மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 39

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

பழனியிலும் திருவண்ணாமலையிலும் மலை முழுக்க அலையும் ஏராளமான யாசகக்காரர்களின் முகங்கள் எனக்கு நல்ல பரிச்சயம்.

''பூவா டிக்கெட் வாங்கிருச்சு, தெரியாதா?''

 ''எப்படா?''

''அது ரெண்டு மூணு வருஷம் ஆச்சுரா... இப்ப வந்து கேக்குற...''

போன வாரம் ஊரில் இருந்து வந்திருந்த அண்ணனுடன் பேசிக்கொண்டு இருந்தபோதுதான் பூவா செத்துப்போனதே தெரியும். பூவாதான் நினைவு தெரிந்து நான் பார்த்த முதல் பிச்சைக்காரச் சித்திரம். ஆள் பார்க்க ஆங்கிலோ - இந்தியப் பெண்மணி மாதிரி அப்படி ஒரு கோதுமை கலரில் இருக்கும். அழுக்குப் பாவாடையும் கிழிந்த சட்டையுமாக கையில் சதா ஓர் அழுக்கு மூட்டையுடன் ஊரைக் கோலிக்கொண்டே கிடக்கும். யாரைப் பார்த்தாலும் கையை நீட்டி, தலையைச் சொறிந்துகொண்டே மௌனமாக நிற்கும்.

வட்டியும் முதலும் - 39

காசு சேர்ந்தால் புள்ளைக் கடையில் புரோட்டா வாங்கி, வெளியே உட்கார்ந்து சாப்பிடும். இல்லையென்றால், ஏதாவது வீட்டில் சாப்பாட்டு நேரத்துக்கு வந்து வாசலில் உட்கார்ந்துவிடும். ராத்திரியானால் தூங்க மட்டும் ஹாஜியார் வீட்டுத் திண்ணைக்குப் போய்விடும். மத்தியானத்தில் பார்த்தால், படித்துறையில் உட்கார்ந்து அழுக்குத் துணிகளைத் துவைத்துக்கொண்டு இருக்கும். ''கம்னாட்டி... அந்தப் பக்கம் போ... போ...'' என யாராவது விரட்டிக்கொண்டு இருப்பார்கள். மளிகைக் கடையில் வந்து பூவா கையை நீட்டினால், புகையிலை கொடுக்க வேண்டும். டீக்கடை வாசல் பெஞ்ச்சைக் கையில் இருக்கும் தூக்கு வாளியால் 'லொட் லொட்’ எனத் தட்டினால், டீ கொடுக்க வேண்டும். எதுவும் போடவில்லை என்றால், கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்துவிட்டு அது பாட்டுக்குப் போய்விடும். எப்போதும் எங்காவது உட்கார்ந்து தனக்குத்தானே முணுமுணுத்துக்கொண்டு இருக்கும் பூவா.

ஒரு பெருமழைக் கால நாளன்றில், நாய்கள் எல்லாம் ஒண்டிக்கிடந்த ஹாஜியார் வீட்டுத் திண்ணையில் பூவாவைக் காணோம். யாரும் அதைத் தேடவும் இல்லை. ஃபாரூக் மட்டும்தான், ''இந்த பூவாவைப் பாத்தீங்களா? எங்க போய்த் தொலைஞ்சுதுனு தெரியலையே...'' என்றபடி குடையோடு அலைந்தார். மூன்று நாட்களுக்குப் பிறகு செல்லூரில் ஒரு கடை வாசலில் கிடந்த பூவாவைத் தூக்கி வந்தார்கள்.

