உங்களுக்கு வேண்டுமா நிரந்தர அழகு ?அழகுக் கலை நிபுணர் வீணா குமாரவேல் படங்கள்: கே.கார்த்திகேயன்
##~## |
பெண்களின் யுனிவர்சல் கவலை... '20 வயதின் பொலிவை 40 வயதிலோ, 40 வயதின் அழகை 60 வயதிலோ கொண்டு செலுத்த முடிவதில்லையே?!’ என்பதுதான்!
சருமம் மற்றும் கேச விஷயத்தில் ஒவ்வொரு பருவத்திலும் அப்போது ஏற்படும் பிரச்னைகளுக்குத் தேவைப்படும் பராமரிப்பு முறைகளை சரிவர செய்துகொண்டாலே... அழகு நிரந்தரமாகிவிடும்! ஒவ்வொரு ஏஜ் குரூப்பிலும் ஏற்படும் மாற்றங்களையும், அதற்கான தீர்வுகளையும் இங்கு பார்ப்போம்!
20 வயதிலிருந்து..!
டீஜ் ஏஜுக்கு அடுத்த நிலையான இந்த வயதில், உடல் மற்றும் மனரீதியான மாற்றங்கள் நிறைய இருக்கும். குறிப்பாக, ஹார்மோன் மாற்றங்களால் முகத்தில் அதிகம் எண்ணெய்த் தன்மை தட்டும். இதனால் முகம் பொலிவிழக்கும். எனவே, இந்த வயது பெண்கள் அந்த அதிக எண்ணெய்ப் பசையைக் கட்டுப்படுத்தக்கூடிய 'டீப் கிளென்ஸிங் ஃபேஷியல்' செய்துகொள்ளலாம். சீஸனுக்கு ஏற்றாற்போல கிடைக்கும் பழங்களைக் கொண்டே மாதத்துக்கு ஒரு முறை ஃப்ரூட் ஃபேஷியல் செய்துகொள்ளலாம். அழகு மிளிர இதுவே போதும்!

கேசத்தைப் பொறுத்தவரை, பொடுகுதான் இந்த வயதில் பெரும் தொல்லையாக இருக்கும். தலைமுடி சுத்தமின்மை, எண்ணெய்ப் பசை இல்லாமை, மன அழுத்தம் போன்றவையே இப்பிரச்னைக்குக் காரணம். இதிலிருந்து மீள, வாரத்துக்கு மூன்று முறை ஹேர் வாஷ் செய்வதும், அதை ஆயில் மசாஜாக எடுத்துக் கொள்வதும் பலன் தரும். தாயாகும் பெண்களுக்கு குழந்தை வளர்ப்பு டென்ஷனால் கேசத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகும். எனவே, அவர்கள் மேற்சொன்ன பராமரிப்புகளை மேற்கொள்வதுடன் சரிவிகித உணவு, வைட்டமின், புரோட்டீன் போன்றவற்றையும் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
30 வயதிலிருந்து..!

பெண்களின் லைஃப் ஸ்டைல் பெருமளவில் மாறுதலுக்கு உட்படும் பருவம் இது. வேலை டென்ஷன், வீட்டு டென்ஷன்களுடன் குழந்தைகள், கணவர் என இந்த வயதிலிருக்கும் பெண்கள் பெரும்பாலும் தங்களுக்காக வாழ்வதைவிட, குடும்பத்துக்காகவே வாழ்வர். இந்த வயதுகளில் சருமப் பராமரிப்பைவிட முதன்மையாக ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உணவு, உடற்பயிற்சி என சீரான ஒரு வாழ்க்கை முறையைச் செதுக்கிக்கொள்ள வேண்டும். இந்த வயதில் தேகத்தின் மீது எடுத்துக்கொள்ளும் அக்கறையின் பலன்தான்... ஆயுள் முழுக்க உடன் வரும்! சருமத்தைப் பொறுத்தவரை, இந்த வயதினருக்கு சரும வறட்சியே முக்கியப் பிரச்னையாக இருக்கும். இதை கவனிக்காமல் விட்டால்... முகச் சுருக்கம், அதன் தொடர்ச்சியாக வயதான முகத்தோற்றம், அடுத்தடுத்து கரும்புள்ளிகள், வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் பிக்மென்டேஷன் மார்க்ஸ் என பல பிரச்னைகள் வரிசை கட்டும்.
மாதத்துக்கு ஒருமுறை சோற்றுக்கற்றாழை அல்லது மில்க் கிரீம் பேஸ்டு ஃபேஷியல் செய்துகொள்ளலாம். அது வறட்சியைக் குறைத்து சருமத்தில் ஈரத்தன்மையைத் தக்க வைக்கும். இரவு உறங்கச் செல்வதற்கு முன், நைட் கிரீம் அப்ளை செய்துகொள்ளலாம். இதுவும் ஈரத்தன்மையைத் தக்க வைப்பதுடன், முகமும் பளபளப்பு, மிருதுத் தன்மை அடையும்.
35 வயதிலிருந்து..!
கேசத்தைப் பொறுத்தவரை, நரைமுடி எட்டிப் பார்க்கும் பருவம் இது. ஆனால், இந்த யுகத்தில் இது கவலைக்குரிய விஷயமே இல்லை. இப்போது மார்க்கெட்டில் ஏகப்பட்ட ஹேர் கலர் புராடக்ட்டுகள் கிடைக்கின்றன. நம் முக அமைப்புக்கும், கேசத்துக்கும் பொருத்தமான கலரை அப்ளை செய்துகொள்ளலாம். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம்... நாம் பயன்படுத்தும் கலர், 'லெஸ் அமோனியா’ தயாரிப்பாக இருக்க வேண்டும்.
40 வயதிலிருந்து..!

