
நந்தி நகரில் நான்- ஸ்டாப் மொக்கை!
##~## |
''லெஃப்ட்ல தி.நகர், ரைட்ல மவுன்ட் ரோடுனு பரபரப்பான இடங்களுக்கு மத்தியில் அமைஞ்ச நந்தவனம்தான் சார் என் ஏரியா!'' - தான் பிறந்து, வளர்ந்த மேற்கு சி.ஐ.டி. நகர் பற்றி சிரிப்பும் சிலாகிப்புமாகப் பேசுகிறார் மிர்ச்சி சிவா.
''நான் சின்ன புள்ளையா இருந்தப்ப 6 மணிக்கு மேல எங்க ஏரியா பக்கம் வர மத்த வங்க தயங்குவாங்க. அந்த அளவுக்கு அமைதியா, திகிலா இருக்கும். ஆனா, இப்போ ஏழெட்டு எஃப்.எம்-மை ஒரே இடத்துல பாடவெச்ச மாதிரி கலவையான சத்தங்களோட இருக்கு. பிறந்ததுல இருந்து நான் சி.ஐ.டி. நகர் வாசி தான். இங்க உள்ள சித்தி விநாயகர் என்பெஸ்ட் ஃப்ரெண்ட். விநாயகர் சதுர்த்திதான் நான் ரசிச்சுக் கொண்டாடுற பண்டிகை. அன்னைக்கு, ஏரியாவுல எந்த வீடா இருந்தாலும் புகுந்து மாமா, அத்தைனு உருக்கமாப் பழகி நெருக்க மாயிடுவேன்.
'என்னடா சிவா, அடுத்து என்ன ஸ்க்ரிப்ட் பண்ற?’னு அவங்களும் உரிமையாக் கேப்பாங்க. இங்க ஹோட்டல்லாம் பெருசாக் கிடையாது. அதனால எந்தக் கூச்சமுமே இல்லாம பலபேர் வீட்ல வாலன்ட்ரியா புகுந்து சாப்பிட்டுருக்கேன்.

அப்ப நான் கிரிக்கெட் விளையாடுன இடமெல்லாம் இப்ப ஃப்ளாட்டா மாறிடுச்சு. ஸ்டைலா ரன் எடுக்கிறதா நெனைச்சு, புது பைக்கோட ஹெட் லைட்டை உடைச்சுட்டு பயத்துல ரெண்டுநாள் வீட்டுப் பக்கம் வராம இருந்த அனுபவம் எல்லாம் உண்டு. பால் போடுறது, தண்ணி பிடிச்சுட்டு வர்றதுனு எங்க

ஏரியா கிரிக்கெட் டீம்ல சேர ணும்னா ஏகப்பட்ட எடுபிடி வேலைகள் செய்ய ணும். அதிலும் குறிப்பா எங்க அண்ணனின் ஃப்ரெண்ட் ஒருத்தர், ஓவருக்கு ஓவர் ஓவரா வேலை வாங்குவார். அவர்தான் இன்னைக்குநந்தி எலெக்ட்ரிக்கல்ஸ் ஓனர். அப்புறம் இந்த நந்தி சிலையைப் பற்றி சொல்லியே ஆகணும். இங்க நடக்கிற அத்தனை மாற்றங்களையும் மௌன சாட்சியா பார்த்துட்டு இருக்குறது இந்த நந்திதான். ஒரு காலத்துல இந்த ஏரியாவுக்குப் பேரே நந்தி சி.ஐ.டி. நகர். நந்தி ஆட்டோ ஸ்டாண்ட், நந்தி எலெக்ட்ரிக்கல்ஸ், நந்தி குறுக்குச் சந்துனு ஏரியாக் காரங்க அத்தனை பேரின் குடும்பத்திலும் நந்தி ஒரு உறுப்பினர்.
ஏதாவது ஒரு பாட்டைப் பாடும்போது நடுவில் பாட்டு வரி மறந்து போறது இயல்பான விஷயம். ஆனா, எனக்கு முதல் வரியில் இருந்தே தப்பாப் பாடுற ஃப்ரெண்டு ஒருத்தன் இருந்தான். ரேடியோ மிர்ச்சியில் நான் பண்ணின 'மொக்க மோகன்’ புரொகிராமுக்கு அவன்தான் இன்ஸ்பிரேஷன். அதே மாதிரி இதுதான்னு இல்லாம எந்த டாபிக் கிடைச்சாலும் சளைக்காம மொக்கப் போடுவோம். மொட்ட மாடியில் நின்னா ஃபிளைட்டைப் பார்த்துட்டு, 'அது லுஃப்தான்ஸாவா? ஜெட் ஏர்வேஸா’னு ஆரம்பிச்சா... பிரேக்விட்டு பிரேக்விட்டுதொடர்ந்து ரெண்டு மூணு நாளெல்லாம் பேசி இருக்கோம். ஏரியாவில் மறக்க முடியாத நபர்னா அது இந்திராணி மிஸ்தான். நான் இந்த அளவுக்காவது வளர்ந்திருக்கேன்னா அதுக்கு அவங்களும் ஒரு காரணம். 'சிவா நம்ம பையன், அவன் நல்லா வரணும்’னு மனசார நினைக்கும் 100 குடும்பங்களாவது இங்க இருக்கு.

அப்புறம் எங்க அப்பா. இப்ப அவர் இல்லை. சின்ன வயசுல, அப்பா எப்ப வெளிய கிளம்பி னாலும், முகத்தைச் சோகமா வெச்சுக்கிட்டு, 'எப்பப்பா வருவ?’னு கேட்டால், கையில ஒரு ரூபாய் காயினை கொடுத் துட்டுப் போயிடுவார். சத்தி யமா சொல்றேன், அந்த ஒரு ரூபாயை எப்படி செலவழிக் கிறதுனு தெரியாம, இந்த ஏரியா பூரா சுத்தி வந்திருக்கேன். இந்த ஏரியாவுல இருக்கிற வரை, எனக்கான தேவைகள் ரொம்பவேகம்மி. சில வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் என் அதிகபட்ச லட்சியமே தனி ரூம், அதில் ஒரு டி.வி., டி.வி.டி பிளேயர் அவ்ளோதான். இங்க மரங்கள், அது தரும் நிழலும் எனக்கு நெருக்கமான விஷயம். நான்தான் வீட்டுல கடைசிப் பையன். சினிமாவுல காட்டுற மாதிரி கடைக்குட்டி செல்லம்கிற லாஜிக்லாம் எங்க வீட்டுல கிடையாது. ஆனா, இப்ப வெயில்ல போய் சுத்திட்டு டயர்டா வீட்டுக்குவந்தா, ஐஸ் வாட்டர்லாம் தர்றாங்க. எங்கே சுத்தினாலும் எங்க ஏரியாவுக்கு வந்துட்டேன்னா ஜில்லுனு தண்ணி குடிக்கிற மாதிரி ஒரு சுகம் கிடைக்கும். அது, வேற எதுலயும் கிடைக்காதுங்க!''
- அருண் ரூப பிரசாந்த், படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்