என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

காக்காக் கடை!

காக்காக் கடை!

காக்காக் கடை!

காக்காக் கடை!

'சென்னை-அம்பத்தூர் சத்யமூர்த்தி நகரில் டீக்கடை நடத்திவரும் குமார், 15 ஆண்டுகளாகக் காக்கைகளுக்குத் தினமும் உணவு அளித்துவருகிறார். அவரைப் பற்றி என் விகடனில் எழுதலாமே!’ - இது அம்பத்தூர் வாசகி, கிருஷ்ணவேணி வாய்ஸ் ஸ்நாப்பில் சொன்ன தகவல்.

சத்யமூர்த்தி நகரில் நாம் குமாரைச் சந்திக்கச் சென்ற போது, நமக்கு முன்னாலேயே அவரை எதிர்பார்த்து ஏகப்பட்ட காகங்கள் காத்திருந்தன. ''15 வருஷத்துக்கு முன்ன ஒருநாள் கடையைத் திறக்கிறப்ப இங்க பத்துப் பதினைந்து காக்கைகள் கூட்டமா நின்னு கத்திட்டு இருந்துச்சு. விரட்டி அடிக்க மனசு இல்லாம, கடையில இருந்த காராசேவை கொஞ்சம் அள்ளிப் போட்டேன். அதுங்க பறந்துப் பறந்து சாப்பிடுறதைப் பார்த்தப்ப, மனசுக்குச் சந்தோஷமா இருந்துச்சு. பிறகு மறுநாள் கடையைத் திறந்தப்ப முதல் நாளைவிட நிறைய காக்கைகள் வந்தன. போனாப்போகுதுனு அன்னைக்குக் கொஞ்சம் அதிகமாவே காராசேவை அள்ளிப் போட்டேன். அப்ப ஆரம்பிச்ச பழக்கம், இப்போ வரைக்கும் தொடருது. என் டீக்கடையை எல்லாரும் 'குமார் டீக்கடை’னுதான் சொல்வாங்க. ஆனா, இப்ப 'காக்காக் கடை’னு சொல்றாங்க. அஞ்சு, பத்துன்னு வந்துட்டு இருந்த காக்கைங்க இப்போ நூத்துக்கணக்குல வர ஆரம்பிச்சிருச்சு. என்னைக்காவது உடம்புக்கு முடியலை, வீட்டுல விசேஷம்னு கடைக்கு லீவு விட்டாலும் காக்கைகளுக்கு ஆள்வெச்சாவது சாப்பாடு போடச் சொல்லிடுவேன். 'லூஸாய்யா நீ. கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தை இதுங்களுக்குச் சாப்பாடு போட்டு வீணாக்குற’னு இந்த ஏரியாவுல உள்ளவங்க  கேட்பாங்க. இதுகளுக்காகவே தினமும் பொரிகடலை, காராசேவுனு 50 ரூபாய்க்கு மேல செலவு பண்றேன். ஆனா, இதை நான் செலவா கணக்குப் பண்றது இல்லை. நான் தொட்டாக்கூட எந்தப் பயமும் இல்லாம, பக்கத்துல நின்னு அதுங்க சாப்பிடுறதே தனி அழகு. இதுங்க எல்லாத்தையும் என் உறவுக்காரங்களாத்தான் நினைக்கிறேன். எனக்குப் பின்னாடி இதுங்களுக்கு யாரு சாப்பாடு கொடுப்பாங்கனு தெரியலை. அதை நினைச்சாத்தான் கவலையா இருக்கு!'' என்கிறார் குமார்.

தட்டிக் கொடுங்க!

காக்காக் கடை!

காமெடி, குணச்சித்திரம் என வெவ்வேறு கதாபாத்திரங்களில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ள குமாரி சச்சுக்கு, சமீபத்தில் தி.நகர் கிருஷ்ண கான சபாவில் 'நடன சூடாமணி’ விருது வழங்கப்பட்டது.

டி.என்.பி.எஸ்.சி தலைவர் நடராஜிடம் விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய குமாரி சச்சு, ''நாடகத்தில் என் பாட்டிதான் எனக்குக் குரு. எந்த இயக்குநரா இருந்தாலும் என் பாட்டிகிட்டதான் முதல்ல கதையைச் சொல்வாங்க. கதை ஓ.கே.ன்னா அந்தக் கதையை பாட்டி எனக்குச் சொல்லி எப்படி எல்லாம் நடிக்கணும்னு சொல்லித்தருவாங்க.

