Published:Updated:

வாசகிகள் பக்கம் - அனுபவங்கள் பேசுகின்றன !

ஒவ்வொன்றுக்கும் பரிசு: 150 ஓவியங்கள்: சேகர்

 அதிர்ச்சி தந்த மொபைல் கேம்ஸ்!

##~##

சமீபத்தில் எங்கள் வீட்டுக்கு வந்திருந்த, யு.கே.ஜி படிக்கும் என் தங்கை மகன், என்னுடைய மொபைல் போனில் கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்தான். சற்று நேரம் கழித்து என் போனுக்கு வந்த மெசேஜ் அதிர்ச்சி அளித்தது. 'இந்த கேம்ஸுக்காக 50 ரூபாய் பணம் எடுக்கப்பட்டு விட்டது. மேலும் தொடர இந்த வெப்சைட்டைப் பார்க்கவும்’ என ஒரு முகவரி கொடுக்கப்பட்டிருந்தது. மறுநாளும் இதேபோல் இரண்டு 50 ரூபாய் என, மொத்தம் 150 ரூபாயை இரண்டே நாளில் காலி செய்திருந்தான் குட்டி. 'மொபைல் கேம்ஸ் இலவசம்தானே...’ என்று அதுவரை அசட்டையாக குழந்தைகளிடம் மொபைலைக் கொடுக்கும் பழக்கத்தில் இருந்த நான், இப்போது சுதாரித்துக் கொண்டேன்.

பொதுவாகவே பல வீடுகளிலும் பெரியவர்களின் மொபைல் போனை எடுத்துக் குழந்தைகள் விளையாடிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், செலவில்லாமலே விளையாடுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்க, காஸ்ட்லியான மொபைல் போன் டவுன்லோடு கேம்ஸை அனுமதிக்க வேண்டுமா...? யோசியுங்கள் தோழிகளே!

வாசகிகள் பக்கம் - அனுபவங்கள் பேசுகின்றன !

- மங்கையர்க்கரசி, சென்னை-78

'பவர் கட்’ தரும் பாடம் !

வாசகிகள் பக்கம் - அனுபவங்கள் பேசுகின்றன !

என் அம்மா வீட்டின், பக்கத்து வீட்டு மாடியிலிருந்து அன்று குபுகுபுவென புகை வந்துள்ளது. எதேச்சையாக பின் வீட்டுக்காரர் அதைக் கவனித்து சத்தம் போட, அக்கம் பக்கத்தில் உள்ள அனைவரும் ஓடிச்சென்று பார்த்தால், அந்த வீடு பூட்டப்பட்டிருக்க... உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தால், சமையலறையிலிருந்த கிரைண்டர் எரிந்து கொண்டிருந்தது. மாவு அரைத்துக் கொண்டிருந்தபோது 'பவர்’ கட் ஆகிவிட, 'ஆஃப்’ செய்யாமல் அவசரமாக வெளியே சென்றுள்ளனர். 'பவர்’ வந்ததும் கிரைண்டர் தானாக ஓட ஆரம்பிக்க, நீண்ட நேரம் ஆனதும் அதன் மோட்டார் தீப்பிடித்து எரிந்துள்ளது. நல்லவேளையாக... அருகிலேயே சிலிண்டர் இருந்தபோதும் பெரிதாக அசம்பாவிதம் ஆவதற்குள்... தடுக்கப்பட்டு விட்டது.

எப்போது வீட்டை விட்டுப் புறப்பட்டாலும், 'பூட்டிவிட்டோமா...' என்று பார்ப்பது போல... மின் சாதனங்கள் அனைத்தும் 'ஸ்விட்ச் ஆஃப்' செய்யப்பட்டுள்ளதா என சரிபார்த்த பின்பே புறப்பட வேண்டும். இந்த 'பவர் கட்’ யுகத்தில், மறக்காமல் படிக்க வேண்டிய பாடம் இது!

- சாந்தி ஜெயக்குமார், புதுக்கோட்டை

பரிசு ஆசையில் பணம் பறிபோனது !

