Published:Updated:

துர்கா

துர்கா

நடிப்பு : ஐஸ்வர்யா 
கலை : ஸ்யாம்
ஒளிப்பதிவு : கே.ராஜசேகரன்
கதை, திரைக்கதை : தேவிபாலா
இயக்கம் : நீங்களேதான்

##~##

வாசலில் கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கியது... தீபிகா! படியேறி மேலே வந்தாள்!

''அக்கா... இவங்க ஏன் வர்றாங்க இங்கே?''

''தெரியலியே அன்வர்!''

என்ன நிகழப் போகிறது இந்த சந்திப்பில்..?!

- இப்படியரு கேள்வியோடு முடிந்திருந்தது கடந்த எபிசோட். துர்கா-தீபிகா... இந்த இரு பெண்களின் சந்திப்பில் என்னென்னவெல்லாம் நிகழலாம் என்பதை, தங்கள் கற்பனையில் சொல்லி அசத்தியிருக்கிறார்கள் தோழிகள்!

பெங்களூரு - அபர்ணா, சென்னை - மாயா, குளித்தலை - எஸ். மங்கை, மதுரை - விஜயலட்சுமி... இந்த நாலுபேரும், 'தீபிகா, ஆனந்த்தின் தீவிர ரசிகை என்பதால், அவனைத் திருத்த முடியும்' என்கிற நம்பிக்கையை விதைக்கிறார்கள்!

துர்கா

திருவான்மியூர் - ஜெயா சங்கரன்... 'துர்காவின் அத்தான் பாலாஜி மற்றும் தீபிகா ஜோடி சேருகிறார்கள்' என்று தடாலடியாக வேகமெடுக்கிறார்.

போரூர் - காளீஸ்வரி... 'தீபிகாவை செந்தில் சந்திக்க, ஷாக்' என ஒரு புதுக்கதை தொடங்குகிறார்.

கப்பலூர் - ஜெயசித்ரா... 'கொஞ்ச நாள் பிரிஞ்சு இருங்க. ஆனந்த்தை நான் திருத்தறேன் என துர்காவுக்கு உறுதி கூறத்தான் வந்திருக்கிறார் தீபிகா' என்று நட்புப் பாதை போடுகிறார்!

கும்பகோணம் - ஜெயலட்சுமி சேஷாத்ரி.... தீபிகாவை எதிரியாக்கி, துர்காவுடன் மோத விடுகிறார் இந்தச் சகோதரி. விறுவிறுப்பாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் 'பெப்' கூடியிருந்தால்... எபிசோட் நாற்காலியை இவர் பிடித்திருப்பார். தொடர்ந்து முயற்சிக்க தவறாதீர்கள் தோழியே!

தஞ்சாவூர் - செந்தாமரை... ஆனந்துக்கு ஒரு புதுப் பரிமாணத்தை உருவாக்கி, அவனுடைய இன்னொரு முகத்தை உரித்துக் காட்டும் முயற்சியைக் கையில் எடுத்திருக்கிறார். சபாஷ் தோழியே... இதுதான் வேண்டும். கதாபாத்திரத்தின் தன்மையை முடிவு செய்துவிட்டால்..., கதை தானாகவே ஓட்டமெடுக்க ஆரம்பித்துவிடும்!

துர்கா

வாருங்கள் செந்தாமரை... நீங்கள்தான் இந்த எபிசோட் இயக்குநர். வாழ்த்துக்கள்!

''என்ன வேணும்னாலும் உருவாகட்டும். படியேறி வீடு தேடி வர்றவங்களை வரவேற்கறதுதான் பண்பாடு!'' என்று அன்வரிடம் துர்கா சொல்லிக் கொண்டிருக்கும் போதே... தீபிகா நெருங்கி விட்டாள்.

''வாங்க தீபிகா!''

- துர்கா முகம் மலர்ந்து வரவேற் றாள். தீபிகா இதை எதிர்பார்க்க வில்லை.

''உள்ளே வாங்க! உட்காருங்க!''

