடுவார்களா என்ன? எத்தனை எத்தனை நினைவுகளைக் கிளறிவிட்டுப் போகிறார்கள் இந்த அம்மன்கள்? திருவிழாக்களால் நிறைந்துகிடந்த நமது பால்யத்தின் சித்திரைகள் இனி கிடைக்கவே போவது இல்லை என்பதை நினைக்கும்போதே நெஞ்சுக்குள் காலம் ஒரு குடை ராட்டினம் எனச் சுழல்கிறது.

ஊரில் திருவிழா என்றால், இரண்டு மாதங்களுக்கு முன்பு பங்குனியிலேயே ஆரம்பித்துவிடும் சந்தோஷம். ஒரு மாதம் வீட்டுக்கு வீடு மண்டகப்படி, சாமி புறப் பாடு தொடங்கிவிடும். தினமும் சாயங்காலமானால், கோயில் கொல்லையிலும் காந்தி ஆத்தா வீட்டுக் கொல்லையிலும் காளியம்மனுக்கு அலங்காரம் பண்ண கனகாம்பரமும் நந்தியாவட்டையும் பறித்துக்கொண்டு இருப்பார்கள் பிள்ளைகள். அத்தனை அக்காக்களும் நாட்டார் வீட்டுத் திண்ணையிலும் சின்னைய்யா வீட்டு மாடியிலும் பூ கட்டிக்கொண்டு இருப்பார் கள். மண்டகப்படிக்கார வீட்டில் சுண்ட லும் புளியோதரையும் சர்க்கரைப் பொங் கலுமாக ஒரு வாசம் தெருவையே நிறைக் கும். ராத்திரி பூரண அலங்காரத்துடன் அம்மன் புறப்பட்டால் மொத்த ஊரும் பின்னாலேயே போகும். இளைஞர் மன்ற ஆட்கள்தான் சாமியைத் தூக்கிப் போவதும் அணைகட்டி பின்னாலேயே போவதும். திருவரங்கநல்லூர் எல்லை வரை போய்விட்டு வந்து, ஊரில் வீடு வீடாக நின்று போகும் சாமி. எல்லா வீடுகளிலும் தேங்காய் உடைத்து, பூஜை பண்ணி சாமி மறுபடி கோயிலைச் சேர்வதற்கு நள்ளிரவு ஆகிவிடும்.

திருவிழாவையட்டி ஐந்து நாட்களுக்குத் திரை கட்டி சினிமா, நாடகம், கரகாட்டம் என ஏகப்பட்ட நிகழ்ச்சிகள். என்ன படம் போடுவது; எந்த செட்டு நாடகம் என நிகழ்ச்சி நிரல் ஆலோசனைக் கூட்டம் அனல் பறக்கும். ''காப்பு கட்டிட்டா ஒரு பய வெளியூருக்கு பஸ் ஏறக் கூடாதுரா...' என்பார் துரை பெரியப்பா. சென்னை, திருப்பூர், பெங்களூரு எனப் பிழைப்பு தேடிப் போன அவ்வளவு பேரும் திருவிழா வுக்கு முதல் நாளே வந்துவிடுவார்கள். துபாய், குவைத்தில் இருந்து போன் போட்டு, ''மண்டகப்படிக்குப்

பணம் அனுப்பியிருக்கேன்... அந்தக் காசுல சமைச்சுப் போடும்மா' என ஏங்கும் குரல்கள். வெளியூர்களில் இருந்து வரும் உறவுக்காரப் பெண்கள் சுடிதாரிலும் மிடியிலும் தெருவுக்குப் புதுப் பொலிவைத் தருவார்கள். அவர்களைப் பார்ப்பதற்காகவே வேட்டி - சட்டையை மாட்டிக்கொண்டு ரவுண்ட்ஸ் கிளம்பிவிடுவோம். ''வெளியூர் புள்ளைங்களை விடு பங்காளி... உள்ளூர் புள்ளைங்களையே இப்பதான் வெளில பாக்க முடியுது... மஞ்சத் தண்ணி அன்னிக்கு கவனிச்சுக்குவோம்ரா இதுங்களை...'' என்பான் செந்தில்.

