மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மூன்றாம் உலகப் போர் - 39

மூன்றாம் உலகப்போர்
பிரீமியம் ஸ்டோரி
News
மூன்றாம் உலகப்போர் ( மூன்றாம் உலகப்போர் )

கவிப்பேரரசு வைரமுத்துஓவியங்கள் : ஸ்யாம்

##~##

மிலிக்கும் இஷிமுராவுக்கும் விடைதரு விழா. சீவி முடித்துச் சிங்காரித்திருந்தது அட்டணம்பட்டி. கார்த்திகை மாத அருகம்புல் தரை மூடிப் படர்ந்திருப்பது மாதிரி மைதானம் முழுக்க மக்கள்.

 ''இந்த மண்ணுக்கு என்று உண்டான கலைகளை நீங்கள் இப்போது காணப்போகிறீர்கள். போராட்டங்களாலும் துயரங்களாலும் சூழப்பட்ட எங்கள் வாழ்வில் ஒரு வெறுமை நிரப்பப்படாமலே கிடக்கிறது. எங்கள் மக்கள் தங்கள் சொந்தக் கலைகளால் அதை நிரப்பிக்கொள்கிறார்கள். கடவுளும்கூடக் கலையின் இன்னொரு பாகம்தான். இரண்டுமே வாழ்வின் வெறுமையை நிரப்ப வந்த இருவேறு பொருண்மைகள். இப்போது கோலாட்டம் பாருங்கள்'' இருவரின் செவியோடு ஓதினான் சின்னப்பாண்டி.

பச்சைப் பாவாடையும் சிவப்புச் சட்டையும் அணிந்த பத்துப் பன்னிரண்டு சிறுமிகள் வட்டமிட்டு வட்டமிட்டுக் கோலாட் டம் ஆடினர். இரு கோல்களும் எதிர்க் கோல்களில் உரச உரச... நாதமும் நாட்டியமும் அங்கே ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டன. ஒரு தாளகதியில் அவர்கள் குனிவதையும் நிமிர்வதையும் கோலடிப்பதையும் கண்டு குழந்தையாகி எழுந்து நின்று கை தட்டினாள் எமிலி.

மூன்றாம் உலகப் போர் - 39

''எளிமையான ஆட்டம் இது எங்கள் ஊரில். என்னதான் கண்டீர்கள் இதில்?'' என்றான் சின்னப்பாண்டி.

''ஒரு கோலாட்டம் மூன்று இன்பம் தருகிறது ஒரு பார்வையாளருக்கு!''

''என்னென்ன?''

ஒரு கணம் கண் மூடி யோசித்துக் கோலாட்டத்தின் பெருமைகளை வரிசைப்படுத்தினாள் எமிலி:

''வண்ணச் சீருடை கண்ணுக்கு இன்பம்; கோல்களில் பட்டுத் தெறிக்கும் நாதம் காதுக்கு இன்பம்; கால்கள் எடுத்துவைப்பதும் கோல்கள் அடித்துவைப்பதும் ஒரு காலப் பிரமாணத்தில் நிகழ்வது மூளைக்கு இன்பம். கோலாட்டக்காரர்கள் குனிந்து குனிந்து நிமிர்வது யோகாசனம் போன்றதோர் உடற்பயிற்சி. இந்தக் கலையைக் கண்டறிந்தவர்கள் புத்திசாலிகள்!''

''உங்கள் கண்களில் பார்த்தால்தான் எங்கள் பெருமை தெரிகிறது!'' சின்னப்பாண்டி இழை இழையாகப் புன்னகைத்தான்.

ரகாட்டம் ஆட வந்தாள் சிங்காரக்கோட்டை கனகலட்சுமி. அவளைக் கரகலட்சுமி என்று எழுத்துப் பிழையோடு எழுதினாலும் காரணப் பெயராக மாறிவிடும். அவள் தலைக்கென்றே கரகம் பிறந்ததா இல்லை, கரகம் அவள் தலையோடு பிறந்ததா என்று கொண்டாடுவார்கள் ஐந்தாறு மாவட்டங்களில் அவளை.

