மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 38

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

இப்போதும் வழியில் எங்காவது கல்யாணம் காட்சியையோ, எழவையோ பார்க்கும்போது, நடராஜன் மாமா நினைவு வராமல் இருக்காது.

''மாப்ள... சித்தார்த்தனுக்குப் பொண்ணு பாக்கற சங்கதியாத் தான் சுத்திட்டு இருக்கேன். சாந்தி சித்தி வகையறால ஒண்ணு இருக்கு. சாலியமங்கலத்துல ஒண்ணு வந்துருக்கு... எது அமையுதுனு பாப்பம்... அப்பிடியே ஒனக்கும் சேத்து ஒரு புள்ளையப் பாத்துரவா மாப்ள... அம்மாவும் பொலம்பிட்டுக்கெடக்கு!''

 ''மாமா... ஒங்களுக்கு வேற வேல இல்லையா? சும்மா டார்ச்சர் பண்ணாதீங்க...''

நேற்று எக்மோரில் ரயில்வே கவுன்டரில் நிற்கும்போது குணசேகரன் மாமா போன். எங்கேயோ திருவாரூர் பக்கம் உச்சி வெயிலில் அண்ணனுக்குப் பெண் பார்க்க அலைகிறார். போனை வைத்த உடனேயே, வெள்ளை கதர் சட்டையும் கறுப்பு பேன்ட்டும் சுண்ணாம்பு டப்பா வாட்ச்சும் குருவிக் கூடுத் தலையு மாக டி.வி.எஸ்-50-யில் வரும் குணசேகரன் மாமாவின் உருவம் நினைவை ஆக்கிரமித்து விட்டது.

மூத்த சித்தப்பாவுக்கு அவர்தான் பெண் பார்த்தார். பெரிய அண்ணனுக்கும் குருவுக்கும் இப்போது சித்தார்த்தனுக்குமாக இன்னும் பெண் பார்த்துக்கொண்டே இருக் கிறார். எங்கள் சொந்தத்தில் ஏகப்பட்ட உறவுகளுக்கு வரன் பார்த்தது குணசேகரன் மாமாதான். சொந்தத்தில் பெண்ணோ, பையனோ யார் விளைந்து நின்றாலும், 'டுர்ர்ர் டுர்ர்ர்’ என வந்து இறங்கிவிடுவார். ''ஆயி... காபித் தண்ணி கொண்டா...'' என்ற படி வந்து கூடத்தில் உட்கார்ந்துவிடுவார்.

வட்டியும் முதலும் - 38

''அம்மு படிப்பு முடிஞ்சுருச்சுல்ல... சுருக் குனு கல்யாணத்த முடிச்சுர வேண்டியது தான? நெய்க்குன்னத்துல ஒரு பையன் இருக்கான்... மகாராஜா சில்க்ஸ்லதான் வேல பாக்கறான். தஞ்சாவூர்லேருந்து அம்மாப்பேட்டைக்கு பஸ் புடிக்க ஞானம் ஒயின்ஸ் ஷாப் பக்கமாப் போகாம, சுத்திக் கிட்டு ஆத்துப் பாலம் வழியா ஜங்ஷனுக்கு வருவான்னா பாத்துக்கயேன்...'' என உடனடியாக மேப் போட்டுவிடுவார். அப்படியே சொந்தக் காசில் பெட்ரோல் போட்டுக்கொண்டு நெய்க்குன்னம் போய், மாப்பிள்ளை வீட்டாரையும் ரெடி பண்ணு வார். நாள் பார்த்து, வேன் பிடித்து, இரு வீட்டாரையும் பார்க்கவைத்து, எல்லாம் பேசி முடித்து கல்யாணம் வரை குணசேகரன் மாமாவின் கொடிதான் பறக்கும்.

பஞ்சு மில்லில் வேலை பார்த்து ரிட்டயராகிவிட்ட மாமாவுக்கு இப்படி வரன்கள் பார்த்துப் பேசி முடிப்பதுதான் வாழ்வின் பாதி. காசு பணம் எதுவும் வாங்குவது இல்லை. எதையும் எதிர்பார்ப்பதும் இல்லை. இப்படி உறவுகளுக்கு வரன் பார்ப்பதும் பேசி முடிப்பதும் அவருக்கு ஆத்மார்த்தமான விஷயம். அது என்னவோ... சொந்த வேலை களை எல்லாம் விட்டுவிட்டு மற்றவர்களுக்காக அலைவதில் அவருக்கு ஒரு சுகம்.