''நல்லா இருக்கீங்களா துர்கா?''

''நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?'' என்றவளை, தீபிகா கண்களை அகட்டிப் பார்த்தாள்.

''காபி கொண்டு வர்றேன். இது அன்வர். என் கூடப் பிறக்காத தம்பி!''

''துர்கா... உங்ககிட்ட மனசு விட்டு நான் பேசணும்!''

''சொல்லுங்க!'' என்றபடி அருகில் வந்து உட்கார்ந்தாள்.

''சமீபத்துல ஆனந்த்தை நான் காப்பாற்றினேன். அவர் என்னோட பழைய நண்பர்.''

''தெரியுமே!''

''அவரோட ஓவியத்துக்கு நான் ரசிகையும்கூட. அந்த ரசனை ஒரு தலைக் காதல் வரைக்கும் என்னைக் கொண்டு போச்சு. ஆனா, அப்ப ஆனந்த் விரும்பல. விலகிட்டார். உங்களைக் கல்யாணம் செஞ்சு கிட்டார். வெறுப்புல வெளிநாட்டுக்குப் போன நான், அங்கே ஒருத்த ருக்கு மனைவியாகி, அவர் இறந்தும் போனார். மறுபடியும் தாயகம் திரும்பிட்டோம். சரி, என் சோகக் கதை போதும். இப்பவும் நான் ஆனந்த்தோட ரசிகையாத்தான் இருக்கேன். அவர் உருவாக்கின பல உயிரோட்டமான ஓவியங்கள் என் கிட்ட தூசு படிஞ்சு கிடக்கு.''

அன்வர், துர்காவைப் பார்த்தான்.

''அதையெல்லாம் தூசு தட்டி, மறுபடியும் உலகத்துக்குக் காட் டணும். தூங்கற அந்தக் கலைஞனை தட்டி எழுப்பணும் துர்கா.''

துர்கா பேசவில்லை.

''ஆனந்த், ஓவியக் கலைஞன்னு உங்களுக்குத் தெரிஞ்சுருக்கும்தானே துர்கா.''

''மேலே சொல்லுங்க தீபிகா.''

''நீங்கதான் சொல்லணும். அந்தக் கலைஞனோட தாகங் களைப் புரிஞ்சுக்கிட்டு, அவனை ஒரு மனைவி உச்சத்துக்கு கொண்டு வந்திருக்க வேண்டாமா? எப்படி கோட்டை விட்டீங்க?''

''நீங்க பேசி முடிங்க தீபிகா.''

''நான் இப்ப ஆனந்த்துக்கு வேலை கொடுத்து, லட்ச ரூபாய் சம்பளமும், காரும் வசதிகளும் எதுக்குத் தந்திருக்கேன் தெரி யுமா? அந்த உன்னதமான கலைஞன் உயிர்த்தெழணும். மற்றபடி, எனக்கு ஆனந்த் மேல வேற எந்த ஈடுபாடும் இல்ல.''

துர்கா மெதுவாக எழுந்தாள். ஃப்ரிட்ஜ் திறந்து, கொஞ்சம் குளிர்ந்த மோரை எடுத்து வந்து தீபிகாவிடம் தந்தாள்.

''தீபிகா... ஒடம்பும் மனசும் சூடாகறதுக்கு முன்ன இதைக் குடிங்க.''

''புரியல.''

''நான் சொல்லப் போற தகவல் உங்களை ஆவேசப் படுத்தும்.''

''அப்படீனா?''

''ஆனந்த், ஓவியம் வரையும்போது பக்கத்துல இருந்து நீங்க பார்த்ததுண்டா?''

தீபிகா யோசித்தாள்.

''அதுக்கு ஆனந்த் அனுமதிக்கல. ஒரு கலைஞனோட அந்தரங்கத்துல நாம நுழையறது நாகரிகமில்லனு நானும் விட்டுட்டேன்.''

''ஏன் ஆனந்த் அனுமதிக்கல தெரியுமா? அவர் ஒரு ஓவியனே இல்ல!''