வாசகிகள் பக்கம் - அனுபவங்கள் பேசுகின்றன !

விளம்பரம் ஒன்றில், 'கீழேயுள்ள படத்தைப் பார்த்து பதிலளித்தால்... கண்கவர் பரிசு காத்திருக்கிறது’ என்று கூறி கார், ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், செல்போன் என பரிசுகளை பட்டியலிட்டு இருந்தனர். அதில் சச்சின் டெண்டுல்கர் படம் இடம் பெற்றிருக்க... 'இவ்வளவு எளிமையாக இருக்கிறதே’ என்று ஆர்வமாகி, குறிப்பிட்ட செல் நம்பருக்கு பதிலை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பினேன். ஒரு மாதம் கழித்து என் செல்போனில், 'நீங்கள்தான் இப்போட்டியின் முதல் பரிசான காரை வென்றுள்ள அதிர்ஷ்டசாலி. காருக்கான சர்வீஸ் டாக்ஸ் 3,500 ரூபாய். விவரங்கள் தபாலில் அனுப்பப்பட்டுள்ளன. அந்தப் பணத்தைக் கட்டி தபாலை வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று ஹிந்தியும் தமிழும் கலந்து ஒருவர் பேசினார். ஒரு வாரம் கழித்து தபாலும் வந்தது. நிலைகொள்ளா ஆர்வத்தில் 3,500 ரூபாய் பணத்தைக் கட்டி கவரை வாங்கிவிட்டேன். பிரித் தால்... பேரதிர்ச்சி எனக்கு. அதில் 2 சீயக்காய் பொட்டலங்களும், ஒரு ஷாம்புவும் இருந்தன!

ரூம் போட்டு யோசித்துதான் ஏமாற்றுகிறார்கள்... உஷார்... உஷார்!

- எம்.மங்களாம்பிகை, காஞ்சிபுரம்

சமயோசித சமாளிப்பு!

கோடைக் காலம் ஆரம்பித்துவிட்டாலே... 'ரோட்டோர மாரியம்மன் கோயிலில் திருவிழா', 'கங்கா நகர் கன்னியம்மன் கோயிலில் கூழ் ஊற்றுகிறோம்', 'ஆத்தோர அம்மனுக்கு அன்ன தானம் செய்கிறோம்' என்று வசூலிக்க வந்து விடுவார்கள். இதில், பெரும்பாலும் பொய்க்கதை சொல்லி பணத்தைச் சுருட்டி பாக்கெட்டில் போட்டுக் கொள்ளும் 'வசூல் ராஜா'க்கள்தான் அதிகம்.

வாசகிகள் பக்கம் - அனுபவங்கள் பேசுகின்றன !

இப்படி வருபவர்களிடம் கோயில் தொடர்பான மொத்த விவரத்தையும் கேட்டு, அது உண்மையாக இருந்தால் மட்டுமே தன்னால் ஆன உதவிகளைச் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறாள் என் தோழி. கடந்த வாரம் இப்படித்தான் இரண்டு இளைஞர்கள் வந்து ஏதோ ஒரு கோயில் பேரைச் சொல்லி பணத்தை வசூலிக்க முயல... சற்று மாற்றி யோசித்து ''நேற்றுதானே இதே கோயிலுக்காக வந்து எங்கிட்டே பணம் வாங்கிட்டுப் போனாங்க; இருங்க நான் கொடுத்த பணத்துக்கான ரசீதைக் கொண்டு வர்றேன்'' என்று இவளும் போலியாக சொல்ல... அந்த 'வசூல் ராஜாக்கள்' சட்டென்று நழுவி ஓடியிருக்கின்றனர்.

இந்த விஷயத்தை என்னிடம் அவள் சொன்னபோது... சமயோசிதமாக சமாளித்த அவளுக்கு 'சபாஷ்’ சொன்னதோடு... இனி நாமும் இதை பின்பற்றலாமே என்று மனதில் பதித்துக் கொண்டேன்!

- என்.மாலதி, புழுதிவாக்கம்