''ம்க்க்க்கும்... எந்த ராசாங்கத்த எழுதிவைப்பாகனு இப்பிடி அலையுறீங்க...'' என அத்தை அலுத்துக்கொள்வதைக் கண்டுகொள்ளவே மாட்டார். ''பதினஞ்சி பவுனு போடுறதாச் சொன்னது வாஸ்தவந்தான்... அவுகதான் கஷ்டத்தச் சொல்றாவள்ல... தாலி பிரிச்சிப் போடும்போது மூணு பவுன் போட்ருவாக... நா கேரன்டி ஆயி...'' எனச் சமையல் கட்டு இருட்டு மூலையில் நின்று பெரியம்மாவோடு பேசிக்கொண்டு இருப்பார். ''டேய்... அவுக பெரியப்பன் முசுடுரா... கரெக்டா ரயில்வே கோட்டர்ஸ்ல ரூம் போட்ருங்க. இல்லைன்னா, கல்யாணத்தன்னைக்கு கரைச்சலக் குடுத்துருவான் பாத்துக்க...'' என டீக்கடையில் சித்தப்பாவிடம் பேச்சு நடக்கும். வரன் பார்ப்பதில் இருந்து கல்யாணத்துக்கு முதல் நாள் வரை பஞ்சாயத்திலேயே இருப்பார்.

கல்யாணத்தன்று 'டை’ அடித்து, முதல் பந்தியில் உட்கார்ந்தபடி, ''குருமால கொஞ்சம் உப்பு போடு...'' என கரெக்ஷன்கள்  கொடுப்பார். சாயங்காலம் மண்டபத்தைக் காலி பண்ணுகையில், ''கட்லு ஒண்ணு... டேபிள் ஃபேனு ஒண்ணு... பித்தள தேக்சா ரெண்டு...'' என நாப்பது பக்க நோட்டை வைத்து சீர் வரிசையைக் கணக்கெடுப்பார். வேனில் மொதப் பலகாரத்துக்குப் போகும் வழியில், ''ஏ குருக்குமாரி... மண்டபத்துல பச்ச கலர் சுடிதார் போட்டு சுத்திட்டு இருந்துச்சே... நம்ம கொடிக்காடு பெரியாயி பொண்ணா அது? நார்சிங்கம்பேட்டைல அய்யாக்கண்ணு பையன் ஒருத்தன் இருக் கான்ல... பேசிப் பாக்கவா..?'' என அடுத்த எபிசோடுக்கு டிரெய்லர் கட் பண்ணுவார். அது ஒரு பிறப்பு. மற்றவர்களுக்காக வாழ்வதையும் வந்து நிற்பதையுமே இன்பமாக நினைக்கும் இதயம். 'இதனால் நமக்கு என்ன?’ என நினைக்காமல் காட்டுச்சுனையைப் போலப் பிரவகிக்கும் மனசு. யார் யாருக்கோ வரன் பார்க்கவும் வாழ்க்கை தரவும் புழுதிக் காடுகளிலும் புளிய மரச் சாலைகளிலும் அலையும் மனிதர்கள் எவ்வளவு மகோன்னதமானவர்கள்!

இப்போதும் வழியில் எங்காவது கல்யாணம் காட்சியையோ, எழவையோ பார்க்கும்போது, நடராஜன் மாமா நினைவு வராமல் இருக்காது.

சொந்தத்தில், நட்பில் எங்கே கல்யாணம், கருமாதி என்றாலும், முதல் ஆளாக வந்து நின்று எல்லாவற்றையும் எடுத்துச் செய்வது நடராஜன் மாமாதான். ரப்பர் செருப்பும் வேட்டியும் மூணு பட்டன் திறந்துவிட்ட சட்டையுமாக ஆச்ச மங்கலத்தில் இருந்து வந்துவிடுவார்.

ஒரு வாரத்துக்கு முன்னாலேயே சைக்கிள் கேரியர் நிரம்ப வாழை இலைக் கட்டுக்களைக் கட்டிக்கொண்டு அவர் வந்தால்தான் விசேஷம் தொடங்கிவிட்டதாக அர்த்தம். ''கறி விருந்துக்கு கரீம்பாய்தான்... சைவம் சாப்பிடுறவங்களுக்கு பிச்சக்கண்ணு.  ஆளுங்களக் கொண்டா...'' என ஆரம்பித்தால், அப்புறம் எங்கெங்கும் அவர்தான் நிறைந்திருப்பார். ''ஆளுக்கொரு வண்டிய எடுத்துக்கிட்டு ரெவ்வெண்டு பயலாக் கௌம்பு... அஸ்கானோடைய மறந்துராத...'' எனப் பத்திரிகை வைப்பதில் இருந்து உள்ளே வந்துவிடுவார்.