''என்ன சொல்றீங்க?''

- அதிர்ச்சியின் உச்சத்திலிருந்து கத்தினாள் தீபிகா.

துர்கா

''ஆனந்த்தோட உயிர் நண்பர் பிரேம்னு ஒருத்தர் இருந்தார். அவர் உருவாக்கின ஓவியங்கள்தான் இத்தனையும்!''

''எ... என்னது?''

''அவர் வசதி குறைஞ்சவர். கலை தாகம் உள்ளவர். இளம்பிள்ளை வாதத்துல இடுப்புக்குக் கீழே சூம்பிப் போன மனிதர். வெளியுலகம் காணமுடியாதவர். அதனால தன் கற்பனைகள் அத்தனைக்கும் நாலு சுவருக்குள்ளே வடிவம் தந்து தூரிகையில வாழ்ந்தவர். ஆனந்த் மூலமா தன் ஓவியங்களை விற்று ஜீவனம் பண்ணிக் கிட்டிருந்தார். தன் ஓவியங்கள்னு வெளியில சொல்லி, கிடைச்ச பணத்துலயும் ஒரு பகுதியை தனக்கு ஒதுக்கி வெச்சுட்டு, பிரேம் கூட நட்பைத் தொடர்ந்தார் ஆனந்த்!''

''அப்படியா?''

''கவனிக்காம விட்டதால... கேன்சர் முற்றின நிலையில் இறந்துட்டார் பிரேம். இத்தனையும் ஆனந்த்தோட கல்யாணத்துக்கு முன்ன நடந்த சம்பவங்கள்!''

அன்வரும் அதிர்ச்சிக்கு ஆளாகியிருந்தான்.

''நீங்க வெச்சுருக்கற அத்தனை ஓவியங்களும் பிரேம் உருவாக்கினது. சொந்த பந்தம்னு பிரேமுக்கு யாரும் இல்லை. அதனால மீதி ஓவியங்கள விற்று ஆனந்த் காசாக்கிட்டார். உங்களை மாதிரி ஒரு பணக்காரப் பெண்ணை கல்யாணம் செஞ்சுக்க ஆனந்த்துக்கு கசக்காது. ஆனா, நீங்க தீவிர ரசிகையா இருக்கற காரணமா, அவரை ஓவியத்தை உருவாக்கச் சொல்லுவீங்க. ரசிகை, மனைவியா மாறினா, தன் கதை கந்தலாகும்னு புரிஞ்சுதான் ஆனந்த் உங்களை விட்டு விலகினார். என்னைக் கல்யாணம் செஞ்சுகிட்டார்!''

''இது... உண்மையா துர்கா?''

''கல்யாணம் முடிஞ்சு ஒரு வருஷத்துல இத்தனை உண்மைகளும் எனக்குத் தெரிய வந்தது. ஆனந்த் மோசமான ஒரு சுயநலக்காரர். தனக்குத் தேவை யானதை நிறைவேற்றிக்க, யாரை வேணும்னாலும் பலி கொடுப்பார். கூடவே வாழ்ந்த நான் அதை முழுசா புரிஞ்சுக்கிட்டபோது... அஞ்சு பொறந் துட்டா. குழந்தை பிறந்த பிறகு, ஆயிரம் மன வேற்றுமைகள் இருந்தாலும், கணவனை ஒரு பெண் சகிச்சுகிட்டுத்தான் போகணும். இல்லைனா, குழந்தையோட எதிர்காலம் பாழாயிடும் தீபிகா.''

''ஆச்சர்யமா இருக்கே துர்கா!''

''முதல் நாலு வருஷங்கள் ஆனந்த்துக்குள்ளே இருக்கற மிருகத்தை நான் வெளியில யாருக்கும் காட்டாம மறைச்சு, பெரிசு படுத்தாம வாழ்ந்தேன். அப்படியும் அது அடங்கல. இப்ப ஒரு வருஷமா அது வெளியில வந்து உலவத் தொடங்கியாச்சு.''

