மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

ஹையா ஹையா... மைக்கா பையா!

க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்.

 உலகில் உள்ள உயிரினங்களில் ஒன்று மற்றொன்றின் காலில் விழுந்ததாக வரலாறு இல்லை. ஆனால், மனிதன் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருப்பது ஏன்? இதைத் தொடங்கிவைத்தது யார்?

ஹாய் மதன் கேள்வி - பதில்

ஆதி மனிதன்தான். திடீர் என்று தெருவில் குண்டு வெடிக்கிறது. உடனே என்ன செய்கிறீர்கள்? தரையோடு படுத்துக்கொள்கிறீர்கள். காரணம், அதில்தான் ஆபத்து ரொம்பக் குறைவு. ஆதி மனிதனும் திடீர் என இடி இடித்தாலோ, பெரிய மின்னல் தோன்றினாலோ தனக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கத் தரையில் நடுங்கிப் படுத்துக்கொண்டான். பிறகு, சூரியன் போன்ற இயற்கை விஷயங்களின் முன்பு 'எனக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்தாதே’ என்பதை விளக்க, குப்புறப் படுத்தான். பிறகு அரசர்கள் முன்பு, இன்று தலைவர்கள் காலடியில் ('பதவி ஏதாவது தந்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று அர்த்தம்!). விலங்குகளும் தத்தம் தலைவன் முன்பு அடிபணிகின்றன. 'நான் உனக்கு அடங்கிப்போகிறேன்!’ என்கிற ஓர் அர்த்தம் தான் அதற்கு உண்டு!

##~##

இரா.முத்து அபிசேகம், நாலாட்டின்புத்தூர்.

இப்போதெல்லாம் ரோட்டில் வண்டி ஓட்டுபவரைக்கூட கேமரா வைத்துக் கண்காணிக்கிறார்கள். மக்களுக்கு 'சேவை’ ஆற்ற வந்த அரசியல்வாதிகளும் சரியாகத்தான் வேலை செய்கிறார்களா என்று கேமராவைத்துக் கண்காணித்தால் என்ன?

நல்ல ஐடியாதான்! அதை டி.வி-யில் வேறு தினம் போட்டுக் காட்டினால்? மெகா சீரியல், டாக்-ஷோ, ஒரு கோடி... எல்லாம் அதோட காலி.

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

தாலாட்டு பாடி குழந்தைகளைத் தூங்கவைக்கும் 'மம்மி’கள் இப்போது இருக்கிறார்களா?

அரசருக்குப் பிறந்தாலும் அரச மரத்தடியில் பிறந்தாலும் தாலாட்டு பாடி குழந்தைகளைத் தூங்கவைப்பது என்பது அழியாமல், உலகின் கடைசி தாய் இருக்கும் வரை தொடரும்.

ருமேனியத் தாய் 'ஹையா... ஹையா... மைக்கா பையா...’ என்று தாலாட்டை ஆரம்பிக்கிறாள். செக் நாட்டில் தாலாட்டு 'ஹூல்லீ பேபி...’ எனத் தொடங்கும். கிரேக்கர்கள் 'நானி... நானி... என் பாப்பா...’ என்றும் துருக்கியில் 'ஹூஹூஹூஹூ பேபி...’ என்றும் நாம் 'லுலுலுலுவாயி...’ என்றும் தாலாட்டுகிறோம். 4,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தாய் குழந்தையைத் 'தூக்கமே வா! என் குழந்தையைத் தூங்க வை. சீக்கிரம் வா... பளிச்சிடும் அவன் கண்களை என் விரல்களால் மெள்ள மூடுகிறேன்... தூக்கமே வா! அவன் உதடுகள் எதையோ முணுமுணுக்கின்றன... அந்த முணுமுணுப்பு அவனைத் தூக்கத்தில் இருந்து எழுப்பிவிடாமல்... தூக்கமே வந்து சேரு!’ என்கிற அர்த்தத்தில் தாலாட்டு பாடி இருக்கிறாள். சுமேரியாவில் அந்தத் தாய் பாடிய பாடல் நமக்குக் கிடைத்திருக்கிறது.

என்.ஜெய்கணேஷ், சுப்புலாபுரம்.

எதிலும் ரசனை இல்லாத ஆட்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை எப்படித்தான் கழியும்?

ரசனை இல்லாமல் தாங்கள் வாழ்வதை ரசித்தபடியே வாழ்கிறார்களோ?!

மு.தமிழ்ப்பாண்டியன், சென்னை-49.

இளையராஜா இசையமைத்த எத்தனையோ இனிமையான பாடல்கள் திரைப்படங்களில் சரியாகக் காட்சிப்படுத்தப்படவில்லை என்ற ஆதங்கம் என்னைப் போலவே உங்களுக்கும் உண்டா?

இல்லாமல் இருக்குமா? அந்தக் காலத்தில் பாடலுக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து காட்சியை எளிமையாக வைத்துக்கொண்டார் கள். இப்போது 'பாடலுக்கான காட்சியையும் வித்தியாசமாக எடுத்துக் காட்டுகிறேன் பார்!’ என்று முடிவு கட்டி... சொதப்புகிறார்கள். அந்த அதிகப்பிரசங்கித்தனம் இளையராஜா பாடல்களையும் பல முறை பாதித்து இருப்பது உண்மைதான்!

ஹாய் மதன் கேள்வி - பதில்

வண்ணை கணேசன், சென்னை-110.

நீங்கள் அதிகம் பொறுமையைக் கையாள்வது எந்த விஷயத்தில்?

'நல்லது நடக்கும்’ என்று நம்புவதில்.

விஜயலட்சுமி, சென்னை-74.

'முத்தம் ஸ்டாக் இல்லை’ என்று யாரால், எப்போது கூற முடியும்?

என்னாங்க இது? ஸ்டாக் இல்லாமப் போக, அது என்ன கேஸ் சிலிண்டரா? உதடுகள் இருக்கும் வரை முத்தமும் இருக்கும்.