சுத்துப்பட்டில் இல்லாமல் எங்கள் ஊர் திருவிழாவின் ஸ்பெஷல் தீமிதி. திருவிழா அன்று சாயங்காலம் தெற்குத் தெருவில் அனல் அடிக்க தீக்குழி தயாராகி இருக்கும். ஒரு வாரம் விரதம் இருந்து, சாமியோடு ஊர் சுற்றி வந்து தீ மிதிக்க வேண்டும். சுத்துப்பட்டு அத்தனை ஊர்களும் ஜேஜே எனக் கூடியிருக்கும். ஃபாஸ்ட் பௌலர் மாதிரி இருபதடி தூரத்தில் இருந்து ஓடிவந்து, கையில் இருக்கும் எலுமிச்சையைத் தூக்கி வீசியபடி, 'காளியம்மா...’ எனக் கத்திக்கொண்டே தீக்குழியில் ஓடி, பால்குழியில் கால் நனைக்கிற வரை அவரவர் குடும்பம் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நிற்கும்.

என் அப்பா இருபது வருடங்களாக பழநிக்கு மாலை போட்டு ஊரில் இருந்தே நடந்துபோனவர். ஆனால், ஒரு வருடம்கூட உள்ளூரில் தீ மிதித்தது கிடையாது. ''மொதல்ல இந்தத் தீமிதியை க்ளோஸ் பண்ணணும்ரா...'' என நான்கு மகன்களும் பகுத்தறிவுப் பாசறையில் கொடி பிடித்ததால், அவர் தீமிதி எண்ணத் தைச் செயல்படுத்தாமலேயே இருந்தார். ஒரு வருடம் திடுதிப்பென்று, ''இந்த வருஷம் தீ மிதிக்கப்போறேன் மல்லி...'' என்றார் அம்மாவிடம். அப்படியே ஒரு வாரம் விரதம் இருந்து தீ மிதிக்குத் தயார் ஆனார். எல்லோரும் சாதாரணமாகத் தான் தீ மிதிப்பார்கள். அலகுக் காவடி சுமந்துகொண்டு தீ மிதிப்பது பால்கார மணி மட்டும்தான். அது ஓர் ஆன்மிகச் சாகசம். பெரிய அலகுக் காவடியைச் சுமந்துகொண்டு தீமிதிக்க மணி ஓடுவதைப் பார்க்கும்போதே திகிலாக இருக்கும்.

அந்த வருடம் தீமிதி அன்று எங்கள் வீட்டு முன்பு பெரிய மயில் காவடி வந்து இறங்கியது. எதுவும் புரியாமல் பார்த்த அம்மாவிடம், ''காவடி சொமந்துகிட்டுதான் தீ மிதிக்கப்போறேன்...'' என்றார் அப்பா. அம்மாவுக்கும் எங்களுக்கும் பகீரென்றது. ''ஏங்க... இதெல்லாம் ஒங்களுக்கு கரெக்டா வருமா..? காவடி கீவடி இல்லாம அப்பி டியே தீ மிதிச்சா காளியாத்தா வேணாம்னா சொல்லுது. மொத வருஷந்தான... சும்மாவே மிதிங்க. அடுத்த வருஷம் காவடி எல்லாம் தூக்கிக்கலாம்...'' என அம்மா சொல்ல... ஒரு முறைப்புவிட்டார் அப்பா. ''காவடி அம்சமா இருக்குல்ல மாப்ள... நாந்தான் மயிலு வைக்கச் சொன்னேன். முருகனுக்கு வருஷா வருஷம் பண்றோம். காளியம் மாளுக்கு இந்த வருஷந்தான செய்றோம்... அத மொறையாச் செஞ்சுருவோம்...'' எனத் திண்ணையில் உட்கார்ந்து மீசையை முறுக்கிக்கொண்டு இருந்தார். சாயங்காலம் சாமி ஊர்வலம் தொடங்கியது.