எமிலிக்கும் இஷிமுராவுக்கும் இமைக்கவில்லை கண்கள்.

அலங்கரிக்கப்பட்ட கரகமும், அசையாத தலையும், மையிட்ட கண்களும், மணிமூக்கும், பொய்யிட்டு வைத்தாலும் நெய்யிட்டு வைத்த ஆயுதங்களாக நிமிர்ந்து நிற்கும் தனபரிவாரங்களும், உடையிட்டுக் கட்டியதால் ஒடியாத இடையும், பட்டினிகிடந்த பாம்புபோல ஒட்டிய வயிறும் 'வந்துட்டேன் கனகலட்சுமி’ என்றுகட்டியம் கூறும் கால் சதங்கையும் அவர்கள் காணாத ஓர் உலகம் காட்டி அடையாத அனுபவத் துக்கு ஆயத்தம் செய்தன!

சுழன்று சுழன்று ஆடினாள்;

பறந்து பறந்து ஆடினாள்;

தட்டாமாலை சுற்றினாள்.

தீவை மூழ்கடித்த சுனாமி மலை உச்சியை மட்டும் விட்டுவைத்ததைப் போல உடம்பெல்லாம் ஆடிச் சுழன்றாலும் கழுத்துக்கு மேலே அதிர்வு வராமல் பார்த்துக்கொண் டாள். திடீரென்று சரிந்து தரையில் படுத்தாள். தலை மட்டும் தூக்கித் தரையில் படுத்தவள், வலக்கால் மடக்கி வலக்கை சேர்த்தாள்; இடக்கால் மடக்கி இடக்கை சேர்த்தாள்.

மனிதப் பிறவி அல்லாத வேறோர் உயிர்ப் பொருளாகத் தோற்ற மாற்றம் காட்டினாள்.

மூன்றாம் உலகப் போர் - 39

எமிலி அவளை ஓடி ஓடி வீடியோவில் படம் எடுத்தாள்.

தன் சாகசத்தால் தரை மீண்டெழுந்த கரகக்காரி, தன் தலையில் இருந்த கரகத்தை அசைத்து அசைத்து நகர்த்தினாள். தலையை வளைத்துத் தன் பிடரிக்குக் கரகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொண்டுசேர்த்தாள். விழுந்தாலும் விழுந்துவிடும் என்று எல்லோரும் பயந்தார்கள் கரகக்காரியைத் தவிர. ஆனால், தன் பிடரியின் பள்ளத்தில் கரகத்தை ஊற்றி வார்த்ததுபோல் உட்காரவைத்தாள். அப்படியே குத்தவைத்தாள். பிடரியில் கரகத்தோடு தரையில் வாய்வைத்தாள். மண்ணில்கிடந்த கோணி ஊசி ஒன்றைப் பல்லில் கடித்து எடுத்தாள். ஊசியைத் தன் நாக்கு மடிப்பில் படுக்கவைத்தாள். நாக்கில் உள்ள ஊசியும் தவறிவிடாமல் பிடரியில் உள்ள கரகமும் இடறிவிடாமல் அதை மெள்ள மெள்ளத் தலைக்கேற்றினாள்.

உடம்பெல்லாம் பரவிக்கிடந்த உயிர் கண்ணில் வந்து குவிந்துவிட்டது கூட்டத்துக்கு,

''யாத்தே... யப்பே''- கூட்டம் பதறுகிறது.

''அழகு; ஆச்சர்யம்'' - இஷிமுரா ரசிக்கிறான்.

''இது எப்படிச் சாத்தியம்?'' - வாய் பிளக்கிறாள் எமிலி.

கரகத்தை மெள்ள மெள்ள மேலேற்றுகிறாள் கரகக்காரி.

