என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்

##~##

போன்சாய்

 து போல்ட் சைப்ரஸ்
இருபது வருட மரம்
இது விர்டிஸ்
பதினெட்டு வருட மரம்
சில்க்கோவா சினிகா
ராக்ஸ் பிரே
ஜெனிப்பர்
டெசர்ட் ரோஸ்
ஃபிகஸ்... இப்படி
தான் தொட்டியில்வைத்துப்
பராமரிக்கும்
மரமா - செடியா என
வகைப்படுத்த இயலாத தாவரத்தை
'போன்சாய்’ என
அறிமுகப்படுத்துவான் நண்பன்.
தன்னிடமிருக்கும் குட்டை மரத்தின்
தாய்நாடு
தன்மை
வகை
வயது...
இப்படி
இன்னும் பலவற்றை
கண்களில் பெருமை மின்ன
நாள் கணக்கில் விவரிப்பது
நண்பனின் வழக்கம்.
மாதம் ஒரு முறை
மண்ணைக் கிளறி
சல்லி வேரை வெட்டுதல்
சாலச் சிறந்ததென்பான்.
புதிய கிளைகளின் கொழுந்தைச்
சேதமில்லாமல் நறுக்கினால்தான்
குடைபோல் பரந்து விரியுமென்பான்.

சொல்வனம்

தொட்டியினுள்ளே
உதிரும் இலைகளை
அவ்வப்போது அப்புறப்படுத்துதல்
அதனினும் அவசியமென்பான்.
மக்கிய மரத்தூள்
சாணத்தின் சாம்பல்
மரத்திற்கு ஊட்டமென்பான்.
போன்சாயை அழகுபடுத்த
விசேஷக் கருவிகொண்டு
அவன் மேற்கொள்ளும்
பராமரிப்புப் பணிகள்
வேலை மெனக்கெட்டதாகவே தோன்றும்.
இப்படியான ஒரு பொழுதில்
நியாவாக்கி நெபாரி எனும்
போன்சாய் மரம்
அமெரிக்காவில் வழங்கப்படும்
'போன்சாய் சொசைட்டி
டிசைன் அவார்டில்’
பங்குகொள்வதாகவும்
ஓட்ஸ் உமியே
அதற்குச் சிறந்த உரமென்றும்
ஆஸ்திரேலியாவிலிருந்து வரும்போது
வாங்கி வா என்றான்.
வாங்கித் தந்திருக்கிறேன்
இதெல்லாம் முன்பு...
இப்போதெல்லாம்
நண்பன்
குட்டைச் செடி வளர்ப்பதில்லை
இயற்கையோடு இயைந்து
அதனதன் இயல்பிலேயே  
வளர்வதுதான் நல்லதென்று
தோட்டத்தில் நட்டுவிட்டான்
தனக்கு
அங்கக் குறைபாடுள்ள
ஆண் குழந்தை பிறந்ததிலிருந்து.

- நன்னிலம் ஜாகிர் உசேன்

சொல்வனம்

பிரியமொன்று...

நெரிசலை
அள்ளிக் கொண்டுசெல்லும்
பேருந்தில் என்னோடு
இருக்கையைப் பரிமாறிக்கொள்ள
வந்தமர்கிறாள்
உன்னைப் போல் ஒருத்தி

ஒவ்வொரு திருப்பத்திலும்
அவளைச் சற்றும்
உரசிவிடாதவாறு
பார்த்துக்கொள்கிறது
என் பிரியம்

நீயில்லாத தருணம்
வந்துபோகும் என்
கோரக் குணத்தைச்
சிறைப்பிடிக்கிறது
உன் பிரியம்!

- சோமா

பெயரெச்சம்

எங்கள் ஊருக்கு
ஒதுக்குப்புறமாய்
ஒரு மேடு இருந்தது
புறம்போக்கு நிலத்தில்
யாரோ வீடு கட்ட முடியாமல்
விட்டுப்போன மண்ணால் ஆனது அந்த மேடு
பூக்களும்
புற்களும்
ஆங்காங்கே தக்காளிச் செடிகளும்

சொல்வனம்

அழகாய்த் தலைகாட்டும்படி இருப்பதால்
அந்தியில் அங்குதான்
அமர்ந்து பேசுவோம் நண்பர்களோடு
ஒரு கூறுகெட்ட தினத்தில்
குடித்தவன் ஒருவன்
குமட்டி எடுத்த வாந்தியால்
இரு நாள் அவ்விடம் செல்லாதிருந்தோம்
மூன்றாம் நாள்
அவ்விடத்தில்
சிறுநீரும் மலமும் இருந்ததால்
திரும்பினோம்
நான்காம் நாள்
அவ்விடத்தில் நாப்கின்களும்
ஐந்தாம் நாள் அவ்விடத்தில் ஆணுறையும்
ஆறாம் நாள் அவ்விடத்தில்
பன்றிகளும் படுத்திருப்பதாக
ஏழாம் நாள், இப்போது ஊரே
அங்குதான் குப்பைகளைக் கொட்டுவதாகவும்
அந்த அழகிய மேடு குப்பைமேடு ஆகிவிட்டதாகவும்
அந்தப் பக்கம் செல்பவர்கள்
இப்போது மூக்கை மூடிக்கொண்டுதான்
செல்கிறார்கள் எனும்போதும்
மூர்ச்சையாகிவிட்டேன்
ஒரு குப்பைபோலான
மனிதர்களை நினைத்து!
 

- வே.விநாயக மூர்த்தி

சொல்வனம்