ஒரு கோணிப்பை மாதிரி காய்ச்சலில் சுருண்டு நடுங்கிக்கொண்டு இருந்தது பூவா. ஃபாரூக்தான் அந்த மழையிலும் கல்யாணராமன் டாக்டரை அழைத்து வந்து பூவாவுக்கு ஊசி போட்டார். வீட்டில் இருந்து கஞ்சி வைத்து வந்து தந்தார். ரெண்டு நாளில் எழுந்து பழையபடி கை நீட்டியபடி நட மாடத் தொடங்கிவிட்டது பூவா. பெருமழை நனைத்த திண்ணையில் காய்ச்சலில் சுருண்டுகிடந்த பூவாவின் உருவம் இப்போதும் நினைவிருக்கிறது. அதேபோல் அது திடுதிப்பென்று ஒரு நாள் புது பூப்போட்ட பாவாடை சட்டை போட்டுக்கொண்டு, சின்ன வெட்கத்தோடு யாரிடமும் கை நீட்டாமல் உட்கார்ந்திருந்த ஒரு காட்சி. கந்தூரி சந்தனக்கூடு அன்று யாரோ வாங்கித் தந்த புது டிரெஸ்ஸைப் போட்டுக்கொண்டதும் அதுக்கு என்னவோ ஆகிவிட்டது. பள்ளிவாசல் பின்புறச் சுவரில் உட்கார்ந்துகொண்டு தனக்குத்தானே சிரித்தபடி, புதுத் துணியைப் பார்த்துக்கொண்டே இருந்தது. ரெண்டு மூணு நாளைக்கெல்லாம் அதே துணி அழுக்காகி, பழையபடி சுற்ற ஆரம்பித்திருந்தது.

ஒரு கட்டத்தில் சிவன் கோயில், பள்ளிவாசல், வெட்டாறு மாதிரி எங்கள் ஊரின் அடையாளங்களில் ஒன்றாக மாறிப்போயிருந்தது பூவா. ஊரை 45, 50-ம் நம்பர் பஸ்கள் கடக்கையில் எங்கேனும் ஓர் இடத்தில் பூவாவைப் பார்த்துவிட முடியும். ஊரைவிட்டு வந்த பிறகு, பூவாவை மறந்தேபோய்விட்டோம். எப்போதேனும் ஒரு போன் பேச்சில் கேட்பதோடு சரி. இதோ இப்போது பூவா செத்துப்போன செய்திகூட ரெண்டு மூணு வருடங்களுக்குப் பிறகுதான் தெரிகிறது. இப்போது இருந் தால், அதற்கு 70 வயசுக்கு மேல் இருக்கும். சட்டென்று நினைவில் ஒரு முள் ஏறுகிறது.

பூவா யாரென்று எனக்கு இது வரைக்கும் தெரியாது. பூவா ஒரு பெண்... சகோதரி... காதலி... தாய்... இல்லையா? கனவுகளும் நினைவுகளும் உதிரமான ஒரு ஜீவன். எந்தக் கணத்தில் அவள் பிச்சையெடுக்கத் தொடங்கினாள்? சக மனிதனிடம் கையை நீட்டி யாசிக்கும் எண்ணம் எங்கிருந்து வந்தது அவளுக்கு? இருபது முப்பது வயசில் குளித்து முழுகி சீவி வந்து நின்றால் பூவா எவ்வளவு அழகாக இருந்திருப்பாள். நிச்சயம் அவள் பேரழகி. பசி மட்டும்தானா அவளை இப்படித் துரத்தியது? இழந்து இழந்து இதயம் மரத்து இப்படி ஆனாளா? எதுவும் தெரியவில்லை? ஆனால், புதுத் துணி போட்டுக்கொண்டு அவள் வெட்கமாக உட்கார்ந்திருந்த காட்சியை மட்டும் நான் பத்திரப்படுத்திக்கொள்கிறேன். இந்த வாழ்வின் தீரவே தீராத விசித்திர அழகியலில் அழியாத புகைப்படமாக!