''மிச்சத்தை நான் சொல்றேன் தீபிகா!'' என்று குறுக்கிட்ட அன்வர், சமீப நிகழ்வுகள் அனைத்தையும் சொல்லி முடிக்க, வெறுப்பின் உச்சத்துக்கே போனாள் தீபிகா.

''ஆனாலும் இப்பக்கூட, அக்காவுக்கு அந்தக் குடும்பத்து மேல இருக்கற மரியாதை குறையல. சுதாவோட கல்யாணத்தை அவங்க அம்மாதான் முன்ன நின்னு நடத்தணும்னு எல்லாரையும் அங்க அனுப்பி வெச்சுருக்காங்க!'' என்றபோது, வாசலில் கார் வந்து நின்றது. அனைவரும் இறங்கி உள்ளே வர, தீபிகா இருப்பதைக்கூட கவனிக்காமல் நடேசனும், சுதாவும் மாறி மாறி புலம்பத் தொடங்கிவிட்டார்கள்.

''அண்ணி... நீங்க இல்லாம என் கல்யாணம் நடக்காது. அண்ணன் வர வேண்டாம்.''

''ராஜத்தோட பேச்சைக் கேட்டு ஆனந்த் பிச்சை எடுக்கப் போறான்'' என்ற நடேசன்... அப்போது தான் தீபிகாவை கவனித்தார். முகம் மாறியது.

அதை உணர்ந்த துர்கா, ''மாமா... தீபிகா எந்த கெட்ட எண்ணத்தோடயும் இங்க வரல. நான் விவரமா சொல்றேன். நீங்கள்லாம் முதல்ல உள்ள போய் சாப்பிடுங்க'' என்றவள், அன்வரையும் உள்ளே அனுப்பினாள்.

''ஆனந்துக்கு நீங்க வேலை கொடுத்தது அப்படியே இருக்கட்டும். இது மறுக்கப்பட்டா, மறுபடியும் குடிக்கு அடிமையாகி தெருவுக்கு வந்துடுவார். அவரை மனுஷனாக்க என்னால முடியல. ஒரு மனைவியா நான் தோத்துட்டேன். உங்களால அது முடிஞ்சா, செய்ங்க தீபிகா!''

''நானும் கட்டின கணவனால கேவலப்பட்டவ தான். அவனால ஜெயில் வரைக்கும் போனவ. அதனால உங்க அவமானங்கள் அத்தனையும் எனக்குப் புரியுது. ஆனந்த் மாதிரி ஒரு பித்தலாட்டக்காரன் நட்பு எனக்கு வேண்டாம்'' என்றவளின் குரலில் வெறி இருந்தது.

''தீபிகா... அவசரப்பட வேண்டாம். பணமும் பதவியும் பார்த்தா, ஒருவேளை திருந்தி வரலாமில்லையா?''

''கஷ்டம் துர்கா. உங்களை மாதிரி ஒரு உன்னத மனைவி, அவர் குடும்பத்தையே தாங்கிப் பிடிச்சீங்க. அந்த நன்றிக் கடனுக்கு, தன் உடம்பையே அவர் செருப்பா தச்சுப் போட்டிருக்கணும். ஆனா... என்னையும் கூட்டிட்டு உங்க வீட்டுக்கே வந்து சவால் விடறார். ஸாரி துர்கா. நான் மரியாதை கொடுக்க நினைக்கறது ஒரு உன்னத கலைஞனுக் குத்தான். ஒரு பித்தலாட்டக்காரனுக்கு இல்லை'' என்ற தீபிகாவின் வார்த்தைகளை கேட்டபடியே வந்தார் நடேசன்.

''ஸாரிம்மா தீபிகா... உன்னை நான் தப்பா நெனச்சுட்டேன்.''

''பரவால்ல அங்கிள். துர்கா... நம்ம நட்பு தொடர ணும். நீங்க எங்க வீட்டுக்கு வரணும். சரியா?''