கழுத்தையும் பிடரியையும் அங்குலம் அங்குலமாக அசைத்தசைத்து அதோ அதோ தலையுச்சிக்குத் தள்ளிவிட்டாள். தலைப் பிரதேசத்தைக் கரகம் தொட்டதும் ஒரு சிலிர்ப்புச் சிலிர்த்து ஓர் உலுக்கு உலுக்கினாள். திருவீதியுலா போயிருந்த தேர் மீண்டும் தேரடிக்கே திரும்பி வந்தது மாதிரி தலையாசனத்தில் மீண்டும் சிம்மாசனம் போட்டுக்கொண்டது கரகம்.

கூட்டத்தில் வீசியடித்தது விசில். கண்ணுள்ளவர்கள் எல்லாம் கைதட்டினார்கள்.

''உங்கள் மீது எனக்கு வருத்தம்'' என்றாள் எமிலி சின்னப்பாண்டியோடு பொய்க் கோபம் காட்டி.

''எதற்காக?''

''பாலே நடனத்தை உலகம் அறிந்திருக்கிறது. இத்தனை பெரிய கலையை நீங்கள் உள்ளூரில்வைத்தே மறைத்துவிட்டீர்களே... உங்கள் கலை உலகக் கலை!''

''இதற்கே உணர்ச்சிவசப்பட்டால் எப்படி? இனி, சிலம்பாட்டம் பாருங்கள்'' என்றான் சின்னப்பாண்டி.

ற்றை மனிதராகக் களத்தில் இறங்கிநின்றார் சிலம்பு அம்பலம். அவரை எதிர்த்து அடிக்க ஆள் இல்லை ஏழெட்டு மாவட்டங்களில். பிரம்மச்சாரியாகவே காலம் கழிக்கும் சிலம்பு வாத்தியார் அவர். அன்று நெடுஞ்சிலம்பு கொள்ளாமல் குறுஞ்சிலம்பு வைத்திருந்தார் கையில். சலாம் வரிசையாடி பூமியிலே தண்டனிட்டு விதவிதமாய்ச் சுழற்றினார் சிலம்பை. அது காற்று கிழிக்கும் சத்தமே ஒரு சங்கீதம்.

மைதானத்தின் நான்கு திசைகளிலும் தன் நான்கு மாணவர்களை நிறுத்திவைத் தார் அம்பலம். ஆளுக்கொரு சாக்கு நிறையக் கல் வைத்திருந்தார்கள்.

பம்பரம் மாதிரி கம்பு சுழற்றிக்கொண்டே, ''எறியுங்கள் என் மீது கல்லை'' என்றார். ஒரே சமயத்தில் நான்கு பேரும் சரமாரியாக அவர் மீது எறிந்தார்கள் கற்களை.

சுற்றும் சூறாவளியாகத் தலைக்கு மேலே சுழன்ற சிலம்பு அடித்துத் திருப்பி அனுப்பியது அத்தனை கற்களையும். ஒரு கல்லையும் அவர் உடம்பில் உரசக்கூட விடவில்லை. எவன் எறிந்தானோ அவன் மீதே கல்லைத் திருப்பி அடித்தது சிலம்பு. அதுகூட அல்ல ஆச்சர்யம். திருப்பி அடித்த கல்லில் ஒன்று கூடப் பார்வையாளர்கள் மீது படவில்லை. அண்டாவுக்குள் மட்டும் மழை பெய்தது மாதிரி மைதானத்துக்குள் மட்டும் விழுந் தன கற்கள். நான்கு சாக்கு தீர்ந்ததும் ஓய்ந்தது கல் மழை.

மூச்சுவிட மறந்து மூர்ச்சை நிலைக்குப் போனான் இஷிமுரா.