இப்படித்தான் போன வாரத்தில் ஒரு சாயங்காலம் வடபழனி முருகன் கோயில் சாலையில் நடக்கிறபோது, ''அண்ணே... அண்ணே... புள்ள பால் குடிக்கலண்ணே... சாப்பிடலண்ணே...'' என்றபடி என் தோளைச் சுரண்டியது ஒரு கை. இடுப்பில் ஒன்றும் கையில் ஒன்றுமாக இரண்டு பிள்ளைகளுடன் நிற்கிறாள் ஒரு பெண்மணி. நூல் புடவையும் காவிப் பல்லுமாக நிற்கிறாள். கையைப் பிடித்துக்கொண்டு நிற்கிற குட்டிப் பையன் தன்னிச்சையாக வயிற்றைத் தடவி, ''சாப்பிடல சார்...' என்கிறான். அந்தப் பெண்மணியை உற்றுப்பார்த்த ஒரு கணம் எனக்குத் திடுக்கென்றது. இந்த 10 வருடங்களில் இவளை அவ்வப்போது பார்த்துக்கொண்டே இருக்கிறேன். இதே இடத்தில் குமரியாக தனியே இவள் பிச்சை கேட்ட காட்சிகளைக் கடந்துபோயிருக்கிறேன்.

ஒருமுறை, 'வாடகைக்கு கோட் விடப்படும். கோட் சூட் 100 ரூபாய்’ என்ற ஆரஞ்சு நோட்டீஸ்கள் ஒட்டப்பட்ட சென்ட்ரல் ஸ்டேஷன் எதிர் சுவருக்குக் கீழே ஒரு ஆளோடு உட்கார்ந்து, இதே பெண் பிச்சை எடுத்துக்கொண்டு இருந்ததைப் பார்த்தேன். இப்போது இரண்டு பிள்ளைகளையும் வாங்கிக்கொண்டு வந்து நிற்கிறது. சாயங்காலம் பூக் கட்டிக்கொண்டு, ராத்திரிக்கு ஒதுங்கி சம்பாதிக்கும் செண்ட பஜார் அக்கா மாதிரி இது ஆகாமல் போனதும் வாழ்வின் விசித்திர அழகியல்தான். பலர் இப்படித்தான் வழிவழியாகப் பிச்சை எடுக்கிறார்கள். இவர்களை விடுங்கள்... ''சாப்பிடல சார்' என வயிற்றைத் தடவும் அந்தக் குட்டிப் பையன் என்னாவான் என்று நினைத்துக்கொள்கிறேன்.

கோக், பெப்சி மூடிகளைச் சேர்த்து வைத்துக்கொண்டு அலையும் இது மாதிரியான ஏராளமான பையன்கள் என்னாவார் கள். படிப்பது கிடக்கட்டும்... 15 வயசுக்கெல்லாம் கீ செயின், பர்பி விற்கப் போய்விட்டால்கூட நல்லதுதான். ஏதாவது பஸ் ஸ்டாண்டில் குடை போட்டு கிர்ணி பழம் ஜூஸ் விற்றால்கூடத் தேவலை. நாலஞ்சு அபார்ட்மென்ட்டுகளைப் பிடித்துக்கொண்டு வாட்டர் கேன் போட்டு இந்தச் சமூகத்தில் ஒரு ஆளாகிவிட்டால்கூட நன்றாக இருக்கும்? இப்படியே இவனும் பிச்சையெடுத்து, துணை சேர்த்து, பிள்ளை பெற்று வாழ்ந்துவிடக் கூடாது என்றுதான் வேண்ட வேண்டி இருக்கிறது.

அன்றைக்கு அப்படித்தான் உட்லண்ட்ஸ் தியேட்டர் பக்கமாக ஒரு பையன் வழி மறித்து, ''சார்... சார்... அம்மாவை ஆஸ்பத்திரில சேர்த்திருக்கு... செங்கல்பட்டு போறதுக்குக்கூட காசு இல்ல சார்...' எனக் கை நீட்டினான். கொஞ்ச நாளைக்கு முன்பு இதே பையன் இதே காரணத்தைச் சொல்லி என்னிடம் 50 ரூபாய் வாங்கிப் போனான். அனுதினம் பார்க்கிற ஆயிரம் முகங்களில் அவனுக்கு என்னை எப்படி நினைவிருக்கும்? ''டேய்... இன்னும் நீ செங்கல்பட்டுக்குப் போகலையா?' என நான் கோபமாகக் கேட்டதும், சட்டென்று முறைத்துக்கொண்டு ரோட்டைத் தாண்டிப் போய் ஓர் இடத்தில் உட்கார்ந்துகொண்டான்.