துர்கா, தீபிகாவை வாசல் வரைக்கும் கொண்டு வந்து விட்டாள்.

''பகை வேண்டாம் தீபிகா.''

''இல்லை துர்கா. திமிர் புடிச்சவங்கள திருத்தறது நம்ம வேலை இல்லை!''

கார் புறப்பட்டது. நடேசன் அருகில் வந்தார்.

''அவன் கல்யாணத்தை நடத்துவானாம், அதுக்கு நீ மட்டும் வரக் கூடாதாம். என்ன ஒரு ஆணவம்? கடவுள் அதுக்கு பரிசு கொடுக்கப் போகுது. தெய்வம் இப்பல்லாம் நின்னு கொல்ற தில்லை. அப்பப்பவே தண்டிச்சுடுது.''

''சரி மாமா... நாம கல்யாண வேலைகளை கவனிப்போம். செந்தில் வீட்டுக்கு முறையா போய்ப் பேசணும்.''

தீபிகா, நேராக கம்பெனிக்கு வந்துவிட்டாள். அப்பா தனசேகரன் ஏற்கெனவே காத்திருந்தார்.

''என்னம்மா லேட்டு? இன்னிக்கு ஆனந்த் புது ஏரியா பொறுப்பை ஏத்துக்கிட்டு வேலையில சேரப் போறாரே?''

''வந்துட்டாரா?''

''வந்துகிட்டே இருக்கேன்னு போன் பண்ணி னார். அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் தயார். புது கார் ஒண்ணு, டிரைவரோட தயாரா இருக்கு. தனி கேபின் ஒதுக்கியாச்சு. வீடும் தரணுமா தீபிகா?''

''எல்லாம் அப்படியே இருக்கட்டும்பா. பெரிய சம்பளம், உயர் பதவியை ஒப்புக்கறதுக்கு முன்ன அவருக்கு சின்ன டெஸ்ட் வைக்கணும்.''

''என்ன சொல்றே?''

''நான் சொன்ன பிறகு, அவர் கையெழுத்துப் போடட்டும்.''

மகளைக் குழப்பத்துடன் பார்த்தார் தன சேகரன். உள்ளே நுழைந்த ஆனந்த், இருவரையும் வணங்கினான். பளிச்சென்று சிரித்த முகத்துடன் தீபிகாவின் அருகில் வந்து நின்றான்.

''ஆனந்த்... நீங்க அப்பாகிட்ட பேசிட்டு இருங்க. நான் இப்ப வந்துடறேன்.''

துர்கா

ஓவியப் பலகை, ஓவியம் வரைவதற்குத் தேவை யான உபகரணங்கள் அனைத்தையும் தயார் செய்யச் சொன்னாள். அவையெல்லாம் அந்த ஏ.சி. ஹாலில் தயாராக இருக்க... ஆனந்தை அழைத்தாள்.

''நாலு சங்கதிகளை உங்களுக்குச் சொல்றேன். அதுல ஒண்ணைத் தேர்ந்தெடுத்து, பாரம்பரிய மணத்தோட ஒரு ஓவியத்தை நீங்க உருவாக்கணும். ஒரு மணி நேரத்துல அது தயாராகணும்.''

ஆனந்த் ஆடிப் போனான்.

''எதுக்கு தீபிகா?''

''இது ரசிக்க இல்லை ஆனந்த்... வியாபாரத்துக்கு. அதுவும் சர்வதேச அளவுல போகப் போகுது. நாம தொடங்கப் போற இந்த விளம்பர நிறுவனத்தோட ஆரம்ப வியாபாரமே அதுதான்.''

''ஓவியத்தை உருவாக்க தனிமையும், சூழலும், அதுக்கான மூட் எல்லாம் வேணும் தீபிகா.''

