மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

ஆண்களின் ஆடைகள் குறைந்தால்..?!

##~##

பா.அசோக், விருதுநகர்.

 தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும். ஆனால், இறுதியில் தர்மமே வெல்லும் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

தேதி, வருஷம் எதையும் குறிப்பிடாமல், பொதுவாக 'இறுதி யில்’ என்று சொல்லி இருப்பதுதான் பேஜாராக இருக்கிறது! விசாரிக்கலாம் என்றால், இதைச் சொன்னவர் போன் நம்பரும் தெரியவில்லை!

ஜி.மாரியப்பன், சின்னமனூர்.

ஒவ்வோர் இடத்துக்கும் - அதாவது ஊருக்கும் - அதற்கான பெயர் எதன் அடிப்படையில், எப்படி, ஏன் வைக்கப்பட்டது?

எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். பாளையக்காரர் ஒரு கிராமத்தை உருவாக்குவார். உடனே, அவருடைய குலப் பெயரைக் கிராமத்துக்கு வைத்துவிடுவார்கள். ஒரு பெரிய ஏரி இருந்தால், ஏரிப் பெயர் ஊருக்கும் வந்துவிடும். நெல்லி மரங்கள் நிறைய இருந்தால், நெல்லிப்பட்டி என்பார்கள். காட்டில், மரத்தடியில் பெண் ஒருத்தி தூங்க, அவளைக் கோவணம் கட்டிய சிறுவன் எழுப்பி 'இங்கே எனக்கு ஒரு கோயில் கட்டு!’ என்று சொல்லி உடனே மறைந்துவிட, தொடர்ந்து கோயில், குடிசைகள் கிளர்ந்தெழ அது கோவணம் பட்டியாகிவிடும். தலபுராணம் மாதிரிதான்! இதுபற்றி எல்லாம் ஆராய்ச்சி செய்து எழுதப்பட்ட நல்ல தமிழ்ப் புத்தகங்கள் உண்டு!

பொன்விழி, அன்னூர்.

ஸ்பைடர்மேன், பேட்மேன் கதாபாத்திரங்களின் முன்னோடி யார்?

ஹாய் மதன் கேள்வி - பதில்

அனுமார்!

மு.விஜி, சென்னை-74.

'நான் ஆணையிட்டால்’ என்று முதலடி கொடுத்த கவிஞர், சற்றே பின் வாங்கி, 'அது நடந்துவிட்டால்’ என்று சந்தேக அடி கொடுத்தது ஏன்?

கவிஞர் பின்வாங்கவில்லை. இரண்டாவது அடியை இறைவனுக்குச் சமர்ப்பிக்கிறார். நிலநடுக்கம், சுனாமி... எதுவேண்டுமானாலும் வந்து தொலையலாம் இல்லையா? அதாவது, ஆணையிட்டால் போதாது... எல்லாம் நல்லபடியாக நடந்தால்தான், ஏழைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பதுதான் அர்த்தம்!

கி.ரவிக்குமார், நெய்வேலி.

எழுதும் பழக்கத்தைக்கூட (எழுத்தாளர்கள்) தொழிலாகக் கொள்ளலாம். வாசிக்கும் பழக்கத்தை (வாசகர்கள்) தொழிலாகக் கொள்ள முடியுமா?

அவர்களுக்கு எழுதுவது தொழிலானது. உங்களுக்குப் படிப்பது வாழ்க்கையில் எழிலானது!

கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

மூளை எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் மனம் கட்டுப்படுமா?

மனம் - அபத்தமான அசட்டு ராஜா. மூளை - அவரிடம் வேலை பார்க்கும் மகா கெட்டிக்கார அமைச்சர். என்ன செய்ய... ராஜா சொல்வதுதான் எடுபடுகிறது!

செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்

கேள்வி நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டால் மதன் என்ன செய்வீர்கள்?

இப்போது என்னிடம் இருக்கும் கேள்விகளை வைத்துக்கொண்டு கித்தாப்பாகநான்கு ஐந்து வருடங்கள்கூடச் சமாளிக்க முடியும். அதற்குப் பிறகு? உங்களிடம் வந்து 'நான் என்ன தப்பு செய்தேன்? ப்ளீஸ்... கேள்விகளை அனுப்புங்கள்...’ என்று கெஞ்சி அறிக்கைவிட வேண்டியதுதான்!

விஜயலட்சுமி, பொழிச்சலூர்.

ஆடைகள் குறையக் குறைய பெண்கள் செக்ஸியாக மாறிவிடலாம். ஆண்கள் எப்படி?

உழைப்பாளியாக!

சி.பி.நாராயணன், செக்கானூர்.

போகத்தின்போது கெட்ட வார்த்தைகள் பேசினால், ஆறு விரல்களுடைய குழந்தைகள் பிறக்கும் என்பது உண்மையா?

மொழி வந்த பிறகுதான் ஆறு விரல்கள் வந்தன என்கிறீர்களா? பலே!

து.பூவராகன், செய்யாறு.

பொதுவாக, எல்லா ஓட்டப் பந்தயங்களிலும் (மாரத்தான் உட்பட) கென்ய நாட்டு வீரர்களே வெல்வதற்கு என்ன சிறப்புக் காரணம்?

'வம்சாவளி’யாகவே (Heredity) அவர்கள் உடலமைப்பு அப்படி. ஆப்பிரிக்கப் பழங்குடி மனிதன், சர்வசாதாரணமாக 20 கி.மீ. இரையை விடாமல் துரத்தி ஓடி, அம்பெய்து, இரையைத் தோளில்

ஹாய் மதன் கேள்வி - பதில்

போட்டுக்கொண்டு மூச்சு வாங்காமல் திரும்பி வருவான். ஆகவே, மாரத்தான் அவர்களுக்குக் கை வந்த... ஸாரி, கால் வந்த கலை!

சாம்பவி, பெங்களூரு.

அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளில் தி பெஸ்ட் என்று எதைச் சொல்வீர்கள்?

பல்பு - தி பெஸ்ட் அண்ட் வொர்ஸ்ட் செல்போன்!

பா.ஜெயபிரகாஷ், சர்க்கார்பதி

பரிகாரம் - பிராயச்சித்தம் என்ன வித்தியாசம் சார்?

பரிகாரம் இறைவனுக்கு... பிராயச்சித்தம் மனிதனுக்கு!