வட்டியும் முதலும் - 37

ஆட்டமும் பாட்டுமாக தெற்குத் தெருவுக்குப் போனது ஊர்வலம். ஒவ்வொருவராக தீக்குழியில் ஓடத் தொடங்கினார்கள். கடைசியாகக் காவடி தூக்கிவந்தார்கள் பால்கார மணியும் அப்பாவும். மணி காவடியோடு சரசரவெனத் தீக்குழிக்குள் இறங்கி ஓடினார். ஹோ எனக் கத்தியது ஜனம். அடுத்து அப்பாதான். எதிர்த்த வீட்டு மாடியில் அம்மா கும்பிட்டபடி நின்றது. அப்பா இறங்கி ஓடத் தொடங்கினார்... பாதி குழி தாண்டவில்லை... கால் தடுமாறி அப்படியே நெருப்பில் விழுந்துவிட்டார். கண நேரம்தான் மொத்த ஜனமும் கதற, தடதடவெனக் கூட்டம் இறங்கி அப்பாவை வெளியே இழுத்துப்போட்டது. யாரோ ஓடிப்போய் வாழை இலைகளைக் கொண்டுவந்து போட்டு, அதில் படுக்கவைத்தார்கள். அம்மா ''காளியாத்தா...'' எனக் கிடந்து கதறியது. தஞ்சாவூர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய் வைத்து இரண்டு நாளில் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். உடம்பு எல்லாம் சின்னச் சின்னதாகத் தீக்காயங்கள். நல்ல வேளையாகப் பயப்படும்படியான பெருங்காயங் கள் இல்லை. அந்தக் காயங்களோடு கோயிலுக்குப் போய், ''ஆத்தா... ஏம்மா இப்பிடிப் பண்ண? ஒம் புள்ளதான? எதாவது தப்புன்னா மன்னிச்சுக்க. அடுத்த திருவிழாவுக்குத் தட்டாம தீமிதிச்சுர்றேன்...'' என அப்பா வேண்டிக்கொண்டு நின்றது இப்போதும் சாயம் போகாமல் நினைவில் இருக்கிறது.

ஊர் நடுவே உட்கார்ந்துஇருக்கும் காளியம்மா அளவுக்கு விமர்சை இல்லை என்றாலும், வயல்வெளிகளுக்கு நடுவே வனாந்தரத்தில் நிற்கும் அய்ய னாருக்கு வருஷம் தவறாமல் கெடாவெட்டுத் திருவிழா நடந்துவிடும். ஊரே கூடி வசூலித்து, கோடையில் அய்யனாருக்குக் கெடா படையல். இருட்டு அப்பிக்கிடக்கிற ராத்திரியில் லாந்தர் விளக்குகளைத் தூக்கிக்கொண்டு மொத்த ஊரும் அய்யனார் கோயிலுக்குப் போகும். சாராய மும் படையலுமாக அய்யனார் அன்றுதான் புதுவேட்டி கட்டி, எண்ணெய் பளபளக் கும் அரிவாளோடு நிற்பார். கெடா வெட்டி, ரத்தம் வடிய நாலைந்து ஆட்டுத் தலைகள் அய்யனார் காலடியில் முறைத்துக்கிடக்கும். மணக்க மணக்க கறிச் சோறு தயாராகிக்கொண்டு இருக்கும். சரியாக 11 மணிவாக்கில் ஊரே கூடி நிற்க, கறுப்பு பெரியப்பாவுக்குச் சாமி வரும். நாக்கைத் துருத்தி, கைகளை முறுக்கி 'ம்ம்ம்ம்ம்...’ எனப் பயங்கரமாகக் கனைப்பார்.