''நம்ப முடியவில்லை என் கண்களை. ஒரு கழியை எந்திரமாக்கும் தந்திரம் இது. மனித ஆற்றலை இது பன்மடங்கு பெருக்குகிறது. இது ஒரு தற்காப்புப் போர்முறைதான். கலை யுத்தத்தில் முடிந்துவிடக் கூடாது; ஆனால், யுத்தம் கலையில் முடிய லாம். போர் முறையைக் கலையாக்கிவிட்டீர் கள். சீனாவின் குங்ஃபூ எங்களின் கராத்தே இரண்டுக்கும் மூலம் இதுவாக இருக்கலாம். உங்கள் மண்ணை மறக்க மாட்டேன்.''

சின்னப்பாண்டியின் உள்ளங்கை தீண்டிய இஷிமுராவின் அழுத்தம் அவன் வார்த்தையின் உண்மையை வழிமொழிந்தது.

ஞ்சாயத்து உறுப்பினர்கள் - பெற்றோர்கள் - ஆசிரியர்கள் - மாணவர்கள் என்ற பரிசு வரிசையில் சிக்கிக் குழந்தைகளாகத் தடுமாறினார்கள் எமிலியும் இஷிமுராவும்.

இஷிமுரா பேசினான்;

''நீங்கள் விடைதருவது சந்தோஷம்; பிரிவது வருத்தம். ஆனாலும், எங்கள் கனவு ஒன்று உங்களால் நிறைவேறிக்கொண்டிருக்கிறது என்ற நிறைவோடு தாய்நாடு திரும்புகிறோம். எவருடைய தயவும் இன்றி, உங்கள் எண்ணங்களின்  வலிமையால், உங்கள் ஊரை நீங்கள் மாதிரி கிராமமாக மாற்றியிருக்கிறீர்கள். இந்த நிலை மாறாதிருக்க ஒரே வழிதான் உள்ளது. இந்த மாதிரி கிராமத்தின் நடைமுறையை உங்கள் வாழ்க்கைமுறையாக மாற்றிக்கொள்வதுதான் அந்த ஒரே வழி. வாழ்க்கைமுறையே ஒரு நெறியாகிவிட்டால் தனியாக வேறு நடைமுறை தேவை இல்லை.

வறுமைக்கும் துப்புரவின்மைக்கும் சம்பந்தம் இல்லை. மண்ணுக்குள் கிடந்தா லும் வைரம் தன் முதுகில் மண் ஒட்டவிடுவது இல்லை. நீங்கள் நினைத்தால் உங்களைப் போலவே உங்கள் ஊரையும் குளிப்பாட்டிவைக்கலாம்.

இந்தியாவை நான் பிரிந்துபோகவில்லை; சுமந்துபோகிறேன்.

இது உயர்ந்த தேசம்; ஆனால், தேசத்தின் உயரத்தில் எல்லா மக்களும் இல்லை.

கடவுள் யார் என்று கண்டுபிடித்ததுதான் இந்தியாவின் பெருமை. ஆதி உலகம் இடியும் மழையும் மின்னலும்தான் கடவுள் என்று கருதியிருந்தது.

இன்னோர் உலகம் சோறுதான் கடவுள் என்று நம்பிவந்தது. ஆனால், இந்தியாதான் கடவுளின் மூலத்தைச் சிந்தித்தது. அந்தச் சோற்றுக்கும் மழைக்கும் மூலமான மண்ணும் விண்ணும் அவை சார்ந்திருப்பதும்தான் கடவுள் என்று கண்டறிந்தது. துருவித் துருவித் துழாவி நிலம் - நீர் - தீ - காற்று - ஆகாயம் ஐந்துமே கடவுள் என்று வணங்கி வழிபட்டது. மண் கடவுள்தான்; அந்த மண்ணையே தின்ன முடியாது. அந்த மண்ணில் இருந்து உணவு தயாரிக்கிறானே அவன் பாதிக் கடவுள். அந்த மண்ணில் விளைந்ததைக்கொண்டு உடை தயாரிக்கிறானே அவனும் பாதிக் கடவுள். முழுக் கடவுளுக்குப் படையலிடும் தேசம், பாதிக் கடவுள்களைப் பட்டினி போட்டுவிட்டது என்பதே என் வருத்தம்.