அப்போலோ ஆஸ்பத்திரி சாலையில் ஒரு பாட்டி, தினமும் சரியாக காலை 8 மணியில் இருந்து 11 மணி வரைதான் பிச்சை எடுக்கும். அது ஒன் வே. அந்த நேரத்தில்தான் ஜனத்திரள் கிழிக்கும். 11 மணிக்கு மேல் மணி அடித்தது மாதிரி கிளம்பிவிடும். அது டியூட்டி டைம் மாதிரி. அப்புறம் அந்தச் சாலை முழுக்க இந்தி, பெங்கால் பிச்சைக்காரர்கள் எதிர் வந்துகொண்டே இருப்பார்கள். ஏதேதோ இந்தியில் பேசி ஒரு குழந்தையைத் தூக்கி முகத்துக்கு நேரே ஆட்டுவார்கள். ராமச்சந்திரன் டீக்கடைப் பக்கம் பிச்சையெடுக்க வரும் ஒரு பெரியம்மா, குறைந்தது அஞ்சு ரூபாய் கொடுத்தால்தான் வாங்கும். ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் என்றால் திருப்பிக் கொடுத்துவிடும்.

பழனியிலும் திருவண்ணாமலையிலும் மலை முழுக்க அலையும் ஏராளமான யாசகக்காரர்களின் முகங்கள் எனக்கு நல்ல பரிச்சயம்.

ஒவ்வொருவரிடமும் பிச்சையெடுப்பது அற்புதமான கலை, தெய்வ காரியம் என்கிற உடல்மொழிதான் இருக்கும். எங்கெங்கு இருந்தோ ஏதேதோ பின்புலங்களில் இருந்து வந்து பிச்சை எடுத்துத் திரியும் அந்த ஒவ்வொருவரிடமும் ஏராளமான கதைகள் இருக்கின்றன.

வேளாங்கண்ணியில் 20 வருடங்களாக கிளிஞ்சல் மாலை சுற்றிக்கொண்டு, சர்ச் வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கும் யேசுராஜாவைச் சமீபத்தில் போனபோதுதான் தெரிந்துகொண்டேன். கீழ் திருப்பதியில் சுரைக் குடுவையில் தந்தி மீட்டிக்கொண்டு, பழைய என்.டி.ஆர். படப் பக்திப் பாடல்களை எல்லாம் பாடிக் கொண்டே பிச்சை எடுக்கும் ஒருவனது பெயர் பாலாஜி என்பது யதேச்சையானதா என்ன?

நாகூர் தர்ஹா வாசலில் கர்ப்பிணி மனைவியோடு ஒரு தாடிக்காரர் அல்லா பாடல்களைப் பாடியபடி பிச்சை எடுத்துக்கொண்டு இருந்ததை ஒரு முறை பார்த்தேன். ரொம்பக் காலத்துக்குப் பிறகு, அதே தம்பதியை திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸின் அன்ரிசர்வ்டு கம்பார்ட்மென்ட்டில் நெருக்கியடித்து உட்கார்ந்து செல்லும்போது பார்த்தேன். ஒரு ஸ்டேஷனில் வண்டி நின்றபோது அவர் ஓடிப்போய் அந்தப் பெண்ணுக்கு டிஃபன் வாங்கி வந்தார். நாகூரில் பார்த்த கோலம் இல்லாமல் அவர்களை இந்தக் கூட்டத்தில் ஒரு தம்பதி யராகப் பார்க்கச் சந்தோஷமாக இருந்தது. அவரிடம் பேசியபோது, கேரளத்தில் பெரிய தர்ஹா திருவிழாவுக்குப் போய்க்கொண்டு இருப்பதாகச் சொன்னார். அங்கே போய் ஒரு வாரம் பிச்சை எடுத்தால் கொஞ்சம் காசு சேரும் என்றார். இந்த ரயில் பயணத்தின் காட்சி அவர்கள் வாழ்க்கை நாடகத்தின் ஒப்பனையற்ற பொழுது எனத் தோன்றியது.

