என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

என் ஊர் : மூக்கனூர்பட்டி

முருகன் திருவிழாவில் சுயமரியாதை கூத்து!

##~##

றுபத்தெட்டு வயது நிறைவுற்ற 'குயில்’ சிற்றிதழின் ஆசிரியர்; திராவிட இயக்க எழுத்தாளர்; பெரியார், பாரதிதாசன், கருணாநிதி ஆகியோருடன் கொள்கை நட்புக்கொண்டவர் கவிஞர் கண்ணிமை. இவர் தன்னுடைய சொந்த ஊரான தருமபுரி மாவட்டம், மூக்கனூர்பட்டி பற்றிய நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள் கிறார்!

 ''1957-ல் நடந்த சாதி ஒழிப்புக்கான சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்குப் போன சுயமரியாதைச் சுடரொளிகள் பிறந்த ஊர் மூக்கனூர்பட்டி. எங்க ஊருக்கு வரும் வழியில் இருபுறமும் மரங்கள் அடர்ந்து இருக்கும். அதனால எங்க ஊரை இளந்தோப்புன்னும் அழைப்பாங்க. அதியமான் ஆளுகையில இருந்த ஊருன்னும் இதைச் சொல்வாங்க. சங்க காலத்தில் எங்க ஊர் வழியாத்தான் அதியமானுடைய படைகள் சென்றதாகவும் ஓய்வு எடுத்ததாகவும் செவிவழிச் செய்திகளும் நிறைய உண்டு.

என் ஊர் : மூக்கனூர்பட்டி

இரண்டாம் உலகப் போர் நடந்தப்ப இங்கே இருக்கிற தண்ணீர்ப் பாறைங்கிற இடத்துலதான் சிப்பாய்கள் கூடாரம் அடிச்சித் தங்கி இருந்தாங்களாம். 1953-ம் ஆண்டு தந்தை பெரியார் இங்கே வந்து பந்தல் போட்டு மாநாடு போல கூட்டம் நடத்தினார். பெரியார் இங்கே வரும்போதெல்லாம் நிறையப் பேர் பெரியார்கிட்ட குழந்தையைத் தூக்கிட்டுப்போய் பேருவெக்கச் சொல்லிக் கேட்பாங்க. 'தமிழரசு, வீரமணி, அழகரசு, அசோகன்’னு அழகான பெயர்களாக வைப்பார் பெரியார். அதைப் பார்த்துட்டு ஊர்ல பெரும்பாலானவங்க அவங்களோட குழந்தைங்களுக்குத் தமிழ்ப் பெயர்தான் வைப்பாங்க. அப்பவும் சரி... இப்பவும் சரி... சுயமரியாதைக் கொள்கைகளுக்குப் பெயர் பெற்றது எங்க ஊர். அதனால தான் 'ராவண காவியம்’ எழுதிய புலவர்குழந்தை, எங்க ஊரை 'சுயமரியாதைக்காரன்பட்டி’னு புகழ்ந்து இருக்கார்.

நான் படிச்ச காலத்துல எங்க ஊருல பள்ளிக்கூடம் இல்லை. 10 கி.மீ. தூரம் நடந்து போய் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிச்சேன். பள்ளிப் படிப்புக்குப் பிறகு திருச்சியில பெரியார் தொடங்கிவெச்ச ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில படிச்சேன். அப்பதான் எங்க ஊர்லயே ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியை ஆரம்பிச்சாங்க. எனக்கு அங்கேயே தமிழ் ஆசிரியர் வேலை கிடைச்சது.

என் ஊர் : மூக்கனூர்பட்டி

50 வருஷங்களுக்கு முன்னயே பொங்கலை தமிழர்த் திருநாளாகக் கொண்டாடிய ஊர் இது. பொங்கலுக்கு அடுத்த நாள் 'பாரிவேட்டை’ நடத்துவோம். அந்தக் கொண்டாட்டத்துல பக்கத்துல இருக்கிற கரடுக்குப்போய் முயல் பிடிக்கணும். கோணிப் பையைத் தூக்கிக்கிட்டு கும்பல், கும்பலா கரட்டு மேட்டுக்குப் போவோம். பகல் நேரத்துல கண்ணுல சிக்காம வலைக்குள்ள பதுங்கி இருக்கிற முயலைப் புகை போட்டு வெளியே வரவழைப்பாங்க.

என் ஊர் : மூக்கனூர்பட்டி

ஆனா, அதுங்க கில்லாடிக்கும் கில்லாடிங்க. ஒரு வலையில இருந்து இன்னொரு வலை... அங்கே இருந்து இன்னொரு வலைனு பெரிய வலைப் பின்னலே வெச்சிருக்கும். ஒரு வழியா முட்டி பெயர்ந்து, பிடிச்சு வந்த முயலை கிராம மக்கள் ஒண்ணுசேர்ந்து வரவேற்பாங்க. நிகழ்ச்சி முடிஞ்சதும் திரும்பவும் அதைக் கரட்டுலவிட்டு டுவாங்க. சில சமயங்கள்ல முட்டி பெயர்ந்தாலும் முயல் கிடைக்காது. அந்தச் சமயத்துல தேங்காயை முயலா நினைச்சு உருட்டிவிடுவாங்க.

ஊர்ல பங்குனி உற்சவம் முருகர் கோயில் திரு விழா நடக்கும். அந்த முருகன் திருவிழாவையும் நாங்க விட்டுவெச்சது இல்லை... அங்கேயும்கூத்துக் கட்டி சுயமரியாதைச் சிந்தனைகளை வலியுறுத்து வோம். எனக்கு நரை கூடி கிழப் பருவம் வந்து டுச்சு. ஆனாலும், குழந்தைப் பருவம் தொடங்கி கிழவன் பருவம் வரைக்கும் என் சொந்த மண்ணி லயே வாழும் வாய்ப்பை எனக்குக் கொடுத்த காலத்துக்கு நன்றி!''

சந்திப்பு, படங்கள்: மகா.தமிழ்ப் பிராபகரன்