விளைநிலங்களை விற்றுவிடாதீர்கள்; விவசாயத்தை விட்டுவிடாதீர்கள். இந்த மண்ணின் பூர்வீகமான இயற்கை விவசா யத்தை முடிந்த மட்டும் தொடர முயலுங் கள். இந்த மாதிரி கிராமத்தை முன்னிட்டு மாதிரி தேசம் உண்டாகட்டும்; நன்றி!''

அவன் நெகிழ்ந்து அமர்ந்தபோது கூட்டத்திலும் கொஞ்சம் ஈரம் கசிந்தது.

அவனுக்கு இயற்கை உரத்தில் வீட்டில் பூத்த ரோஜாச் செடி ஒன்றைப் பரிசளித்தான் ஒரு பள்ளிச் சிறுவன்.

மிலி பேசத் தொடங்கும் முன்னால் கையில் ஒரு மூட்டையோடு தட்டுத் தடுமாறி மேடையேறினாள் சிறுமி ஒருத்தி; அவளைவிட உயரமாக அவள் எடைக்கு எடை இருந்தது அந்த மூட்டை. தூக்க முடியாமல் தூக்கி எமிலி கையில் தர முயன்றாள் அவள். மூட்டையை ஒரு கையிலும் சிறுமியை மறு கையிலும் அணைத்துக்கொண்ட எமிலி, பரிசுப் பொருளை உடனே அவிழ்த்துப் பார்க்கும் அமெரிக்கக் கலாசார முறையில் மூட்டை பிரித்தாள்.

உள்ளே பார்த்ததும் 'வாவ்’ என்று வாய் பிளந்தாள்.

''எங்க ஊருல நான் கடைசியாச் சேகரிச்ச பாலித்தீன் கழிவு மேடம்!''என்று மழலையில் உண்மை உளறிய குழந்தையின் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டாள் எமிலி. பிறகு பேசலானாள்:

''நான் பெற்ற பரிசுகளிலேயே பெரும் பரிசு இதோ இந்தச் சிறுமி தந்த பாலித்தீன் கழிவு மூட்டைதான். ஒரு குழந்தையின் பிஞ்சு மனசு வரைக்கும் இந்த விஷயத்தை விதைத்ததற்காக உங்கள் சின்னப்பாண்டியை நான் பாராட்டுகிறேன்.

உண்டாக்கப்பட்டிருக்கும் இந்த மாதிரி கிராமம்தான் எங்கள் வருகையின் ஒரே அடையாளம். கார்பன் இல்லாத அல்லது கார்பன் குறைந்த கிராமங்கள் என்ற கனவு நனவாகட்டும். இதைச் சொல்ல உரிமைஅற்ற தேசத்திலிருந்து நான் வந்திருக்கிறேன். கார்பனைக் குறைத்துக்கொள்ளுங்கள் என்று உங்களுக்குச் சொல்ல எங்களுக்குத் தார்மீக உரிமை இல்லை. ஆனால், அதிக கார்பன் வெளியிடும் தேசம்தான் மூன்றாம் உலகப் போருக்கு முதல் ஆயுதம் ஏந்துகிறது என்று எந்த நாட்டில் சொல்லவும் எனக்குத் தயக்கம் இல்லை.

இயற்கையைவிட்டு வெகுதூரம் விலகிக்கொண்டே போவதுதான் இந்த பூமிக்குப் புறப் பிரச்னை. இதயத்தைவிட்டு வெகுதூரம் விலகி நிற்பதுதான் இந்த பூமிக்கு அகப் பிரச்னை. இந்த 'மாதிரி கிராமம்’ என்பது ஒரு பெரிய மாறுதலின் முதல் துளிதான். ஆனால், சமுத்திரமே ஒரு துளியில் இருந்துதான் தொடங்கியது என்பது மறுக்க முடியாத உண்மைதான்.