மண்டபம் பிடிப்பது, அய்யர் பிடிப்பது, ரூம் போடுவது வரை அவரது மேற்பார்வையில்தான் நடக்கும். ''சென்னை லேருந்து ஒன் ஃப்ரெண்ட்ஸு எத்தன பேரு... நாலு ஃபுல்லு போதுமா? டேய்... இவங்கையில ஒரு வாளில இட்லியும் மொளவாப்பொடியும் குடுத்தூடு...'' என ஒண்ணுவிடாமல் சகலத்திலும் சுற்றிச் சுழலுவார். கல்யாணத்துக்கு முதல் நாள் கும்பகோணம் மார்க்கெட்டுக்குப் போய்  அவரே காய்கறி, பொருட்கள் வாங்கிவருவார்.  விடிய விடியச் சமையல் கொட்டாயில் விழித்துக்கிடப்பார். கல்யாணத்தன்று மாப்பிள்ளைத் தோழன், மணப் பெண் தோழியை ஏற்பாடு செய்துவிட்டு, ''அங்க சாம்பாரு ஊத்து... இங்க பாயாசம் ஊத்து...'' எனப் பந்தியிலேயே நிற்பார்.

ராத்திரி மாப்பிள்ளை வீட்டில், ''கட்ல அந்த மூலைக்கு நவுத்து...'' என முதல் இரவு அரேஞ்மென்ட்டில் பிஸியாகி இருப்பார். இரு வீட்டார் கறி விருந்து முடித்து, வெத்தலை சீவல் போட்டு ஒரு சிஸரைப் பற்றவைத்த படியே, ''கம்னாட்டி இந்த கேசரி மட்டுந் தான் கரெக்டா இல்ல... அரபாடி வேனு வந்தவன் அம்பது ரூவா அதிகமா வாங்கிட் டான்...'' எனப் பைசல் முடித்துத்தான் கிளம்புவார்!

எழவு விழுந்தாலும் அதிகாலையில் முதல் ஆளாக மாமாதான் வாசத் திண்டில் வந்து உட்கார்வார். ''டேய்... அம்சத்தா வூட்ல போயி கொஞ்சம் காபி தண்ணிப் போட்டுக் கொண்டுவரச் சொல்லு... சிவராஜிட்ட கேட்டு யாராருக்கு போன் பண்ணணும், தந்தி குடுக்கணும்னு ஒரு லிஸ்ட்டு வாங்கு...'' எனத் தடதடவென வேலையில் இறங்கிவிடுவார். வெட்டியானை அழைத்து வருவதில் இருந்து சுடுகாட்டில் சில்லறை பிரித்துத் தருவது வரை முழுக்க அவர் தலைமையில்தான் நடக்கும். நடுவில் ஓர் ஓரமாக ஒதுங்கி சிஸர் அடிக்கும்போது, ''ப்ச்ச்... போன வாரம் பாத்தப்ப வூட்ட இழுத்துக் கட்டணும்னு பேசிட்டிருந்தாப்ல... அதுக்குள்ள இப்பிடியா நடக்கணும்...'' என்பார் தழுதழுப்பாக.

கருமாதி, கறி விருந்து என 16 நாளும் முன்னாடி நின்று எல்லாவற்றையும் முடித்துவிட்டுத்தான் அடுத்த வேலைக்குப் போவார். எத்தனையோ கல்யாணங்களை இப்படி ஓடி ஓடி நடத் திக் கொடுக்கும் மாமாவுக்கு நாற்பது வயசுக்கு மேலாகியும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை. இரண்டு சகோதரிகளுக்கும் கல்யாணம் பண்ணிவைத்துவிட்டு, தனக்கு இன்னும் பண்ணிக்கொள்ளாமல் இப்படியே வாழ்கிறார். ஒருமுறை பம்பு செட்டில் தண்ணி அடித்துவிட்டு, ''ழேய்... அப்பா எடத்துல இருந்து ஒனக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிவெச்சுட்டா போரும்டா...'' என்றார். ''அது இருக்கட்டும் மாமா... உங்களுக்கு எப்ப கல்யாணம்? எதுக்கு இன்னும் பண்ணிக்காம இருக்கீங்க?'' என்றதற்கு, கொஞ்சம் திடுக் கிட்டு என்னைப் பார்த்தார். தலையை சைஸாக ஆட்டியபடி சிரித்துவிட்டு, ''டோன்ட் டாக். அம்மா சாப்பாடுவெச்சுட்டுத் தூங்காம உக்காந்துருக்கும்... ஐ கோ...'' என்றபடி சைக்கிளில் தள்ளாட்டமாக அவர் கிளம்பியது ஒரு புதிர்போல் உள்ளது இப்போதும்.