நமக்கு வயதாகிறது என்பதை உணர்த்தும் பருவம் இது. வெளித்தோற்றத்தில் கொஞ்சம் கொஞ்சமாக முதுமை எட்டிப் பார்க்கும். தோல் சுருக்கம், கண்ணில் கருவளையம் போன்ற பிரச்னைகள் பிரதானமாகத் தெரியும். ஆரம்பகட்ட சரும சுருக்கம் மற்றும் கடினத்தன்மை போன்றவை நீங்குவதற்கு... தொடர்ச்சியான ஃபேஷியல்கள் செய்துகொள்வது கை கொடுக்கும். ஆன்ட்டி ஏஜிங் புராடக்ட்ஸ் அடங்கிய ஃபேஷியல் பரிந்துரைக்கத்தக்கது. மெனோபாஸ் பிரச்னையால் சிலருக்கு இரும்புச் சத்து குறைய, முடி கொட்டும். அதை அழகுப் பிரச்னையாக மட்டுமே பார்க்காமல், மருத்துவ ரீதியிலும் பார்க்க வேண்டும். தேவைப்பட்டால், ஆலோசனையுடன் ஊட்டசத்து மருந்துகள் எடுத்துக் கொள்வதும் முக்கியம்.
50 வயதிலிருந்து..!

ஸ்கின் தளர்ந்து மடங்கும் பருவம், இந்த ஹாஃப் சென்ச்சுரி பருவம். மாதவிடாய்க்குப் பிந்தைய காலம் என்பதால் சருமம் இயல்பாகவே லகுத்தன்மை அடையும். அதேபோல சருமத்தின் ஈரப்பதமும் மிகக்குறைவாகவே இருக்கும். இதனால் சூரிய ஒளியை எதிர்கொள்கிற எதிர்ப்புசக்தி குறைந்து, முகத்தில் கருமை, கரும்புள்ளிகள் உண்டாகவும் வாய்ப்புள்ளது. தளர்ந்து போன சருமத்தை இறுக்கவல்ல 'டைட்டனிங்’, மற்றும் சருமத்துக்கு ஈரப்பதம் தரவல்ல 'ஹைட்ரேட்டிங்’ தயாரிப்புகள் கொண்டு ஃபேஷியல் செய்துகொள்வது இதற்குத் தீர்வு கொடுக்கும். சருமப் பராமரிப்புக்கு ஆன்ட்டி ஏஜிங் புராடக்ட்ஸ் ஃபேஷியல் எடுத்துக் கொள்ளலாம். மேக்கப்பை தவிர்ப்பது நல்லது. கேசத்தில் பாதி அளவுக்குச் சிரிக்கும் நரை முடியை... டை, கலரிங் என்று சமாளிக்கலாம்!
இந்த அழகுப் பராமரிப்புகளுடன் கூடவே, சரும ஆரோக்கியத்துக்கான உணவுப் பழக்கமும் ஒவ்வொரு பருவத்திலும் உடன் வர வேண்டும். சரியான அளவு கலோரி உணவுடன், அதிகம் பச்சை காய்கறிகள், பழங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை, உப்பு குறைக்க வேண்டும். பருப்பு வகைகள் அதிகம் உட்கொள்வது, வெளித் தோற்ற முதுமையைக் கட்டுப்படுத்தும். நாள் ஒன்றுக்கு குறைந்தது 2.5 லிட்டர் அளவு தண்ணீர் அவசியம். வயது ஏற ஏற, கொலஸ்ட்ரால் கன்ட்ரோல் வேண்டும்.
''ஏஜ் புரமோஷன்ல ஃபாலோ செய்ய வேண்டிய விஷயங்கள் இவ்வளவா..?!'' என்று, மாடல் ஆர்த்தி மனதில் குறித்துக் கொண்ட இந்த விஷயங்களையெல்லாம், நீங்களும் குறித்துக் கொண்டீர்கள்தானே!
அழகாக இருங்கள்... அகத்திலும்!
நிறைவடைந்தது