மூன்றாம் உலகப் போர் - 39

வருவேன்; மீண்டும் நான் இங்கு வருவேன். உங்கள் மாவட்டத்தின் ஒரு புள்ளியாக இருக்கும் இந்த ஊர், இந்திய தேசப் படத் தில் பச்சைப் புள்ளியால் குறிக்கப்படும்போது நான் இங்கு வருவேன். நன்றி... வணக்கம்!''

எமிலியோடும் இஷிமுராவோடும் கை குலுக்க பள்ளிச் சிறுவர்கள் முண்டியடித்து மேடையில் முன்னேறிக்கொண்டிருக்க... சக்கரவண்டி தள்ளிக்கொண்டே சின்னப்பாண்டி நோக்கி நகர்ந்து நகர்ந்து வந்துகொண்டிருந்தான் கவட்டைக்காலன் மகன் முருகராசு. பிள்ளைகளை விலக்கி விலக்கி... மேடையருகே நெருங்கி சின்னப்பாண்டியின் தோள்தொட்டான். அவன் திடுக்கிட்டுத் திரும்பினான்.

''தம்பி... பத்திரத்து மேல அப்பா கடன் கேட்டு வந்தாரு. அப்பப் பத்திரம் இல்ல. ஆனா, நல்ல காரியத்துக்கு நீ வெளிநாடு போற. இல்லேனு சொல்ல முடியல. இந்தா... இதுல ஒரு அம்பதாயிரம் இருக்கு. எடுத்துட்டுப் போ. ஆனா, இது கடன் இல்ல. நீ நல்லா சம்பாதிச்சா - அப்ப நான் பொழச்சுக்கிடந்தாத் திருப்பிக் கொடு; இந்தா வாங்கிக்க.''

வாங்கலாமா... வேண்டாமா என்று சின்னப்பாண்டி திகிலடித்து நிற்கையில்... முருகராசு கையைப் பற்றிக் கருத்தமாயி அழ ஆரம்பித்துவிட்டார்.

''நீதானப்பா மனுசன். எனக்கு வேற ஒண்ணும் சொல்லத் தெரியல. கஞ்சாக் காட்டுல துளசிச் செடி முளைச்சது மாதிரி முளைச்சு வந்திருக்க. நீ நல்லா இரு.''

சின்னப்பாண்டியைப் பார்த்து ''வாங்கிக்கப்பா'' என்றார்; அவன் வாங்கிக்கொண்டான்.

தாவரங்களுக்குத் தங்கம் பூசிக்கொண்டிருந்தது அதிகாலை வெளிச்சம். ஐந்து மனித மரங்களுக்கும் பூக் கட்டிக்கொண்டே போகிறார் கருத்தமாயி. பொட்டுவைத்துக்கொண்டே போகிறாள் சிட்டம்மா. கடவுளுக்கு நடக்கிற மாதிரி நடக்கிறது மரங்களுக்கும் அபிஷேகம்.

இடுப்பில் துண்டு கட்டி, தலைக்கு மேல் கை குவித்து வான் பார்த்து முணுமுணுத்து, ஈர விழியில் நீரொழுகி ஆவேசம் வந்த பூசாரியாக நடுங்கும் உடம்போடு அவர் மரங்களை வணங்கவும், அச்சம் கலந்த ஆச்சர்யத்தோடு அவரையே பார்த்துக்கொண்டிருந்தார்கள் எமிலியும் இஷிமுரா வும்.

மூன்று மரங்களைத் தொட்டுக் கும்பிட்ட அதே பயபக்தியோடு இஷிமுராவின் அப்பா அம்மா மரங்களையும் குனிந்து தொட்டுக் கும்பிட்டார் கருத்தமாயி.

''குலசாமிகளா! கடல் கடந்துபோகுது எம்பிள்ளை. கூடவே போங்க. கூட்டிக்கிட்டும் வந்துருங்க.''

மளார்னு விழுந்தாரு மரங்களுக்குக் கீழ.