வட்டியும் முதலும் - 38

குணசேகரன் மாமாவையும் நடராஜன் மாமாவையும் பார்ப்பது மாதிரிதான் இருந் தது சென்னையில் நண்பன் பரமுவைப் பார்த்தபோது. இதுவரை 26 கல்யாணங்கள் பண்ணிவைத்திருக்கிறான் பரமு. அத்தனை யும் அடைக்கலம் தேடி வந்த காதல் கல்யாணங்கள். அந்த வகையில் சசிகுமார், சமுத்திரக்கனி எல்லாம் இவனுக்கு சூப்பர் ஜூனியர்ஸ். பரமுவுக்கு நான் வைத்து இருக்கும் நிக் நேம் 'பூந்தோட்டக் காவல்காரன்’.

திடுதிப்பென்று நள்ளிரவில் லைனுக்கு வந்து, ''மச்சான்... காலைல ஆறு மணிக்கு குமாருக்கும் பிருந்தாவுக்கும் பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயில்ல கல்யாணம். எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டேன். பை சான்ஸ்... பொண்ணு வீட்ல ஸ்மெல் பண்ணி வந்துட்டாங்கனு வையி... பிரச்னை ஆகிரும். நீ பிரஸ் கார்டோட வந்தேன்னா சமாளிச்சிரலாம்... வந்துரு மச்சான்'' என்பான். திடீரென்று ஒரு அதிகாலையில் போன் பண்ணி, ''மத்திய கைலாஷ்ல இப்பதான் கல்யாணம் முடிஞ்சுது... ரெண்டு பேரையும் செல்வம் கார்ல நம்ம கிராமத்துக்கு அனுப்பிட்டேன் மச்சான்...'' என்பான்.

இன்னொரு நாள் போன் பண்ணி ஹஸ்கி வாய்ஸில், ''ஸ்டேஷன்ல இருக்கேன் மச்சான்... இன்ஸ்பெக்டர் பேரு வனராஜா... பசங்க வந்துட்டு இருக்காங்க...'' என்பான் அமானுஷ்யமாக. ஏரியாவில் நட்பு வட்டத்தில் யாருக்குக் காதல் கல்யாணம், பிரச்னை என்றாலும் உடனடியாக வந்து நிற்பது பரமுவிடம்தான். டீட்டெயிலாக மேப் போட்டு, கொஞ்ச நாளைக்கு அதே வேலையாகத் திரிந்து முடித்துவிட்டுத்தான் உட்கார்வான். கார் வாடகையில் இருந்து ஆள் செலவு வரை எல்லாவற்றையும் இவனே பார்ப்பான். பத்தாததற்கு மணமக்களுக்கு அவனே ஒரு கவிதையும் எழுதிப் பரிசளிப்பான்.

''ஏண்டா மச்சான்... இப்பிடியே இருந்தா எப்பிடி மச்சான்?'' என்றால், ''டேய்... எல்லாரும் சந்தோஷமா இருக்கணும். அது போதுண்டா நமக்கு...'' என்பான். அவனைப் பார்த்தால், 'இப்படி ஒரு மனசு நமக்கு இல்லையே’ என எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்! (பின் குறிப்பு: பரமுவுக்கும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை. அவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிவைத்துவிட வேண்டும் என்பது என் வாழ்க்கை லட்சி யங்களில் ஒன்று!)