சட்டென்று சத்தம் போட்டுக்கொண்டே கூட்டத்தில் புகுந்து, கையில் சிக்குகிறவனை இழுத்துக் கோத்து வெளுக்க ஆரம்பிப்பார். அவன் அலற அலற... அடி பின்னியெடுத்து, ''சாமிக்குப் பரிகாரம் பண்றேன்னியே ஏன் பண்ணல... அறுப்பறுத்ததும் மொதப் படையல் போடலைல்ல...'' என ஏதேதோ சொல்ல, ''பண்ணிட்றேன் சாமி... பண்ணிட்றேன்...'' எனக் கதறுவார் சிக்கியவர். ''...க்காளி... கறுப்பு ஆள் பார்த்து அடிக்கிறார்ரா... வருஷம் முழுக்க டார்ச்சர் பண்றவனுங்களை எல்லாம் பார்த்து வெச்சுக்கிட்டு சாமி புரொமோஷன் கெடைச்சதும் வெளுத்து விட்டுர்றாரு...'' எனப் பசங்கள் கொலைவெறியாவார்கள். கறிச்சோறு தின்றுவிட்டு அறுவடை முடிந்த வயல் வெளிகளில் வீடு திரும்பும் அந்தத் திருவிழா அதிகாலைகள்... இனி கிடைக்கவே போவது இல்லையா?

கோடைக் காலம் என்றாலே, திருவிழாக் களால்தானே நிறைந்துகிடந்தது அப்போது? அறுவடை முடிந்த காசெல்லாம் திருவிழாக் களில்தானே கரைந்தன? கீரந்தங்குடி திருவிழாவும் வலங்கைமான் திருவிழாவும் சுத்துப்பட்டில் அவ்வளவு பிரபலம். சாயங் காலமாக சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினால் அதிகாலையில்தான் வீடு வருவது. வீட்டில் போராடி இருபது ரூபாய் வாங்கிப்போவதே எவ்வளவு சந்தோஷமாக இருந்தது? கீரந்தங்குடி திருவிழாவில் வாழைத்தார் ஏலம் நடக்கும். அஞ்சு ரூபாய்க்குப் பெரிய தாரே கிடைக்கும். 'அண்ணாமலை’ பட ரேஞ்சுக்குப் போட்டி போட்டு ஏலம் எடுப்பதே கொண்டாட்டமாக இருக்கும். ராட்டினங்களும், பாம்பே சர்க்கஸும், கலர் பாயசமும், சர்பத்தும், ரிங் போடுகிற விளையாட்டும், ஃபிலிம் விளையாட்டும் திடுதிப்பென்று அம்மாக்களின் புடவைகளில் வந்து நிற்கும் தோழிகளுமாக... எவ்வளவு இனிய அனுபவம் அது?

வலங்கைமானில் மீன் பிடித் திருவிழா வுக்குப் போனால் அது தனி அனுபவம்! ஆண்களும் பெண்களுமாக ஊரே குளத் தில் இறங்கி வாரிக் கொட்டி மீன் பிடிக்கும். ஒரு பக்கம் கரை எல்லாம் ஏகப்பட்ட தண்ணிப் பாம்புகள் ஓடும். பிடித்த மீன்களை எல்லாம் கூறு கட்டிப் பிரித்துக் கொடுக்க, அன்றைக்கு ஊர் முழுக்க மீன் குழம்பு வாசம்தான். நாச்சியார்கோவில் அம்மனை திருவிழா முடிவில் ஆற்றில் கொண்டுபோய் இறக்கிவிட்டு வருகிற இரவுகளை... பாய், போர்வையோடு போய் பஃபூன் வந்துபோகிற வரை பார்த்துவிட்டு தூங்கிப் போன நாடகங்களின் மீதிக் கதைகளைக் காலையில் அத்தைகளிடம் கேட்ட ராத்திரிகளை மறக்க முடியுமா என்ன?

