நடமாடும் எஃகுக் கோட்டை
##~## |
நடமாடும் எஃகுக் கோட்டை ஒன்றைத் தயாரித்து, அதை ஒரு போர்ச் சாதனமாக உபயோகிக்கலாம் என்று ஓர் எண்ணம். 1913-ல் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகளில் ஒருவரான கேப்டன் எப்.ஜே.பூலர் என்பவர்தான் முதன்முதலாக இந்த யோசனையை வெளியிட்டார். அப்போது சமாதான காலமாக இருந்ததால், இதுபற்றி பிரிட்டிஷ் பாதுகாப்பு இலாகா உரிய கவனம் செலுத்தவில்லை.
பூலர் இந்த யோசனையைத் தெரிவித்த சில மாதங்களுக்குள்ளேயே, அதாவது 1914 ஆகஸ்ட் 4-ம் தேதி, முதலாவது உலக மகா யுத்தம் தொடங்கிவிட்டது. அப்போது ராணுவ அதிகாரியான லெப்-கர்னல் ஸ்வின்டன், நடமாடும் எஃகுக் கோட்டைகள் தயாரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு, அவற்றை இயக்குவதற்குச் சங்கிலிச் சக்கரங்களைப் (Chain wheels) பயன்படுத்தலாம் எனவும் யோசனை கூறினார். அவர் கூறிய இந்த யோசனையின் அடிப்படையில் பிரிட்டிஷ் ராணுவ இன்ஜினீயர்கள் பலர் இது சம்பந்தமான ஆராய்ச்சிகளை உடனடியாக மேற்கொண்டனர்.

''இந்த ஆராய்ச்சி பூர்த்தியாகி முதல் நடமாடும் எஃகுக் கோட்டை போர் முனையில் செயலாற்றத் தொடங்கும் வரை, இதுபற்றி துளி செய்திகூட யாருக்கும் தெரியக் கூடாது. பரம ரகசியமாக இந்தக் காரியம் நடந்தேற வேண்டும்'' என பிரிட்டிஷ் ராணுவ இலாகா கருதியது. இதனால், இந்த ஆராய்ச்சிபற்றி மூடி மறைப்பதற்காகப் பொய்யான செய்தி ஒன்றை அது வெளிக்கிளப்பியது. 'எந்த நிலையிலும் ஒழுகாத 'தண்ணீர்த் தொட்டி’ (Tank) ஒன்றைக் கண்டுபிடிப்பதிலேயே அந்த ராணுவ இன்ஜினீயர்கள் கவனம் செலுத்திவருகிறார்கள்’ என்பதே அந்தச் செய்தியாகும். ஆகவே, இதனால் முதல் நடமாடும் எஃகுக் கோட்டையை மேற்படி இன்ஜினீயர்கள் முதன்முதலாகத் தயாரித்து வெளிக்கொண்டுவந்தபோது, பிரிட்டிஷ் பொதுமக்கள் அதை ஒருவகைப் புதுத் தண்ணீர்த் தொட்டி என்றே நினைத்தார்கள். இதனால் 'டாங்க்’ என்றே அதை அழைத்தார்கள். தவறாக அவர்கள் இவ்விதம் நடமாடும் எஃகுக் கோட்டைக்கு 1916-ல் இட்ட பெயரே, பிறகு அப்படியே நிலைத்துவிட்டது.
பிரிட்டனில் தயாரான தனது முதல் டாங்கை, 1916 பிப்ரவரி 8-ம் தேதி முதன்முதலாக பிரிட்டன் போரில் ஈடுபடுத்தியது. இந்த முதல் டாங்குக்கு 'லிட்டில் வில்லி’ எனப் பெயரிடப்பட்டது.