கை இல்லாமல், கால் இல்லாமல், விதவிதமான, பாவகரமான, அதிர்ச்சிகர மான, ஊனங்களுடன் எதிர்ப்படும் பிச்சைக்காரர்களைப் பார்க்கும்போதுஎல்லாம் தெய்வங்களின் மீதும் இயற்கை யின் மீதும் தீரவே தீராத கேள்விகள் எழுந்துகொண்டேதான் இருக்கின்றன.

வட்டியும் முதலும் - 39

இப்படி நிறைய மனிதர்களைச் சந்தித்த பிறகு எனக்குத் தோன்றியது... பசி, வறுமை, ஊனம், சோம்பேறித்தனம் போன்றவை இவர்கள் பிச்சை எடுப்பதற்கான சரிபாதிக் காரணங்கள். மீதி, இந்தச் சமூகம் அவர்களை வைத்து ஆடிய பகடையாட்டத்தின் காரணங்கள். பகிர முடியாத மனநிலைகள். உறவுச் சிக்கல்கள் என ஏராளமான காரணங்கள்.

கோயம்பேடு சந்தையில் நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் தங்கியிருக்கிற இடத்தில் ஒரு பிச்சைக்கார இணையை எப்போதும் பார்ப்பேன். நடைமேடை மரத்தடியில் அழுக்குத் துணிகளைப் போட்டுக்கொண்டு இரண்டு பேரும் எதாவது பேசிக்கொண்டே உட்கார்ந்திருப்பார்கள். அவருக்கு ஒரு 35 வயது இருக்கும். அந்தப் பெண்மணிக்கு 50 வயசாவது இருக்கும். கடந்த வாரம் நண்பரைப் பார்க்கப் போனபோது ஏரியாவே களேபரமாகக் கிடந்தது. அந்த ஆளும் பொம்பளையும் பயங்கர சண்டையில் கிடந்தார்கள். கட்டி உருண்டு சண்டை. அந்த ஆள் அதைப் பிடித்து பிடித்து இழுக்கிறான். அது அவனைப் படு கேவலமான கெட்ட வார்த்தைகளால் திட்டுகிறது. ஒரு அழுக்குத் துணியில் இருந்த காசைச் சுருட்டி புடவையில் திணித்துக்கொள்கிறது.

சுற்றி இருந்தவர்கள் அலுக்கிற வரை வேடிக்கை பார்த்துவிட்டு, இருவரையும் திட்ட ஆரம்பிக்க, அந்தப் பொம்பளை திட்டிக்கொண்டே எதிர்ப் பக்கம் நடக்க ஆரம்பிக்க... பின்னாலேயே ஓடினான் அவன். ''என்னங்க இது..?'' என்றால், ''அட... ரெண்டு பேருக்கும் செக்ஸுவல் லிங்க் இருக்கு. இங்கயே செட்டிலாகி வாழ ஆரம்பிச்சிட்டாய்ங்க. அதைத் தொழிலுக்கு அனுப்பிட்டு அவன் சும்மா குடிச்சுட்டுக் கெடந்திருக்கான். பகல்லயெல்லாம் தொந்தரவு போலயிருக்கு... அதான் ஒரே சண்ட. ராத்திரிக்கு வா... திரும்ப இங்கயே வந்து கூடிட்டுக் கெடக்குங்க!'' என்றார் நண்பர் சிரித்தபடி.

இதைப் போல நாம் அறிந்துணரவே முடியாத ஏராளமான அதிர்ச்சியும் ஆச்சர்யமும் துயரமுமான பக்கங்களை வைத்திருக்கிறார்கள் இந்தப் பிச்சைக்காரர்கள். இவ்வளவுக்குப் பின்னாலும் நம்மைவிடச் சந்தோஷமாக இருக்கிறார்கள். அங்கங்கே உட்கார்ந்து நம்மைப் பார்த்து நக்கலாக நகைக்கிறார்கள். பரமபிதாவின் பார்வையாளர்களைப் போல உலவுகிறார்கள். அவர்களை எனக்குப் பிடித்திருக்கிறது. ஓட்டுக்குக் காசு வாங்குபவர்களைவிடவா இவர்கள் பெரிய பிச்சைக்காரர்கள்? தையல் மெஷினையும் பிரியாணிப் பொட்டலத்தையும் கொடுத்து அரசியலுக்கு வர விளம்பரப் பிச்சை எடுப்பவர்களைவிடவா இவர்கள் மாஸ்டர்கள்? ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி பேசி, கொள்கை, கூட்டணி என எல்லாவற்றிலும் பதவியையும் அதிகாரத்தையுமே இலக்காக்கும் பிச்சைக்காரர்களை இவர்கள் ஒருக்காலும் மிஞ்சிவிட முடியாதே. கோயிலுக்கு ஒரு டியூப் லைட் வாங்கி மாட்டினால்கூட