இப்போது ஊரில் திருவிழாக்கள் வெறும் சம்பிரதாயங்கள் ஆகிக்கொண்டு இருக்கின்றன. வெளியூர்களுக்குப் பிழைக்கப் போன குடும்பங்கள் எல்லாம் முன் போல் வந்து நிற்பது இல்லை. இந்த ஐ.பி.எல். தலைமுறைக்குத் திருவிழாக்களின் மேல் பெரிய ஈர்ப்பும் இல்லை. டி.வி.டி-க்களில் பார்த்த புதுப் படங்களைப் போட்டு, 'மானாட மயிலாட’ புகழ் நடனங்கள் நடத்தி நிறைந்துவிடுகின்றன திருவிழா இரவுகள். 'மயான காண்டம்’ அரிச்சந்திரனும் 'வள்ளித் திருமணம்’ குறத்தியும் பெட்டிக் கடை வைத்துக்கொண்டும் கட்டட வேலை பார்த்துக்கொண்டும் அலைகிறார்கள். காத்திருந்து காத்திருந்து அனுபவித்த தருணங்கள் இல்லாமல் கோடையின் இன்னுமொரு நிகழ்வாக இந்தத் தலை முறைக்கு மாறிவிட்டன திருவிழாக்கள்!

வட்டியும் முதலும் - 37

சென்னைக்கு வந்த பிறகும் திருவிழாக் களின் மேல் உள்ள பெருங்காதல் குறையவே இல்லை. உண்மையில் சென்னையின் பூர்வகுடிகளின் திருவிழாக்கள் கொண்டாட்டத்திலும் பண்பாட்டிலும் கிராமத்துத் திருவிழாக்களுக்குக் கொஞ்சமும் குறைவுஇல்லாதவை. ஆடி மாதங்களில் மொத்த சென்னையும் திருவிழாக்களால்தான் நிறைந்துகிடக்கும். அஞ்சாறு வருஷத் துக்கு முன்பு வரை ஆடி மாத இரவுகளில் ஏரியா ஏரியாவாக நண்பர்களோடு கிளம்பிவிடுவேன். ஒருமுறை போக் ரோட்டில் சிவாஜி வீட்டுக்குப் பின்னால் உள்ள குடிசைப் பகுதியில் திருவிழா. நானும் நண்பனும் ராத்திரி ரவுண்ட்ஸில் இருந்தபோது, 'ரண்டக்க ரண்டக்க’ சத்தம் இழுக்க, அந்தக் குடிசைப் பகுதிக்குள் புகுந்துவிட்டோம். ஃப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸில் மிகப் பெரிய அம்மனைச் செய்துவைத்து, கிலோ கணக்கில் மஞ்சளும் குங்குமமும் கொட்டிக்கிடக்க, கூட்டம் கும்மிக்கொண்டு இருந்தது. 'சந்திரலேகா’ பட டிரம்ஸ் மாதிரியான பெரிய பறையில் 'ரண்டக்க ரண்டக்க’ என நாலைந்து பேர் அடி பின்னிக்கொண்டு இருக்க... மொத்த ஏரியா பசங்களும் டான்ஸ் போட்டுக்கொண்டு இருந்தார்கள்.