ஆனால், இந்த 'லிட்டில் வில்லி’ போர் நடவடிக்கை களுக்கு அவ்வளவு சிறந்ததாக இல்லை. இதனால், அதில் பல மாற்றங்கள் செய்து 'பிக் வில்லி’ (Big willy) என மற்றொரு டாங்கைத் தயாரித்தார்கள். 10 ராணுவ வீரர்கள் ஏக காலத்தில் இதற்குள் இருக்கலாம்.
இந்த 'பிக் வில்லி’ டாங்கை முதன்முதலாக 1916 செப்டம்பர் 15-ம் தேதி பிரான்ஸில் சோம் (Somme) போர் முனையில் பிரிட்டன் ஈடுபடுத்தியது. அப்படி ஈடுபடுத்திய 49 டாங்குகளில் 17 டாங்குகளின் இன்ஜின்கள் சரியாகச் செயலாற்றவில்லை. 18 டாங்குகள் போர்முனைக்குக் கிளம்பவே மறுத்து விட்டன. 5 டாங்குகள் போரில் ஈடுபட்டு இருந்தபோதே நடுவில் செயலற்று நின்றுவிட்டன. 9 டாங்குகள்தான் கடைசி வரை நன்றாக இயங்கின.

தான் இவ்விதம் முதன்முதலில் போரில் அதிக அளவில் ஈடுபடுத்திய 'பிக் வில்லி’ டாங்குகளை 'மார்க்-1’ என பிரிட்டிஷ் ராணுவ இலாகா அழைத்தது. இதை ஆதாரமாகக்கொண்டு மேன்மேலும் அபிவிருத்தி செய்து, புது மாடல்களைத் தயாரிக்கத் தொடங்கியது. அபிவிருத்தி செய்யப்பட்ட டாங்குகளை 'மார்க்-2’ எனப் பெயரிட்டு 1917 ஏப்ரல் 8-ம் தேதி பிரான்ஸில் போர் முனையில் முதன்முதலாக பிரிட்டன் ஈடுபடுத் தியது. 1918 நவம்பரில் இரண்டாவது உலகப் போர் முடிவதற்குள்ளாக 'மார்க் 3, 4, 5’ ஆகிய மேலும் அபிவிருத்தி செய்யப்பட்ட டாங்குகளை பிரிட்டன் போரில் ஈடுபடுத்தியது.
இப்போது டாங்குகளில் பிரதானமாக மூன்று ரகங்கள் உள்ளன. லேசான டாங்குகள், நடுத்தர டாங்குகள், கனமான டாங்குகள் என்பவையே ஆகும். லேசான டாங்குகள் எந்த இடத்துக்கும் சுலபமாகக் கொண்டுசெல்ல ஏற்றவை. விமானங்கள், கப்பல்கள் மூலம் ஏற்றிச் செல்லவும் வசதியானவை. மலைப் பிரதேசங்களிலும் பயன்படும். ஓரளவு துரிதமாகவும் செல்லக் கூடியவை. லேசான டாங்கு, கனமான டாங்கு இரண்டுக்கும் இடைப்பட்டது நடுத்தர டாங்கு. சமவெளிகளில் சாதாரண யுத்த நடவடிக்கைகளுக்கு இதையே மிகுதியாகப் பயன்படுத்துவது வழக்கம். கனமான டாங்குகள் மற்ற எல்லாவற்றையும்விட சக்தி வாய்ந்தவை. அதிகப் பாதுகாப்பானவை. எவ்விதத் தாக்குதல்களையும் சமாளிக்கக்கூடியவை. ஆனால், அவை மிக மெதுவாகவே நகர்ந்து செல்லும். போர் முனைகளில் விசேஷமான நிலைகளில் மட்டும் பயன்படுத்துவதற்கு என இவை தயாரிக்கப்படு கின்றன.
இந்த மூன்று வகை டாங்குகள் தவிர, வேறு பல விசேஷ வகை டாங்குகளும் இப்போது உண்டு.