இப்படி மற்றவர்களுக்காக வாழும் மனசுக்காரர்கள் இன்னும் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? இப்போதும் எந்த ஃபீஸும் இல்லாமல் கை வைத்தியம் பார்ப்பதையே வாழ்க்கையாக வைத்தி ருக்கும் பாட்டிகள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? ஊரில் எந்தப் பெண் சடங்கானாலும் பக்கத்திலேயே வந்து உட்கார்ந்திருக்கும் பாட்டிகள். யாருக் குப் பிரசவம் என்றாலும் வலி எடுக்கும் போதே வந்து, பிரசவத்தில் கூடவே இருந்து, அந்தக் குழந்தையைத் தினம் தினம் வந்து குளிப்பாட்டி, அலங்கரித்துப் பார்ப்பதையே வாழ்க்கையாக வைத்தி ருக்கும் பாட்டிகள்.

'இவள் எத்தனை எத்தனை குழந்தைகளை இப்படி வளர்த்துவிட்டிருக்கிறாள்...’ என இப்போதும் துரைக்கண்ணு ஆத்தாவைப் பார்க்கும்போது எல்லாம் ஆச்சர்யமாகவும்  நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது. காசு கீசு வாங்காமல், வருகிறவர்களுக்கு எல்லாம் அருள் சொல்வதையே வாழ்க்கையாக்கிக்கொண்ட சபாபதி அய்யா, தினம் தினம் சிவன் கோயிலைக் கழுவிவிடுவதும் சாமிக்கு அலங்காரம் பண்ணிவைப்பதையுமே பொழுதாக்கிக்கொண்ட வசுமதி பெரியம்மா, எந்தெந்த நேரத்துக்கு மின்சார ரயில் என்று கைடு போட்டு, சென்ட்ரல் ஸ்டேஷனில் நின்று இலவசமாக விநியோகிக்கும் முருகேசன், யாராவது ஆஸ்பத்திரியில் கிடந்தால் இரவு பகல் பாராது அங்கேயே கிடக்கும் அருள், எந்தப் பிரதிபலனும் பாராமல் சும்மாவே கிராமம் கிராமமாகப் போய் நல்ல சினிமாக்களைத் திரையிட்டுக் காட்டும் செல்வம், குழந்தைகள் கல்விக்காக ஊர் ஊராகப் போய் விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதையே வாழ்க்கையாக்கிக்கொண்ட ரஸலின் சிஸ்டர், சித்த வைத்திய மூலிகைகள்பற்றி ஆராயவும் சேகரிக்கவும் காடுகாடாக இப்போதும் திரியும் ராமய்யா சார், இயற்கை விவசாயத்தையே உயிர் மூச்சாகக்கொண்டு பயணம் போய்க்கொண்டே இருக்கும் நம்மாழ்வார் அய்யா... மண்ணுக்காகவும் மற்றவர்களுக் காகவுமே வாழும் இதயங்கள்தான் கடவு ளின் நிழல்கள் இல்லையா?!

தி.நகரில் நண்பர் ஒருவரைப் பார்க்கப் போயிருந்தேன். அவர் அரசுப் பணியில் இருந்து சமீபத்தில்தான் ஓய்வுபெற்று இருந்தார். இரண்டு பெண் பிள்ளைகளைப் படிக்கவைத்துக் கல்யாணம் பண்ணிக் கொடுத்து, வாழ்க்கை முழுக்க ஓடிக்கொண்டே இருந்தவர். இப்போதுதான் அவருக்கு ஓய்வு கிடைத்திருக்கிறது என நினைத்துக்கொண்டே போனேன். அவர் வீட்டில் இல்லை. ''ம்ம்ம்... சொன்னாக் கேக்கறாரா... பாண்டி பஜார்ல போய்ப் பாருங்க... ரோட்ல நிப்பாரு...'' என்றார் அவர் மனைவி. பாண்டி பஜாரில் நடு ரோட்டில் நின்று பரபரப்பாக டிராஃபிக் க்ளியர் பண்ணிக்கொண்டு இருந்தார் அவர். அரை மணி நேரம் காத்திருந்து, அவரை அழைத்துப் போய் டீ குடித்தபடி கேட்டேன், ''ஏங்க... பேசாம வீட்ல இருக்க வேண்டியதுதானே... எதுக்கு இப்பிடி இங்க வந்து நிக்கறீங்க?'' அவர் சிரித்தபடி சொன்னார், ''மத்தவங்களுக்காக ஏதாவது பண்ணும்போதுதான் நாம உயிரோட இருக்கிற ஃபீலிங்கே இருக்கு தம்பி!''

- போட்டு வாங்குவோம்...