''சின்னப்பாண்டி! நீயும் விழுந்து கும்பிடு மகனே.''

அப்பன் விழுந்த அதே பாவனையில் மகனும் விழுந்தான்.

இந்த சாங்கியங்களை எல்லாம் வியந்து பார்த்துக்கொண்டிருந்த இஷிமுரா, பரபரவென்று தன் தாய் தந்தை மரங்களை நெருங்கினான், தொட்டுக் கும்பிட்டான் இந்துக்களின் பாவனையில்.

''என்னப்பா இசி...'' ஆச்சர்யத்தில் ஆடிப்போனார் கருத்தமாயி.

''ஜப்பானில் ஓர் அப்பா அம்மாவை இழந்த எனக்கு, இரண்டு அப்பா அம்மாக்கள் கிடைத்திருக்கிறார்கள் இந்தியாவில்.''

''என்னப்பா சொல்ற?''

''ஒரு அப்பா அம்மா இந்த மரங்கள். இன்னொரு அப்பா அம்மா நீங்கள்!'' கருத்தமாயிக்குக் கைகள் நோங்கின அவனைக் கட்டிப்பிடிக்க. தூசு படிந்த உடம்பு அவரைத் தூரத்தில் நிறுத்தியது.

''உங்களை ஒன்று கேட்பேன்; செய்வீர்களா?'' என்றான் இஷி.

''சொல்லு மகனே'' என்றார் கருத்தமாயி.

''உங்க அப்பா அம்மா மரங்களைக் காப்பாத்தற மாதிரி எங்க அப்பா அம்மா மரங்களையும் கடைசி வரைக்கும் காப்பாத்துவீங்களா?''

''காப்பாத்துவேன் ராசா - என் உசுருள்ள மட்டும் காப்பாத்துவேன்!''

''இரண்டு அப்பா அம்மாக்களைப் பார்ப்பதற்காக நான் அடிக்கடி இந்தியா வருவேன்.''

''வா மகனே வா'' - இஷிமுராவின் கையைப் பிடித்துக்கொண்டார் கருத்தமாயி.

''அப்பன் ஆத்தா ரெண்டு பேரும் சேந்து நில்லுங்க'' என்றான் சின்னப்பாண்டி.

வலத்து மாட்டை இடத்தில் கட்டியது போலவும் இடத்து மாட்டை வலத்தில் கட்டியதுபோலவும் இடைவெளிவிட்டுப் பொருந்தாமல் நின்றார்கள் இருவரும். சேராத நான்கு கால்களில் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து எழுந்தான் மகன்.

எழுந்தவன் மோவாயில் கைவைத்து வாய் பொத்தி நிற்க, விபூதி எடுத்து அவன் நெற்றியில் இழுகினார் கருத்தமாயி.

அவனுக்குப் பின்னால் பார்த்தால் மோவாயில் கை வைத்து வாய் பொத்தி சின்னப்பாண்டி நின்ற அதே பாவனையில் நின்றான் இஷிமுரா. அதே சாங்கியம் நடந்தது அவனுக்கும்.

''எனக்கு?'' என்று பதறி அதே பாவத்தில் வந்து நின்றாள் எமிலியும்.

எமிலியின் நெற்றியிலும் திருநீறு பூசிக்கொண்டே கருத்தமாயி சொன்னார்.

''ஒன்னிய நம்பி என் புள்ளய அனுப்பிவைக்கிறேன் தாயி. திண்டுக்கல்லுக்குக் கிழக்க, தேனிக்கு மேற்க - தெக்கு வடக்குத் தெரியாது அவனுக்கு; பாத்துக்க.''

அவள் நெற்றியில் சந்தனம் பூசிக் குங்குமம் இட்டாள் சிட்டம்மா.

அவர்கள் விடை கொண்டுபோவதைக் கண்களில் நீர் முட்ட முட்டப் பார்த்துக்கொண்டேயிருக்கின்றன பேசிக்கொள்ளாத இரண்டு ஜீவன்களும்.

