தமிழகமே... வாசிப்போம்!
##~## |
'ஒரு புத்தகம் திறக்கப்படும்போது எல்லாம், ஒரு சிறைச்சாலையின் கதவு மூடப்படுகிறது’ என்பார்கள். சிறைக்கு வந்து, புத்தகம் படித்துத் திருந்தியவர்களும் உண்டு. எழுதிய ஒரே புத்தகத்தின் மூலம் செல்வந்தர்கள் ஆனவர்களும் உண்டு. புரட்சி தோன்றியதற்கு புத்தகங்கள் காரணமாக இருந்த வரலாறுகளும் உண்டு’ எனப் புத்தக வாசிப்பின் நன்மைகளை, விளைவுகளை எக்கச்சக்கமாகப் பட்டியலிடலாம். ஆனால், இன்று இணையத்தின் வீச்சால் புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது என்கிற கவலை பரவிவருகிறது. 'இனி, அந்தக் கவலை தேவையே இல்லை’ என்று உரக்கச் சொல்லும் விதமாக அந்த நிகழ்வு இனிதே நடைபெற்றது!
உலக புத்தகத் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்து பாரதி புத்தகாலயம் நடத்திய 'தமிழகமே வாசிப்போம்!’ நிகழ்வு மாநிலத்தின் பல பகுதிகளிலும் நல்லதொரு அதிர்வை ஏற்படுத்தி இருக் கிறது. சென்னையில், கடந்த வாரம் நடந்த இந்த நிகழ்வில் வாசிப்புப் பழக்கத்தை முதன்மைப்படுத்துகிற கவியரங்கம், நடைப் பயணம், நாடகங்கள் எனப் பல கலை அம்சங்கள் இடம்பெற்றன. மெரினா கடற்கரையில் நடைபெற்ற கவியரங்கில் ஈரோடு தமிழன்பன், மு.மேத்தா, ஞானக்கூத்தன், மனுஷ்யபுத்திரன் உள்பட பலர் கலந்துகொண்டு தங்கள் கவிதைகளை வாசித்தனர். பார்வையாளர்களாகப் பேச்சாளர் பாரதிகிருஷ்ணகுமார் உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்

மறுநாள் அதிகாலையில் உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 'ரன் டு ரீட்’ என்ற கருத்தின் அடிப்படையில் நடைப் பயணமும் நடைபெற்றது. முதியவர்கள் முதல் சிறுவர்கள் வரை பல துறைச் சார்ந்தோர் இதில் கலந்துகொண்ட னர். ஒருவர், தான் வாசித்து முடித்த புத்தகத்தைக்கொண்டுவந்து கொடுத்துவிட்டு, வேறு ஒரு புத்தகத்தை எடுத்துச்செல்லலாம் என்று அறிவித் திருந்தார்கள். 'நீங்கள் கொடுக்கும் புத்தகம் 50 ரூபாய் மதிப்புள்ளதாக இருக்கலாம். எடுத்துச் செல்லும் புத்தகம் 500 ரூபாயாகக்கூட இருக்கலாம். எனினும், இந்தப் புத்தகப் பரிமாற்றம் இலவசம்!’ என்று அறிவித்து இருந்ததால் புத்தகப் பிரியர்களுக்கு ஏக குஷி.

பாரதி புத்தகாலயம் நாகராஜன், ''இது உலகம் முழுவதும் வழக்கமாக நடைபெறும் நிகழ்வுதான். அதை இங்கும் செய்யலாமே என்கிற உந்துதலால் இதை நடத்தினோம். அடுத்தடுத்த நாட்களில் தமிழகத்தின்

பல பகுதிகளில் 'புத்தகத் தேர் இழுத்தல்’, 'உலகைக் குலுக்கிய புத்தகங்கள்’ என்ற தலைப்புகளில் தெருமுனை நாடகங்களை நடத்த உள்ளோம். புத்தக வாசிப்பின் ருசியை அனைவருக்கும் எடுத்துச்செல்ல வேண்டும் என் பதுதான் இந்த நிகழ்வின் மையம்!'' என்றார்.
'இந்த வாழ்வின் ஆகச் சிறந்த கேளிக்கை.. கொண்டாட்டம்.. ஓசையின்றி நடக்கிறது. அதுதான் புத்தக வாசிப்பு’ என்றார் தத்துவஞானி எமர்சன். வாருங்கள் அந்தக் கொண் டாட்டத்தில் நாமும் பங்கேற்போமே!
- கட்டுரை, படங்கள்: ந.வினோத்குமார்