''ஆனந்த்... விளம்பர ஏஜென்ஸியில அதெல்லாம் நடக்காது. ஒரு கலைஞன் அப்படிப் பேசவும் கூடாது. அந்த நாட்கள்ல வாழ்ந்த கலைஞர்கள் பேசலாம். இப்ப மாடர்ன் உலகத்துல எதுவானா லும் கேட்டதும் கிடைக்கணும். அப்படித் தர்றவங்கதான் உச்சிக்கு வர முடியும். கமான்... நான் கூடவே இருக்கேன். கான்செப்டை சொல் லட்டுமா?''

''எனக்கு அரை நாள் அவகாசம் கொடு. எங்க வீட்ல உக்காந்து இதை நான் ரெடி பண்றேன்.''

''ஓ.கே... அரை நாள் தர்றேன். ஆனா, இங்கயே இருந்து தயார் பண்ணுங்க.''

''அது கஷ்டம் தீபிகா.''

தீபிகா அருகில் வந்தாள்.

''பிரேம் இப்ப உயிரோட இல்லை! வேற யாரைத் தயார் செய்யப் போறீங்க ஆனந்த்? சப்-கான்ட்ராக்ட் விட்டு சம்பாதிக்கலாம்னு ஐடியாவா? அதுக்கு அரை நாள் அவகாசம் போதுமா?!''

ஆனந்த் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது!

''தீபிகா!''

''கெட் லாஸ்ட். இன்னும் பத்து நிமிஷத்துல இங்கிருந்து போயிடு. போதை மருந்து கடத்தல்ல சிக்கி செத்துப் போன என் புருஷன்தான் உலக மகா அயோக்கியன்னு நெனச்சேன். நீ அவனை மிஞ்சிட்டே. அடுத்தவன் படைப்புக்கு சொந்தம் கொண்டாடற மனுஷன் அருவருப்பானவன். நல்ல மனைவியோட வாழத் தெரியாதவன், வாசல்ல நின்னு சவாலா? தகுதி இருக்கா ஒனக்கு? அந்த துர்காவோட கால் தூசுக்கு நீ சமம் ஆவியா? உடனே வெளியில போ!''

தீபிகா கூச்சலிட, ஆனந்த் மிரண்டு போனான். நொடியில் எல்லாமே அஸ்தமனமாகிவிட்டது. தலை குனிந்து ஆனந்த் வெளியே வர, தீபிகா பின் தொடர்ந்து வந்தாள். தனசேகரன் இருவரை யும் பார்த்தார். ஆனந்த் மெதுவாக வாசலை நோக்கி நடக்க, தனசேகரன் பேச வர...

''அப்பா.... உங்ககிட்ட எல்லாத்தையும் விவரமா சொல்றேன்.''

''சரிம்மா!''

ஆட்டோ பிடித்த ஆனந்த், அடுத்த அரை மணியில் வீட்டில் இருந்தான். அம்மாவிடம் நடந்த சகலமும் கொட்டி, பட்ட அவமானத் துக்காக வாய்விட்டு அழுதான். ராஜம் நிலை குலைந்தாள்.

''அம்மா... இந்த பிரேம் கதையெல்லாம் தெரிஞ்சவ, துர்கா ஒருத்திதான். அவ எப்படி தீபிகாவை சந்திச்சானு தெரியல.''

''துர்கா, உன்னைப் பழி வாங்கத் தொடங் கிட்டா. அதுக்கு பக்கபலமா உங்கப்பாவே நிக்கறார். கல்பனா, சுதா எல்லாரும் அவ பக்கம். பணம், பங்களா, செல்வாக்கு எல்லாம் அவகிட்ட இருக்கும்போது, நம்மை யாருடா மதிப்பாங்க?''

''அதுக்காக என்னை ஏன்மா வாழ விடாம தடுக்கறா?''

''சுதா கல்யாணத்துக்கு அவ வேண்டாம்னு நீ சொன்னே. ஒரு மணி நேரத்துல உன்னை செல்லா காசாக்கிட்டா. இந்த தீபிகாவை வெச்சு, துர்காவை ஒண்ணுமில்லாம செய்ய என்ன வெல்லாம் திட்டம் போட்டேன். அத்தனையும் தவிடுபொடி ஆயிடுச்சே?''