ஏரியா பெண்கள் வேடிக்கை பார்த்ததில் உற்சாகம் ஓவர் டோஸில் இருந்தது. நானும் நண்பனும் அல்ரெடி பூஸ்ட் என்பதால், உடனடியாகக் களத்தில் குதித்தோம். அப்படியே அந்த குரூப்போடு ஐக்கியமாகி செம குத்து குத்தும்போதே சாமி ஊர்வலம் கிளம்பியது. பாண்டி பஜார் மார்க்கமாகக் கிட்டத்தட்ட ரெண்டு மூணு கிலோ மீட்டருக்கு நான்-ஸ்டாப் குத்து டான்ஸ். திடீரென்று கூட்டத்தில் ஒரு பையன் என்னைப் பார்த்து, ''நிறுத்து... நிறுத்து... யாரு நீ..?'' என்றதும் மொத்த மியூஸிக்கும் நின்றது. அத்தனை பேரும் எங்களைப் பார்க்க, நண்பன் பாதி மூவ்மென்டிலேயே ஜெர்க்கடித்து நின்றான். ''அட, வாங்க பிரதர்...'' என நான் மறுபடி டான்ஸுக்கு முயல, ''அடங்... கேக்குறன்ல... யார்றா நீ..?'' என என் சட்டையைக் கொத்தாகப் பிடித்தான் அந்தப் பையன். ''அப்டியே போட்றா அவன...'' எனக்

கூட்டம் எகிறி வர, எனக்கு அப்போதுதான் மூளைக்குள் அலாரம் அடித்தது. ''இல்லைங்க சார்... சும்மா உங்களோட...'' என இழுக் கும்போதே, ''அவனுங்களுக்கு பல்பு மாட்டு... பல்ப் மாட்றா...'' என நாலைந்து பேர் வெறியோடு வந்தார்கள். சட்டென்று பாதுகாப்புக்கு வந்த இரண்டு போலீஸார் உள்ளே புகுந்ததில் கடைசி நொடிகளில் தப்பித்தோம். அந்தப் போலீஸ்காரர், ''என்ன தம்பிகளா வெளியூரா..? சிக்கிருந்தா செதச்சுருப்பானுங்க... ஓடிப் போயிருங்கடா...'' என அனுப்பிவைத்தார். அதன் பிறகுதான் தெரிந்தது... சென்னையில் ஏரியா திருவிழாக்களில் அந்நியர்கள் யாருக்கும் இடமில்லை என்பது . வேறு ஏரியாக்காரர்கள் நுழைந்தால் பேத்தெடுத்துவிடுவார்கள். சாமியும் திருவிழாவும் அந்தப் பகுதிவாசிகளுக்கு மட்டுமேயான சந்தோஷம்... உரிமை... கொண்டாட்டம்!

போன வாரம் நண்பர் 'கானா’ செந்தில் வந்து, ''எங்க ஏரியால இன்னிக்கு திருவுழா... வாங்க தலைவா...' என வியாசர்பாடிக்கு அழைத்துப்போனார். அது ஒரு முனீஸ்வரன் கோயில். ''ஞாயித்துக்கெழம தேர் மறிச்சுது... நேத்து கூழ் ஊத்துனுது... இன்னிக்குதான் லாஸ்ட் நாளு... அப்பவே இட்டாந்துருக்கலாம்லடா...'' என்றார் செந்திலின் அம்மா. லோக்கல் குரூப்பின் ஆர்கெஸ்ட்ரா போய்க்கொண்டு இருந்தது. ஒரு பெண், 'கரிகாலன் காலப் போல...’ என பாடிக்கொண்டு இருக்க... அசுவாரஸ்யமாகக் கேட்டுக்கொண்டு இருந்தது கூட்டம். கொஞ்ச நேரத்தில் முனீஸ்வரனுக்குப் படையல் போட்டு, கோயிலுக்குப் பின்புறமே கறிச்சோறு பரிமாறினார்கள். சாப்பிட்டுவிட்டுக் கிளம்பும்போது குரு போன் பண்ணினான், ''தம்பி... முப்பதாம் தேதி ஊர்ல திருவுழாவாண்டா. நீ வர்றியா..?'

''முப்பதா... இல்லடா வேலை இருக்கு...'' என்றேன், கோபமாக முறைத்துக்கொண்டு இருந்த முனீஸ்வரனைப் பார்த்தபடி!                                    

- போட்டு வாங்குவோம்...