சமீபத்தில் பாகிஸ்தானுக்கும் நமக்கும் இடையே நடந்த போரில் பாகிஸ்தான் படைகள் 'பாட்டன்’ என்ற ஒரு வகை டாங்குகளை மிகுதியாகப் பயன்படுத்தின. இது நடுத்தர வகையைச் சேர்ந்தது; 1952 ஜூலையில் இரண்டாவது உலக மகா யுத்தம் முடிந்த பிறகு தயாரிக்கப்பட்டது. புகழ்பெற்ற அமெரிக்க ஜெனரலான ஜார்ஜ் எஸ்.பாட்டன் இதைக் கண்டு பிடித்ததால், 'பாட்டன் டாங்கு’ எனப் பெயர் பெற்றுள்ளது.
இதில் 'எம்-47’, 'எம்.-60’, 'எம்-113’ என்று பல ரகங்கள் உண்டு. 'எம்-113’ என்பது மிக நவீன ரகம். 'எம்-47’ என்பது மிகப் பழைய ரகம். 'எம்.’ என்றால் மீடியம் (நடுத்தரம்) எனப் பொருள்படும். அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு அளித்து அது நமக்கு எதிராக உபயோகித்த 'பாட்டன் கள்’ 'எம்-47’ ரகத்தைச் சேர்ந்தவையே.
இந்த வகை பாட்டன் டாங்குகளைக் கொரியப் போரில்தான் முதன்முதலாக அமெரிக்கா ஈடுபடுத்தியது. இதில் பொருத்தப்பட்டுள்ள பீரங்கி மிக சக்தி வாய்ந்த போர்க் கருவியாகும். 12 மைல் தூரம் குண்டுகளைச் சுடும் ஆற்றல் இந்தப் பீரங்கிக்கு உண்டு. இதில் இருந்து கிளம்பும் குண்டுகள் விநாடிக்கு 3,000 அடி (நிமிஷத்துக்கு 1,80,000 அடி) வேகத்தில் செல்லக் கூடியவை.
பாகிஸ்தான் படைகள் 'பாட்டன்’ அன்றி 'ஷெர்மன்’ என்ற மற்றொரு வகை டாங்குகளையும் நமக்கு எதிராக ஏவின. இவை 'எம்-4’ என்ற வகையைச் சேர்ந்தவை. 1941 செப்டம்பரில் முதன்முதலாக இவை தயாரிக்கப்பட்டன. இரண்டாவது உலக மகா யுத்தம் நடந்துகொண்டு இருந்தபோதே 49,234 'ஷெர்மன்’ டாங்குகள் தயாராகிவிட்டன. ஒரே ரகத்தில் இவ்வளவு அதிக டாங்குகள் உலகில் இதுவரை எங்கும் தயாரிக்கப்பட்டது இல்லை.
வட ஆப்பிரிக்காவில் ஜெனரல் ரோமலின், ஜெர்மன் டாங்குப் படை களோடு மோதி வெற்றி வாகை சூடியவை இந்த ஷெர்மன் டாங்குகளே. 3,000 மைல் பயணம் செய்தால்கூட இதன் இணைப்புப் பகுதிகள் தேய்வது இல்லை. இந்த டாங்குகளின் எடை 33 டன். இவற்றில் இப்போது ஏழு ரகங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் பொருத்தப்பட்டுள்ள இன்ஜினின் ஆற்றல் வெவ்வேறு விதம். 1956-ல் இருந்து இந்த டாங்குகள் தயாரிப்பதை அமெரிக்கா நிறுத்திவிட்டது.
நம்மிடமும் பல ஷெர்மன் டாங்குகள் உண்டு. நாம், சொந்தமாக சென்னை அருகே ஆவடியில் டாங்குகள் தயாரிக்க இப்போது ஏற்பாடாகி வருகிறது. 1966 ஆரம்பத்தில் முதல் டாங்கு தயாராகி வெளிவரும்.
ஆவடியில் தயாராகும் இந்த இந்திய டாங்குகளுக்கு 'வைஜயந்த்’ எனப் பெயர்.
- அ.ராம்கோபால்