''அம்மா... துர்கா என்னை வாழ விடமாட்டா. நான் சாகறதைத் தவிர வேற வழியில்லை.''

ராஜம் விசுக்கென நிமிர்ந்தாள்.

''ஆம்பிளையாடா நீ?''

''அம்மா!''

''பின்ன என்னடா? என்னை அசிங்கப்படுத் தினவள சாகடிக்கறேன்னு சொன்னா... நீ சரி யான ஆம்பள. பொட்டை மாதிரி புலம்பறியே?''

ஆனந்த் உள்ளே வந்தான். உடம்பு முழுக்க வெறி பரவியது. காய்கறிகள் வெட்டும் நீளமான கத்தி, சமையல் கட்டு மேடையில் இருந்தது. அதை மறைத்து எடுத்துக் கொண்டான். சில நொடிகளில் வீட்டை விட்டு வெளியே வந்து ஆட்டோவில் ஏறினான். 'துர்கா... நாளைக்கு உனக்கு விடியப் போறதில்லை!’ என்று அவனுக் குள் ஒரு மிருகம் உறுமியது!

அந்த நாளின் மிச்சப் பொழுது இன்னும் என்னென்ன திருப்பங்களுடன் காத்திருக்கிறது?

தொடருங்கள் தோழிகளே...
ஆடைகள் உதவி: பி.எம்.சில்க்ஸ்,
மயிலாப்பூர், சென்னை   

தஞ்சாவூர் - செந்தாமரையிடம், ''நீங்கதான் இந்த எபிசோட் இயக்குநர்'’ என்று சொன்னதுமே... அவருடைய குரலில் உற்சாக அருவி பெருக்கெடுத்தது - இப்படி...

துர்கா

''ஒவ்வொரு முறையும் தவறாம கதை சொல்லிட்டே இருக்கேன். 'என்னடா நமக்கு இயக்குநர் நாற்காலி கிடைக்கலியே’னு வருத்தம் ஒவ்வொரு தடவையும் உள்ளுக்குள்ள பொங்கும். இந்தத் தடவையும் அப்படி வருத்தத்தோட இருந்தப்பதான்... உங்க போன். ரொம்ப சந்தோஷம்! இந்த நேரம் பார்த்து என் ரெண்டு பசங்களும் வீட்ல இல்ல. என் ஸ்கூல் டேஸ்லயிருந்து விகடனோட எனக்கு பரிச்சயம் உண்டு. அதுலயும் 'அவள் விகடன்' என் பெஸ்ட் ஃப்ரெண்ட். இந்த அங்கீகாரம், என் நெடுநாள் கனவு நனவானது மாதிரி ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு!''

இவருக்கு 'வி.ஐ.பி. சூட்கேஸ்’ அன்புப் பரிசாக அனுப்பி வைக்கப்படுகிறது.

வாசகிகளுக்கு சூப்பர் பரிசுப் போட்டி

 இந்த அத்தியாயத்தைப் படித்து முடித்ததுமே... அடுத்த அத்தியாயம் எப்படி என்பதை தீர்மானியுங்கள். அதை அப்படியே மனதில் வடித்துக் கொண்டாலும் சரி, எழுதி வைத்துக் கொண்டாலும் சரி... 044-66808023 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு உங்கள் பெயர், ஊரை முதலில் சொல்லிவிட்டு உங்கள் குரலிலேயே கதை திருப்பத்தை பதிவு செய்யுங்கள். மிகச்சிறந்த கதைத் திருப்பத்தை வைத்து அடுத்த அத்தியாயத்தை நகர்த்துவார் தேவிபாலா. அத்தகைய எபிசோடை சூப்பராக படைக்கும் வாசகிக்கு சூட்கேஸ் பரிசு! இதழ் வெளிவரும் வாரத்தின் சனிக்கிழமை அன்று மாலைக்குள் கதைத் திருப்பத்தை பதிவு செய்ய மறக்காதீர்கள்!