'உபயதாரர்’ எனப் பெயர் போட்டுக்கொடுக்கும் நாம் யார் நண்பர்களே? 'நான்தான் அவனுக்கு உதவினேன்...’ என எப்போதும் நம்மை முன்னிறுத்தும் குணத்துக்கு என்ன பெயர்? பாதி மறைக்கப்பட்ட நடிக - நடிகைகளின் முகங்களைக் கண்டுபிடித்தால் பரிசு என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கெல்லாம் போன் போட்டுப் பேசிக்கொண்டு இருக்கும் ஜனங்களுக்குத்தான் என்ன பெயர்?  சுவிஸ் வங்கியின் கறுப்புப் பண இருப்பு, ஐ.பி.எல். விளம்பர வருமானம், உள்ளூர் மணலும் தண்ணியும் யாருக்கோ அள்ளிக்கொடுக்கும் லாபம், பெருமுதலாளிகளுக்கும் அரசியல்வாதிகளுக்குமான பொருளாதார அதிகாரத் தொடர்பு...  இதெல்லாம் தெரியாமல், புரியாமல் பன்னாட்டுச் சந்தையில் பிச்சைக்காரர்களாக இருப்பது யார் தோழர்களே? இந்த தேசத்தின் சாமான்யர்கள் ஒவ்வொருவருக்கும் பிச்சைக்காரர் என்பதுதான் நிஜப் பெயர். அவரவரும் வைத்திருப் பது புனைபெயர்தான்.

நண்பர் கார்ட்டூனிஸ்ட் பாலா பேசிக்கொண்டு இருக்கும்போது, 'நண்பா, நானும் என்ட்ட பிச்சைக் கேக்குற ஆளுகட்டயெல்லாம் காசு போடாம, 'வா உன்னைப் படிக்கவைக்கிறேன்... எதாவது வேலைல சேர்த்துவிட்றேன்’னு கூப்பிடுறேன். எவனும் வர மாட்றான்... இதைக் கேட்டதும் ஓடிர்றாங்க...' என்றார். உண்மைதான்.  

நேற்று லக்ஷ்மன் ஸ்ருதி சிக்னலில் ஆட்டோவில் நிற்கும்போது அழுக்காக ஒரு குட்டிப் பெண் ரைம்ஸ் புத்தகங்கள் விற்றுக்கொண்டு வந்தாள். ''சார்... சார்... ரைம்ஸ் புக்ஸ் சார்... 10 ரூபாதான் சார்...'' என்றாள் தவிப்பாக. நான் 10 ரூபாயை அவள் கையில் திணித்துவிட்டு, ''புக்கெல்லாம் வேணாம்மா... வெச்சுக்க...'' என்றேன். அவள் பதறிப்போய், ''சார்... சும்மால்லாம் வேணாம் சார். புக் வாங்கிக்கங்க சார்...' என புக்கைக் கையில் திணித்தாள். ''இல்லம்மா வேணாம்மா...' என்றால், ''அப்பன்னா பணம் வேணாம் சார்... புக் வாங்கறதுன்னா தாங்க சார்...'' என்றாள் என் கண்களையே பார்த்தபடி. அந்தப் பார்வையில் எவ்வளவு அற்புதம்... நம்பிக்கை. அந்தக் குட்டி தேவதையிடம் நான் வாங்கி வந்தது ஐந்து ரைம்ஸ் புத்தகங்கள்!

- போட்டு வாங்குவோம்...