'வீரத்திருமகள்’ உள்பட ஏராள மான சிறந்த படங்களைக் கொடுத்து, என் வளர்ச்சிக்குக் கார ணமா இருந்தது ஏவி.எம். நிறுவனம்தான். 'ரோஜா மலரே ராஜகுமாரி’ பாட்டை என்னால் வாழ்நாளில் மறக்கவே முடியாது. பி.சுசீலா மேடம் எனக்காகப் பாடுன அந்தப் பாட்டு இன்னும் எனக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு. காமெடி பண்றதுக்கும் அதை ரசிக்கிறதுக்கும் என்னைக்குமே வயது வரம்பு கிடையாது. எனக்கு ஆறு வயசா இருக்குறப்ப, ஒரு மேடையில் என் அக்கா பரதநாட்டியம் ஆடினாங்க. அப்ப பார்வையாளர் வரிசையில இருந்து எழுந்துபோய் அக்காவோட சேர்ந்து ஆடினேன். அப்ப என்னை 'அந்தக் குழந்தை ஆடட்டும்’னு ஆடவெச்சு ரசிச்சாங்க. தேவைப்படும்போது தட்டிக்கொடுத்து வளர்க்கிற அந்த எண்ணம் இன்னைக் குக் குறைஞ்சு இருக்கு. அந்த வகையில் என் வளர்ச்சிக்கு உதவியா இருந்த அனைவருக்கும் நன்றி!'' என்று முடித்தபோது அரங்கம் எழுந்து நின்று கைதட்டி அவரை வாழ்த்தியது!

பவர்கட்டுக்கு... கட்!

காக்காக் கடை!

''எங்க வீட்டுல மட்டும் மின்வெட்டு பிரச்னை கிடையாதுங்க'' என்று ஜாலியாகச் சிரிக்கிறார் சுரேஷ். சென்னை கீழ்ப் பாக்கத்தில் வசிக்கும் இவர், தனியார் நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்கு நர். தன்னுடைய வீட்டில் சோலார் தகடுகளைப் பொருத்தி, அதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தைப் பயன்படுத்திவருகிறார்.  

''மழை நீர் சேகரிப்புத் திட்டம் உள்பட ஏகப்பட்ட திட்டங்களை நம்ம அரசு அறிமுகப்படுத்துவதற்கு முன்னாடியே என் வீட்டுல அறிமுகப்படுத்திட்டேன். காரணம், நல்ல விஷயங்கள்ல நாம மத்தவங்களுக்கு முன் மாதிரியா இருக்கணும்கிற எண்ணம்தான். வீட்டுல சோலார் தகடுகளைப் பொருத்தின இந்த மூணு மாசமா ஒரு செகண்ட் கூட எங்க வீட்ல கரன்ட் கட் கிடையாது. மின் விசிறி, லைட்டுகள்னு எங்க வீட்டுக்கான மின்சாரத் தேவை சுமார் ஒரு கிலோ வாட். அதுக்காக, 10 சோலார் தகடுகளைப் பொருத்தி இருக்கேன். சூரியஒளியில் இருந்து கிடைக்கும் மின்சாரம், நேரடியா மெயின் போர்டில் சேரும்படி இணைப்புக் கொடுத்து இருக்கேன். அப்படி கிடைக்கிற மின்சாரத்தை 10 இன்வெர்ட்டர் பேட்டரிகளில் சேமிச்சுவெச்சுப் பயன்படுத்துறேன்.  

சோலார் தகடுகளில் இருந்து கிடைக்கிற மின்சாரத்தைக் காலையில் இருந்து சாயங்காலம் வரை மட்டுமே பயன் படுத்த முடியும். இரவு வேளைகளில் பேட்டரியில் சேமிக்கப் பட்டு உள்ள மின்சாரத்தைப் பயன்படுத்துவோம். இங்கே நான் பொருத்தி இருக்கிற சோலார் தகடு,  இன்வெர்ட்டர் பேட்டரிகளுக்குக் கிட்டத்தட்ட இரண்டரை லட்ச ரூபாய் செலவாச்சு. இது பெரிய தொகைதான். ஆனால், இதில்  80 ஆயிரம் ரூபாயை அரசாங்கம் மானியமாக் கொடுத் தாங்க. 20 ஆயிரம் ரூபாய் செலவில்கூட சோலார் தகடுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கலாம். இப்ப பெரும்பாலான வீடுகள்ல டிஷ் ஆண்டனா இருக்கிற மாதிரி வருங்காலத்துல எல்லா வீட்டு மாடிகளிலும் சோலார் தகடுகள் இருக்கும். என்கிட்ட ஏகப்பட்ட பேர் இதைப் பற்றி விசாரிக்கிறாங்க. இதை ஃபாலோ பண்ணினா பவர்கட்டுக்கு கட் சொல் லலாம்!'' சிரிக்கிறார் சுரேஷ்.

தொகுப்பு: சா.வடிவரசு
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர், அ.ரஞ்சித், க.கோ.ஆனந்த்