துரையில் இருந்து சென்னைக்கு மூவரும் ஒரே விமானத்தில் பயணிப்பது - இஷிமுரா சென்னையில் இறங்கி சிங்கப்பூர் வழியே டோக்கியோ செல்வது. எமிலியும் சின்னப்பாண்டியும் ஃபிராங்ஃபர்ட் வழியே அட்லாண்டா செல்வது - இது திட்டம்.

துணைவேந்தருக்கு நன்றி சொன்னதில் - துறைகளில் விடைகொண்டதில் - பெட்டி களில் பொருள் அடைத்ததில், சில மணி நேரம் செலவழிந்தது.

நண்பகல் 1.40-க்குப் புறப்பாடு.

12.30-க்கு அடைந்தார்கள் விமான நிலையத்தை

மூவருக்கும் ஒரே வரிசையில் பயணச்சீட்டு

7D ஜன்னல் இருக்கை - எமிலி

7E நடுவிருக்கை - சின்னப்பாண்டி

7F ஓர இருக்கை - இஷிமுரா.

''இது உங்களுக்கு முதல் விமானப் பயணமா?'' என்றாள் எமிலி.

''ஆம்'' என்றான் சின்னப்பாண்டி.

எப்படிப் பூட்டுவது கழற்றுவது என்று சொல்லிக்கொடுத்து, சின்னப்பாண்டியின் இருக்கைப் பட்டையை எமிலியே பூட்டினாள்.

'போய்வருகிறேன் தாய்மண்ணே’- ஜன்னலோரம் எட்டிப் பார்த்துக் கண்ணிமை மூடி, மார்பில் கைவைத்து மனசுக்குள் மண்ணை வணங்கினான் சின்னப்பாண்டி.

''நன்றி எமிலி. நான் உயரப் பறப்பதற்கு நீதான் காரணம்!''

''சிறகு கட்டிவிடுவது மட்டும்தான் நான். பறக்கப்போவது நீங்கள். இன்னும் உயர உயரப் பறப்பீர்கள்.''

நிறைந்தது விமானம்.

கதவு சாத்தப்படும் நேரம்.

''உங்கள் இருக்கைப் பட்டையை அணிந்துகொள்ளுங்கள்; கைத்தொலைபேசிகளை அணைத்துவிடுங்கள்'' - கடைசியாகக் கூவி முடித்தது விமானக் குயில்.

இனி, ஏணி எடுக்கப்பட வேண்டியதுதான்; கதவு சாத்தப்பட வேண்டியதுதான்.

திடீரென்று ஓர் அறிவிப்பு.

''தயவுசெய்து கவனியுங்கள் 7E இருக்கையில் உள்ள சின்னப்பாண்டிக்கு ஓர் அவசரச் செய்தி காத்திருக்கிறது. உடனடியாக அவர் விமானத்தைவிட்டு இறங்கி, விமானநிலைய மேலாளரை அணுகவும்!''

திகைத்தான் - திகிலடைந்தான் - ஒன்றும் புரியவில்லை. இருக்கைப் பட்டையோடு எழப் பார்த்தான்; இடிபட்டான்; அவள் உதவினாள். விடை சொல்ல வார்த்தையின்றி வெளியேறினான்; ஏணியில் தாவி இறங்கினான்.

அணைத்துவைத்த கைத்தொலைபேசியை இப்போது இயக்கினான். அடுத்த விநாடி அடித்தது; எடுத்தான்; மறுமுனையில் அலறியது ஒரு குரல்:

''அய்யோ... அய்யய்யோ... உயிர்ப்பலியாகிப் போச்சப்பா சின்னப்பாண்டி... எங்கிருந்தாலும் வந்து சேரு!'' முழு விவரம் சொல்லாமல் அழுத குரல் அடங்கியது.

உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடினான் சின்னப்பாண்டி!

- அடுத்த வாரம் ஓயும்...